> குருத்து: மூன்று பெண்களின் பேருந்து பயணம்!

February 2, 2013

மூன்று பெண்களின் பேருந்து பயணம்!

ஃபஸியா பஸ்ஸில் போய்க்கொண்டு இருந்தாள். பஸ்ஸில் அதிகமான பயணிகள் இருந்ததால் நெரிசல் மிகுந்திருந்தது. பின்னால் ஓர் ஆண் அவளை நெருக்கிக் கொண்டிருந்தான். ஃபஸியா மிகுந்த எரிச்சலில் இருந்தாள். அவள் வேலை பார்க்கும் ஃபாக்டரியில் சம்பளப் பணத்தைக் குறைவாகக் கொடுத்திருந்தார்கள்.

கவுண்டரில் பணம் பெற்றுக் கொண்டபோது- சம்பளப் பணத்தை எண்ணிப் பார்த்தாள். காரணம் கேட்டபோது, அவள் பல நாட்கள் வேலைக்குத் தாமதமாக வந்ததால் அதற்கான அபராதக் கட்டணத்தைக் கழித்துக் கொண்டு, மீதிப் பணத்தைக் கொடுத்திருப்பதாகச் சொன்னார்கள்.  வீட்டுக்குச் செலவுகள் பல இருந்தன. இவ்வளவு குறைவான சம்பளப் பணத்தை வைத்துக் கொண்டு எப்படி சரிக்கட்டப் போகிறோம் என்ற மன உளைச்சலில் அவள் இருந்தாள். பின்னால் இருந்த ஆண் அவளை சீண்டிக் கொண்டிருந்தான். பஸ்ஸில் இருக்கும் நெரிசலைப் பயன்படுத்திக் கொண்டு அவன் இப்படிக் கேவலமாக நடந்துகொள்வது, அவள் கண்களில் நீர் சுரக்கச் செய்தது.

பின்னால் திரும்பிப் பார்த்தாள். அவன் பல்லை இளித்தான். இந்த அரக்கனை எப்படி சமாளிப்பது என்று குமுறினாள்...

சீபாவும் ஃபஸியாவும் நெருங்கிய தோழிகள். ஃபஸியா தன் மனக் குறைகளை எல்லாம் கொட்டித் தீர்க்க சீபாவின் வீட்டுக்குச் சென்றாள்.
"என்னம்மா உன் முகம் வாடி இருக்கிறதே!'' என்று கேட்டாள் சீபா.
"நான் போகும் பஸ்ஸில் அடிக்கடி ஓர் ஆண் எனக்குத் தொல்லை கொடுக்கிறான். நான் ஒன்றும் செய்ய இயலாதவளாக இருக்கிறேன்...'' என்று சொல்லிவிட்டு ஃபஸியா விம்மினாள்.
"இதைப் போன்ற அசுரர்களை சும்மா விடக்கூடாது. தகுந்த பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும். நீ ஒரு உலோகத் தகடு வைத்துக் கொள். அவன் மீண்டும் தொல்லை கொடுத்தால் அவன் பேண்ட்டின் நடுப் பகுதியில் கீறிவிடு!''
"அப்படித்தான் செய்ய வேண்டும்...'' என்று ஃபஸியா ஆமோதித்தாள்.

அன்றும் பஸ்ஸில் நெரிசல் அதிகமாக இருந்தது. வழக்கம் போல் ஃபஸியாவின் பின்புறம் நெருக்கமாக நின்று கொண்டு அவன் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தான்.
திடீரென்று அவன் "ஆ'வென்று அலறினான். பஸ்ஸில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். பஸ் சீக்கிரமே ஒரு நிறுத்தத்தில் நின்றது. ஃபஸியா வேக வேகமாக பஸ்ஸை விட்டு வெளியேறினாள்.

ஃபஸியாவுக்குத் தொல்லை கொடுத்த ஆசாமி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தான். இன்ஸ்பெக்டர் ஒருவர் அவனிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தார்.
"ஒரு பெண்தான் என்னை பேண்ட்டின் நடுப்பகுதியில் கீறிவிட்டு ஓடினாள்...''
"நீ என்ன தவறு செய்தாய்?''
"நான் ஒரு தவறும் செய்யவில்லை!'' என்று புளுகினான்.

சீபாவின் வீட்டுக்குச் சென்றாள் ஃபஸியா.
"நீ சொன்ன மாதிரியே அவனை உலோகத் தகட்டால் கீறிவிட்டேன்...''
"அந்த அசுரன் வலியால் கதறி இருப்பானே...! ''
"ஆமாம்'' என்றாள் ஃபஸியா.
நெல்லி - என்று ஒரு தோழி அறைக்குள் நுழைந்தாள்.
"ஃபஸியா! இவள் என் என் புதிய தோழி! என்று சீபா தன் புதிய தோழி நெல்லியை அறிமுகம் செய்துவைத்தாள்.''

சீபாவின் ஆலோசனைப்படி இன்னும் இரண்டு பெண்கள் இதேபோன்ற தண்டனையை அளித்தார்கள்.
பஸ்ஸில் தங்களிடம் வம்பு செய்த ஆண்களை உலோகத் தகட்டால், பேண்டின் மையப் பகுதியில் கீறிவிட்டார்கள்.
படக்கூடாத இடத்தில் கீறல் பட்டதால், தாங்கமுடியாத வலியில் துடித்த அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள்.
அவர்களிடமும் போலீஸ் புலன்விசாரணை செய்தது. பஸ்ஸில் பெண்களிடம் வம்பு செய்ததாக அவர்கள் ஒத்துக் கொள்ளவே இல்லை. தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் அப்பாவி நபர்களான தம்மை சில அராஜகப் பெண்கள் கீறி காயப்படுத்திவிட்டார்கள் என்றும் புலம்பினார்கள்.

நெல்லி பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தாள். பஸ்ஸின் நெரிசலைப் பயன்படுத்திக் கொண்டு ஒருவன் அவளிடம் தகாத முறையில் நடந்து கொண்டான். உலோகத் தகட்டால் கீறினாள். "ஆ..' என்ற அலறல்.

சீபா-ஃபஸியா-நெல்லி மூவரும் சீபாவின் வீட்டில் ஒன்று கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். "முப்பத்தி இரண்டாம் இலக்கமிட்ட பஸ்ஸில் நான் பயணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு ராஸ்கல் என்னிடம் வம்பு செய்தான். கீறிவிட்டேன்!'' என்றாள் நெல்லி. மூவரும் சிரித்தார்கள்.

தகவல் வந்ததும் ஃபஸியா பதறிவிட்டாள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தன் கணவனைப் பார்க்கப் பறந்தோடினாள். "முப்பத்தி இரண்டாம் இலக்கமிட்ட பஸ்ஸில் நான் பயணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு ராட்சசி என்னை உலோகத் தகட்டால் கீறிவிட்டாள்!'' என்றான் ஃபஸியாவின் கணவன். தன் கணவனும் பெண்களிடம் வம்பு செய்யும் ஓர் அராஜகவாதிதான் என்ற கசப்பான உண்மை, உறைக்கத் தொடங்கியதும் ஃபஸியா பொங்கிப் பொங்கி அழுதாள்.
 
நெல்லி, பொதுச் சதுக்கத்தில் மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தாள். வேகமாக ஒரு கார் வந்து கொண்டிருந்தது. கார் ஓட்டி, நெல்லியின் பின்னழகைப் பார்த்ததும் காரின் வேகத்தை மட்டுப்படுத்தினான்.  மெல்லக் காரை ஓட்டிக் கொண்டு வந்தவன்- நெல்லியை நெருங்கியதும்- காரில் இருந்து கையை நீட்டி அவள் மார்புப் பகுதியைத் தொட்டான்.
நெல்லி திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்... அவன் இளித்தான்...  நெல்லி எரிமலையாகப் பொங்கினாள். அவள் கத்திக் கூச்சல் போடத் தொடங்கியதும் காரை வேகப்படுத்த முயற்சித்தான்.  நெல்லி காரின் முன் பாகத்தின் மேல் படுத்துக் கொண்டாள். இதற்குள் கூட்டம் கூடிவிட்டது. குற்றவாளி தப்பிக்க முடியாமல் மாட்டிக் கொண்டான்.

"இவன் மேல் கேஸ் போட்டால் உன் குடும்ப மானம் பறிபோகும். உன் பெயர் சந்திக்கு வந்துவிடும்!'' - என்று புகாரைப் பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் எச்சரித்தார்.
ஆனால் - எதற்கும் அஞ்சாமல் நெல்லி தான் பால்ரீதியாக தாக்கப்பட்டதற்கு நியாயம் வேண்டி நீதிமன்றத்தில் தனது வழக்கை எகிப்து நாட்டிலேயே முதன் முதலாக பதிவு செய்து வெற்றி கண்டாள். சட்டம் என்று ஒன்று இருந்தாலாவது - பலர் அஞ்சக் கூடும் இல்லையா?

படத்தின் பெயர்:678
வெளியான ஆண்டு: 2010;
இயக்குநர்: முகம்மது தியாப்.

நன்றி : தினமணி கதிர்

2 பின்னூட்டங்கள்:

Anonymous said...

"அவள் வேலை பார்க்கும் ஃபாக்டரியில் சம்பளப் பணத்தைக் குறைவாகக் கொடுத்திருந்தார்கள் " ஒரு வேளை உலோகத்தகடு தயாரிக்கும் பாக்டரியில் வேலை செய்திருப்பாளோ சீபா ???? நெனெச்சு பாக்கவே பயமா இருக்கு இனி அந்த பய புள்ள நெருங்கவே மாட்டான். திரைப்பட விமர்சனம் அருமை

Anonymous said...

வாழ்த்துகள்..கதையை படிக்கும் போதே படம் பார்த்தது போன்ற உணர்வு..தொடருங்கள்...