> குருத்து: Fingertip (2019) தமிழ் வெப் சீரிஸ்

August 21, 2021

Fingertip (2019) தமிழ் வெப் சீரிஸ்


Fingertip (2019) தமிழ் வெப் சீரிஸ் – 5 அத்தியாயங்கள்

ஒவ்வொரு அத்தியாயமும் 35 நிமிடங்கள்.

முதல் கதை. கணவர் மனநல மருத்துவர். துணைவியார் ஒரு நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறார். இருவரும் தங்களது ’கனவு’ வீட்டை பெருங்கடனில் வாங்குகிறார்கள். துணைவியாருக்கு சமூக வலைத்தளங்களில் பெரும்புகழ் பெறவேண்டும் (Celebrity) என தீவிரமாக இயங்குகிறார். அதிகமான நேரத்தையும், பணத்தையும் அதிகமாக செலவு செய்கிறார். விளைவு?

இரண்டாவது கதை. ஓய்வுபெற்று வீட்டில் இருக்கிறார். இப்படித்தான் வாழவேண்டும் என்ற மதிப்பீடுகளில் தீவிரமாக வாழ்கிற ’பழைய’ ஆள். இதனால், ஒருமுறை சண்டை வந்து, மகனே தன் குடும்பத்துடன் கொஞ்சம் தள்ளியே வாழ்கிறார். ஒருநாள் சாலையில் வந்துகொண்டிருந்த பொழுது, வேகமாக வண்டியில் வந்து, ஒரு பெரியவரை இடித்துத் தள்ளி, இழிவாகவும் திட்டிய ஒரு இளைஞனை இவர் ’தட்டிக்கேட்க’ அவன் சமூக வலைத்தளங்களில் அவரைப் பற்றி தவறான செய்தியை பரப்ப, அது வைரலாகிறது. விளைவு?
மூன்றாவது கதை. ஒரு பெண்ணுக்கு வலைத்தளங்களில் நண்பனாகி, காதலனாகவும் ஆகிறான் ஒருவன். அவன் அந்த பெண்ணின் தோழியையும் ‘அடைய’ நினைக்கிறான். அந்த பெண்ணுக்கும் அவன் மீது ஈர்ப்பு இருக்கிறது. இதனால், அந்த பெண் அவள் தோழியைப் பற்றி ஒரு பொய்ச் செய்தியை பகிர்கிறாள். விளைவு?
நாலாவது கதை. டேட்டிங் ஆப் ஒன்றில் ஒரு பெண் தொடர்பு கொள்கிறாள். இவனுக்கு திருமணமாகி, ஒரு பையன் உண்டு. அதை மறைத்து, தான் வசதியானவன் என காட்டிக்கொள்கிறான். அடுத்தடுத்த சந்திப்புகளில் மெல்ல மெல்ல நெருங்குகிறான். விளைவு?
ஐந்தாவது கதை. உச்சத்தில் இருக்கிறான் நடிகன் ஒருவன். சமூக வலைத்தளங்களிலும் தன்னுடைய கருத்துக்களை தொடர்ந்து எழுதிவருகிறான். திடீரென ஒரு நாள் அவனுடைய செல்போனை ஹேக் செய்கிறார்கள். அவன் செல்லில் வைத்திருந்த ‘ரகசிய’ காணொளிகளை மெல்ல மெல்ல வெளியிடுகிறார்கள். பிறகு அவன் என்னவாகிறான்?
*****
ஐபோனை அதன் முதலாளி முதன்முதலில் அறிமுகப்படுத்தும் பொழுது, இது ஒரு ”மேஜிக் பொருள்” என்றார். முன்பு கொக்கெயினை அப்படித்தான் சொன்னார்களாம். அப்படி ஒரு மேஜிக் பொருளை அரசியல் ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் பின் தங்கியுள்ள சமூகத்தில் வந்து இறங்கினால் என்ன ஆகும்? தினம் தினம் வரும் செய்திகளே அதற்கு உதாரணங்களாகின்றன.
முந்தாநாள், நேப்பியார் பாலத்தில் இரவில் செல்பி எடுக்கும் பொழுது, அந்த இளைஞர் கூவத்தில் விழ, கழுத்தளவு நீரில் இருந்துகொண்டு காலை வரை “காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள்” என கத்திக்கொண்டே இருந்திருக்கிறார். பிறகு தீயணைப்புத் துறை காப்பாற்றியிருக்கிறது. இப்படி தினந்தோறும் செல்போனை வைத்து, பல பல செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. இப்படி பல கதைகளில் ஐந்து கதைகளை எடுத்து பேசியிருப்பது சிறப்பு.
என்ன விசயம் இன்று வைரலாகவேண்டும் என்பது வரை தொடர்ந்து பல கட்சிகளும் கவனமாக வேலை செய்கிறார்கள். அதில் பொய்ச்செய்திகளை தொடர்ந்து பரப்பி கலவரங்களை உண்டாக்கி, தன்னை எதிர்ப்பவர்களை எல்லாம் அவதூறுகளால் எதிர்கொள்ளும் ஒரு கட்சி தான் மத்தியிலும் சில மாநிலங்களிலும் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள். மக்கள் கவனமாக இருக்கவேண்டிய காலமிது.
இயக்குநர் விஷ்ணுவர்த்தன் தயாரித்திருக்கிறார். இந்த சீரிசில் அக்சராஹாசன், சுனைனா, காயத்ரி, அஸ்வின் என பலரும் நடித்திருக்கிறார்கள். இதில் அக்சாராவை தான் விளம்பரத்தில் முதன்மைப்படுத்தியிருக்கிறார்கள். ”என்னப்போய் சீரிஸில் நடிக்க வைச்சிட்டிங்களே” என்கிற ரீதியில் நடித்திருக்கிறார். மற்றவர்கள் நன்றாக பொருந்தியிருக்கிறார்கள்.
உச்ச நடிகர் செய்தது எல்லாம் அயோக்கியத்தனம். அவன் மீது பரிதாபம் வருவது போல காட்சிகள் வைத்திருப்பதும் சரியில்லை. அதே போல தான் செய்த அயோக்கியத்தனமான காரியங்களை எல்லாம் தன் செல்போனில் வைத்திருப்பான் என்பதும் நம்பும்படி இல்லை.
பார்க்கவேண்டிய சீரிஸ். Zee5 சானலில் இருக்கிறது. பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: