> குருத்து

February 3, 2013

பேருந்து எண் : 678 - நீட்டினால் அறுத்துவிடு!

முன்குறிப்பு :   பேருந்தில் பாலியல் தொந்தரவு என்பது பெண்கள் தினசரி எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை.  பெருநகரங்களில் ரயிலிலும், பேருந்திலும் காலையும், மாலையும் எப்பொழுதும் பெரும் கூட்டத்துடன் தான் பயணிக்க முடிகிறது. தனக்கு நேரும் பாலியல் சீண்டல்களை எல்லாம் பெண்கள் சகித்துக்கொண்டு செல்வதால் தான், தில்லியில் நடந்த வல்லுறவுகள் வளர்ந்து நிற்கின்றன.  பெண்கள் இது போன்ற சீண்டல்களை அவ்வப்பொழுதே சக பயணிகளுடன் எதிர்த்து நின்றார்கள் என்றால் இது தொடராது. 

இப்பொழுது, மக்கள் கலை இலக்கிய கழகம், பெண்கள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் அதன் தோழமை புரட்சிகர அமைப்புகள் 'பெண்கள் மீதான பாலியல் வெறியாட்டத்திற்கு எதிரான இயக்கம்' ஒன்றை தமிழகம் தழுவிய அளவில் நடத்தி வருகிறார்கள்.  பேருந்திலோ, வேலை செய்யும் இடத்திலோ பாலியல் தொந்தரவு ஏதேனும் ஏற்பட்டால், உங்களுக்கு உதவி தேவை என்றால், தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.   சென்னைக்கான தொடர்பு எண்: 98416 58457. வேறு பகுதிகளில் இருந்தீர்கள் என்றாலும், அந்த பகுதியில் இயங்கும் அமைப்பு தோழர்களை தொடர்புகொள்ளுங்கள்.

கடந்த பதிவில் 'மூன்று பெண்களின் பேருந்து பயணம்' என அறிமுகப்படுத்திய படம் பற்றி பதிவர் ஆனந்தன் தனது தளத்தில் விரிவான விமர்சனம் ஒன்றை எழுதியிருந்தார். இந்த படம் குறித்து பல்வேறு அம்சங்களில் விவாதங்களை தொடரலாம்.  படிக்க வேண்டிய விமர்சனம். படியுங்கள்.

****

ஒரு முறை மங்களூருக்கு சென்றிருந்த போது, ஆள் நடமாட்டம் அதிகமுள்ள ஒரு ரோட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் காட்டி, “இந்த இடத்தில் தான் ஒரு பெண்ணை எங்கிருந்தோ வந்த ஒருவன் அவள் மார்பகத்தை அழுத்திவிட்டு ஓடினான்” என்றார் என் அண்ணன் ஒருவர். வழக்கமாக அதே ரோட்டில் வரும் அவள் அதன் பிறகு எங்கு சென்றாள் என்றே தெரியவில்லை என்றும் சொன்னார்.

பல முறை பேருந்துகளில், ரயில்களில், ஷாப்பிங் மால்களில் சம்பந்தமே இல்லாமல்  சில பெண்கள் சில ஆண்களை முறைத்துக்கொண்டே போவதை தினம் தினம் பார்க்கிறோம். சம்பந்தமே இல்லாமல் சும்மா நின்று கொண்டிருக்கும் நம்மையும் சில பெண்கள் முறைப்பதையும், அதைப் பார்த்து நம் அருகில் நிற்கும் சிலர் விஷமச் சிரிப்பு சிரிப்பதையும் பார்க்கிறோம். இவை நம் நாட்டில் நடக்கும் சம்பவங்கள்.

இது போன்ற சம்பவங்கள் நடக்காத நாடு என்று ஒன்று இருக்க முடியாது. அப்படியே இருந்தாலும், “கட்டுப்பாடுகள் அதிகம் நிறைந்த அரபு நாடுகளில் தான் அது சாத்தியம். ஏனென்றால் இது போன்ற பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டால் ‘அறுத்து’  விடுவார்கள்” என்று நினைத்திருந்தேன். ஆனால் அரபு நாடுகளில் தான் தினம்தினம் இவ்வகையான sexual harassment பிரச்சனைகளை பெண்கள் அதிகளவில் எதிர்கொள்கிறார்கள் என்பதை இந்தப் படத்தைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்!

இந்நாடுகளில் வீட்டிலிருந்து வெளியே கிளம்பும் ஒவ்வொரு பெண்ணும் தான் என்ன உடை அணிகிறோம், அது மற்றவர்களை ஈர்க்கும்படி வெளிப்படையாகவோ இறுக்கமாகவோ இருக்கிறதா, பேருந்தில் போகலாமா அல்லது நடந்தே போய்விடலாமா, ஆள் நடமாட்டமில்லாத ரோடுகளில் தனியாகப் போகலாமா, இல்லை துணைக்கு யாரையேனும் அழைத்துக்கொண்டு செல்லலாமா என்றெல்லாம் யோசித்து ஒரு முடிவிற்கு வந்த பிறகு தான் வேளியே காலெடுத்து வைக்கிறார்கள். காரணம் ரோட்டில் வக்கிர மிருகங்களின் கட்டவிழ்ந்து கிடப்பதனால் தான். கடும் விதிகள் நடப்பில் உள்ள இந்நாடுகளில் அவ்விதிகளே இது போன்ற சம்பவங்கள் நடப்பதற்குக் காரணம் என்று சொன்னால் ஒத்துக்கொள்ள முடிகிறதா? தன்னிடம் ஒருவன் கீழ்தரமாக நடந்து கொண்டான் என்று ஒரு பெண் வெளியில் சொன்னாலே அது அவள் குடும்பதிற்கும், நாட்டின் இறையான்மைக்கும் செய்யும் இழுக்கு என்றே இன்று வரை சொல்லி வந்து கொண்டிருக்கின்றன இந்து போன்ற நாடுகள்!

22-10-2008ல் தான் எகிப்தின் முதல் sexual harassment வழக்கு, Noha Roushdy (மேலே படத்தில் உள்ள பெண்) என்ற பெண்ணால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும் பல்வேறு எதிர்ப்புகள், மிரட்டல்களுக்கிடையில் – குற்றவாளிக்குக் கிடைத்த தண்டனை மூன்று வருட கடுங்காவல். அவனது பெயர் - Sherief Gomaa Gibrial, கார் டிரைவர். அதே 2008 ஆண்டு Egyptian Center for Women's Rights என்னும் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் எகிப்தில் இதுவரை 98% சதவிகித வெளிநாட்டுப் பெண்கள், 83% சதவிகித எகிப்துப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறது! இந்தப் படத்தில் நடித்த ஒரு நடிகையே படப்பிடிப்பின் போது கூட்டநெரிசலில் இது போன்றதொரு வன்முறைக்கு ஆளானார் என்றால் நிலைமை அங்கு எப்படி இருக்கிறது என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

இறையான்மை, நாட்டின் பழம்பெருமை என்று பழையதைக் காட்டிக்காட்டியே இன்றும் பெண்களை அடிமைகளாகவும், கைபொம்மைகளாகவுமே நடத்திவருகின்றன் இந்நாடுகள். சமீபத்தில் எகிப்தின் முடிசூடா மன்னனான முபாரக்கிற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது, பெருமளவிலான ஆண்கள் கூட்டத்தினால் பல பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சனை வெளியில் தெரிய வந்ததற்குக் காரணம் அந்த சமயம் கூட்டத்தினரால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு அடித்து உதைக்கப்பட்ட ஒரு அமெரிக்க CBS நியுஸ் சேனல் ரிப்போட்டரால்தான்.

எகிப்தின் வெவ்வேறு நிலைபாடுகளில் இருக்கும் மூன்று பெண்களைச் சுற்றித் தான் 678 படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. Noha Roushdyக்கு நடந்த உண்மைச் சம்பவங்கள் மற்றும் இன்றும் உண்மையில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த   கதாப்பாத்திரங்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அப்பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொள்ளும் விதம் என்ன என்பது தான் 678 படத்தின் கதை. இதில் படத்தின் பிரதான கதாப்பாத்திரமான ஃபைஸா (Fayza) தினம் செல்லும் பேருந்து எண் தான் 678!

ஃபைஸா (Fayza):

ஃபைஸா நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த, இரண்டு குழந்தைகளுக்குத் தாயான, அரசு வேலைக்கு தினம் கூட்ட நெரிசலான பேருந்தில் (No: 678) செல்லும் ஒரு சாதாரண பெண். பேருந்தில் தினம்தினம் பல்வேறு வகைகளில் பாலியல் துன்பத்திற்கு ஆளாகிறாள். வெளியில் சொன்னால் தீங்கு என்று தன் கணவனிடம் கூட இதைப் பற்றிச் சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே வெந்து கொண்டிருக்கிறாள். தினம் முகம் தெரியாத பல்வேறு ஆண்களால் அவதிக்குள்ளாவதால் தன் கணவனுடனான தாம்பத்தியதிலேயே வெறுப்பு கொள்கிறாள். வேண்டுமென்றே அவனை ஒதுக்குகிறாள். தினம் கடுமையாக உழைத்து வீடு திரும்பும் அவளது கணவன் இதனால் கோபமடைகிறான்.

செபா (Seba):

டாக்டரை திருமணம் செய்த பணக்காரப் பெண் செபா. செப்புக்கம்பிகளால் அழகான நகைகள் செய்து விற்பது இவளது தொழில். ஒரு முறை கணவனுடன் எகிப்து விளையாடும் கால்பந்து போட்டிக்குச் செல்லும் செபா, வெற்றிக் கொண்டாட்டம் என்ற பெயரால் பல ஆண்களால் கும்பல் வன்மத்திற்கு ஆளாகிறாள். அதனால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கும் செபாவிடம் அவளது டாக்டர் கணவனும், “உனக்கு நடந்ததை என்னால் மறக்க முடியவில்லை. உன்னுடன் இனி என்னால் வாழ முடியாது” என்று சென்று விடுகிறான். விரக்தியில் இருக்கும் செபா, பாலியல் வன்முறையிலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதைப் பற்றிய கலந்துரையாடல்களை நடத்த ஆரம்பிக்கிறாள். பல பெண்கள் வருகிறார்கள், இவள் சொல்வதைக் கேட்கிறார்கள். ஆனால் யாரும் தாங்கள் பாலியல் துன்பதிற்கு ஆளாக்கப்பட்டதை ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள், ஃபைஸா உட்பட.

நெல்லி (Nelly)

வளர்ந்து வரும் ‘Stand-Up Comedian’ நெல்லி. இவளது காதலன் எகிப்தின் முன்னனி ‘Stand-Up Comedian’. நெல்லியைத் திருமணம் செய்து கொள்ள அவளது பெற்றோர் விருப்பப்படி தனக்குப் பிடித்த இந்த வேலையை விட்டுவிட்டு பிடிக்காத வங்கி உத்யோகத்திற்கு செல்லத் தயாராக இருப்பவன். ஒரு முறை வீட்டில் வந்து இறங்கும் நெல்லியை டாக்ஸி டிரைவர் ஒருவன் அவளது சட்டையை பிடித்து இழுத்து அப்படியே காரையும் செலுத்தி கீழே தள்ளி விடுகிறான். அவனை விரட்டிப் பிடிக்கும் நெல்லி போலீஸில் ஒப்படைத்து sexual harassment என்று புகார் செய்கிறாள். ஆனால் போலீஸ் வேறு ஏதாவது கேஸில் இவனை உள்ளே வைக்கிறோம் ஆனால் பாலியல் கேஸ் போட முடியாது என்று சொல்கிறார்கள். நேரே நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்கிறாள் நெல்லி; செபாவின் ஆதரவுடன்.

 இம்மூன்று பெண்களும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிறார்கள். தங்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஃபைஸா அதனை ஏற்கனவே ஆரம்பித்து விட்டிருக்கிறாள். பேருந்தின் கூட்ட நெரிசலில் தன்னிடம் தவறாக நடக்க முயலும் ஒரு இளைஞனை கொண்டை ஊசி போன்ற ஒன்றை வைத்து அவனது ஆணுறுப்பில் ஓங்கி குத்தி விட்டு ஓடிவிடுகிறாள். 678 பேருந்தில் மட்டும் அடுத்தடுத்து மூன்று நான்கு பேர் தொடையிடுக்கில் கையை வைத்து ரத்தசகிதம் அலறிக்கொண்டு கீழே விழுவதால் போலீஸும் உஷார் ஆகிறது. சிறப்பு அதிகாரியும் நியமிக்கப் படுகிறார். பிறகு என்ன நடந்தது என்பது தான் மீதிக் கதை.


எகிப்தில் வேலை இல்லாத, வறுமை கோட்டிற்கு கீழே பல ஆண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு திருமணம் என்பது கனவில் மட்டும் தான். எனவே தங்களது இச்சைகளை இது போல பொது இடத்தில் தீர்த்துக்கொள்கிறார்கள் என்கிறார் இயக்குனர், Mohamed Diab. எகிப்தில் இருக்கும் அடக்குமுறை, வன்முறை, வறுமை, அறியாமை இவையெல்லாம் சேர்ந்து தான் பெண்களுக்கு எதிரான sexual harassment என்னும் பாலியல் வன்முறையைத் தூண்டுகிறது என்பது இவரது வாதம்!

படம் ஆரம்பம் முதல் இறுதி வரை அருமை என்றால் கடைசி பதினைந்து நிமிடங்கள் அதகளம். பொது இடத்தில் யாருக்கும் தெரியாமல் பெண்களை தீண்டும் காமுகர்களை அதே பொது இடத்தில் வைத்தே அறுக்க இந்த மூன்று பெண்களும் வெறிகொண்டு தேடுவதும், வெவ்வேறு சூழ்நிலைகளில் இருப்பதால் அந்த மூன்று பெண்களுக்குள்ளேயே பிரச்சனை வருவதும், போலீஸில் மாட்டும் போது அவரவர் பாணியில் பதில் சொல்வதும் என்று படத்தில் பல காட்சிகள் மறக்க முடியாதவைகளாக நிற்கின்றன.

செபா கதாப்பாத்திரம் நடிக்க வேண்டிய கால்பந்துப் போட்டியை காட்சியப் படுத்திய போதே அந்த நடிகை கும்பல் வன்மத்திற்கு ஆளாக்கப்பட்டாள் என்று சொல்லும் இயக்குனர், நிலைமை இவ்வளவு கேவலமாக இருக்கும் போது ‘இறையான்மை, கலாச்சாரம்’ என்று அரசாங்கம் பேசுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்கிறார்.

படத்தைப் பற்றிய ஒருவரி அறிமுகத்தை தனது ஏதோ ஒரு பதிவில் தந்து என்னைப்  பார்க்கத் தூண்டிய பதிவர் கருந்தேளுக்கு நன்றி. படத்தை எனக்குக் காட்டிய பெங்களூரு திரைப்பட விழாவிற்கு கோடான கோடி நன்றி.

படத்தின் Tagline
“Ask yourself three questions:
Have you been sexually harassed?
How many times?
How did you react?”

படத்தைப் பற்றி முழுமையாகச் சொல்லவந்ததைச் சொல்லிவிட்டேனா என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இந்தப் படம் பார்க்க வேண்டிய ஒன்று. மொத்தத்தில் 678 என்னைப் பொறுத்த வரை

"நீட்டினால் அறுத்துவிடு!"

- பதிவர் பேபி ஆனந்தன்

February 2, 2013

மூன்று பெண்களின் பேருந்து பயணம்!

ஃபஸியா பஸ்ஸில் போய்க்கொண்டு இருந்தாள். பஸ்ஸில் அதிகமான பயணிகள் இருந்ததால் நெரிசல் மிகுந்திருந்தது. பின்னால் ஓர் ஆண் அவளை நெருக்கிக் கொண்டிருந்தான். ஃபஸியா மிகுந்த எரிச்சலில் இருந்தாள். அவள் வேலை பார்க்கும் ஃபாக்டரியில் சம்பளப் பணத்தைக் குறைவாகக் கொடுத்திருந்தார்கள்.

கவுண்டரில் பணம் பெற்றுக் கொண்டபோது- சம்பளப் பணத்தை எண்ணிப் பார்த்தாள். காரணம் கேட்டபோது, அவள் பல நாட்கள் வேலைக்குத் தாமதமாக வந்ததால் அதற்கான அபராதக் கட்டணத்தைக் கழித்துக் கொண்டு, மீதிப் பணத்தைக் கொடுத்திருப்பதாகச் சொன்னார்கள்.  வீட்டுக்குச் செலவுகள் பல இருந்தன. இவ்வளவு குறைவான சம்பளப் பணத்தை வைத்துக் கொண்டு எப்படி சரிக்கட்டப் போகிறோம் என்ற மன உளைச்சலில் அவள் இருந்தாள். பின்னால் இருந்த ஆண் அவளை சீண்டிக் கொண்டிருந்தான். பஸ்ஸில் இருக்கும் நெரிசலைப் பயன்படுத்திக் கொண்டு அவன் இப்படிக் கேவலமாக நடந்துகொள்வது, அவள் கண்களில் நீர் சுரக்கச் செய்தது.

பின்னால் திரும்பிப் பார்த்தாள். அவன் பல்லை இளித்தான். இந்த அரக்கனை எப்படி சமாளிப்பது என்று குமுறினாள்...

சீபாவும் ஃபஸியாவும் நெருங்கிய தோழிகள். ஃபஸியா தன் மனக் குறைகளை எல்லாம் கொட்டித் தீர்க்க சீபாவின் வீட்டுக்குச் சென்றாள்.
"என்னம்மா உன் முகம் வாடி இருக்கிறதே!'' என்று கேட்டாள் சீபா.
"நான் போகும் பஸ்ஸில் அடிக்கடி ஓர் ஆண் எனக்குத் தொல்லை கொடுக்கிறான். நான் ஒன்றும் செய்ய இயலாதவளாக இருக்கிறேன்...'' என்று சொல்லிவிட்டு ஃபஸியா விம்மினாள்.
"இதைப் போன்ற அசுரர்களை சும்மா விடக்கூடாது. தகுந்த பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும். நீ ஒரு உலோகத் தகடு வைத்துக் கொள். அவன் மீண்டும் தொல்லை கொடுத்தால் அவன் பேண்ட்டின் நடுப் பகுதியில் கீறிவிடு!''
"அப்படித்தான் செய்ய வேண்டும்...'' என்று ஃபஸியா ஆமோதித்தாள்.

அன்றும் பஸ்ஸில் நெரிசல் அதிகமாக இருந்தது. வழக்கம் போல் ஃபஸியாவின் பின்புறம் நெருக்கமாக நின்று கொண்டு அவன் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தான்.
திடீரென்று அவன் "ஆ'வென்று அலறினான். பஸ்ஸில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். பஸ் சீக்கிரமே ஒரு நிறுத்தத்தில் நின்றது. ஃபஸியா வேக வேகமாக பஸ்ஸை விட்டு வெளியேறினாள்.

ஃபஸியாவுக்குத் தொல்லை கொடுத்த ஆசாமி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தான். இன்ஸ்பெக்டர் ஒருவர் அவனிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தார்.
"ஒரு பெண்தான் என்னை பேண்ட்டின் நடுப்பகுதியில் கீறிவிட்டு ஓடினாள்...''
"நீ என்ன தவறு செய்தாய்?''
"நான் ஒரு தவறும் செய்யவில்லை!'' என்று புளுகினான்.

சீபாவின் வீட்டுக்குச் சென்றாள் ஃபஸியா.
"நீ சொன்ன மாதிரியே அவனை உலோகத் தகட்டால் கீறிவிட்டேன்...''
"அந்த அசுரன் வலியால் கதறி இருப்பானே...! ''
"ஆமாம்'' என்றாள் ஃபஸியா.
நெல்லி - என்று ஒரு தோழி அறைக்குள் நுழைந்தாள்.
"ஃபஸியா! இவள் என் என் புதிய தோழி! என்று சீபா தன் புதிய தோழி நெல்லியை அறிமுகம் செய்துவைத்தாள்.''

சீபாவின் ஆலோசனைப்படி இன்னும் இரண்டு பெண்கள் இதேபோன்ற தண்டனையை அளித்தார்கள்.
பஸ்ஸில் தங்களிடம் வம்பு செய்த ஆண்களை உலோகத் தகட்டால், பேண்டின் மையப் பகுதியில் கீறிவிட்டார்கள்.
படக்கூடாத இடத்தில் கீறல் பட்டதால், தாங்கமுடியாத வலியில் துடித்த அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள்.
அவர்களிடமும் போலீஸ் புலன்விசாரணை செய்தது. பஸ்ஸில் பெண்களிடம் வம்பு செய்ததாக அவர்கள் ஒத்துக் கொள்ளவே இல்லை. தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் அப்பாவி நபர்களான தம்மை சில அராஜகப் பெண்கள் கீறி காயப்படுத்திவிட்டார்கள் என்றும் புலம்பினார்கள்.

நெல்லி பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தாள். பஸ்ஸின் நெரிசலைப் பயன்படுத்திக் கொண்டு ஒருவன் அவளிடம் தகாத முறையில் நடந்து கொண்டான். உலோகத் தகட்டால் கீறினாள். "ஆ..' என்ற அலறல்.

சீபா-ஃபஸியா-நெல்லி மூவரும் சீபாவின் வீட்டில் ஒன்று கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். "முப்பத்தி இரண்டாம் இலக்கமிட்ட பஸ்ஸில் நான் பயணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு ராஸ்கல் என்னிடம் வம்பு செய்தான். கீறிவிட்டேன்!'' என்றாள் நெல்லி. மூவரும் சிரித்தார்கள்.

தகவல் வந்ததும் ஃபஸியா பதறிவிட்டாள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தன் கணவனைப் பார்க்கப் பறந்தோடினாள். "முப்பத்தி இரண்டாம் இலக்கமிட்ட பஸ்ஸில் நான் பயணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு ராட்சசி என்னை உலோகத் தகட்டால் கீறிவிட்டாள்!'' என்றான் ஃபஸியாவின் கணவன். தன் கணவனும் பெண்களிடம் வம்பு செய்யும் ஓர் அராஜகவாதிதான் என்ற கசப்பான உண்மை, உறைக்கத் தொடங்கியதும் ஃபஸியா பொங்கிப் பொங்கி அழுதாள்.
 
நெல்லி, பொதுச் சதுக்கத்தில் மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தாள். வேகமாக ஒரு கார் வந்து கொண்டிருந்தது. கார் ஓட்டி, நெல்லியின் பின்னழகைப் பார்த்ததும் காரின் வேகத்தை மட்டுப்படுத்தினான்.  மெல்லக் காரை ஓட்டிக் கொண்டு வந்தவன்- நெல்லியை நெருங்கியதும்- காரில் இருந்து கையை நீட்டி அவள் மார்புப் பகுதியைத் தொட்டான்.
நெல்லி திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்... அவன் இளித்தான்...  நெல்லி எரிமலையாகப் பொங்கினாள். அவள் கத்திக் கூச்சல் போடத் தொடங்கியதும் காரை வேகப்படுத்த முயற்சித்தான்.  நெல்லி காரின் முன் பாகத்தின் மேல் படுத்துக் கொண்டாள். இதற்குள் கூட்டம் கூடிவிட்டது. குற்றவாளி தப்பிக்க முடியாமல் மாட்டிக் கொண்டான்.

"இவன் மேல் கேஸ் போட்டால் உன் குடும்ப மானம் பறிபோகும். உன் பெயர் சந்திக்கு வந்துவிடும்!'' - என்று புகாரைப் பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் எச்சரித்தார்.
ஆனால் - எதற்கும் அஞ்சாமல் நெல்லி தான் பால்ரீதியாக தாக்கப்பட்டதற்கு நியாயம் வேண்டி நீதிமன்றத்தில் தனது வழக்கை எகிப்து நாட்டிலேயே முதன் முதலாக பதிவு செய்து வெற்றி கண்டாள். சட்டம் என்று ஒன்று இருந்தாலாவது - பலர் அஞ்சக் கூடும் இல்லையா?

படத்தின் பெயர்:678
வெளியான ஆண்டு: 2010;
இயக்குநர்: முகம்மது தியாப்.

நன்றி : தினமணி கதிர்

பலாத்கார விளையாட்டு!


சென்னை பீச் ஸ்டேஷனில் எப்பொழுதும் அந்தக் கடையில்தான் முக்கியமான உலகப் படங்களை வாங்குவது வழக்கம். வாடிக்கை நுகர்வோராக இருப்பதால் கடையில் வேலை செய்யும் இரண்டு சிறுவர்களும்கூட எனக்கு நல்ல பரிச்சியம். எனினும் தீப்பெட்டியை அடுக்கி வைத்தது போலுள்ள எல்லா கடைகளையும் நோட்டம் விட்டுக் கொண்டே செல்வது என்னுடைய வழக்கம். “மேட்டர் CD வேணும்னாலும் கெடைக்கும்… வந்து பாருங்க” என முச்சந்தியில் நின்று, கைபிடித்து இழுக்கும் வேசி போல, தனது கடையில் வியாபாரம் செய்ய சிறுவர்கள் விரும்பி அழைப்பார்கள். அப்படித்தான் ஒரு சிறுவன் மெல்லிய குரலில் காதைக் கடித்தான். “பிட்டு படம் வேனுமாங்கண்ணா? என்றான். அவனுடைய கண்களையே உற்றுப் பார்த்தேன். மேலும் தொடர்ந்தவன் “ரேப்பிங் கேம்ஸ் வேணும்னாலும் இருக்கு! வாங்கிக்கிறீங்களா?” என்றான்.

“என்ன சொன்ன?” என்றேன்.

“ரேப்பிங் கேம்ஸ்” என சில குறுந்தகடுகளை என்னிடம் நீட்டினான். “பூங்கா, சுரங்கப்பாதை, கடற்கரை, தனி பங்களா, யாருமற்ற அலுவலகம்” என விதவிதமான இடங்களில் பெண்ணை பலாத்காரம் செய்யும் கேம்ஸ் என தன்னிடமிருந்த குறுந்தகடுகளைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தான். பார்த்ததும் அதிர்ந்துவிட்டேன். அவனிடமே குறுந்தகடுகளைத் திருப்பிக் கொடுத்துவிட்டு துண்டைக் காணோம், துணியைக் காணோம் என ஓட்டம் எடுத்தேன். இது நடந்து ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு மேல் இருக்கும். பின்னர் உட்கார்ந்து நிதானமாக யோசித்த பிறகுதான் ஞானோதயம் வந்தது. “அடடே… அந்த பலாத்கார விளையாட்டு குறுந்தகடுகளை வாங்கி, அதைப் பற்றி வலைப்பூவில் ஆதாரத்துடன் எழுதி இருக்கலாமே!” என்று. பின்னர் முயற்சி செய்து சில பலாத்கார விளையாட்டுக்களை வாங்கி, விகடன் மாணவ நிருபர் ஒருவருக்குக் கொடுத்து அதைப் பற்றி எழுதுமாறு பரிந்துரைத்தேன். ஏனோ தெரியவில்லை அவரால் முடியாமல் போனது. இந்த விளையாட்டை திறம்பட விளையாடுவதற்கு ஆறு மாதகாலப் பயிற்சி வேண்டும் என்பது வேறு விஷயம். “கற்பழிப்பதற்குக் கூட குறைந்தபட்ச உழைப்பு தேவைப்படுகிறது.” என்ற எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் வரிகள்தான் எனக்கு ஞாபகம் வருகிறது.  இந்த விளையாட்டுக்களை விளையாட எவ்வளவு நேரமும் உழைப்பும் விரயமாகிறது…

கணினியானது குழந்தைகளின் கணிசமான நேரத்தை விழுங்குகிறது. கணினியில் விளையாடுவதை குழந்தைகள் சந்தோஷமாக உணர்கிறார்கள் போல. அவர்களின் விருப்ப விளையாட்டுகளும் குரூரத்தை அடிப்படையாக வைத்து கட்டமைக்கப்பட்டதாகவே இருக்கின்றன. இந்தப் புரிதலும் தெளிவும்,  பெற்றவர்களுக்கு இருக்கிறதா என்பது சந்தேகம்தான். பைக் திருட்டு, கார் திருட்டு மட்டுமல்லாமல், திருடிய வாகனத்தில் மூலம் பல்பொருள் அங்காடிக்குச் சென்று பொருட்களைத் திருடிவிட்டு போலீசிடம் மாட்டிக் கொள்ளாமல் தப்புவது என விளையாட்டின் பட்டியல் நீள்கிறது. மேலும் திருடிவிட்டு தப்பிச் செல்லும்போது, கையிலுள்ள துப்பாக்கி மூலம் எதிரில் வரும் எல்லோரையும் கண்மண் தெரியாமல் - கணினியில் விளையாடும் குழந்தைகள் சுட்டுத் தள்ளுகிறார்கள். எவ்வளவு கோரமான விஷயம் இது! இவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும்போதுதான் பலாத்கார விளையாட்டை நாடிச் செல்கிறார்கள். இதுபோன்ற விளையாட்டுகளை இணையத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளவும் முடியும் என்பது விழிப்புடன் கவனிக்க வேண்டிய ஒன்று.


விளையாட்டானது கணினியுடன் முடிவதில்லை. நவீன தொழில்நுட்பத்தின் தாக்கம் செல்பேசி வரை நீள்கிறது என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. சில மாதங்களுக்கு முன்பு எனது உறவுக்கார பையனை சந்தித்து உரையாட நேர்ந்தது. முன்னேறிய கிராமமான எங்களது ஊர் அடங்கிய தாலுக்காவில் பிரபல தனியார் பள்ளி ஒன்றுள்ளது. சுற்றிலுமுள்ள கிராமத்திலிருந்து ஏராளமான பிள்ளைகள் அதில் படிக்கிறார்கள். உறவுக்காரப் பையன் அந்தப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கிறான். தன்னுடன் ஒரே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மற்றொரு பையனுடன் அவன் பேசிக் கொண்டிருந்தான். உறவுக்கார குழந்தைகளிடம் கோமாளி வேடமேற்று பழகுவது என்னுடைய வழக்கம். ஆகவே பல நேரங்களில் ஒளிவு மறைவில்லாமல் என்னை ஓட்டுவதாக நினைத்து பல உண்மைகளையும் சிறுவர்கள் கக்குவார்கள். அப்படித்தான் அன்றும் நடந்தது. இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். இடையில் நான் புகுந்தேன்.

“ஹே… அந்த கேம்ஸ் எனக்கும் கொடுக்குறியாடா?” என்கிறான் பத்தாம் வகுப்பு மாணவன்.

“அப்புறம் நான் மாட்டிக்கிறதுக்கா? கெளம்புடா காத்து வரட்டும்” என்கிறான் உறவுக்காரப் பையன்.

“டேய்… கேம்ஸ்தான கொடேண்டா. அவனும் விளையாடட்டும்…” என்கிறேன் நான்.

“மேட்டர் தெரியாம பேசாத கிச்சா. அதெல்லாம் அவன் விளையாடக் கூடாது…” என்கிறான், பெரிய மனுஷத்தனமாக என்னுடைய உறவுக்காரப் பையன்.

“பெரிய மயிறு வெளையாட்டு… இவரு மட்டும்தான் வெளையாடுவாரு…. சும்மா குடுடா, அவனும் நாலு பேர சுட்டுத் தள்ளட்டும்” என்கிறேன் சிறுபிள்ளைத்தனமாக நான்.

“அய்யே! என்ன கேம்ஸ் தெரியுமா அது?” என்கிறான் உறவுக்காரப் பையன்.

“சொன்னாத்தான தெரியும்?” என்கிறேன் நான்.

“அந்த கேம்ஸ் Touch Screen-ல தான் வெளையாட முடியும். ஒரு பொண்ணு Dress போட்டுட்டு இருக்கும். ஒவ்வொரு parts-ஆ Touch பண்ணி தேச்சா… டிரஸ் எல்லாம் Disappear ஆகும். அதான் கேம்ஸ்…” என்றான் ஆங்கிலமும் தமிழும் கலந்து.

“டேய்… என்னடா இது…?” என்று கேட்டதற்கு, “நீயெல்லாம் வெத்து… இது தெரியாம அவனுக்கு கொடுக்கச் சொல்ற… அவன் மாட்டிக்கிட்டா என்னைய போட்டு மொத்தவா?” என கேலிசெய்து சிரிக்கிறான் உறவுக்காரப் பையன். பக்கத்திலிருந்த அவனுடைய நண்பனும் சிரிக்கிறான். “நாம வெத்துதான்” என்பதை நினைத்து நானும் விரக்தியுடன் சிரித்துக்கொண்டேன்.

மேற்கூறிய இரண்டு சம்பவங்களையும் நினைவுபடுத்தும் விதமாக, சமீபத்திய பேருந்து பயண அனுபவம் எனக்கு ஏற்பட்டது. இரண்டு மாணவர்கள் முன்னிருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். பின்னிருக்கையில் அமர்ந்தவாறு புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் பேசிய விஷயம் கவனத்தை திசை திருப்பியது. ஆகவே அவர்கள் மீது கவனம் சென்றது. இரண்டு மாணவர்களின் கழுத்திலும் பிரபல கல்லூரியின் அடையாள அட்டை தொங்கிக் கொண்டிருக்கிறது. அடையாள அட்டையை தாங்கிக் பிடிக்கும் கழுத்துப் பட்டையில் கல்லூரியின் பெயர் அச்சிடப்பட்டிருந்தது. இரண்டு மாணவர்களும் பேசிக் கொள்கிறார்கள்.

மாணவன் 1: “பக்கத்து வீட்டு ஆண்டிய கரக்ட் பண்ணா வீட்டுல மாட்டிக்க வேண்டி இருக்கு… லாட்ஜி போட்டு தங்கினா - ரெயிட்ல புடிச்சி அசிங்கப் படுத்துறாங்க! பஸ்ல போட்டு தாக்குனா நாடே சேர்ந்து காறித் துப்புது! அப்போ எப்புடி தாண்டா ஒருத்தன் என்ஜாய் பண்றது” (கவுண்டமணி தனது மனைவியை அடித்துக் கொண்டிருக்க. மாமியார் கேரக்டர் இடையில் வந்து தடுக்கும்பொழுது பேசும் பிரபல நகைச்சுவை துணுக்கு இது. நீண்ட நாட்களுக்கு முன்பு டிவியில் பார்த்த ஞாபகம். அந்த காமெடியின் ரீமேக்)

மாணவன் 2: “டேய்… கிளாஸ்மேட்-கிட்டையே ஒரு வார்த்த, ரெண்டு வார்த்த பேச முடியல… இதுல கரக்ட் பண்றதும், ரேப் பண்றதும்தான் ஒரு கேடா உனக்கு…”

மாணவன் 1: “எனக்குன்னு ஒரு சான்ஸ் கெடைக்காமையா போகும்… அப்ப என்னை ப்ரூவ் பன்றேண்டா மச்சி…”

மாணவன் 2: “என்னையும் கூப்பிட மறந்துடாதடா…!”

இருவரின் பேச்சும் எங்கோ ஆரம்பித்து, எங்கெங்கோ பயணப்பட்டுக் கொண்டிருந்தது. ‘திடீரென ஆசிரியரைப் பற்றிய எள்ளல். கெளதம் மேனனின் மொக்கை சினிமா பற்றிய விமர்சனம். உடன் படிக்கும் மாணவியைப் பற்றிய கேலி. ரோட்டில் செல்லும் ஆட்கள் - என சம்பாஷணை சுழன்று சுழன்று தொடர்பில்லாமல் சொற்கள் உதிர்ந்து கொண்டிருந்தன.

சம்பாஷணையின் மற்ற எல்லா இடங்களும்கூட ஒரு வக்கிர ஹாஸ்யம்தான். நேரத்தை ருசிகரமாகக் கடத்த மேற்கொள்ளும் வெகுளித்தனத்தின் வெளிப்பாடு என்ற அளவில்கூட எடுத்துக் கொள்ளலாம். ஆனால் “கிளாஸ்மேட்-கிட்டையே ஒரு வார்த்த, ரெண்டு வார்த்த பேச முடியல” – என்ற இடம்தான் எனக்கு மிகவும் அபாயகரமான விஷயமாகத் தெரிந்தது. இங்குதான் சிக்கலும் ஆரம்பிக்கிறது. சக மனிதர்களிடம் பேசுவதையே ஜேப்படித் திருட்டு போல துரிதமாகவும், அதே சமயத்தில் யாரும் அறியாமலும் செய்ய வேண்டியது இருக்கிறது பெரும்பாலான கல்லூரி வளாகங்களில் இதுதான் நிலைமை. எவ்வளவு பெரிய துர்பாக்கியம் இது.

ஒருபுறம் குழந்தைகள் விளையாடும் குரூர விளையாட்டுக்கள், மற்றொரு புறம் அவர்களே வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் விளையாடக் கூடிய ஆபாச விளையாட்டுக்கள். இதன் இணைகோடு போல, சக மாணவியிடம் தோழமையுடன் பேசுவதையே கள்ளத்தனமாக யாரும் பார்க்காதபோது செய்ய வேண்டிய நிர்பந்தம்,  என சிறுவர்களையும் இளைஞர்களையும் சிக்கலுக்கு உள்ளாக்குகிறோம்.

இந்தியாவில் மட்டும் வருடத்தில் ஏறக்குறைய இரண்டரை லட்சம் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் என புள்ளிவிவரம் தருகிறார்கள். கணக்கில் வராமல் இதுபோன்ற பத்து மடங்கு அதிக அளவில் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு மன உளைச்சலில் வாழ்வார்கள் என்பதுதான் நிதர்சனம். ஒருமுறை என்னுடைய உறவுக்கார பெண் டாக்டரேட் (வேதியியல்) படிக்க பிரியப்படுவதாகவும், சென்னையின் ஒரு பிரசித்திபெற்ற பல்கலைக்கழகத்தில் யாரேனும் தெரிந்தவர் இருந்தால், அதைப் பற்றி விசாரித்துச் சொல்லும்படியும் கேட்டிருந்தார். எனவே, எனக்குத் தெரிந்து முனைவர் பட்டம் பெறுவதற்கு போராடிக் கொண்டிருக்கும் பலருடைய காதிலும் போட்டு வைத்தேன். ஒருவர் செல்பேசியில் அழைத்து எல்லா விவரங்களையும் கூறினார். மேலும் “யாருக்காக இதையெல்லாம் விசாரிக்கிறீர்கள்?” என்றார்.

“உறவுக்காரப் பெண் தான். என்னுடைய சகோதரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்!” என்றேன்.

“சொல்றேன்னு தப்பா நெனைக்காதிங்க… ரொம்ப தெரிஞ்சவங்களா இருந்தா, டாக்டரேட் சேர வேண்டாம்னு சொல்லிடுங்க… வேற மாதிரி டார்ச்சர் எல்லாம் இருக்கும்…” என்றார். பல பெண்களும் அதிகம் படித்து உயர்ந்த பதவிகளில் இருக்கும் சில பேராசிரியர்களின் பாலியல் வக்கிரங்களை எதிர்த்து போராடித்தான் வெற்றி பெற வேண்டியிருக்கிறது என்பது ஒரு கசப்பான உண்மை.

இதோ சென்ற வாரம் டெல்லியில் நடந்த பலாத்காரத்தை இந்தியாவே கூர்ந்து கவனிக்கிறது. ஜனாதிபதி மாளிகை முன்பு பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக நீதிகேட்டு போராட்டம் நடத்துகிறார்கள். அந்த சகோதரியைப் பற்றிய தற்போதைய நிலவரங்களை நாளேடுகளும் தொடர்ந்து பிரசுரம் செய்து வருகின்றன. தொலைதூர கிராமங்களிலுள்ள பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதையும் நாளேடுகள் சமீப நாட்களில் பிரசுரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. இவையெல்லாம் கவனத்தில் கொண்டு பரிசீலிக்க வேண்டிய முக்கியமான சமூகப் பிரச்சனைதான் என்பதை மறுப்பதற்கில்லை.

அதே அளவுக்கு, பின்விளைவுகளை யோசித்துப் பார்த்தால் அதைவிட  முக்கியமான விஷயம், இளம் தலைமுறையினர் டிஜிடல் விளையாட்டு விளையாடுகிறார்கள் என்பதுதான். அதில் பலாத்கார விளையாட்டும் அடக்கம். “விளையாட்டுதான் வினையாகிறது” என்பது நம்மவர்களுக்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை.

- கிருஷ்ணபிரபு

நன்றி : சொல்வனம் ‍‍இதழ்