> குருத்து: முதலாளி ‍ - ஒரு குட்டி (உண்மை) கதை!

November 8, 2013

முதலாளி ‍ - ஒரு குட்டி (உண்மை) கதை!

"ஷீ" கடை நடத்தி, லாபம் சம்பாதித்த ஒரு சிறுமுதலாளி, தோல் ஷீக்களை நாமே தயாரித்தால் என்ன என யோசித்து ஒரு தொழிற்சாலையை லீசுக்கு எடுத்து ஒரு சுயபோக சுபதினத்தில் துவங்கினார். 100 தொழிலாளிகள் வரை வேலைக்கு அமர்த்தினார்.

கணக்கு () வேலைகள் பார்க்க எங்கள் நிறுவனத்தை அமர்த்தினார். மாதம் இரண்டு முறை அல்லது மூன்று முறை அந்த நிறுவனத்திற்கு போய்வந்தேன். அப்பொழுது அந்த‌ சிறு முதலாளி அதுவும் புது முதலாளி காட்டிய பந்தா இருக்கிறதே! தாங்கமுடியவில்லை! பொதுவாக நான் பார்த்த வரையில் தொழில் துவங்குகிற‌ பொழுது, சிறுமுதலாளிகள் கொஞ்சம் சிநேகமாய் பழகுவார்கள்.  தொழில் வளர வளர நெருக்கத்தை குறைந்து கொண்டே வருவார்கள். ஆனால், இவரோ துவக்கத்திலேயே செய்த பந்தா கொஞ்சம் ஓவராய் இருந்தது.

துவக்கத்தில் சில மாதிரிகள் தயாரித்து ஐரோப்பாவில் இரண்டு நாடுகளுக்கு அனுப்பி வைத்தார். மீண்டும், இன்னும் சில மாதிரிகள் அனுப்ப சொன்னார்கள். அனுப்பினார்.  பொருளாதார மந்தத்தினால், பல நாடுகள் தள்ளாட, அவர் எதிர்ப்பார்த்த ஆர்டர்கள் வரவில்லை. 

கையில் உள்ள முதலீடு குறைய, குறைய முகம் வாட ஆரம்பித்தது. தொழிலாளர்களை குறைத்துப் பார்த்தார். உள்ளூரில் ஏதேனும் 'லேபர் வேலை' எடுத்து செய்ய ஆரம்பித்தார். கட்டுபடியாகவில்லை.

வங்கி கடன் அவரை நெருக்கியது.  குடியிருந்த சொந்த வீட்டை அடைமானம் வைத்தார். பந்தா கொஞ்சம் கொஞ்சமாய் ஆவியாக ஆரம்பித்தது.

நானும் எங்கள் எம்.டியும் போகிற பொழுதெல்லாம், தன் துயரங்களை கொட்ட ஆரம்பித்தார். இன்னும் இரண்டு மாதங்களில் இரு ஆர்டர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பதாக சொல்லி, அந்த நிறுவனத்தில் பங்கு தாரராக இணைய சொல்லி கேட்டார். இல்லையில்லை. கெஞ்சினார். அடுத்த மாதத்திலிருந்து எங்கள் எம்.டி. வருவதை நிறுத்தினார்.

அடுத்த இரண்டு மாதத்தில் கவலை, துக்கம், சோகம் எல்லாம் சேர்ந்து, தாடி கூட வளர்க்க ஆரம்பித்தார்.  வீட்டை விற்றார்.  தங்கள் பிள்ளைகள் கூட தன்னை மதிப்பதில்லை என யாரிடமோ போனில் புலம்பிக்கொண்டிருந்தார்.

சரியாக ஒரு வருடம். எப்பொழுதும் போல், அங்கு போனால், நிறுவனம் மூடியிருந்தது. விசாரித்த பொழுது கடன்காரர்களின் நெருக்கடியால், முதலாளி தலைமறைவாகிவிட்டார் என்றார்கள்.

2 பின்னூட்டங்கள்:

அ. பாண்டியன் said...

சோகம் கலந்த குட்டிக்கதை. அருமை. தொடர வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி..

தோழர் வலிப்போக்கன் said...

துவக்கத்திலேயே செய்த பந்தா கொஞ்சம் ஓவராய் இருந்ததால்.......