> குருத்து: Fingertip. (2022) - சீசன் 2

July 7, 2022

Fingertip. (2022) - சீசன் 2


அம்மாவும், அப்பாவும் சென்னையில் வாழ்கிறார்கள். வீடு மொத்தமும் சிசிடிவி பொருத்தப்பட்டு அமெரிக்காவில் வாழும் மகன் கண்காணிக்கிறார். இத்தனை ”டிஜிட்டல் பாதுகாப்பு” இருந்தும், பெற்றோர்கள் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். கொலை செய்யும் பொழுது வீடியோ எடுக்கிறார்கள். ஏன்?


செல்போனில் ஒரு பிரச்சனை. கடையில் சரிசெய்ய பெண் தருகிறார் திருப்பி தரும் பொழுது, உள்ளே ஒரு கேமராவை வைத்து தந்துவிடுகிறார்கள். படுக்கை வரைக்கும் அந்தப்பெண் செல்போனை கொண்டு செல்கிறார். எல்லாவற்றையும் பார்த்து, ”பதிவு” செய்து மிரட்டுகிறார்கள்.

ஒரு கல்லூரியில் மாணவர்கள் தேர்தல். ஒரு மாணவன் 70%க்கு மேலாக வாக்கு வாங்கி வெற்றி பெறும் நிலையில் இருக்கிறான். எதிர்த்து நிற்கும் ஒரு மாணவி, ஒருவனை அணுகுகிறார். அந்த மாணவனைப் பற்றிய வதந்தி ஒன்றை பரப்பி, அதையே தன் ஆட்களை வைத்து காரசாரமாக விவாதிக்க வைத்து, ”டிரெண்டாக்கி”, தேர்தல் காலையின் பொழுது, அவனைப் பற்றிய ஒரு தப்பான படத்தை இவர்களே உருவாக்கி சமூக வலைத்தளத்தில் போடுகிறார்கள். அந்தப் படம் உண்மை இல்லை என்றாலும், எதிர்த்து நிற்கும் பெண் ஜெயிக்கிறாள். இதன் தொடர்ச்சியில் அவன் அமைச்சருக்கு வேலை செய்ய துவங்குகிறான்.


திரைப்படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகை. அவள் படிக்கிற காலத்தில் அவள் மூக்கை தோழி ஒருத்தி கிண்டல் செய்ய, அவள் மனதில் வடுவாகப் பதிந்துவிடுகிறது. அந்த எண்ணம் நாளாக நாளாக வளர்ந்து… தன் மூக்கு லேசாக கோணலாகத்தான் இருக்கிறது என ”ஆழமாய்” நம்புகிறாள். தன் மூக்கை வெறுக்க துவங்குகிறாள். இதற்காக ஒரு சிகிச்சையில் ஈடுபட, முகத்தின் அமைப்பு வேறு மாதிரியாகிறது.

பிறகு இவர்களுக்கெல்லாம் என்ன ஆனது என்பதை உளவியல்பூர்வமாகவும், உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள். முதல் சீசனும் சமூக வலைத்தளங்கள் மனிதர்களின் வாழ்க்கையை எப்படி பாதிக்கின்றன என்பதைத்தான் சொல்லியிருந்தார்கள். இந்த சீசனில் பிரசன்னா, ரெஜினா, அபர்ணா உட்பட சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.



உலகம் டிஜிட்டல் மயமாகிவருகிறது. இந்தியாவும் டிஜிட்டல் மயத்தை விரைவுப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதில் டிஜிட்டல் குற்றங்களும் வருடந்தோறும் அதிகமாகி கொண்டே வருகின்றன. 2016-ல் 12317 குற்றங்களும், 2017ல் 21796 குற்றங்களும், 2018ல் 27248 குற்றங்களும், 2019ல் 44735 குற்றங்களும், 2020ல் 50035 பெருகியுள்ளன. ஐந்து ஆண்டுகளில் 400% அதிகமாகி இருப்பதை கவனியுங்கள். டிஜிட்டல் குற்றங்களுக்கு எங்கு, யாரிடம் புகார் தருவது என மக்களுக்கு புரிபடவில்லை. இந்த டேட்டாவை தருபவர்களே 99% டிஜிட்டல் குற்றங்கள் பதிவு செய்யப்படுவதில்லை. இந்த குற்றங்களில் குற்றவாளிகளை பிடிப்பதும், பணத்தை மீட்பதும் சவாலாக இருக்கிறது என்பதையும் சேர்த்தே சொல்கிறார்கள்.

செல்போன் நமது அன்றாட தேவைகள் அத்தனைக்கும் பயன்படுத்துகிறோம். அதில் எவ்வளவு நேர்மறை அம்சங்கள் இருக்கிறதோ, அவ்வளவு எதிர்மறை அம்சங்களும் இருப்பதை அறியாமலேயே மக்கள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். படத்தில் ஒரு இடத்தில் கணவனும் மனைவியும் தங்களது படுக்கையறையில் அலெக்சாவை வைத்திருப்பார்கள். குரல் கொடுத்தாலே புரிந்துகொண்டு வினையாற்றக்கூடிய ஒரு எலக்ட்ரானிக்ஸ் பொருள் தான் அலெக்சா. உள்ளாடைகள் வாங்கவேண்டும் என பேசிக்கொள்வார்கள். அடுத்தநாள் அந்த கடையை கடக்கும் பொழுது, தள்ளுபடி விலையில் தருவதாக ஒரு குறுஞ்செய்தி வரும். அவர்கள் அந்த கடைக்குள் மகிழ்ச்சியுடன் நுழைவார்கள். நமக்கு அலெக்சா நினைவுக்கு வந்து போகும். நம் படுக்கையறை வரை சந்தைப்படுத்துபவர்கள் நுழைந்துவிட்டார்கள் என்பது முக்கிய செய்தி.

சிசிடிவிக்கள் நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில், வீடுகளில், தெருக்களில் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. சிசிடிவிக்களைப் பொருத்த சொல்லி, போலீசே தொடர்ந்து வலியுறுத்துகிறது. சமூகத்தில் குற்றங்களுக்கான அடிப்படைகளை கண்டறிந்து சரி செய்ய முயலாமல், சிசிடிவிக்களை பொருத்திக்கொண்டு போவது அறிவுடைமை செயலா? அமெரிக்காவின் தெருக்களில் 10 டாலருக்காக கொலை செய்யப்படுவீர்கள் என்பார்கள். அந்த நிலைமையை நோக்கி நாமும் போகிறோமா?

உலகம் டிரெண்டை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. தங்களது எதிர்ப்பையோ, ஆதரவையோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டாக்கிவருகிறார்கள். இந்தியாவில் இதை மற்றவர்கள் புரிந்துகொண்டார்களோ இல்லையோ, சங்கி காவிப்படைகள் சமூக வலைத்தளங்களில் மிக வலுவாக இருப்பதை ஊடகங்கள் திரும்ப திரும்ப சொல்கிறார்கள். களத்திலும், சமூக வலைத்தளங்களிலும் அவர்கள் தான் நிகழ்ச்சி நிரலை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். எது விவாதிக்கப்படவேண்டும். எது விவாதிக்கப்படக்கூடாது என்பதை அவர்கள் தீர்மானிக்கிறார்கள். நாம் அதன் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

உலகம் டிஜிட்டல்மயமாகி வருகிறது. உலக ரவுடி அமெரிக்கா உலகத்தில் தன்னை எதிர்க்கும், ஆதரிக்கும் பலரையும் உளவுப் பார்த்தே வருகிறது. இதைத்தான் ஸ்னோடன் விக்கிலீக்ஸ் மூலம் அம்பலப்படுத்தினார். இதற்காக அவரை அமெரிக்கா டார்ச்சர் செய்து கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் இப்பொழுது அரசு தன்னை எதிர்க்கும் பல அரசியல் தலைவர்களை, பத்திரிக்கையாளர்களை, சமூக செயற்பாட்டாளர்களை இஸ்ரேலிடமிருந்து பெகாசஸ் ஸ்பைவேரை வாங்கி உளவுப் பார்த்ததாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தன்னை எதிர்ப்பவர்களை எல்லாம் பொய் வழக்குகள் போட்டு சிறையில் தள்ளி வதைத்து வருகிறது.

உலகம் டிஜிட்டல் மயமாவது கார்ப்பரேட்டுகளுக்கும், அரசுகளுக்கும் மிகவும் வசதியாக இருக்கிறது. இந்தியாவில் கார்ப்பரேட்டுகளுக்கும், காவி பயங்கரவாதிகளுக்கும் வசதியாக இருக்கிறது. அதனால் தான் விரைவுப்படுத்துகிறார்கள்.

0 பின்னூட்டங்கள்: