> குருத்து

November 2, 2009

"மாநிலத்தை விட்டு வெளியேறுங்கள்!" தில்லி அரசு!



'ராஜ்தாக்கரேயின் வழியில் பிச்சைகாரர்களை வெளியேற சொல்வது விசித்திரமாக உள்ளது'

- தில்லி உயர்நீதி மன்றம் கண்டிப்பு.

தலைநகர் தில்லியில் காமன்வெல்த் போட்டிகள் ஜனவரி 2010-ல் துவங்க இருக்கின்றன. இதில் பங்கெடுக்க, பார்க்க-என வெளிநாட்டினர் லட்சகணக்கில் வருகை தருவார்கள். இவ்வேளையில், ஏற்கனவே தலைநகரில் கூட்டம் கூட்டமாய் வாழும் 65000 இந்திய பிச்சைகாரர்கள்

வெளிநாட்டினரை தொல்லை படுத்தி, 'வல்லரசு' இந்தியாவின் 'கெத்'-ஐ நாசப்படுத்திவிடுவார்கள் என முடிவெடுத்து, எல்லா பிச்சைகாரர்களையும் சிறையில் தள்ள முயன்றது. (பார்க்க முந்தைய பதிவு : காமென்வெல்த் போட்டியும் இந்திய பிச்சைகாரர்களும்!)

அரசு அத்தனை பிச்சைகாரர்களுக்கும் சிறை பற்றாது என நினைத்ததா! அல்லது இவர்களுக்கு எதற்கு சில மாதங்கள் சோறு போடவேண்டும் என நினைத்ததா தெரியவில்லை. இறுதியில், "தில்லியை விட்டு வெளியேறுங்கள்! அவரவர் மாநிலத்திற்கு போய்விடுங்கள்" என உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஒருவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

நேற்று இந்த வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.


"பிச்சை எடுப்பது ஒன்றும் கிரிமினல் குற்றம் அல்ல! அரசு அவர்களுக்கு ஏதாவது வாழ்வாதாரத்துக்கு வழி செய்து இருக்கலாம். அதை விட்டு, அவரவர் மாநிலத்துக்கு போகும்படி உத்தரவிடுவது நியாயமில்லை.

மகாராஷ்டிராவில் ராஜ்தாக்கரேயின் நவநிர்மாண் கட்சி அங்கு குடியேறியுள்ள உ.பி., பீகார் மாநிலத்தவரை வெளியேற சொல்வதை போல தில்லி அரசின் இந்த உத்திரவு அமைந்துள்ளது. உள்ளுக்குள் கிரிமினல்களை வைத்துக்கொண்டு பரிதாப நிலையில் பிச்சை எடுப்பவர்களை வெளியேற சொல்வது விசித்திரமாக உள்ளது.

இந்த உத்தரவிற்காக அரசை கண்டனம் செய்கிறோம்."

October 30, 2009

பலான தியேட்டர்களும்! அரசின் ஒத்துழைப்பும்!


ஷகீலா படங்களுக்கு புகழ்பெற்ற பரங்கிமலை ஜோதி, போரூர் பானு, ஆதம்பாக்கம் ஜெயலட்சுமி வரிசையில்... நெற்குன்றம் ஈகிள் திரையரங்கு கடந்த வாரம் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. ஷகீலா ரசிகர்கள் நிச்சயம் குலுங்கி, குலுங்கி அழுதிருப்பார்கள்.

மதன மர்ம மாளிகை, சாயாக்கடை சரசு, மாயக்கா, ட்யூசன் டீச்சர் போன்ற ஷகீலா படங்களைப் பற்றி சில பதிவுகளில் லக்கிலுக்கும், சுகுணாதிவாகரும் பேசியிருக்கிறார்கள். இந்த பதிவு அந்த படங்களைப் பற்றி அல்ல! அந்த படங்களை திரையிடும் திரையரங்குகளைப் பற்றியது!

மதுரவாயிலில் இயங்கும் ஈகிள் திரையரங்கு இப்படித்தான் தமிழ்படங்களை திரையிட்டு கொண்டிருந்தார்கள். மூன்று வருடங்களுக்கு முன்பு, நண்பனுடன் ஒரு நாள் இரவு 'குமரன் s/o. மகாலட்சுமி' என்ற படத்திற்கு தப்பி தவறி போய், போன கால்மணி நேரத்தில் வெளியே வந்துவிட்டோம். எல்லாமே மோசம். தரையிலிருந்து, சவுண்ட் சிஸ்டம் வரை. அடுத்து வந்த சில நாட்களில், பலான படங்களை திரையிட துவங்கினார்கள்.

இப்படி பலான படங்களை வெளியிடும் திரையரங்குகளின் தகுதி மோசமான சேர்ஸ், மோசமான ஸ்கீரின், மோசமான கழிவறை என எல்லா மோசங்களும் அடங்கியது தான். பொதுவாக தமிழ் படங்களை திரையிடும் திரையரங்குகள் கொஞ்சம் கொஞ்சமாய் பராமரிப்பை கைவிடும் பொழுது மக்கள் அந்த திரையரங்குக்கு போவதை கொஞ்சம் கொஞ்சமாய் தவிர்க்கிறார்கள். ஒரு கட்டத்தில்... திரையரங்கை நடத்த வேண்டும். "மக்களும் வரவேண்டும்" என்கிற பொழுது... பலான வகை படங்களை திரையிட துவங்குகிறார்கள். மோசமான பராமரிப்பு, கூடுதல் கட்டணம் வசூல் என்பது இந்த திரையரங்கிற்கான தகுதி. இரண்டு மாநகராட்சி, நிறைய நகராட்சிகளை கவனித்த பொழுது இதுதான் எதார்த்த நிலைமை. விதிவிலக்குகள் இருக்கலாம்.

இப்படிப்பட்ட திரையரங்குகள் ஒருவேளை கைமாறும் பொழுது, செலவழித்து திரையரங்கை புதுப்பிக்கும் பொழுது மீண்டும் பலான படங்களை திரையிடுவதில்லை. ஏனென்றால், என்ன தான் மாதம் மாதம் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கோ அல்லது திரைப்பட கண்காணிப்பு சார்ந்த அரசு அதிகாரிகளை 'கவனித்தாலும்' ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஒப்புக்கு ஒருமுறை பலான பிலிமை கைப்பற்றி ஆபரேட்டரையும், திரையரங்கு நிர்வாகியையும் கைது செய்து, வழக்குப் போடுகிறார்கள். இது மானக்கேடாய் ஆகிவிடுகிறது.

ஆக, அரசு மக்கள் கூட்டம் கூட்டமாய் செல்லும் திரையரங்கை, அதற்கு உரிய பராமரிப்பை செய்ய சொல்லி, கறாராய் இருந்தாலே போதும். பலான திரையரங்குகள் உருவாவதை தடுக்க முடியும்.

இந்த அரசு மக்களைப் பற்றி கவலைப்பட்டது? மதித்தது? அந்தந்த பகுதியில் இயங்கும் முற்போக்கு அமைப்புகள், சமூக மன்றங்கள், குடியிருப்பு சங்கங்கள் ஒன்றாய் சேர்ந்து....

"அரசே!

ஆபாச படங்களை திரையிட அனுமதிக்காதே!
திரையரங்கை இழுத்து மூடு!"


என போஸ்டர் ஒட்ட வேண்டும். அதற்கும் நடவடிக்கை இல்லையெனில்... மக்களை ஒன்று திரட்டி, உருட்டை கட்டைகளை எடுத்து போய் நிர்வாகிகளை உதைக்க வேண்டியது தான். நிலைமை சரியாகிவிடும்.

தமிழக வரலாற்றில் இப்படி ஏற்கனவே நடந்திருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் தீபா, ரூபா என இரண்டு திரையரங்குகள் இருந்தன. மேலே சொன்ன மோசமான எல்லா தகுதிகளுக்கும் திரையரங்கு வந்தடைந்த பொழுது, ஆபாச படங்களை திரையிட துவங்கினார்கள். ஒருமுறை புரட்சிகர பெண்கள் அமைப்பைச் சேர்ந்த பெண் தோழர்கள் குழு உள்ளே நுழைந்து... பிலிமை எடுத்து வந்து, முக்கிய சாலையில் கொண்டுவந்து நடுரோட்டில் போட்டு கொளுத்தினார்கள். தமிழகம் முழுவதும் பரபரப்பான செய்தி அது.

மக்களுக்கான புரட்சிகர இயக்கங்கள் வளர வேண்டும். அது ஒன்றே இதையெல்லாம் தீர்க்க வழி.

October 13, 2009

லஞ்சம் விளையாடும் புழல்சிறை!


இந்த நாட்டில் சட்டத்தை மீறுபவர்கள் முதலில் யார் என போட்டி வைத்தால் நிச்சயமாய் காவல்துறை தான் ஜெயிக்கும். காவல்துறையின் சகல நடவடிக்கைகளிலும் மக்கள் இதை நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள்.

காவல்துறையின் கண்காணிப்பில் உள்ள சிறையும் இதில் விதிவிலக்கல்ல! புழல் சிறையில் லஞ்சமும், முறைகேடுகளும் மலிந்திருக்கின்றன என்ற தொடர்ச்சியான புகார்களின் அடிப்படையில்... வரலாற்றில் முதன் முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியிருக்கிறது.

கடந்த வாரம் எஸ்.பி, டி.எஸ்.பிக்கள் அடங்கிய 50 பேர் கொண்ட ஒரு குழு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறை என்று பெயர் பெற்ற சென்னை புழல் சிறையில் சோதித்தனர்.

சிறையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களான பீடி, சிகரெட், பான்பராக், குட்கா தாராளமாய் கட்டு கட்டாய் சிக்கியிருக்கின்றன. கைதிகளுக்கான உணவு பொருட்கள் அதன் உண்மை இருப்பைக் காட்டிலும் மிக அதிகமாகவோ அல்லது மிக குறைவாகவோ இருந்திருக்கின்றன. வெளி மார்க்கெட்டில் நிறைய கடத்தி விற்பனை செய்கிறார்கள் என்று எழும் புகார் தனி.

இது தவிர... ஆபாச டிவிடிக்கள் நிறைய சிக்கியிருக்கின்றன. அதுவும் துணை ஜெயிலர் அறையில் 21 ஆபாச சிடிக்கள் கிடைத்தனவாம். நான்கு கைதிகளின் அறையில் விதிமுறைகளை மீறி கேபிள் டிவி இணைப்புடன் தொலைக்காட்சி பெட்டிகள் இருந்திருக்கின்றன.



சிறை அதிகாரிகள், வார்டன்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை, கிளுகிளுப்பான படங்களை ஏன் கைதிகளுக்கு சப்ளை செய்கிறார்கள்? கைதிகள் மீது பாசமா? எல்லாம் பணத்திற்காக தான்.

சோதனையின் பொழுது.. சிறை அதிகாரிகள், வார்டன்கள், சிறை மருத்துவர் ஆகியோர்களிடம் சில ஆயிரம் லஞ்சப்பணம் சிக்கியிருக்கிறது.

வெளியே ஒரு சிகரெட் ரூ. 3 என்றால்.. சிறையில் ரூ. 10. வெளியே கஞ்சா பொட்டணம் ரூ. 5 என்றால்... உள்ளே பல மடங்கு. இது தவிர மருத்துவமனைக்கு போக வேண்டுமா? மருத்துவருக்கு லஞ்சம் கொடுத்தால்... அவர் பரிந்துரைப்பார். கறிக்கஞ்சி வேணுமா? மருத்துவருக்கு பணம் கொடுத்தால்... அவர் பரிந்துரைப்பார்.

ஏற்கனவே புழல் சிறையில் கடந்த துறை வாரியான சோதனையின் பொழுதே... 30க்கும் மேற்பட்ட செல்போன்கள், 2 பென்டிரைவர்கள், 12 கிலோ கஞ்சா சிக்கியிருக்கின்றன. மேலும் ஆபாச டிவிடிக்கள் சிக்கியிருக்கும் பொழுது...டிவிடி பிளேயரும் மாட்டியிருக்க வேண்டும். சிறையில் சகல நடவடிக்கைகளிலும், சகல மட்டத்திலும் லஞ்சம் விளையாடும் பொழுது, பிடிபட்ட பொருள்களும், பணமும் குறைவாக இருக்கிறதே என யோசிக்கும் பொழுது, அதற்கும் பதில் இருக்கிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை மதியம் 1 மணிக்கு போய் அனுமதி கேட்டு, வேண்டுமென்றே அரை மணி நேரத்திற்கும் மேலாக இழுத்தடித்து தான் உள்ளே அனுமதித்திருக்கிறார்கள். அரைமணி நேரத்தில் எவ்வளவோ மறைக்கலாமே!

சகல மட்டத்திலும் இப்படி லஞ்சம் விளையாடுவது அரசுக்கு தெரியாதா என்ன? எல்லாம் தெரியும். தெரிந்து... கண்டும் காணாமல் இருக்கிறது. சிறைக்கு வெளியே பத்திரிக்கைகள், பொதுமக்கள் என கண்காணிப்பு இருக்கும் பொழுதே சமூகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடும் பொழுது, சிறை காவல்துறையின் பேட்டை! அங்கு சொல்லவா வேண்டும்.

காசு கொடுத்தால் எல்லாம் கிடைக்கும் இந்த சிறையில் தான்.... அரசியல் ரீதியாக கைதாகும் முற்போக்கு மற்றும் கம்யூனிஸ்ட் தோழர்கள் சிறையில் இருக்கும் பொழுது தான், அவர்கள் ஒவ்வொரு அடிப்படை உரிமைக்கும் போராடும் பொழுது, அங்கு நடக்கும் முறைகேடுகள் பற்றிய செய்திகள் வெளியே வருகின்றன.

குற்றங்கள் புரிந்து உள்ளே செல்லும் கைதிகளை சீர்ப்படுத்தி, திருத்தி அனுப்பும் வேலையை சிறை செய்வதாக சொல்கிறார்கள். கிரிமினல்களே நிர்வகிக்கும் பொழுது.... இது எப்படி சாத்தியப்படும்?

****

தொடர்புடைய மேலும் சில பதிவுகள்

பயங்கரங்களுக்கு பஞ்சமில்லாத புழல்சிறை

விசாரணை கைதிகள் - சிறையில் சமையல்காரர்கள்- குருத்து