> குருத்து

July 7, 2022

ஓலா ஓட்டுநரால் கணிப்பொறியாளர் கொலை! மக்களையும் ஓட்டுநர்களையும் சுரண்டுகிறார்கள் கார்ப்பரேட்டுகள்! மக்களை மோதவிட்டு அரசு வேடிக்கைப் பார்க்கிறது!


பயணத்தை பதட்டமாகவும், சிக்கலாக்கியும் வைத்திருப்பது ஓலா, ஊபர் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களும், இதை முறைப்படுத்த தவறிய  ஒன்றிய அரசும் தான் காரணம். 


*****

கணிப்பொறியாளர் கொலை

செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி அருகே கன்னிம்பாக்கம் கிராமம். கணிப்பொறியாளர் உமேந்தர் கோயமுத்தூரில் வேலை செய்கிறார். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் சென்னையில் தன் சொந்த வீட்டுக்கு வருவது வழக்கம். ஞாயிறன்று தன் மனைவி, இரண்டு குழந்தைகளுடன், மனைவியின் தங்கை, தங்கையின் இரண்டு குழந்தைகளுடன் மொத்தம் ஏழு பேர் மாலுக்கு சென்றுள்ளனர்.

கிளம்பும்பொழுது, மனைவியின் தங்கை ஓலாவில் இன்னோவா கார் பதிவு செய்திருக்கிறார்.  காரும் வந்திருக்கிறது. எல்லோரும் ஏறி அமர்ந்ததும், ஓலா ஓட்டுநர் ஓடிபி கேட்டிருக்கிறார். தன் மனைவியின் தங்கை செல்போனில் பதிவு செய்ததை மறந்து, தன் செல்லில் தேடியவர். வரவில்லை என சொல்லியிருக்கிறார். “வரவில்லை என்றால் கீழே இறங்குங்கள்” என ஓட்டுநர் தெரிவித்திருக்கிறார்.

கீழே இறங்கிய பயணி, கோபத்தில் காரின் கதவை வேகத்துடன் சாத்தியிருக்கிறார்.  “எப்படி என் காரின் கதவை வேகமாக சாத்தலாம்?” என சண்டை தீவிரமாகியிருக்கிறது.  இருவரும் கைகலப்பில் ஈடுபட்டு, பயணி கீழே விழுந்ததில் அவருக்கு அடிபட, மருத்துவமனைக்கு கொண்டு போய் சோதிக்கும் பொழுது ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர் தெரிவித்திருக்கிறார். இப்பொழுது ஓலா ஓட்டுநர் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்.

டீசல், பெட்ரோல் விலை ஏற்றம்

அலுவலகத்தில் சக ஊழியருடன் பேசும் பொழுது, மக்களிடையே சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது என பொதுவாக சொன்னார்.   உண்மை நிலவரத்தை நாம் சரியாக‌ புரிந்துகொள்ளவேண்டும். கொரானா அலைகளில் ஊரடங்கின் பொழுது கார்களை ஓட்டமுடியாமல், கடனுக்கு எடுத்த காருக்கு மாதாந்திர கடன் (Due) கட்ட முடியாமல், ஓட்டுநர்கள் மேலும் கடன் வாங்கித்தான் வாழ்க்கையை ஓட்டினார்கள்.



ஊரடங்கிற்கு பிறகாவது நிலைமையை சமாளிக்கலாம் என நினைக்கும் பொழுது, வரலாறு காணாத விலையில் ஒன்றிய அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக‌ பெட்ரோல், டீசல், கேஸ் விலையை ஏற்றிக்கொண்டே வந்தது.  கடந்த எட்டு ஆண்டுகளில் 26 லட்சம் கோடி ஒன்றிய அரசு, பெட்ரோல், டீசல், எரிவாயு பொருட்களில் மட்டும் வரிகளை ஏற்றி  மக்களை கொள்ளையடித்திருக்கிறது.  பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு  தொழில்ரீதியாக கார் ஓட்டுபவர்களை கடுமையாக பாதித்தது.

ஓலா, ஊபர் கார்ப்பரேட்டுகள் அராஜகம்

இந்தியாவில் ஓட்டுநர்கள் ஒருங்கிணைந்த முறையில் ஒன்றிணைக்கப்படாததால்,  கார் ஓட்டுநர்களும், பயணம் செய்பவர்களும் தொடர்பு கொள்வதில், விலையை தீர்மானப்பதில் என நிறைய‌ சிரமங்களை எதிர்கொண்டார்கள்.  இருவரையும் ஒருங்கிணைத்தால், நன்றாக சம்பாதிக்கலாம் என ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் முடிவு செய்தன. துவக்கத்தில் ஜீரோ கமிசன் என பெரும்பாலான கார் ஓட்டுநர்களை ஒன்றிணைத்தார்கள்.பிறகு 5% கமிஷன் என பிடிக்கத் துவங்கினார்கள்.  இப்பொழுது அதிகபட்சமாக ரூ. 1000க்கு ரூ 350 வரை கமிசனாக பிடித்துக்கொள்கிறார்கள். அதாவது 35% சதவிகிதம் வரை கமிஷன் என்ற பெயரில் சுரண்டுகிறார்கள்.. இந்த கமிசனுக்கு பயந்துகொண்டு தான்,  ஓலா, ஊபர் ஓட்டுநர்கள் பதிவு செய்த பயணத்தை ரத்து செய்யுங்கள், “எங்களிடம் பணமாக கொடுங்கள்” என பயணிகளை கேட்டுக்கொள்கிறார்கள்.  இப்படி பல ஓட்டுநர்கள் கோருவதை சமூக வலைத்தளங்களில் பலர் எழுதிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

பயணிகளிடமும் கொள்ளை



ஓட்டுநர்களிடம் அதிகப்பட்சம் 35% கமிஷன் என்ற பெயரில் சுரண்டுபவர்கள் பயணிகளையும் விட்டுவைக்க‌வில்லை. ஓலா, ஊபர் நிறுவனங்கள் விதவிதமான வழிகளில் வசூல் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள்.  காலை, மாலை நேரங்களில்  டிராபிக் அதிகம் உள்ள (Peak Hours) நேரங்களில் வழக்கமான கட்டணத்தை விட‌ அதிகப்பட்சம் 5 மடங்கு வரை  வசூலிக்கிறார்கள்.  பயணத்தை ரத்து செய்தால் ஒரு கட்டணம்.பாதியில் இறங்கினால் அதற்கொரு கட்டணம். இப்படி விதவிதமாக கட்டணங்களை வசூலிக்கிறார்கள்.

ஒன்றிய அரசு தலையீடு

தொடர்ந்து புகார்கள் வருவதால், இப்பொழுது ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் வசூலிப்பதில் புதிய நடைமுறையை கொண்டுவர‌ பரிசீலனையில் இருப்பதாக‌ சொல்கிறார்கள். காலை, மாலை என டிராபிக் நெருக்கடி உள்ள சமயங்களில் 2 மடங்கு மட்டுமே வசூலிக்கவேண்டும்.  அதுவும் ஒரு நாளைக்கு ஒரு ஓட்டுநர் புக் செய்யும் பயணங்களில் 10% மட்டுமே (பீக் அவர்) வசூலிக்கமுடியும். இப்படி இன்னும் எத்தனை கொலைகளுக்கு பிறகு நடைமுறைப்படுத்துவார்கள்?

மக்களுக்குள் மோதவிடுகிறார்கள்

சமீபத்தில் அண்ணா ஆர்ச் அருகே ஐம்பது வயது ஷேர் ஆட்டோ ஓட்டுநரும்,  20 வயதுள்ள‌ மருத்துவ கல்லூரி மாணவியும் சத்தமாகவும், மரியாதை இல்லாமல் தாக்கி பேசிக்கொண்டார்கள். சமாதானப்படுத்தி இருவரையும் அனுப்பிய பிறகு,  எதனால் சண்டை என விசாரித்தால், ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கு இதுவரை 15ரூ வாங்கிக்கொண்டிருந்தவர்,  விலை உயர்வை காரணம் சொல்லி கூடுதலாக ரூ5 கேட்டிருக்கிறார். அதை அந்தப் பெண் ஏற்றுக்கொள்ளவில்லை. இது தான் காரணம்.

இப்படி தினந்தோறும் மக்களுக்கும், ஓட்டுநர்களுக்கும் தகராறு நடந்துகொண்டே இருக்கிறது. அந்த சண்டை முற்றிப்போய், இப்பொழுது கொலை வரைக்கும் போயிருக்கிறது.

தினந்தோறும் மக்கள் பயணங்களை மேற்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட பயணத்தை பதட்டமாகவும், சிக்கலாக்கியும் வைத்திருப்பது ஓலா, ஊபர் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களும், இதை முறைப்படுத்த தவறிய  ஒன்றிய அரசும் தான் காரணம்.

மக்களும் ஓட்டுநர்களும் ஒன்று சேர்ந்து  எதிர்த்து சண்டையிடவேண்டியவர்கள் ஓலா, ஊபர் போன்ற கார்ப்பரேட்டு நிறுவனங்களையும், ஒன்றிய அரசை எதிர்த்தும் தான்.

'வெற்றிகரமாக' ஆறாவது ஆண்டில் ஜி.எஸ்.டி! பரிசாக ! மக்கள் வாங்கும் மோர், தயிர்க்கு எல்லாம் வரி!


“ஒரு தேசம். ஒரு வரி” என பந்தாவாக முழங்கி, ஜி.எஸ்.டி வரிமுறையை துவங்கினார்கள். ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டது. அரசு அதை கொண்டாடும் விதத்தில் 47வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் சண்டிகாரில் கூடி, பெரும்பான்மை மக்கள் பயன்படுத்தும் பல பொருட்களுக்கு புதிதாக வரியும், சில முக்கிய பொருட்களுக்கு கூடுதல் வரியும் போட்டிருக்கிறார்கள்.


தினந்தோறும் மக்கள் பயன்படுத்தும் பாக்கெட் தயிர், மோர்க்கு எல்லாம் இப்பொழுது வரி விதித்திருக்கிறார்கள். பிஜேபி ஆதரவு வழக்கறிஞர் தொலைக்காட்சி விவாதத்தில் ‘வசதியில்லாதவர்கள் வீட்டில் உறை ஊத்திப் பயன்படுத்துவார்கள். வசதியானவர்கள் தான் கடைகளில் பாக்கெட் தயிர் வாங்குகிறார்கள்’ என கூசாமல் முட்டுக்கொடுக்கிறார்.

கோடை விடுமுறைக்கு பிறகு, பள்ளிக்கட்டணமும், கல்லூரிக் கட்டணமும் கட்டுவதற்காக மக்கள் கடன் வாங்குவதற்கு அலையாய் அலைந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் மாணவர்கள் பயன்படுத்தும் பேனா இங்க் போன்ற பொருட்களுக்கு வரியை அதிகப்படுத்தியிருக்கிறார்கள்.


பம்புசெட்க்கு 12% வரியிலிருந்து, 18%ஆக உயர்த்தியிருக்கிறார்கள். வரி உயர்ந்ததின் விளைவாக பம்புசெட்டின் திறனுக்கேற்ப ஏழு ஆயிரத்திற்கு மேலே விலை உயரும் என்கிறார்கள். தமிழ்நாட்டில் இதனை கணிசமாக உற்பத்தி செய்யும் கோயமுத்தூர் உற்பத்தியாளர்கள், ‘குறைந்த விலையில் மூலப்பொருட்கள் குஜராத்தில் கிடைப்பதால் அவர்களோடு ஏற்கனவே விலையில் போட்டி போடமுடியவில்லை. அதனால் விலையைக் குறையுங்கள் என அரசுக்கு கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தான் வரியை அதிகப்படுத்தி இருக்கிறார்கள் ‘ என்கிறார்கள்.

தமிழ்நாட்டில் விவசாயம், நிலத்தடி நீரை மட்டுமே பிரதானமாக நம்பி செயல்பட்டு வருகிறது. 1,000 அடி, 1,500 அடிக்கு கீழ் உள்ள தண்ணீரை,’ போர்வெல் பம்ப்செட் ‘ பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றோம். மேலும் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில்’ பம்ப்செட் ‘முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் பம்ப்செட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதமாக அதிகரித்துள்ளது இந்த விலையேற்றம் விவசாயத்தை கடுமையாக பாதிக்கும். ஏற்கனவே பலர் விவசாயத்தில் நிலவும் பிரச்சினைகள் காரணமாக வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர். இதனால் விவசாயம் அழிந்து வருகிறது. எனவே விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் மோட்டார் பம்ப்செட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு முற்றிலும் நீக்க வேண்டும் என’ தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் ‘- பழனிசாமி கருத்து தெரிவிக்கிறார்.

‘ஒரு பக்கம் சூரிய சக்தியில் பயன்படுத்தும் பொருட்களுக்கு இதே ஆண்டிலேயே மானியமும், இன்னொரு பக்கம் சூரிய சக்தி அடுப்புகளுக்கு வரியை அதிகப்படுத்தவும் செய்கிறார்கள்’ என்கிறார், ‘ புதிய தலைமுறை நெறியாளர்’ -“கார்த்திகேயன்”.

“கொரானா அலைகளில் நிறைய தொழில்கள் நொடித்து இலட்சக்கணக்கான குறு, நடுத் தொழில்கள் செய்பவர்கள் விழி பிதுங்கி நிற்கும் பொழுது இப்படி அடிப்படை பொருட்களுக்கு விலை ஏற்றம் என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாது !”என்கிறார், ‘இந்திய தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர்’ -“ரகுநாதன் “அவர்கள்.

ஒரு அரசின் அச்சாணியே வரி தான்! மாநிலங்களின் வரி வசூலிக்கும் உரிமையையும் பறித்ததே ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி வரி சிஸ்டம்.

மாநில கட்சிகள், அடிப்படையில் இதை ஏற்றுக்கொண்டிருக்கவே கூடாது. அவர்கள் பணியவைத்தார்கள். இவர்களும் பணிந்தார்கள்.

ஜி.எஸ்.டி அமுலாக்கத்தின் விளைவால் தொழிற்துறையில் முன்னேறி நிற்கும் மாநிலங்களுக்கு பெரும் இழப்புதான். அந்த இழப்பை ஈடுகட்டுவதற்கு ஐந்து ஆண்டுகள் மட்டும் இழப்பீடு தருவதாக சொன்னார்கள். இவர்களும் தலையாட்டி ஏற்றுக்கொண்டார்கள்.

இதோ ஐந்து ஆண்டுகள் கடந்து போய்விட்டன. மேலும் ஐந்து ஆண்டுகள் இழப்பீடு தரவேண்டும் என பாதிக்கப்படும் மாநிலங்கள் இப்பொழுது ஜி.எஸ்.டி கவுன்சிலிடம் கோரிக்கை மனு கொடுத்திருக்கிறார்கள்.

அவர்கள் மறுத்துவிட்டால், அந்த சுமையையும் மக்கள் மீது தான் மாநிலங்கள் சுமத்தப்போகின்றன.

இலங்கையில் அரசு திவாலாகி மக்கள் போராட்டங்கள் கொழுந்துவிட்டு எரியும் பொழுது, இங்குள்ள, ‘ இந்திய அதிகார வர்க்கம்’ , ‘ மாநில தேர்தல்களின் பொழுது தேசிய கட்சிகள், மக்களுக்கு இலவச திட்டங்களை அறிவிக்கிறார்கள்! இதனால் , இலங்கையை போல இங்கும் நிலைமை மோசமாகிவிடும்! ‘ என ஒன்றிய அரசுக்கு அறிவுரையை அள்ளி வழங்கினார்களாம்!

ஒரு நாடு ,நேர்முக வரியான வருமானவரி போன்ற வரிகளை அதிகரித்து, மறைமுக வரிகளான ஜி.எஸ்.டி போன்றவற்றை குறைப்பது தான் ஒரு நல்ல அரசுக்கு இலக்கணம் என்கிறார்கள். நடந்து கொண்டிருப்பது கார்ப்பரேட்- காவி அரசு: இது ‘மக்கள் விரோத அரசு ‘என்பதால் மறைமுக வரியை ஏற்றி, மக்கள் மீது சுமையை அதிகரித்துக்கொண்டே செல்கிறார்கள்!

ஏற்கனவே சில பொருளாதார சமிக்ஞைகள் தெரிய ஆரம்பித்துள்ளன. இந்தியாவில் டாலரின் மதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது: அமெரிக்காவின் மத்திய வங்கி, வட்டி விகிதத்தை அதிகரித்து இருக்கிறார்கள்: இதனால் ஆசிய நாடுகளின் பணமதிப்பு இன்னும் வீழ்ச்சி அடையலாம் என்கிறார்கள்!

இந்திய பங்கு சந்தையிலிருந்து நிறைய முதலீடுகளை நகர்த்திக்கொண்டு இருக்கிறார்கள் என்ற செய்தியும் வருகிறது. மக்களிடையே பணப்புழக்கம் குறைந்துகொண்டே வருகிறது: ஏற்கனவே பெரும்பாலான மக்கள் மீது மீண்டும் மீண்டும் சுமையை சுமத்துகிறவர்கள் வர இருக்கும் பொருளாதார ஆபத்துகளையும் சுமத்துவார்கள் என நினைக்கும் பொழுதே பகீரென இருக்கிறது.

இலங்கை மக்கள், கடும் நெருக்கடி வந்த பின்பு தான் உக்கிரமாக போராட துவங்கினார்கள். மக்கள் விரோத ஆட்சியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்து துரத்தினார்கள்!

நெருக்கடி வரும்முன்விழித்துக்கொண்டு போராடுவது நமக்கு நல்லது!

Fingertip. (2022) - சீசன் 2


அம்மாவும், அப்பாவும் சென்னையில் வாழ்கிறார்கள். வீடு மொத்தமும் சிசிடிவி பொருத்தப்பட்டு அமெரிக்காவில் வாழும் மகன் கண்காணிக்கிறார். இத்தனை ”டிஜிட்டல் பாதுகாப்பு” இருந்தும், பெற்றோர்கள் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். கொலை செய்யும் பொழுது வீடியோ எடுக்கிறார்கள். ஏன்?


செல்போனில் ஒரு பிரச்சனை. கடையில் சரிசெய்ய பெண் தருகிறார் திருப்பி தரும் பொழுது, உள்ளே ஒரு கேமராவை வைத்து தந்துவிடுகிறார்கள். படுக்கை வரைக்கும் அந்தப்பெண் செல்போனை கொண்டு செல்கிறார். எல்லாவற்றையும் பார்த்து, ”பதிவு” செய்து மிரட்டுகிறார்கள்.

ஒரு கல்லூரியில் மாணவர்கள் தேர்தல். ஒரு மாணவன் 70%க்கு மேலாக வாக்கு வாங்கி வெற்றி பெறும் நிலையில் இருக்கிறான். எதிர்த்து நிற்கும் ஒரு மாணவி, ஒருவனை அணுகுகிறார். அந்த மாணவனைப் பற்றிய வதந்தி ஒன்றை பரப்பி, அதையே தன் ஆட்களை வைத்து காரசாரமாக விவாதிக்க வைத்து, ”டிரெண்டாக்கி”, தேர்தல் காலையின் பொழுது, அவனைப் பற்றிய ஒரு தப்பான படத்தை இவர்களே உருவாக்கி சமூக வலைத்தளத்தில் போடுகிறார்கள். அந்தப் படம் உண்மை இல்லை என்றாலும், எதிர்த்து நிற்கும் பெண் ஜெயிக்கிறாள். இதன் தொடர்ச்சியில் அவன் அமைச்சருக்கு வேலை செய்ய துவங்குகிறான்.


திரைப்படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகை. அவள் படிக்கிற காலத்தில் அவள் மூக்கை தோழி ஒருத்தி கிண்டல் செய்ய, அவள் மனதில் வடுவாகப் பதிந்துவிடுகிறது. அந்த எண்ணம் நாளாக நாளாக வளர்ந்து… தன் மூக்கு லேசாக கோணலாகத்தான் இருக்கிறது என ”ஆழமாய்” நம்புகிறாள். தன் மூக்கை வெறுக்க துவங்குகிறாள். இதற்காக ஒரு சிகிச்சையில் ஈடுபட, முகத்தின் அமைப்பு வேறு மாதிரியாகிறது.

பிறகு இவர்களுக்கெல்லாம் என்ன ஆனது என்பதை உளவியல்பூர்வமாகவும், உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள். முதல் சீசனும் சமூக வலைத்தளங்கள் மனிதர்களின் வாழ்க்கையை எப்படி பாதிக்கின்றன என்பதைத்தான் சொல்லியிருந்தார்கள். இந்த சீசனில் பிரசன்னா, ரெஜினா, அபர்ணா உட்பட சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.



உலகம் டிஜிட்டல் மயமாகிவருகிறது. இந்தியாவும் டிஜிட்டல் மயத்தை விரைவுப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதில் டிஜிட்டல் குற்றங்களும் வருடந்தோறும் அதிகமாகி கொண்டே வருகின்றன. 2016-ல் 12317 குற்றங்களும், 2017ல் 21796 குற்றங்களும், 2018ல் 27248 குற்றங்களும், 2019ல் 44735 குற்றங்களும், 2020ல் 50035 பெருகியுள்ளன. ஐந்து ஆண்டுகளில் 400% அதிகமாகி இருப்பதை கவனியுங்கள். டிஜிட்டல் குற்றங்களுக்கு எங்கு, யாரிடம் புகார் தருவது என மக்களுக்கு புரிபடவில்லை. இந்த டேட்டாவை தருபவர்களே 99% டிஜிட்டல் குற்றங்கள் பதிவு செய்யப்படுவதில்லை. இந்த குற்றங்களில் குற்றவாளிகளை பிடிப்பதும், பணத்தை மீட்பதும் சவாலாக இருக்கிறது என்பதையும் சேர்த்தே சொல்கிறார்கள்.

செல்போன் நமது அன்றாட தேவைகள் அத்தனைக்கும் பயன்படுத்துகிறோம். அதில் எவ்வளவு நேர்மறை அம்சங்கள் இருக்கிறதோ, அவ்வளவு எதிர்மறை அம்சங்களும் இருப்பதை அறியாமலேயே மக்கள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். படத்தில் ஒரு இடத்தில் கணவனும் மனைவியும் தங்களது படுக்கையறையில் அலெக்சாவை வைத்திருப்பார்கள். குரல் கொடுத்தாலே புரிந்துகொண்டு வினையாற்றக்கூடிய ஒரு எலக்ட்ரானிக்ஸ் பொருள் தான் அலெக்சா. உள்ளாடைகள் வாங்கவேண்டும் என பேசிக்கொள்வார்கள். அடுத்தநாள் அந்த கடையை கடக்கும் பொழுது, தள்ளுபடி விலையில் தருவதாக ஒரு குறுஞ்செய்தி வரும். அவர்கள் அந்த கடைக்குள் மகிழ்ச்சியுடன் நுழைவார்கள். நமக்கு அலெக்சா நினைவுக்கு வந்து போகும். நம் படுக்கையறை வரை சந்தைப்படுத்துபவர்கள் நுழைந்துவிட்டார்கள் என்பது முக்கிய செய்தி.

சிசிடிவிக்கள் நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில், வீடுகளில், தெருக்களில் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. சிசிடிவிக்களைப் பொருத்த சொல்லி, போலீசே தொடர்ந்து வலியுறுத்துகிறது. சமூகத்தில் குற்றங்களுக்கான அடிப்படைகளை கண்டறிந்து சரி செய்ய முயலாமல், சிசிடிவிக்களை பொருத்திக்கொண்டு போவது அறிவுடைமை செயலா? அமெரிக்காவின் தெருக்களில் 10 டாலருக்காக கொலை செய்யப்படுவீர்கள் என்பார்கள். அந்த நிலைமையை நோக்கி நாமும் போகிறோமா?

உலகம் டிரெண்டை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. தங்களது எதிர்ப்பையோ, ஆதரவையோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டாக்கிவருகிறார்கள். இந்தியாவில் இதை மற்றவர்கள் புரிந்துகொண்டார்களோ இல்லையோ, சங்கி காவிப்படைகள் சமூக வலைத்தளங்களில் மிக வலுவாக இருப்பதை ஊடகங்கள் திரும்ப திரும்ப சொல்கிறார்கள். களத்திலும், சமூக வலைத்தளங்களிலும் அவர்கள் தான் நிகழ்ச்சி நிரலை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். எது விவாதிக்கப்படவேண்டும். எது விவாதிக்கப்படக்கூடாது என்பதை அவர்கள் தீர்மானிக்கிறார்கள். நாம் அதன் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

உலகம் டிஜிட்டல்மயமாகி வருகிறது. உலக ரவுடி அமெரிக்கா உலகத்தில் தன்னை எதிர்க்கும், ஆதரிக்கும் பலரையும் உளவுப் பார்த்தே வருகிறது. இதைத்தான் ஸ்னோடன் விக்கிலீக்ஸ் மூலம் அம்பலப்படுத்தினார். இதற்காக அவரை அமெரிக்கா டார்ச்சர் செய்து கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் இப்பொழுது அரசு தன்னை எதிர்க்கும் பல அரசியல் தலைவர்களை, பத்திரிக்கையாளர்களை, சமூக செயற்பாட்டாளர்களை இஸ்ரேலிடமிருந்து பெகாசஸ் ஸ்பைவேரை வாங்கி உளவுப் பார்த்ததாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தன்னை எதிர்ப்பவர்களை எல்லாம் பொய் வழக்குகள் போட்டு சிறையில் தள்ளி வதைத்து வருகிறது.

உலகம் டிஜிட்டல் மயமாவது கார்ப்பரேட்டுகளுக்கும், அரசுகளுக்கும் மிகவும் வசதியாக இருக்கிறது. இந்தியாவில் கார்ப்பரேட்டுகளுக்கும், காவி பயங்கரவாதிகளுக்கும் வசதியாக இருக்கிறது. அதனால் தான் விரைவுப்படுத்துகிறார்கள்.