> குருத்து

December 23, 2008

போக்குவரத்து சட்டங்கள் – ஒரு பார்வை!



கடந்த ஆண்டில் சென்னையில் நடந்த வாகனவிபத்துகளின் எண்ணிக்கையை இந்த ஆண்டில் நவம்பர் மாதத்திற்குள்ளேயே வெற்றிக்கரமாக(!) எட்டிவிட்டதால்...

அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்து விதிகளை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என காவலர்கள் டிசம்பர் இறுதிவாரம் அறிவுரை சொல்வார்கள். ஜனவரிக்கு பிறகு கடைப்பிடிக்க வில்லையெனில் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கமிசனர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். (21.12.2008)

***

முன்பெல்லாம் வேலை தொடர்பாக மாதம் ஒருமுறை சென்னை வந்து போவேன். அப்பொழுதெல்லாம் சென்னை சிக்னல்களில் மக்கள் “எவ்வளவு ஒழுங்காக வரிசையாக போகிறார்கள்” என வியந்து பார்த்திருக்கிறேன்.

வேறு வழியேதும் இல்லாமல், சென்னையில் செட்டிலாக வேண்டிய ஒரு நெருக்கடி வந்தது. சென்னையிலேயே தங்கினேன். தொடர்ச்சியாக கவனித்த பின்புதான் உண்மை தெரிந்தது. போலீசு எங்கெல்லாம் நின்று கவனிக்கிறார்களோ அங்கெல்லாம் தான் மக்கள் ஒழுங்காக நிற்கிறார்கள் என புரிந்துகொண்டேன்.

***

வளர்ந்த நாடுகளில் 80% வாகனங்கள் ஓடுகிறது. ஆனால், நம்மை போன்ற வளரும் நாடுகளில் தான் 80% விபத்து ஏற்படுகிறதாம்.

கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 12036 சாலை விபத்துகள் நடந்திருக்கின்றன. 11034 பேர் இறந்திருக்கிறார்கள். சென்னையின் பங்கு மட்டும் 1161 பேர். ஒரு நாளைக்கு குறைந்தது 3 பேர். மொத்த தமிழ்நாட்டில் சென்னையின் பங்கு மட்டும் ஏறத்தாழ 10%க்கும் மேல்.

கடந்த ஆண்டுகளில், வருடம் தோறும் 1000 என உயிர் இழப்புகள் அதிகரித்திருக்கிறது.

சென்னையில் வண்டி ஓட்டுவது மிக மிக சிரமமான காரியம்.
வேக வேகமாய் பறப்பார்கள். சிக்னலில் நிற்கும் பொழுது ஒவ்வொருவரையும் கவனியுங்கள். பயங்கர டென்சனுடன் எரிச்சலுடன் நிற்பார்கள். விதிகள் எல்லாம் மற்றவர்களுக்கு. தனக்கு மட்டும் இல்லை என நினைப்பிலேயே பெரும்பான்மையோர் வண்டி ஓட்டுகிறார்கள்.



போக்குவரத்து விதிகளை சரியாக கடைப்பிடிக்கிறேன் பேர்வழி என மஞ்சள் விளக்கு போட்டதும் வண்டியை நிறுத்தினீர்கள் என்றால்... பின்னாடி வரும் லாரியாலோ அல்லது அரசு பேருந்தாலோ நீங்கள் சட்னியாகிவிடுவீர்கள்.

மக்களுக்கு இவர்கள் சொல்கிற அறிவுரை எல்லாம் தெரியாது என்றா நினைக்கிறீர்கள். எல்லாம் தெரியும். பிறகு ஏன் இப்படி ஒழுங்கு இல்லாமல் இருக்கிறார்கள்

இந்த பிரச்சனை சமூக உளவியல் சார்ந்தது. சமூகப் பொறுப்பு இல்லாமல் இருப்பது தான் இவ்வளவு விபத்துக்கும் காரணம்.

சக மனிதர்களை பற்றிய அக்கறையின்மை, ஒவ்வொரு மனிதனும் சென்னையில் தனித்தனித் தீவாய் மனதளவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நேர்மையாக பணம், புகழ் சம்பாதிக்க வேண்டும் என்ற நெறி இல்லாமல் விரைவில் சம்பாதிக்க வேண்டும். அதுவும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற சிந்தனை மக்களின் மனதில் பாசியாய் படர்ந்திருக்கிறது.

சென்னையில் நிலவுகிற முதலாளித்துவ சமூகம் அதற்கு நல்ல உதாரணமாய் இருக்கிறது.

‘என் தனிப்பட்ட செயல்களைப் பார்க்காதே! என் படைப்பை பார்!’ என்று கேவலமாய் வாழ்ந்தாலும், சமூகத்தில் புகழ்பெற்று வலம்வரும் இலக்கியவாதிகள்.

ஏரியாவிற்குள் கஞ்சா வித்தவன், கள்ளச்சாராயம் வித்தவன், கந்துவட்டி வாங்கியவன் எல்லாம் ஏதோவொரு ஓட்டுக்கட்சியில் சேர்ந்து கவுன்சிலர், எம்.எல்.ஏ. என வலம் வருகிறார்கள்.

சாராயம் வித்தவன், மாமா வேலை பார்த்தவனெல்லாம் தனியார் கல்லூரிகளை உருவாக்கி கோடிக்கணக்கில் கல்லாக்கட்டி சமூகத்தில் கல்வியாளராக வலம் வருகிறார்கள்.

இப்படி கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல் என எல்லா அரங்கிலும் மக்கள் விரோதிகள் முன்னணியில் நிற்கிறார்கள். சமூக அக்கறை உள்ளவர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

இப்படி மக்களின் மனதில் பாசியாய் படந்திருக்கிற கோளாறான சிந்தனை முறை மாற வேண்டும். சமூகமும் மாற வேண்டும்.

சிந்தனை இப்படி கோளாறாய் இருக்கும் பொழுது, சாலையில் மட்டும் சரியாக நடந்து கொள்வார்களா என்ன? ஒரு சமூக மாற்றம் ஏற்பட்டால் ஒழிய இந்த நிலையில் பெரியதொரு மாற்றம் வரச் சாத்தியமில்லை.

மற்றபடி, சட்டங்களை கடுமையாக்கினால்... சரியாக போய்விடும் என்கிறார்கள். நாடு லஞ்ச லாவண்யத்தில் மூழ்கி திளைக்கும் பொழுது, சட்டங்களை கடுமையாக்கினால்... காவலர்களின் தொந்திகளைத் தான் இன்னும் பெருக்க வைக்கும்.

இன்றைய அமெரிக்க, ஐரோப்பிய மக்களின் நிலை!


என்னுடைய பள்ளி பருவ காலத்தில் அம்மாவிடம் ஆசையாய் கேட்டிருக்கிறேன். “அம்மா! ஒரு நாய் வளர்க்கலாம்மா!”

எங்களுடைய மொத்த குடும்பமும் உழைப்பில் ஈடுபட்டாலும், வறுமையில் உழல்கிற குடும்பம்.

அம்மாவிடம் கேட்டதும், உடனே பதில் வரும்.

“உங்களுக்கே சோறு போட முடியல! இதுல அது வேற!”

“எதிர்வீட்டில் இரண்டு நாய் வளர்க்கிறார்களே!” என்பேன்.

“அது ஊரை கொள்ளையடிச்சு கந்து வட்டி-ல வர்ற பணம்டா!. அவங்க இன்னும் இரண்டு நாய் கூட வளர்ப்பாங்க!” என்பார் கோபமாய்.

****

இன்றைக்கு அமெரிக்காவிலும், ஐரோப்பியாவிலும் மக்களின் நிலை பரிதாபகரமான நிலை.

தங்களுடைய சேமிப்புகளை தொலைத்து, இருக்கிற வேலை இழந்து நிற்கும் அவர்களால் தங்களுடைய செல்ல வளர்ப்பு பிராணிகளை முன்பை போல ஆரோக்கியமான முறையில் கவனிக்க முடியவில்லை.


ஆகையால், பணம் செலுத்த முடிகிறவர்கள் தங்களுடைய செல்லப் பிராணிகளை காப்பகங்களில் ஒப்படைக்கிறார்கள். முடியாதவர்கள் வேறு பகுதிகளுக்கு சென்று தெருவில் விட்டுவிட்டு திரும்பி பார்க்காமல் வந்து விடுகிறார்கள்.

இந்த வளர்ப்பு பிராணிகள் சாப்பிடும் அளவு மற்றும் கலோரியின் அளவு எவ்வளவு தெரியுமா?

ஓரளவு வசதிப்படைத்த இந்தியர் சாப்பிடும் உணவை விட மூன்றுமடங்கு அளவும், கலோரியும் கொண்டவை.

மூன்றாம் உலக நாடுகளை கொள்ளையடித்து தங்களுடைய சொந்த நாட்டு மக்களை செல்லப்பிள்ளைகளாக பார்த்துக்கொண்டது. மக்களும் நிறைய செலவு செய்து பகட்டாய் வாழ்ந்தார்கள்.

அங்கு கடித்து, இங்கு கடித்து இறுதியில் தன் சொந்த நாட்டு மக்களையே முதலாளித்துவம் கடித்து குதறிவிட்டது.

அமெரிக்க, ஐரோப்பிய மக்கள் இனியாவது, ஏகாதிபத்திய நாடுகளான தங்கள் நாடுகள் பல்வேறு நாடுகளை கொள்ளையடிப்பதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.

December 21, 2008

அமெரிக்க திவால் - இன்றைய அமெரிக்காவின் நிலை!

நிதிமூலதன கும்பல்கள் விளையாடி, தங்களுடைய சேமிப்பை எல்லாம் பங்கு பத்திரங்களாக வாங்கி வைத்திருந்து.. இப்பொழுது மதிப்பிழந்து குப்பை காகித பத்திரங்களாக மாற்றப்பட்டு ஏமாந்து நிற்கும் அமெரிக்க நடுத்தர வர்க்கம், பல்வேறு தில்லுமுல்லுகளால் செயற்கையாக விலை பன்மடங்கு ஏற்றப்பட்டு, வீட்டுக்கடனை அடைக்க முடியாமல் வீட்டை விட்டு துரத்தப்பட்ட அமெரிக்க அடித்தட்டு மக்களின் இன்றைய யதார்த்த நிலை என்ன வென்று தெரியுமா?

ஜெயமங்கலம், வெள்ளக்கோவில் பகுதிகளில் நெசவுத் தொழிலை நம்பி இருந்த நெசவாளிகள் வேலையிழந்து வாழ்வதற்காக தன்னுடைய கிட்னியை விற்று பிழைத்தார்களே! அதே போல், அமெரிக்கர்கள் தங்களுடைய ரத்த பிளாஸ்மா, தலைமுடி, உடலில் சுரக்கும் சில மருத்துவ திரவங்கள், டிஷ்யூக்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

ஆண்கள் தங்கள் உயிரணுக்களை விற்கிறார்கள். 100 டாலர் கிடைக்கிறதாம். சியாட்டிலில் உள்ள ஒரு உயிரணு வங்கியில் முன்பெல்லாம் 50 பேர் விண்ணப்பித்த நிலையில், இன்றைக்கு 150 விண்ணப்பங்கள் வருகின்றனாம்.

பெண்கள் தங்களுடைய கருமுட்டைகளை விற்கிறார்கள். அதற்கும் 100 டாலர் கிடைக்கிறதாம். நன்கு செழிப்பான கருமுட்டை 7000 டாலர்கள் விலை கிடைக்கிறதாம். முன்பு, நாளொன்றுக்கு இரண்டு முதல் ஐந்து பெண்கள் வந்தவர்கள்... இப்பொழுது, இருபது பேர் வருகிறார்களாம்.

(நன்றி – தினமணி கதிர் - 21.12.2008)

ஆனால் இந்த கொள்ளையை அடித்த கும்பல்களின் இன்றைய நிலை என்ன தெரியுமா? மேலே படியுங்கள்.

****

ஊரை அடித்து உலையில் போடும் கூட்டுக் களவாணிகள் – அமெரிக்க முதலாளிகள் அடித்த வீட்டுக் கடன் கொள்ளையில், அமெரிக்க அரசு ஜாடிக்கேத்த மூடியாய் செயல்பட்டுள்ளது.


நேற்று வரை, புகழ் பெற்ற அமெரிக்க நிதி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக (C.E.O.) அறியப்பட்டவர்கள், இன்று அமெரிக்க மக்களால் கொள்ளைக்காரர்களாகக் காறி உமிழப்படுகிறார்கள். "வீடிழந்து, கடனாளியாகித் தெருவில் நிற்கும் மக்களைக் கைதூக்கி விடு; இந்தக் கொள்ளைக் கும்பலைச் சிறையில் தள்ளு'' என்ற முழக்கங்கள் அமெரிக்காவில் திரும்பிய பக்கமெல்லாம் எதிரொலிக்கின்றன.

செத்துப் போன பங்குச் சந்தை சூதாட்டப் பேர்வழி அர்சத் மேத்தாதான் இந்தியாவின் நிதி மந்திரி; இன்னொரு சூதாட்டப் பேர்வழியான கேதான் பாரேக்தான் ரிசர்வ் வங்கியின் கவர்னர்; தமிழக மக்களின் சேமிப்பையெல்லாம் சுருட்டிக் கொண்டு ஓடிப் போன "பிளேடு'' கம்பெனி அதிபர்கள்தான் நிதி ஆலோசகர்கள் இப்படிப்பட்ட நிலைமையைக் கற்பனை செய்து பார்ப்பது கூட நமக்கு அச்சமூட்டுவதாக இருக்கும். ஆனால், அமெரிக்காவிலோ அர்சத் மேத்தாக்களுக்கெல்லாம் அப்பனான நிதிச் சந்தை சூதாடிகள்தான் நாகரிகமாகச் சொல்வதென்றால் நிதி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக இருந்தவர்கள்தான் அந்நாட்டின் நிதியமைச்சராக, நிதித்துறை ஆலோசகர்களாகப் பதவி ஏற்கிறார்கள். இந்தச் சூதாடிகள் கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவையே சூதாட்ட விடுதியாக மாற்றி விட்டதோடு, பல்வேறு நாடுகளையும் இச்சூதாட்டத்தில் இழுத்துப் போட்டு விட்டார்கள் என்பதும்தான் இந்த ""நெருக்கடி'' உணர்த்தும் உண்மை.


அமெரிக்க ஜனநாயகம்: சூதாடிகளின் ஏஜெண்ட்

1930ஆம் ஆண்டு அமெரிக்கப் பொருளாதாரம் இந்த நெருக்கடியைப் போன்றதொரு வீழ்ச்சியைச் சந்தித்தபொழுது, கிளாஸ்ஸ்டீகல் சட்டம் உருவாக்கப்பட்டு, வர்த்தக வங்கிகளும், முதலீட்டு வங்கிகளும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டன. 1930க்கு முன்பு வங்கிகளே பங்குச் சந்தை தரகு நிறுவனங்களையும் நடத்தி வந்ததால், வர்த்தக வங்கிகள் பொதுமக்களிடமிருந்து பெறும் சேமிப்புகளைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு இச்சட்டம் உருவாக்கப்பட்டு, பொதுமக்களின் சேமிப்புகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் காப்பீடு நிறுவனமும் அமைக்கப்பட்டது. இச்சட்டம், 1999ஆம் ஆண்டு பில் கிளிண்டன் அதிபராக இருந்த சமயத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதற்கு அடுத்த ஆண்டு, நிதிச் சந்தையில் நடைபெறும் சூதாட்டங்களுள் ஒன்றான "டெரிவேட்டிவ்'' (பங்குகள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் மீது நடைபெறும் சூதாட்டத்தின் மீது நடக்கும் சூதாட்டம்) மற்றும் வாராக் கடன்களைக் கைமாற்றிக் கொண்டே போகும் சூதாட்ட வர்த்தகம் ஆகிய இரண்டும், பங்கு பரிமாற்றக் கழகத்தின் கண்காணிப்பில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டன.

அமெரிக்க முதலீட்டு வங்கிகள், தாங்கள் செய்யும் முதலீடுகள் நட்டமடைந்தால், அதனை ஈடு
செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை முன்னிருப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விதி இருந்து வந்தது. 2004ஆம் ஆண்டில், இந்த விதி நீக்கப்பட்டு, முதலீட்டு வங்கிகள் இருப்பு வைத்துக் கொள்ளத் தேவையில்லை என்ற சலுகை நடைமுறைக்கு வந்தது. 2004ஆம் ஆண்டு கோல்டுமேன் சாக்ஸ் என்ற முதலீட்டு வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஹென்றி ஜெ.பால்சன்தான் இவர்தான் இப்பொழுது அமெரிக்க அரசின் நிதியமைச்சர் இச்சலுகையை வாங்கிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

"சப்பிரைம் லோன்'' சூதாட்டம் ஊதிப் பெருத்ததற்கும் இந்த மூன்று சலுகைகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அதேசமயம், இச்சலுகைகள் நடைமுறையில் இல்லாத காலத்தில், அமெரிக்க நிதிச் சந்தை கட்டுப்பாடோடு, நாணயமாக நடந்து கொண்டதாகக் கற்பனை செய்து
கொள்ளக் கூடாது. குறிப்பாக, இக்கட்டுப்பாடுகள் அனைத்தும் நடைமுறையில் இருந்த சமயத்தில்தான் "லாங்டெர்ம் கேப்பிடல் மேனேஜ்மெண்ட்'' என்ற முதலீட்டு நிறுவனமும், என்ரானும் குப்புறக் கவிழ்ந்தன. நியாயமாகப் பார்த்தால், இந்த நிறுவனங்கள் திவாலான பிறகு, கட்டுப்பாடும், கண்காணிப்பும் கடுமையாக இருந்திருக்க வேண்டும்; ஆனால், நடந்ததோ அதற்கு நேர் எதிரானது.


அமெரிக்காவில் வங்கிகளின் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் ரிசர்வ் வங்கி (Federal Reserve) அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டில் இயங்கவில்லை. வங்கி முதலாளிகளின் சங்கம்தான், அதற்குத் தலையாக இருந்து இயக்கி வருகிறது. கிருஷ்ண பகவான் பகவத் கீதையில் "எல்லாம் நானே'' என உரைத்தது போல, அமெரிக்காவில் பங்குச் சந்தை சூதாடியே வங்கி முதலாளியாக இருக்கிறார்; அவரே போலீசாக (கண்காணிப்பாளராக) இருக்கிறார். அவரே நீதிபதியாகவும் (திவாலான பொருளாதாரத்தை மீட்கும் பொறுப்பு) இருக்கிறார்.

அமெரிக்க அரசு, சூதாடிகளின் மீது இருந்த அற்பமான கண்காணிப்புகளை விலக்கிக் கொண்டதோடு, சூதாட்டம் சூடாக நடைபெறுவதற்குத் தேவையான பணத்தையும் வாரிக் கொடுத்தது. அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவராக இருந்த ஆலன் கிரீன்ஸ்பான் அமெரிக்க அரசின் கருவூலத்தில் இருந்து வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை ஒரு சதவீதமாகக் குறைத்ததன் மூலம் டாலர் புழக்கத்தைத் தாராளமாக்கினார்.

இதேபொழுதில், அமெரிக்கப் பங்குச் சந்தை வாரியத்தின் வாராக் கடன்களைக் கண்காணிக்கும் பிரிவில் ஊழியர்களின் எண்ணிக்கை 100இல் இருந்து ஒன்றாகக் குறைக்கப்பட்டது; ஊழல் தடுப்புப் பிரிவில் இருந்து 146 ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். சூதாடிகளுக்கு வழங்கப்பட்ட இச்சலுகைகளை நியாயப்படுத்துவதற்காக, ""அனைவருக்கும் வீடு'' என்ற கவர்ச்சி முழக்கம் அமெரிக்க மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஒரு பக்கம் பணத்தோடு சூதாடிகள்; இன்னொருபுறம் கடன் வாங்கி செலவு செய்யும் நாகரீகத்துக்கு ஆட்பட்டுப் போன மக்கள் பஞ்சும் நெருப்பும் பற்றிக் கொண்ட பின்னணி இதுதான்.

நன்றி : புதிய ஜனநாயகம் – நவம்பர் 2008

பின்குறிப்பு : இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் இடப்படும்.