> குருத்து: Biutiful (2010) Psychological drama படம்

August 21, 2021

Biutiful (2010) Psychological drama படம்



 ”Amores Perros”, “Revenant” ஆகிய புகழ்பெற்ற படங்களை இயக்கிய இயக்குநர் தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.


கதை ஸ்பெயினில் நடக்கிறது. பெரிய நிறுவனங்களின் பெயரில் தயாரிக்கும் கைப்பை, பெல்ட் போன்ற ’போலி’ பொருட்களை, கருப்பினத்தைச் சார்ந்த அகதிகளான இளைஞர்கள் நகரத்து பிரதான வீதிகளில் விற்கிறார்கள். வருமானம் போதாமல் போதை பொருட்களும் விற்கிறார்கள். போலீசு லஞ்சம் வாங்கிக்கொண்டாலும் ‘தொந்தரவு’ செய்கிறது. அந்த நிறுவனத்திற்கும், அந்த இளைஞர்களுக்கும், போலீசுக்கும் இடைத்தரகனாக இருக்கிறான் நாயகன். இறந்தவர்களின் “ஆவி”யோடு பேசி, அவர்களுடைய தேவையை அவர்களுடைய சொந்தங்களிடம் தெரிவிக்கிறான்.


தன் துணைவியாருடான பிணக்கில், பன்னிரெண்டு வயது பெண்ணுடன், ஏழு வயது பையனுடன் அந்த சின்னஞ்சிறு அபார்ட்மெண்ட் வீட்டில் வாழ்கிறான். துணைவியாருக்கு ’பைபோலர்’ பிரச்சனையும் இருக்கிறது. வாரம் ஒருமுறை பிள்ளைகளைச் சந்தித்துவிட்டு செல்கிறாள்.


இதற்கிடையில் அவனுக்கு புற்று நோய் பாதித்து, மருத்துவம் பார்க்காமல், கண்டுகொள்ளாமல் விட்டு, ஆபத்தான நிலைக்கு வந்துவிடுகிறான். அதிகப்பட்சம் இன்னும் இரண்டு மாதம் உயிர்வாழமுடியும் என மருத்துவர் சொல்லிவிடுகிறார்.

வயிற்றில் இருக்கும் பொழுதே, அவனின் அப்பா பிரிந்து சென்றுவிடுகிறார். அம்மாவும் சின்னஞ்சிறு வயதில் இறந்துவிடுகிறார். தன் நிலை தன் பிள்ளைகளுக்கும் வருவதை அவனால் தாங்க முடியவில்லை. அவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என நினைக்கிறான். பிறகு என்ன ஆனது என்பதை இயல்பாகவும், அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
****

”Amores Perros”, “Revenant” ஆகிய புகழ்பெற்ற படங்களை இயக்கிய இயக்குநர் தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். தன் அப்பாவிற்கு இந்தப் படத்தை சமர்ப்பித்திருக்கிறார்.

படத்தில் சட்டத்திற்கு புறம்பாக சீன அகதிகளை கொண்டு கட்டிட வேலையை வாங்குவார்கள். அவர்களை அந்த கடுங்குளிரில் ஒரு குடவுனில் தங்க வைத்திருப்பார்கள். நாயகன் தன் தேவைக்காக காசை மிச்சப்படுத்துகிறேன் என மலிவான ஹீட்டர்களை வாங்கித் தந்து, அது சிக்கலாகி, 25 பேர் செத்துப்போவார்கள். உலகமயமாக்க சூழலில் இந்த சூழல் தான் நச்சு சூழலாக இருக்கிறது. இந்திய ஒன்றியத்தில் தமிழக தொழிலாளர்களில் பலருக்கே தொழிலாளர்கள் உரிமை என்ன இருக்கிறது என தெரியாது. இப்பொழுது இந்தியாவின் வடக்கு, வட கிழக்கு பகுதிகளில் கூட்டம் கூட்டமாக இங்கு வந்து வேலை செய்கிறார்கள். குறைவான கூலியும், உரிமைகள் ஏதுமற்றும் தான் இங்கு வேலை செய்துவருகிறார்கள். தன்னால் இத்தனை உயிர் செத்துப்போனதே என குற்ற உணர்வில் நடுங்கிப்போவான். ஆனால், நம்முன் நடக்கும் அத்தனை அநீதிகளையும் எதையும் நம்மை அசைக்காமல், வேடிக்கைப் பார்த்தப்படியே மெளனமாய் நம்மில் பலர் கடந்து செல்கிறோம். இந்தச் சூழல் தான் இன்னும் கொடியது.

’No country for old men’ படத்தில் பதைபதைக்க வைத்த கொலைகாரன், இந்தப் படத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பனாய் வருகிறார் Javier Bardem. வியந்துப் பார்க்க வைக்கிறார். அவருடைய மற்ற படங்களை பார்க்க தூண்டியுள்ளார்.

படம் நிறைய விருதுகளைப் பெற்றிருக்கிறது. ‘American Beauty’ என ஒரு படம். ஆனால், அமெரிக்க குடும்பங்கள் எத்தனை சிக்கல்களுடன் வாழ்கிறது என்பதை அழுத்தமாக சொல்லியப்படம். படத்தில் தன் மகனுக்கு ’Beautiful’ என சொல்லித்தரும் பொழுது “Biutiful” என எழுதிக் காண்பிப்பான். உலகம் எப்பொழுதும் இரண்டாகத் தானே இயங்குகிறது. அப்பொழுது ‘அழகும்’ அப்படித்தான்!

நல்லப்படம் பாருங்கள். இப்போதைக்கு எந்த ஓடிடி தளத்திலும் இல்லை. ஒன்றிரண்டு அடல்ட் காட்சிகள் இருப்பதால், குடும்பத்தோடு பார்க்க வாய்ப்பில்லை.

0 பின்னூட்டங்கள்: