> குருத்து

February 10, 2010

நான் வித்யா - புத்தக அறிமுகம்!


நடந்து முடிந்த தமிழ்மண விருது போட்டியில்... பெண்கள்/திருநங்கைகள் வாழ்வியற் சிக்கல் பிரிவில்.. குருத்து தளத்திற்கு இரண்டாம் பரிசும், பதிவர் லிவிங் ஸ்மைல் வித்யாவிற்கு முதல் பரிசு கிடைத்தது. பரிசுத் தொகைக்கு வாங்கிய புத்தகங்களில் இந்த புத்தகமும் ஒன்று.

வாங்கிய இரண்டாவது நாளின் பின்னிரவிற்குள் படித்து முடித்துவிட்டேன். இந்த புத்தகம் 2007 டிசம்பரில் வெளிவந்த சமயத்தில் தமிழ்மணத்தில் விளம்பரம் பார்த்தும், பிறகு புத்தக கண்காட்சியில், கடைகளில் கண்ணில் பட்டும், கடந்து சென்றுவிட்டேன். காரணம் - கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள் என்னை ஈர்ப்பதில்லை. புத்தக கண்காட்சிகளுக்கு வரும் வாசிப்பு பழக்கம் இல்லாத மக்களுக்காக எழுதப்படும் புத்தகங்களாக இருப்பது தான் பிரதான காரணம். சில புத்தகங்களை வாசித்த பொழுதும் இந்த கருத்து வலுப்பட்டிருக்கிறது.

"சொர்க்கம் வேண்டும் என்று நான் கேட்கவில்லை;
நரகம் வேண்டாமே என்று தான் மன்றாடுகிறேன்"


என...வித்யா புத்தகத்தின் இறுதி பக்கங்களில் வேண்டும் பொழுது...குஜராத்தில் இனப்படுகொலை நடந்த பொழுது... இந்து மத பயங்கரவாதிகளிடம் கைகூப்பி தன் உயிருக்காக.. கண்ணீர் மல்க... கெஞ்சி நிற்கும் அந்த முஸ்லீம் இளைஞரின் முகம் தான் நினைவுக்கு வந்து போனது.

வித்யாவின் இந்த கோரிக்கையை, பொதுமக்களுக்கு பரவலாய் சென்று சேர்க்கும் விதத்தில்.. கிழக்கு பதிப்பகம் வெளியிட்டது மிகச்சரி என கருதுகிறேன்.

****

வித்யா கடந்து வந்த பாதையின் சரிதை இது. பால்ய காலம் தொட்டே தன்னை பெண்ணாய் உணர ஆரம்பித்தது முதல் எதிர்கொண்ட மனசிக்கல்கள், உறவின் உரசல்கள், சமூக சிக்கல்கள் என வித்யாவின் பாதையெங்கும் வலி தான். நமக்கும் நன்றாகவே வலிக்கிறது.

****

முதல் அத்தியாயமே 'நிர்வாணம்'. முன்பொருமுறை மேலை நாட்டில் நடந்த மாற்று பாலினம் மாறுவதற்கான அறுவை சிகிச்சையை யூ டியூப்-பில் பார்த்துவிட்டு கதிகலங்கி போனேன். அதை விட அதிர்ச்சியாக இருந்தது வித்யாவிற்கு நடந்த அறுவை சிகிச்சை. எந்த பரிசோதனையும் இல்லை. முறையான அறுவை தியேட்டர் இல்லை. கருவி இல்லை. 'நிர்வாணம்' - மறு ஜென்மம் என்றால் மிகையில்லை.

****

புத்தகத்தை வாங்கும் பொழுது... முகப்பு அட்டையில் உள்ள வித்யா படம் சரவணனும் + வித்யாவும் கலந்து இருப்பதை உணர முடிந்தது. படித்து முடித்ததும்... சரவணன் காணாமல் போய்... அறுவை சிகிச்சையின் பொழுது... பிடிவாதமாய் கழட்ட மறுத்த அந்த மெல்லிய மூக்கத்தியோடு வித்யாவாக மட்டும் கண்ணுக்கு தெரிந்தார். புத்தகம் அந்த ரசவாதத்தை அருமையாக செய்திருக்கிறது.

****

வெளியிட்ட ஆண்டில் புத்தக கண்காட்சியில் இரண்டாவது இடத்தை பெற்றிருக்கிறது. தமிழோடு, ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

"புரிந்து கொள்வீர்களா? எனில், நன்றி" யுடன் புத்தகத்தை நிறைவு செய்கிறார்.

புரிந்து கொள்ள முடிகிறது வித்யா.


தோழமையுடன்,

குருத்து


பின்குறிப்பு : சென்னையில் ஒரு பொது நூலகம் ஒன்றிக்காய்... படித்த புத்தகங்களை பொதுமக்களிடமிருந்து வாங்கி கொண்டிருக்கிறார்கள். என்னுடைய மற்ற புத்தகங்களை தருகிறேனோ இல்லையோ, வித்யாவின் புத்தகத்தை மட்டுமாவது நிச்சயம் அனுப்ப வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன்.

தொடர்புடைய இணைப்புகள் :

லிவிங்ஸ்மைல் வித்யாவின் தளம்

பொட்டை - ஒரு உண்மை நிகழ்வு

என்னை சக மனுசியாக பார்த்தார்கள் - குருத்து

February 8, 2010

கறுப்பு நிறம் : நம் நிறத்தையே நமக்கு எப்படி பிடிக்காமல் போனது?

சாதி மறுப்பு திருமணம் செய்வதற்காக, பெண் தேடிக்கொண்டிருந்தோம். ஒரு பெண்ணைப் பார்த்து தனியாக பேச, எட்டு வயது அக்கா பையனையும் உடன் அழைத்து சென்றிருந்தேன்.
அரைமணி நேரம் பேசிவிட்டு... வீடு திரும்பும் பொழுது,
'அவங்களை பிடிச்சிருக்கா?' அக்கா பையனிடம் கேட்டேன். அமைதியாக இருந்தான்.
"பிடிக்கல" என்றான்.
"ஏண்டா?" என்றேன்.
'அவங்க கருப்பா இருக்காங்க!" என்றான்.
மிகுந்த கவலைக்குள்ளானேன்.
ஏனென்றால்... அவன் நல்ல கருப்பு.

****

தமிழர்களின் நிறம் கருப்பு. நம் நிறத்தையே நமக்கு பிடிக்காமல் போனது? கேலியும், கிண்டலும் செய்யும் அளவிற்கு ஏன் ஆனது? '7 நாளில் சிவப்பழகு' என கோடிக்கணக்கில் நம்மிடமே தைரியமாக சொல்லி.. பன்னாட்டு நிறுவனங்கள் எப்படி கோடிக்கணக்கில் நம்மிடமே கல்லாக் கட்ட முடிகிறது? சிவந்த நிறமுள்ள பெண்/ஆண் வேண்டும் என பத்திரிக்கைகளில் திருமண விளம்பரங்கள் பார்க்கும் பொழுது கோபம் தலைக்கேறுகிறது. இதற்கான சமூக, வரலாற்று காரணங்களை தேடி அலைந்த பொழுது... பேராசிரியர் தொ. பரமசிவன் சில அரிய தகவல்கள் தருகிறார். படியுங்கள். உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள்.

****

தாழ்வுக்கும் இழிவுக்கும் உரியதாகக் கறுப்பு நிறம் கருதப்பட்டதன் சமூக வரலாற்றுக் காரணிகள் யாவை?

இக்கேள்விக்கான விடையை சமூக அமைப்பில் காண இயலாது. மாறாக அதிகாரம் சார்ந்த அரசியல் அமைப்புக்குள்ளே தேடவேண்டும். அதுவும் தமிழ் அரசுகள் வீழ்ச்சியடைந்த 13ம் நூற்றாண்டின் இறுதிக்குப் பின்னரே தேட வேண்டும்.

கி.பி. 1310 முதல் 1323 வரை தமிழ்நாடு இசுலாமியர் படையெடுப்பால் அலைக்கழிந்தது. மீண்டும் 1383ல் விஜய நகரப் பேரரசின் தளபதிகளின் படையெடுப்பால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. விஜய நகரப் பேரரசு இசுலாமியருக்கு எதிராக வைதிக நெறியை உயர்ந்த இலட்சியமாகக் கொண்டு தோன்றிய அரசமரபாகும். ஆட்சியதிகாரம் விஜய நகரப் பேரரசின் தள்பதிகளின் கைக்கு மாறியவுடன் தமிழ்நாடு ஒரு பண்பாட்டு நெருக்கடியை எதிர்கொண்டது.

அதாவது வரலாற்றில் முதல்முறையாகத் தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரம் பிறமொழி பேசும் ஆட்சியாளர்களிடம் மாறியது. இந்த ஆட்சியாளரைத் தொடர்ந்து தெலுங்கு மொழி பேசும் மக்கள் பெருமளவு குடியேறத் தொடங்கினர். பிராமணர் தொடங்கிச் சக்கிலியர் ஈறாக இந்தக் குடியேற்றம் அமைந்தது. பிராமணர், பிராமணரை அடுத்த 'மேல் சாதியினரான' புலால் உண்ணாத ரெட்டியார், ராஜுக்கள் இவர்களுக்கு அடுத்த படிநிலைகளில் அமைந்த நாயுடு (வெலமா, கம்மவார், கவர, காப்பு, பலிஜா), இவர்களுக்கும் அடுத்த நிலையில் உள்ள ஆசாரிகள், பெரும்பாலும் புன்செய் நிலத்து விவசாயிகளான நாயக்கர், மிகத் தாழ்நிலையில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியர், தோட்டி வேலை செய்யும் சக்கிலியர் என இவர்களை வகைப்படுத்துக் காணலாம்.

இவர்களோடு செளராட்டிரப் பகுதியிலிருந்து ஏற்கனவே வெளியேறி ஆந்திரத்தில் இருந்த நெசவுத் தொழில் செய்யும் சாதியான செளராட்டிரர்களும் தமிழகத்தில் வந்து குடியேறினர். இக்கால கட்டத்தில் தமிழ்நாட்டில் தனித்து வளர்ந்திருந்த சைவ, வைணவ மதங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. வைதிக நெறியே முன்னிறுத்தப்பட்டது. 'இந்து மதம்' அதிகாரத்தில் அமர்ந்தது. தமிழ் அக்காலத்தில் ஆட்சி மொழியாக இல்லை. ஆட்சியாளர்களின் மொழியாகிய தெலுங்கு பேணப்பட்டது. அரசியல் அதிகாரத்தில், வைதிக நெறியின் காவலர்களான பிராமணர்க்கும் சம்சுகிருதத்திற்கும் முன்னுரிமை தரப்பட்டது.

இவர்களின் ஆட்சி முடியும் தறுவாயில் கி.பி. 1700க்குப் பிறகு உருது பேசும் வடநாட்டு முசுலீம்கள் அங்காங்கே சில பகுதிகளில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினர். மிகச்சில பகுதிகளில் பிரஞ்சுக்காரரும் ஏனைய பகுதிகளில் பிரிட்டிஷ்காரர்களும் ஆட்சியைக் கைப்பற்றினர்.

கி.பி. 14ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதலாகத் தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்தைக் கையிலே வைத்திருந்த அனைத்து ஆட்சியாளர்களும், தமிழர்களின் சாரசரி நிறத்திலிருந்து வேறுபட்ட சிவந்த நிறமுடையவர்கள். அவர்களால் ஆதரிக்கப்பட்ட வடநாட்டில் இருந்து வந்த இசுலாமிய ஞானிகள், ஐரோப்பியத் பாதிரிமார்கள், பிராமணர்கள் ஆகிய அனைவரும் தமிழர்களைவிடச் சிவந்த நிறமுடையவர்கள். எனவே ஐந்து நூற்றாண்டுக்கு மேலாகத் தமிழ்நாட்டில் அரசியல் அதிகாரமும், அரசியல் சித்தாந்தங்களையும் நடைமுறைகளையும் உயர்ந்த்திப் பிடிக்கின்ற ஆன்மீக அதிகாரமும் சிவந்த நிறமுடையவர்களின் கையிலேயே இருந்தது. எனவே இந்த நிறம் அதிகாரத்தின் நிறமாக, உயர்ந்த ஆன்மீகத்தின் நிறமாக, உயர்ந்த ஆன்மீகத்தின் நிறமாக, மேட்டிமையின் சின்னமாக, அழகு நிறைந்ததாகக் காட்டப்பட்டது. சுருக்கமாகச் சொல்வதானல், தமிழ் பேசும் பெருவாரியான மக்கள் கூட்டத்தாரின் மரபுவழி அழகுணர்ச்சி மனிதத் தோலின் நிறத்தைப் பொறுத்த மட்டில் திசைமாற்றம் பெற்றது.

எதிர்நிலையில் சொல்வதனால். கருப்பு நிறமுடைய மக்கள் அழகற்றவர்களாகவும், ஆளப்படுவர்களாகவும், அதிகாரத்திற்குத் தகுதியற்றவர்களாகவும், இழிவின் சின்னமாகவும் கருதப்பட்டனர். இன்றளவும் இதுவே தொடர் கதையாகி வருகிறது.

எனவே தான் 'கறுப்பு - சிவப்பு' என்பது வெறும் அழகுணர்ச்சி சார்ந்த பிரச்சனையன்று. அது மரபுவழி அழகுணர்ச்சியிலிருந்து திசை மாற்றப்பட்டவர்களின் அதிகார வேட்கைக்கும் மரபுவழிச் சங்கிலியால் பிணைக்கப்பட்ட எளிய மக்களுக்கும் இடையிலே நிலவிவரும் ஒரு முரண்பாடு ஆகும்.

- பேராசிரியர் மற்றும் ஆய்வாளர் தொ. பரமசிவன் எழுதிய பண்பாட்டு அசைவுகள் புத்தகத்திலிருந்து...பக்கம் 113, 114.

February 1, 2010

விருதுகளுக்குப் பின்னால்!

விருதுகளும் பட்டங்களும் ஜமீன்தாரி சிந்தனையின் பாதிப்பால் ஏற்பட்டவை என்று கூறினால் அதைப் பலரும் மறுக்கக்கூடும்.​ அளப்பரிய சேவை செய்தவர்களையும்,​​ திறமையாளர்களை​யும் கெளரவிப்பது ஏன் என்று அவர்கள் கேட்கக்கூடும்.​ நியாயம் தான்.​ ஆனால் தங்களது சேவையை சமுதாயம் அங்கீகரிக்கிறது என்பதை எண்ணிப் பெருமைப்படுவதுடன் நின்றுவிடாமல் அந்த விருதையோ,​​ பட்டத்தையோ பெயருடன் இணைத்துக்​கொண்டு பெருமை தட்டிக்​கொள்​வது அவசியம்​தானா என்று கேட்கத்​தோன்றுகிறது.​

ஒருவரின் சேவையை அங்கீகரிக்கும் விதத்தில் வழங்கப்படுவது​தான் பல்கலைக்​கழகங்களால் தரப்​படும் கெளரவ டாக்டர் பட்டம்.​ இந்தியாவிலேயே மிக அதிகமான பல்கலைக்​கழகங்களால் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்​பட்டவர் பண்டித ஜவஹர்லால் நேருவாகத்​தான் இருக்கும்.​ அவர் ஒரு​போதும் தன்னை டாக்டர் ஜவஹர்லால் நேரு என்று அழைப்பதை விரும்பவில்லை.​ கெளரவ டாக்டர் பட்டத்தை யாரும் தனது பெயருக்கு முன்னால் போட்டுப் பெருமை தட்டிக்​கொள்வதில்லை என்பதை அவர் தெரிந்து வைத்திருந்தார்.​

இன்னாருக்கு கெளரவ டாக்டர் பட்டம் தரப்பட​வேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமல்,​​ தனியார் நிகர்நிலைப் பல்கலைக்​கழகங்​கள் நகைச்சுவை நடிகர்கள் உள்பட பலருக்கும் டாக்டர் பட்டத்தை வாரி வழங்குகின்றன.​ அதை நமது ஊடகங்களும் விளம்பரப்படுத்தி மகிழ்கின்றன.​ விருதுகளும் பட்டங்களும்,​​ அமெரிக்காவில் உள்ளது​போல விரைவிலேயே விலை நிர்ணயம் செய்யப்​பட்டாலும் நாம் வியப்படையத் தேவையில்லை.

அரசு விருதுகள் வழங்குவது என்பதைத் தவிர்க்க இயலாது தான். மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் வழங்கும் விருதுகளும் தங்களது மதிப்பையும், மரியாதையையும் இழந்து கேலிப்பொருள்களாக மாறிவருவது வேதனைக்குரிய ஒன்று. ஆட்சியாளர்களின் அடிவருடிகளும், ஆளூட்கட்சியின் நலம் விரும்பிகளும் மட்டுமே இந்த விருதுகளின் பட்டியலில் இடம் பெறுபவர்களில் பெரும்பான்மையினர் என்பஹு இந்தியாவின் எழுதப்படாத சட்டங்களில் ஒன்றாகிவிட்டது.

தகுதிக்கும், திறமைக்கும் தரப்பட்டுள்ள அங்கீகாரம் என்பது போய், நன்றி விசுவாசத்துக்காகத் தரப்படும் நற்சான்றிதழ் தான் இந்த விருதுகள் என்கிற நிலைமை ஏற்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது.

மாநில விருதுகள் தான் இப்படியென்றால், மத்திய அரசின் "பத்ம பூஷண்' விருதுகளின் நிலைமையும் அது தான் என்கிற போக்கு சமீபகாலமாக ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, இந்த வருடத்திய "பத்மபூஷண்' விருதுகளின் பட்டியல் அமெரிக்காவாழ் இந்தியரான ஹோட்டல் அதிபர் சந்த்சிங் சத்வாலின் பெயர் அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த மனிதர் அமெரிக்காவில் பல மோசடிகளில் தொடர்புடையவர் என்பதும், ஒரு அரசியல் தரகர் என்பது தெரிந்தும், இவருக்குப் "பத்ம பூஷண்" விருது தரப்படுகிறது என்றால், அது தெரியாமல் நடந்த தவறல்ல!​

இரண்டாண்டுகளுக்கு முன்பே பிரதமரின் அலுவலக்த்தில் "பத்மஸ்ரீ' விருதுக்காக சத்வாலின் பெய​ரைச் சிபாரிசு செய்த​போது வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் இந்த மனிதரின் பின்னணி​யைக் காரணம் காட்டி அதைத் தடுத்து நிறுத்தியது.​ அப்போது பத்மஸ்ரீ விருதுக்கு நிராகரிக்கப்​பட்ட இவரது பெயர்,​​ இப்போது பத்மபூஷண் விருதுக்குத் தகுதிபெற்றிருக்கிறது என்றால் வேடிக்கையாக அல்லவா இருக்கிறது.

சந்த்சிங் சத்வாலின் மோசடிப் பின்னணி என்ன தெரியுமா?​ பஸ்ட் நியூ​யார்க் என்கிற வங்கியில் இவரும் ஓர் இயக்குநர்.​ அந்த வங்கியில் 12 மில்லியன் டாலர் ​(சுமார் 60 கோடி ரூபாய்)​ கடன் வாங்கியதுடன்,​​ கடனைத் திருப்பிக் கொடுக்க வழியில்லாத பலருக்கும் ​ கடன் வழங்க​வும் பரிந்துரைத்தவர் இந்த சத்வால்.​ அந்த வங்கியே இவருடைய கைங்கர்யத்தால் திவாலாகி​யது. பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்கிற அமெரிக்கக் காப்பீட்டு நிறுவனம் இவர் மீது ​ வழக்குத் தொடர்ந்​தது.​ தனது மொத்த வங்கி சொத்தின் மதிப்பே 2,600 டாலர்​தான் என்றும்,​​ வங்கிக் கையிருப்பு நூறே நூறு டாலர்​தான் என்றும் வாக்கு​மூலம் வழங்கிய​வர் 12 மில்லியன் டாலர் கடன் வாங்கிய இந்த சந்த்சிங் சத்வால்.​ பல மில்லியன் டாலர் பெறு​மானமுள்ள ஆடம்பர பங்களாவில் குடியிருந்து​கொண்டு அது தனது தம்பியின் வீடு என்றும், தாம் அங்கே 5,000 டாலர் வாடகைக்கு இருப்பதாகவும்,​​ தானும் மனைவியும் ஹோட்டலில் வேலைக்காக பெறும் 7,600 டாலர் சம்பளப்பணத்தில் வாடகை தருவதாகவும் பொய் வாக்குமூலம் வழங்கியவர்​தான் இவர்.​

நமது இந்தியக் கைவண்ணத்தை சத்வால் அமெரிக்காவிலும் காட்டினார்.​ அன்றைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் மற்றும் அவரது மனைவியும் தற்போது அமெரிக்க வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டனுக்கு மிகவும் நெருக்கமானவராகி​விட்டார்.​ விளைவு?​

1997-ல் இவர் தர​வேண்டிய 12 மில்லியன் டாலர் கடன் தொகை,​​ பில் கிளிண்டனின் பதவிக்​காலம் முடிய ஒரு மாதம் இருக்கும்​போது வெறும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் டாலராகக் குறைக்​கப்பட்டு தள்ளுபடி செய்யப்​பட்டு​விட்டது.​ இப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா​வின் தேர்தலுக்கும் பெரிய அளவில் நிதி வசூலித்துக்​கொடுத்து அவருக்கும் நெருக்கமாகிவிட்டிருக்​கிறார் சந்த் சிங் சத்வால்.​

சத்வாலுக்கு "பத்மபூஷண்' தரப்படுவதன் காரணம் என்னவாம் தெரியுமா?​ இவர் இந்திய அமெ​ரிக்க அணு​சக்தி ஒப்பந்தம் ஏற்படுவதற்குப் பாடுபட்டவராம்.​ இவரை​விட அதிகமாகப் பங்களிப்பு நல்கியவர்கள் பலர் இருந்தும்,​​ வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் எதிர்ப்புத் தெரிவித்த பிறகும்,​​ இந்த மனிதரின் பல்​வேறு நிதி மோசடிகளும் பின்னணியும் தெரிந்திருந்தும் இவருக்கு இந்தியாவின் மிகவும் கெளரவமான "பத்மபூஷண்' விருது வழங்கப்படு​கிறது என்றால் அந்த விருதுக்கு இனிமேல் மரியாதை எப்படி இருக்கும்?​

சந்த் சிங் சத்வாலுக்கு "பத்ம​பூஷண்' விருது தரப்​பட்டால் தவறான முன்னுதாரணம் ஏற்பட்டு​விடும்.​ விருதுகளை விலைக்கு வாங்கலாம் என்கிற நிலைமை ஏற்பட்டு​விடக்​கூடாது.

தினமணி தலையங்கத்திலிருந்து... 02.01/2010