> குருத்து: ”நாங்கள் எடுத்த இந்திப் படத்தை மும்பையில் வெளியிட சிவசேனா தடுத்தது!”

August 6, 2021

”நாங்கள் எடுத்த இந்திப் படத்தை மும்பையில் வெளியிட சிவசேனா தடுத்தது!”

 



விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு சரிசெய்தோம்!”

- ஏவி.எம்.குமரன்

”ஒரு படத்தை தமிழில் எடுத்து, வெற்றி பெற்றுவிட்டால்… அப்பா அந்த படத்திற்கு வரக்கூடிய பத்திரிக்கை விமர்சனங்களை எல்லாம் தொகுத்து ஒரு ஆல்பமாக்கிவிடுவார். அதில் சொல்லப்பட்ட குறைகளை களைந்து தெலுங்கில் எடுப்போம். அங்கும் வெற்றி பெற்றுவிட்டால், அங்கு வரக்கூடிய விமர்சனங்களை தொகுத்து அதை இந்தியில் சரிசெய்வோம்.”

”களத்தூர் கண்ணாம்மாவில் ”ஆடாத மனமும் ஆடுதே” பாடல் உருவாக்கத்தில் இருந்தேன். அப்பொழுது புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஆர். சுதர்சனம். சில டூயூன்களை போட்டுக் காண்பித்தார். திருப்தியாக இல்லை. என்னையும் அழைத்துக்கொண்டு அண்ணா சாலையில் உள்ள இப்ராஹிம் கடைக்கு போனார். ஏன் இப்படி அழைத்து வந்திருக்கிறார் என எனக்கு ஆச்சர்யம். இந்தியில் புகழ்பெற்ற சில இசையமைப்பாளர்களின் காதல் பாடல்களை கேட்டார். சிலவற்றை வாங்கியும் கொண்டார். மீண்டும் ஸ்டுடியோவிற்கு வந்து அதில் ஒரு பாடலை தேர்ந்தெடுத்தார். ”ஏன் இந்தி? நாமே உருவாக்கலாமே? என்றேன். இந்தி பாடலே என தெரியாத அளவிற்கு நான் உருவாக்கி தருகிறேன் என அந்த பாடலைத் தழுவி உருவாக்கித் தந்த பாடலே ”ஆடாத மனமும் ஆடுதே” பாடல்!”

ஜெய்சங்கர் மகள்களாக குட்டி பத்மினி இரட்டை வேடத்தில் நடித்த “குழந்தையும் தெய்வமும்” படம் தமிழில் எடுத்து பெரிய வெற்றி பெற்று, தெலுங்கில் நாங்களே எடுத்து வெற்றி பெற்று, இந்தியிலும் நாங்கள் எடுத்தோம். அந்த சமயத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழ்நாட்டில் கடுமையாக இருந்தது. மும்பையில் சிவசேனா தலைவன் பால்தாக்கரே படத்தை வெளியிட விடாமல் தடுத்தான். தமிழ்நாட்டில் இந்தி படம் ஓடினால் தான், இங்கு அனுமதிப்பேன் என்றான். அண்ணாத்துரை அவர்களைப் அணுகினோம். இரண்டு நாளில் ஆலோசனை சொல்வதாக சொன்னார். அப்பொழுது போலீஸ் ஐ.ஜியாக இருந்தவர் பரமகுரு. அவர் மூலமாக ஆலோசனை வந்தது. ஆவடி பகுதியில் பீரங்கி தொழிற்சாலை இருந்ததால், இந்தி பேசுபவர்கள் அதிகம். அங்கு ரத்னா திரையங்கு இருந்தது. அங்கு நாங்கள் எடுத்த பழைய இந்திப் படத்தைப் போட்டோம். நாங்களே திரை துணை நடிகர்களை வரவழைத்தோம். ரசித்துப் பார்ப்பதாக செட்டப் செய்தோம். அதை புகைப்படங்கள் எடுத்தோம். பத்திரிக்கையில் செய்தியாக சின்னதாய் வரவழைத்தோம். அவற்றைக்கொண்டு போய், பால்தாக்கரேயிடம் கொடுத்தோம். “சிவசேனாவின் ஆசியுடன்” என படத்தை வெளியிட சொன்னான். பிறகு வெளியிட்டோம். 100 நாட்கள் ஓடியது.

“களத்தூர் கண்ணாம்மாவில் ஒரு குட்டிப்பையன் தேவைப்பட்டான். கமலை அழைத்துவந்தார்கள். நான்கு வயது. கட்டப்பொம்மன் படத்தில் வரும் “வயலுக்கு வந்தாயா” வசனத்தை பேசிக்காண்பித்தான். அறிமுகப்படுத்தினோம். அதில் வரும் ”அம்மாவும் நீயே!” பாடல், 4.5 நிமிட பாடல் கமலுக்கு இருந்தது. இயக்குநர் ஒன்றரை நிமிடமாக குறைத்தார். கேட்டால், அந்தப் படத்தை காதல் படமாக கொண்டு செல்ல இயக்குநர் பிரகாஷ் ராவ் விரும்பினார். அப்பாவிற்கு குடும்ப படமாக கொண்டு செல்ல விரும்பினார். விளைவு பாதியிலிருந்து இயக்குநர் பீம்சிங் பொறுப்பேற்றார். படத்தில் 4.5 நிமிட பாடல் மீண்டும் எடுக்கப்பட்டது.

”எங்கள் படங்களுக்கு வேலை செய்த 25க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களுடன் வேலை செய்துள்ளேன். அதில் முக்கியமானவர் எம்.எஸ். விஸ்வநாதன். குழந்தை மனம் படைத்தவர்”

”அன்பே வா துவக்கத்தில் சின்னப்படமாக இருந்தது. அதில் ஜெய்சங்கரை வைத்து எடுக்க திட்டமிட்டோம். எம்.ஜி.ஆரை கேட்கலாம் என முடிவெடுத்த பொழுது, அது பெரிய படமாக மாறியது. எம்.எஸ்.வி எதுவென்றாலும் எம்.ஜி.ஆரிடம் கேட்டு செய்யுங்கள். இல்லையெனில் சிக்கலாகிவிடும் என பயமுறுத்தினார். ஆகையால், பாடல்களை ஓகே செய்து, பதிவு செய்வதற்கு முன்பு, எம்.ஜி.ஆரிடம் கேட்டோம். ”உங்கள் படங்களில் பாடல்கள் எல்லாம் அருமையாக தானே இருக்கின்றன. அப்பா கேட்டுவிட்டாரா? அப்படியென்றால் பதிவு செய்யுங்கள்” என்றார். முழு படத்திற்கும் அருமையான ஒத்துழைப்பு கொடுத்தார்.”

- ஏவி.எம். குமரனின் டூரிங் டாக்கீஸ் பேட்டியிலிருந்து சில துளிகள்!

0 பின்னூட்டங்கள்: