> குருத்து: பேருந்து எண் : 678 - நீட்டினால் அறுத்துவிடு!

February 3, 2013

பேருந்து எண் : 678 - நீட்டினால் அறுத்துவிடு!

முன்குறிப்பு :   பேருந்தில் பாலியல் தொந்தரவு என்பது பெண்கள் தினசரி எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை.  பெருநகரங்களில் ரயிலிலும், பேருந்திலும் காலையும், மாலையும் எப்பொழுதும் பெரும் கூட்டத்துடன் தான் பயணிக்க முடிகிறது. தனக்கு நேரும் பாலியல் சீண்டல்களை எல்லாம் பெண்கள் சகித்துக்கொண்டு செல்வதால் தான், தில்லியில் நடந்த வல்லுறவுகள் வளர்ந்து நிற்கின்றன.  பெண்கள் இது போன்ற சீண்டல்களை அவ்வப்பொழுதே சக பயணிகளுடன் எதிர்த்து நின்றார்கள் என்றால் இது தொடராது. 

இப்பொழுது, மக்கள் கலை இலக்கிய கழகம், பெண்கள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் அதன் தோழமை புரட்சிகர அமைப்புகள் 'பெண்கள் மீதான பாலியல் வெறியாட்டத்திற்கு எதிரான இயக்கம்' ஒன்றை தமிழகம் தழுவிய அளவில் நடத்தி வருகிறார்கள்.  பேருந்திலோ, வேலை செய்யும் இடத்திலோ பாலியல் தொந்தரவு ஏதேனும் ஏற்பட்டால், உங்களுக்கு உதவி தேவை என்றால், தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.   சென்னைக்கான தொடர்பு எண்: 98416 58457. வேறு பகுதிகளில் இருந்தீர்கள் என்றாலும், அந்த பகுதியில் இயங்கும் அமைப்பு தோழர்களை தொடர்புகொள்ளுங்கள்.

கடந்த பதிவில் 'மூன்று பெண்களின் பேருந்து பயணம்' என அறிமுகப்படுத்திய படம் பற்றி பதிவர் ஆனந்தன் தனது தளத்தில் விரிவான விமர்சனம் ஒன்றை எழுதியிருந்தார். இந்த படம் குறித்து பல்வேறு அம்சங்களில் விவாதங்களை தொடரலாம்.  படிக்க வேண்டிய விமர்சனம். படியுங்கள்.

****

ஒரு முறை மங்களூருக்கு சென்றிருந்த போது, ஆள் நடமாட்டம் அதிகமுள்ள ஒரு ரோட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் காட்டி, “இந்த இடத்தில் தான் ஒரு பெண்ணை எங்கிருந்தோ வந்த ஒருவன் அவள் மார்பகத்தை அழுத்திவிட்டு ஓடினான்” என்றார் என் அண்ணன் ஒருவர். வழக்கமாக அதே ரோட்டில் வரும் அவள் அதன் பிறகு எங்கு சென்றாள் என்றே தெரியவில்லை என்றும் சொன்னார்.

பல முறை பேருந்துகளில், ரயில்களில், ஷாப்பிங் மால்களில் சம்பந்தமே இல்லாமல்  சில பெண்கள் சில ஆண்களை முறைத்துக்கொண்டே போவதை தினம் தினம் பார்க்கிறோம். சம்பந்தமே இல்லாமல் சும்மா நின்று கொண்டிருக்கும் நம்மையும் சில பெண்கள் முறைப்பதையும், அதைப் பார்த்து நம் அருகில் நிற்கும் சிலர் விஷமச் சிரிப்பு சிரிப்பதையும் பார்க்கிறோம். இவை நம் நாட்டில் நடக்கும் சம்பவங்கள்.

இது போன்ற சம்பவங்கள் நடக்காத நாடு என்று ஒன்று இருக்க முடியாது. அப்படியே இருந்தாலும், “கட்டுப்பாடுகள் அதிகம் நிறைந்த அரபு நாடுகளில் தான் அது சாத்தியம். ஏனென்றால் இது போன்ற பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டால் ‘அறுத்து’  விடுவார்கள்” என்று நினைத்திருந்தேன். ஆனால் அரபு நாடுகளில் தான் தினம்தினம் இவ்வகையான sexual harassment பிரச்சனைகளை பெண்கள் அதிகளவில் எதிர்கொள்கிறார்கள் என்பதை இந்தப் படத்தைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்!

இந்நாடுகளில் வீட்டிலிருந்து வெளியே கிளம்பும் ஒவ்வொரு பெண்ணும் தான் என்ன உடை அணிகிறோம், அது மற்றவர்களை ஈர்க்கும்படி வெளிப்படையாகவோ இறுக்கமாகவோ இருக்கிறதா, பேருந்தில் போகலாமா அல்லது நடந்தே போய்விடலாமா, ஆள் நடமாட்டமில்லாத ரோடுகளில் தனியாகப் போகலாமா, இல்லை துணைக்கு யாரையேனும் அழைத்துக்கொண்டு செல்லலாமா என்றெல்லாம் யோசித்து ஒரு முடிவிற்கு வந்த பிறகு தான் வேளியே காலெடுத்து வைக்கிறார்கள். காரணம் ரோட்டில் வக்கிர மிருகங்களின் கட்டவிழ்ந்து கிடப்பதனால் தான். கடும் விதிகள் நடப்பில் உள்ள இந்நாடுகளில் அவ்விதிகளே இது போன்ற சம்பவங்கள் நடப்பதற்குக் காரணம் என்று சொன்னால் ஒத்துக்கொள்ள முடிகிறதா? தன்னிடம் ஒருவன் கீழ்தரமாக நடந்து கொண்டான் என்று ஒரு பெண் வெளியில் சொன்னாலே அது அவள் குடும்பதிற்கும், நாட்டின் இறையான்மைக்கும் செய்யும் இழுக்கு என்றே இன்று வரை சொல்லி வந்து கொண்டிருக்கின்றன இந்து போன்ற நாடுகள்!

22-10-2008ல் தான் எகிப்தின் முதல் sexual harassment வழக்கு, Noha Roushdy (மேலே படத்தில் உள்ள பெண்) என்ற பெண்ணால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும் பல்வேறு எதிர்ப்புகள், மிரட்டல்களுக்கிடையில் – குற்றவாளிக்குக் கிடைத்த தண்டனை மூன்று வருட கடுங்காவல். அவனது பெயர் - Sherief Gomaa Gibrial, கார் டிரைவர். அதே 2008 ஆண்டு Egyptian Center for Women's Rights என்னும் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் எகிப்தில் இதுவரை 98% சதவிகித வெளிநாட்டுப் பெண்கள், 83% சதவிகித எகிப்துப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறது! இந்தப் படத்தில் நடித்த ஒரு நடிகையே படப்பிடிப்பின் போது கூட்டநெரிசலில் இது போன்றதொரு வன்முறைக்கு ஆளானார் என்றால் நிலைமை அங்கு எப்படி இருக்கிறது என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

இறையான்மை, நாட்டின் பழம்பெருமை என்று பழையதைக் காட்டிக்காட்டியே இன்றும் பெண்களை அடிமைகளாகவும், கைபொம்மைகளாகவுமே நடத்திவருகின்றன் இந்நாடுகள். சமீபத்தில் எகிப்தின் முடிசூடா மன்னனான முபாரக்கிற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது, பெருமளவிலான ஆண்கள் கூட்டத்தினால் பல பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சனை வெளியில் தெரிய வந்ததற்குக் காரணம் அந்த சமயம் கூட்டத்தினரால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு அடித்து உதைக்கப்பட்ட ஒரு அமெரிக்க CBS நியுஸ் சேனல் ரிப்போட்டரால்தான்.

எகிப்தின் வெவ்வேறு நிலைபாடுகளில் இருக்கும் மூன்று பெண்களைச் சுற்றித் தான் 678 படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. Noha Roushdyக்கு நடந்த உண்மைச் சம்பவங்கள் மற்றும் இன்றும் உண்மையில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த   கதாப்பாத்திரங்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அப்பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொள்ளும் விதம் என்ன என்பது தான் 678 படத்தின் கதை. இதில் படத்தின் பிரதான கதாப்பாத்திரமான ஃபைஸா (Fayza) தினம் செல்லும் பேருந்து எண் தான் 678!

ஃபைஸா (Fayza):

ஃபைஸா நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த, இரண்டு குழந்தைகளுக்குத் தாயான, அரசு வேலைக்கு தினம் கூட்ட நெரிசலான பேருந்தில் (No: 678) செல்லும் ஒரு சாதாரண பெண். பேருந்தில் தினம்தினம் பல்வேறு வகைகளில் பாலியல் துன்பத்திற்கு ஆளாகிறாள். வெளியில் சொன்னால் தீங்கு என்று தன் கணவனிடம் கூட இதைப் பற்றிச் சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே வெந்து கொண்டிருக்கிறாள். தினம் முகம் தெரியாத பல்வேறு ஆண்களால் அவதிக்குள்ளாவதால் தன் கணவனுடனான தாம்பத்தியதிலேயே வெறுப்பு கொள்கிறாள். வேண்டுமென்றே அவனை ஒதுக்குகிறாள். தினம் கடுமையாக உழைத்து வீடு திரும்பும் அவளது கணவன் இதனால் கோபமடைகிறான்.

செபா (Seba):

டாக்டரை திருமணம் செய்த பணக்காரப் பெண் செபா. செப்புக்கம்பிகளால் அழகான நகைகள் செய்து விற்பது இவளது தொழில். ஒரு முறை கணவனுடன் எகிப்து விளையாடும் கால்பந்து போட்டிக்குச் செல்லும் செபா, வெற்றிக் கொண்டாட்டம் என்ற பெயரால் பல ஆண்களால் கும்பல் வன்மத்திற்கு ஆளாகிறாள். அதனால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கும் செபாவிடம் அவளது டாக்டர் கணவனும், “உனக்கு நடந்ததை என்னால் மறக்க முடியவில்லை. உன்னுடன் இனி என்னால் வாழ முடியாது” என்று சென்று விடுகிறான். விரக்தியில் இருக்கும் செபா, பாலியல் வன்முறையிலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதைப் பற்றிய கலந்துரையாடல்களை நடத்த ஆரம்பிக்கிறாள். பல பெண்கள் வருகிறார்கள், இவள் சொல்வதைக் கேட்கிறார்கள். ஆனால் யாரும் தாங்கள் பாலியல் துன்பதிற்கு ஆளாக்கப்பட்டதை ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள், ஃபைஸா உட்பட.

நெல்லி (Nelly)

வளர்ந்து வரும் ‘Stand-Up Comedian’ நெல்லி. இவளது காதலன் எகிப்தின் முன்னனி ‘Stand-Up Comedian’. நெல்லியைத் திருமணம் செய்து கொள்ள அவளது பெற்றோர் விருப்பப்படி தனக்குப் பிடித்த இந்த வேலையை விட்டுவிட்டு பிடிக்காத வங்கி உத்யோகத்திற்கு செல்லத் தயாராக இருப்பவன். ஒரு முறை வீட்டில் வந்து இறங்கும் நெல்லியை டாக்ஸி டிரைவர் ஒருவன் அவளது சட்டையை பிடித்து இழுத்து அப்படியே காரையும் செலுத்தி கீழே தள்ளி விடுகிறான். அவனை விரட்டிப் பிடிக்கும் நெல்லி போலீஸில் ஒப்படைத்து sexual harassment என்று புகார் செய்கிறாள். ஆனால் போலீஸ் வேறு ஏதாவது கேஸில் இவனை உள்ளே வைக்கிறோம் ஆனால் பாலியல் கேஸ் போட முடியாது என்று சொல்கிறார்கள். நேரே நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்கிறாள் நெல்லி; செபாவின் ஆதரவுடன்.

 இம்மூன்று பெண்களும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிறார்கள். தங்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஃபைஸா அதனை ஏற்கனவே ஆரம்பித்து விட்டிருக்கிறாள். பேருந்தின் கூட்ட நெரிசலில் தன்னிடம் தவறாக நடக்க முயலும் ஒரு இளைஞனை கொண்டை ஊசி போன்ற ஒன்றை வைத்து அவனது ஆணுறுப்பில் ஓங்கி குத்தி விட்டு ஓடிவிடுகிறாள். 678 பேருந்தில் மட்டும் அடுத்தடுத்து மூன்று நான்கு பேர் தொடையிடுக்கில் கையை வைத்து ரத்தசகிதம் அலறிக்கொண்டு கீழே விழுவதால் போலீஸும் உஷார் ஆகிறது. சிறப்பு அதிகாரியும் நியமிக்கப் படுகிறார். பிறகு என்ன நடந்தது என்பது தான் மீதிக் கதை.


எகிப்தில் வேலை இல்லாத, வறுமை கோட்டிற்கு கீழே பல ஆண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு திருமணம் என்பது கனவில் மட்டும் தான். எனவே தங்களது இச்சைகளை இது போல பொது இடத்தில் தீர்த்துக்கொள்கிறார்கள் என்கிறார் இயக்குனர், Mohamed Diab. எகிப்தில் இருக்கும் அடக்குமுறை, வன்முறை, வறுமை, அறியாமை இவையெல்லாம் சேர்ந்து தான் பெண்களுக்கு எதிரான sexual harassment என்னும் பாலியல் வன்முறையைத் தூண்டுகிறது என்பது இவரது வாதம்!

படம் ஆரம்பம் முதல் இறுதி வரை அருமை என்றால் கடைசி பதினைந்து நிமிடங்கள் அதகளம். பொது இடத்தில் யாருக்கும் தெரியாமல் பெண்களை தீண்டும் காமுகர்களை அதே பொது இடத்தில் வைத்தே அறுக்க இந்த மூன்று பெண்களும் வெறிகொண்டு தேடுவதும், வெவ்வேறு சூழ்நிலைகளில் இருப்பதால் அந்த மூன்று பெண்களுக்குள்ளேயே பிரச்சனை வருவதும், போலீஸில் மாட்டும் போது அவரவர் பாணியில் பதில் சொல்வதும் என்று படத்தில் பல காட்சிகள் மறக்க முடியாதவைகளாக நிற்கின்றன.

செபா கதாப்பாத்திரம் நடிக்க வேண்டிய கால்பந்துப் போட்டியை காட்சியப் படுத்திய போதே அந்த நடிகை கும்பல் வன்மத்திற்கு ஆளாக்கப்பட்டாள் என்று சொல்லும் இயக்குனர், நிலைமை இவ்வளவு கேவலமாக இருக்கும் போது ‘இறையான்மை, கலாச்சாரம்’ என்று அரசாங்கம் பேசுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்கிறார்.

படத்தைப் பற்றிய ஒருவரி அறிமுகத்தை தனது ஏதோ ஒரு பதிவில் தந்து என்னைப்  பார்க்கத் தூண்டிய பதிவர் கருந்தேளுக்கு நன்றி. படத்தை எனக்குக் காட்டிய பெங்களூரு திரைப்பட விழாவிற்கு கோடான கோடி நன்றி.

படத்தின் Tagline
“Ask yourself three questions:
Have you been sexually harassed?
How many times?
How did you react?”

படத்தைப் பற்றி முழுமையாகச் சொல்லவந்ததைச் சொல்லிவிட்டேனா என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இந்தப் படம் பார்க்க வேண்டிய ஒன்று. மொத்தத்தில் 678 என்னைப் பொறுத்த வரை

"நீட்டினால் அறுத்துவிடு!"

- பதிவர் பேபி ஆனந்தன்

0 பின்னூட்டங்கள்: