> குருத்து: ஆண்கள் சமையல்
Showing posts with label ஆண்கள் சமையல். Show all posts
Showing posts with label ஆண்கள் சமையல். Show all posts

December 6, 2022

ஆரோக்கியமான கருவேப்பிலை குழம்பு


யூடியூப்பில் குழம்பு வகைகளைத் தேடும் பொழுது, மழைக்காலத்திற்கேற்ற குழம்பு என கனகா பாட்டி கருவேப்பிலை குழம்பு சொன்னார். செய்துப் பார்த்துவிடலாம்.


தேவையான பொருட்கள் : நல்லெண்ணெய். கொஞ்சம் வெந்தயம். கொஞ்சம் உளுந்தம் பருப்பு. கொஞ்சம் கடலைப் பருப்பு. கொஞ்சம் பெருங்காயம். காய்ஞ்ச மிளகாய், கொஞ்சம் மிளகு. ஒரு கைப்பிடி கருவேப்பிலை. கொஞ்சம் மஞ்சள். கொஞ்சம் புளி. அதை ஒரு கிண்ணத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊறவைத்துவிடுங்கள். (மிளகும், காய்ஞ்ச மிளகாய்களும் போடுவதால், உரைப்பைக் கொஞ்ம் தணிய வைக்க.. கொஞ்சம் அரிசி சேர்த்துக்கொள்ள சொன்னார். நான் தவிர்த்துவிட்டேன்.)

செய்முறை : கொஞ்சம் வடைச் சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றிக்கொள்ளவும். (மற்ற சமையல் எண்ணெய்களும் ஊற்றலாம். நல்லெண்ணெய் ரெம்ப நல்லது. ) வெந்தயம் போடவும். கொஞ்சம் வறுபட்டதும், காய்ஞ்ச மிளகாய் போடுங்கள். பிறகு உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, பெருங்காயம் எல்லாம் போட்டு வதக்கி முடித்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, கையளவு கருவேப்பிலையை போடவும். வடைச் சட்டி சூட்டிலேயே வதக்கவும்.

இதில் சின்ன ட்விஸ்ட். இந்த மசாலா கூட்டணியில் கொஞ்சம் பூண்டு, வெங்காயம், தேங்காய் போட்டாலும் நன்றாகத் தானே இருக்கும். ஏன் கனகா பாட்டி சொல்லவில்லை என யோசித்தால்… கனகா பாட்டி வீட்டில் பூண்டும், வெங்காயமும் பயன்படுத்த மாட்டார்கள் என அவர் பேசிய பேச்சில் புரிந்துகொண்டேன். அதனால் என்ன! நாம் சேர்த்துக்கொள்வோம் என முடிவு செய்து… நாலு பல் பூண்டு, ஒரு பெரிய வெங்காயம், கொஞ்சம் தேங்காயும் சேர்த்துக்கொண்டேன்.

வதக்கியதை எடுத்து கொஞ்சம் ஆற வைத்து, ஜாரில் மாற்றி, மிக்சில் அரைத்து எடுத்து வைத்துக்கொண்டேன்.

இப்பொழுது மீண்டும் வடைச்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து போட்டு தாளித்தேன். கருவேப்பிலை கொஞ்சம் போடலாம். (ஆனால் வேண்டாம். ஏற்கனவே கருவேப்பில்லை குழம்பு என்பதால் தவிர்க்க சொன்னார் கனகா பாட்டி.) ஊறவைத்த புளிக் கரைசலை ஊற்றினேன். கொஞ்ச நேரத்தில் கொதிக்க ஆரம்பித்ததும், கொஞ்சம் மஞ்சள் போட்டு, அரைத்த வைத்த மசாலாவை அதில் கவிழ்த்தேன். ஏற்கனவே வறுபட்ட மசால் என்பதால், ரெம்ப நேரம் கொதிக்கவிட தேவையில்லை. (பாட்டி கொஞ்சம் வெல்லம் சேர்த்துக்கொண்டார். நான் தவிர்த்துவிட்டேன்.)

பார்ப்பதற்கு பச்சை நிறத்திலான சுவையான கருவேப்பிலை குழம்பு தயார். கொஞ்சம் கொத்தமல்லி இருந்தால் தூவிக்கொள்ளலாம். கைவசம் இல்லாததால் போடமுடியவில்லை. பாட்டி கூட இதைச் சொல்லவில்லை. நான் தான் சொல்கிறேன். இதற்கு பொருத்தமாக சுட்ட அப்பளம் பொருத்தம் என்றார்.

சொல்லிக்கொடுத்த கனகா பாட்டிற்கு நன்றி.

May 27, 2021

சுவையான மட்டன் கோலா உருண்டை


ஆட்டுக்கறி குழம்பு, ஆட்டுக்கறி தொக்கு எல்லாம் பழசு. மட்டன் கோலா உருண்டை எங்க வீட்டிற்கு புதுசு. யூடியூப்பில் சமையல் கலைஞர் தாமு நான்கு நிமிடங்களில் எளிமையாக கற்றுத்தருகிறார்.

கறியில் கொஞ்சம் மஞ்சள் தூவி, கொஞ்சம் சோம்பு, உப்பு போட்டு, கொஞ்சமாய் தண்ணீர் விட்டு, குக்கரில் நன்றாக வேகவைத்துக்கொள்ளவேண்டும். பிறகு எடுத்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவேண்டும். நன்றாக வெந்துவிடுவதால், சிரமப்படாமல் எளிதாக அரைந்துவிடுகிறது.


கருவேப்பிலை, தேவையான மிளகாய் தூள், தேவையான சீரகம், அரைச்ச பொட்டுக்கடலை பொடி, அதோடு இஞ்சி, பூண்டு அரவை எல்லாம் சேர்த்தால் பூரிக்கு மாவு திரட்டியது போல வந்துவிடுகிறது.

சின்ன சின்ன உருண்டையாக உருட்டி, கொதிக்கிற எண்ணெயில் போடவேண்டும். அப்படி கொதிக்கும் பொழுது பிரிந்து போககூடாது. அப்படி பிரிந்தால், இன்னும் கொஞ்சம் பொட்டுக்கடலை பொடி போட்டு சரி செய்துகொள்ளவேண்டும்.

நேரடியாக கறி சாப்பிட பழக்கம் இல்லாதவர்கள், குழந்தைகளுக்கு ஏற்றது. சோதனை முயற்சியாக எங்க வீட்டில் முதல் முயற்சியிலேயே வெற்றி.

துவைத்து, அழுது, தேம்பி, தேர்தல் பிரச்சாரம் எல்லாம் முடிவடைந்து ஓய்ந்து இருக்கும் வேளையில்...

இதோ மட்டன் கோலா உருண்டை. 🙂

August 17, 2018

சேமியா உப்புமா!


பல மாதங்களுக்கு பிறகு இன்று சேமியா உப்புமா செய்தேன். எந்தவித சொதப்பலும் இல்லாமல், குறைவான நேரத்திலேயே சுவையாக செய்துமுடித்தேன்.

#செய்முறை : இணையம் முழுவதும் நிறைய கொட்டி கிடக்கிறது! அதில் நம் பங்குக்கு உலகத்துக்கு சொல்லணும்! கருத்தும் சொல்லணும்! :)
...

ஒரு சட்டியை அடுப்பில் வைத்து, அவசரம் அவசரமாக எண்ணெய்யை ஊற்றக்கூடாது. சட்டியில் இருக்கிற கொஞ்சூண்டு நீர் எண்ணெய் காய்ந்ததும் நம் மீது தெறித்து நாம் சமையல் செய்யும் நம்பிக்கையை குலைத்துவிடும்! :)
சமையலில் நிதானம் முக்கியம்.

சட்டி காய்ந்ததும் எண்ணெய் சிறிதளவு ஊற்றுங்கள். (ஊற்றுகிற அளவு உங்க வசதியை பொறுத்தது! உங்க ஆரோக்கியத்தை பொறுத்தது!). எண்ணெய் அளவாக காய்ந்ததும்..கொஞ்சூண்டு கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலையை மெதுவாக போடுங்கள். தள்ளி நின்று தூக்கி போட்டாலும் எண்ணெய் தெறிக்கும்.

பிறகு வெட்டி வைத்துள்ள வெங்காயம், (நேரமும், காசும் நிறைய இருந்தால் சின்ன வெங்காயம் போட்டால் சுவையாக இருக்கும்.) பச்சை மிளகாய் இரண்டு போடுங்கள். இல்லையா! காய்ந்த மிளகாய் பயன்படுத்தலாம். பச்சை வாடை போகும் வரை வறுங்கள். தேவையான அளவு உப்பு போடுங்கள். பிறகு நாலு டம்ளர் தண்ணீர் ஊற்றுங்கள்.

தண்ணீர் கொதித்ததும், வறுத்த சேமியா வாங்கி வைத்ததை கொஞ்சம் கொஞ்சமாக போடுங்கள். வேலை முடிந்தது என போன் பேச போய்விடாதீர்கள். கூடுதலாக உள்ள நீர் வற்றும் வரை காத்திருங்கள். சமையலில் பலருக்கும் சொதப்பது முடிவில் தான்!

கொஞ்சம் வசதி. ம்ஹீம். நிறைய வசதி இருந்தால்... வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு போடலாம். சுவை கூடும்.

சேமியா உப்புமாவிற்கு இத்தனைப் பத்திகளா, நிறைய நேரம், உழைப்பு வேண்டும் என தவறாக நினைத்துவிடாதீர்கள். சேமியா என் மீது கோபித்துக் கொண்டுவிடும்! இருப்பதிலேயே குறைவான நேரம், உழைப்பு கேட்பது சேமியா உப்புமா தான்!   :)

சாப்பிட்டதும், சேமியா உப்புமா போரடித்துவிட்டது! இனி மீண்டும் செய்ய பல மாதங்களாகும்!

 

#ஆண்கள்_சமையல்