> குருத்து: ஓலா ஓட்டுநரால் கணிப்பொறியாளர் கொலை! மக்களையும் ஓட்டுநர்களையும் சுரண்டுகிறார்கள் கார்ப்பரேட்டுகள்! மக்களை மோதவிட்டு அரசு வேடிக்கைப் பார்க்கிறது!

July 7, 2022

ஓலா ஓட்டுநரால் கணிப்பொறியாளர் கொலை! மக்களையும் ஓட்டுநர்களையும் சுரண்டுகிறார்கள் கார்ப்பரேட்டுகள்! மக்களை மோதவிட்டு அரசு வேடிக்கைப் பார்க்கிறது!


பயணத்தை பதட்டமாகவும், சிக்கலாக்கியும் வைத்திருப்பது ஓலா, ஊபர் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களும், இதை முறைப்படுத்த தவறிய  ஒன்றிய அரசும் தான் காரணம். 


*****

கணிப்பொறியாளர் கொலை

செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி அருகே கன்னிம்பாக்கம் கிராமம். கணிப்பொறியாளர் உமேந்தர் கோயமுத்தூரில் வேலை செய்கிறார். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் சென்னையில் தன் சொந்த வீட்டுக்கு வருவது வழக்கம். ஞாயிறன்று தன் மனைவி, இரண்டு குழந்தைகளுடன், மனைவியின் தங்கை, தங்கையின் இரண்டு குழந்தைகளுடன் மொத்தம் ஏழு பேர் மாலுக்கு சென்றுள்ளனர்.

கிளம்பும்பொழுது, மனைவியின் தங்கை ஓலாவில் இன்னோவா கார் பதிவு செய்திருக்கிறார்.  காரும் வந்திருக்கிறது. எல்லோரும் ஏறி அமர்ந்ததும், ஓலா ஓட்டுநர் ஓடிபி கேட்டிருக்கிறார். தன் மனைவியின் தங்கை செல்போனில் பதிவு செய்ததை மறந்து, தன் செல்லில் தேடியவர். வரவில்லை என சொல்லியிருக்கிறார். “வரவில்லை என்றால் கீழே இறங்குங்கள்” என ஓட்டுநர் தெரிவித்திருக்கிறார்.

கீழே இறங்கிய பயணி, கோபத்தில் காரின் கதவை வேகத்துடன் சாத்தியிருக்கிறார்.  “எப்படி என் காரின் கதவை வேகமாக சாத்தலாம்?” என சண்டை தீவிரமாகியிருக்கிறது.  இருவரும் கைகலப்பில் ஈடுபட்டு, பயணி கீழே விழுந்ததில் அவருக்கு அடிபட, மருத்துவமனைக்கு கொண்டு போய் சோதிக்கும் பொழுது ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர் தெரிவித்திருக்கிறார். இப்பொழுது ஓலா ஓட்டுநர் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்.

டீசல், பெட்ரோல் விலை ஏற்றம்

அலுவலகத்தில் சக ஊழியருடன் பேசும் பொழுது, மக்களிடையே சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது என பொதுவாக சொன்னார்.   உண்மை நிலவரத்தை நாம் சரியாக‌ புரிந்துகொள்ளவேண்டும். கொரானா அலைகளில் ஊரடங்கின் பொழுது கார்களை ஓட்டமுடியாமல், கடனுக்கு எடுத்த காருக்கு மாதாந்திர கடன் (Due) கட்ட முடியாமல், ஓட்டுநர்கள் மேலும் கடன் வாங்கித்தான் வாழ்க்கையை ஓட்டினார்கள்.



ஊரடங்கிற்கு பிறகாவது நிலைமையை சமாளிக்கலாம் என நினைக்கும் பொழுது, வரலாறு காணாத விலையில் ஒன்றிய அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக‌ பெட்ரோல், டீசல், கேஸ் விலையை ஏற்றிக்கொண்டே வந்தது.  கடந்த எட்டு ஆண்டுகளில் 26 லட்சம் கோடி ஒன்றிய அரசு, பெட்ரோல், டீசல், எரிவாயு பொருட்களில் மட்டும் வரிகளை ஏற்றி  மக்களை கொள்ளையடித்திருக்கிறது.  பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு  தொழில்ரீதியாக கார் ஓட்டுபவர்களை கடுமையாக பாதித்தது.

ஓலா, ஊபர் கார்ப்பரேட்டுகள் அராஜகம்

இந்தியாவில் ஓட்டுநர்கள் ஒருங்கிணைந்த முறையில் ஒன்றிணைக்கப்படாததால்,  கார் ஓட்டுநர்களும், பயணம் செய்பவர்களும் தொடர்பு கொள்வதில், விலையை தீர்மானப்பதில் என நிறைய‌ சிரமங்களை எதிர்கொண்டார்கள்.  இருவரையும் ஒருங்கிணைத்தால், நன்றாக சம்பாதிக்கலாம் என ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் முடிவு செய்தன. துவக்கத்தில் ஜீரோ கமிசன் என பெரும்பாலான கார் ஓட்டுநர்களை ஒன்றிணைத்தார்கள்.பிறகு 5% கமிஷன் என பிடிக்கத் துவங்கினார்கள்.  இப்பொழுது அதிகபட்சமாக ரூ. 1000க்கு ரூ 350 வரை கமிசனாக பிடித்துக்கொள்கிறார்கள். அதாவது 35% சதவிகிதம் வரை கமிஷன் என்ற பெயரில் சுரண்டுகிறார்கள்.. இந்த கமிசனுக்கு பயந்துகொண்டு தான்,  ஓலா, ஊபர் ஓட்டுநர்கள் பதிவு செய்த பயணத்தை ரத்து செய்யுங்கள், “எங்களிடம் பணமாக கொடுங்கள்” என பயணிகளை கேட்டுக்கொள்கிறார்கள்.  இப்படி பல ஓட்டுநர்கள் கோருவதை சமூக வலைத்தளங்களில் பலர் எழுதிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

பயணிகளிடமும் கொள்ளை



ஓட்டுநர்களிடம் அதிகப்பட்சம் 35% கமிஷன் என்ற பெயரில் சுரண்டுபவர்கள் பயணிகளையும் விட்டுவைக்க‌வில்லை. ஓலா, ஊபர் நிறுவனங்கள் விதவிதமான வழிகளில் வசூல் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள்.  காலை, மாலை நேரங்களில்  டிராபிக் அதிகம் உள்ள (Peak Hours) நேரங்களில் வழக்கமான கட்டணத்தை விட‌ அதிகப்பட்சம் 5 மடங்கு வரை  வசூலிக்கிறார்கள்.  பயணத்தை ரத்து செய்தால் ஒரு கட்டணம்.பாதியில் இறங்கினால் அதற்கொரு கட்டணம். இப்படி விதவிதமாக கட்டணங்களை வசூலிக்கிறார்கள்.

ஒன்றிய அரசு தலையீடு

தொடர்ந்து புகார்கள் வருவதால், இப்பொழுது ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் வசூலிப்பதில் புதிய நடைமுறையை கொண்டுவர‌ பரிசீலனையில் இருப்பதாக‌ சொல்கிறார்கள். காலை, மாலை என டிராபிக் நெருக்கடி உள்ள சமயங்களில் 2 மடங்கு மட்டுமே வசூலிக்கவேண்டும்.  அதுவும் ஒரு நாளைக்கு ஒரு ஓட்டுநர் புக் செய்யும் பயணங்களில் 10% மட்டுமே (பீக் அவர்) வசூலிக்கமுடியும். இப்படி இன்னும் எத்தனை கொலைகளுக்கு பிறகு நடைமுறைப்படுத்துவார்கள்?

மக்களுக்குள் மோதவிடுகிறார்கள்

சமீபத்தில் அண்ணா ஆர்ச் அருகே ஐம்பது வயது ஷேர் ஆட்டோ ஓட்டுநரும்,  20 வயதுள்ள‌ மருத்துவ கல்லூரி மாணவியும் சத்தமாகவும், மரியாதை இல்லாமல் தாக்கி பேசிக்கொண்டார்கள். சமாதானப்படுத்தி இருவரையும் அனுப்பிய பிறகு,  எதனால் சண்டை என விசாரித்தால், ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கு இதுவரை 15ரூ வாங்கிக்கொண்டிருந்தவர்,  விலை உயர்வை காரணம் சொல்லி கூடுதலாக ரூ5 கேட்டிருக்கிறார். அதை அந்தப் பெண் ஏற்றுக்கொள்ளவில்லை. இது தான் காரணம்.

இப்படி தினந்தோறும் மக்களுக்கும், ஓட்டுநர்களுக்கும் தகராறு நடந்துகொண்டே இருக்கிறது. அந்த சண்டை முற்றிப்போய், இப்பொழுது கொலை வரைக்கும் போயிருக்கிறது.

தினந்தோறும் மக்கள் பயணங்களை மேற்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட பயணத்தை பதட்டமாகவும், சிக்கலாக்கியும் வைத்திருப்பது ஓலா, ஊபர் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களும், இதை முறைப்படுத்த தவறிய  ஒன்றிய அரசும் தான் காரணம்.

மக்களும் ஓட்டுநர்களும் ஒன்று சேர்ந்து  எதிர்த்து சண்டையிடவேண்டியவர்கள் ஓலா, ஊபர் போன்ற கார்ப்பரேட்டு நிறுவனங்களையும், ஒன்றிய அரசை எதிர்த்தும் தான்.

1 பின்னூட்டங்கள்:

Elangovan said...

அருமை ,கத்தி எடுத்தவன் கத்தியால் அழிவதை போல் ,மக்களிடம் வன்முறையை தூண்டுபவன் அதே வன்முறையால் அழிவான்.