> குருத்து: Under the Dome (2013 -2015)

August 4, 2021

Under the Dome (2013 -2015)




3 சீசன்ஸ் ஒவ்வொரு சீசனும் 13 அத்தியாயங்கள்

ஒவ்வொரு அத்தியாயமும் 35 நிமிடங்கள்.

அமெரிக்காவில் ஒரு சிறு நகரத்தின் பெரும்பகுதியை உயரமான ஒரு அடர்த்தியான பொருளால் ஆன ஒரு டூம் திடீரென மூடிவிடுகிறது. அந்த டூம் கண்ணாடி போல இருப்பதால், உள்ளிருப்பவர்களை வெளியே இருப்பவர்களாலும், வெளியே இருப்பவர்களை உள்ளே இருப்பவர்களாலும் பார்க்க முடிகிறது. ஆனால், உள்ளிருப்பவர்கள் வெளியேவோ, வெளியே இருப்பவர்கள் உள்ளேயோ நுழைய முடியாது. அந்த ஊர்க்காரர்கள், வெளிமாகாணங்களிலிருந்து வந்தவர்கள் என 2000 பேருக்கு மேலாக மாட்டிக்கொள்கிறார்கள்.

உள்ளே உள்ள மக்கள் செத்துப்போனால் கூட பரவாயில்லை என அந்த டூமை அழிக்க அரசு அணுகுண்டை வீசிப்பார்க்கிறது. எதுவுமே ஆகாமல் அது உறுதியாக நிற்கிறது. அரசு குழம்பிபோகிறது. மூடப்பட்டதால் மக்கள் குழம்பி போகிறார்கள். பதட்டமாகிறார்கள். வெளி உலக தொடர்பு இல்லாததால், தண்ணீர், உணவு, காலநிலை மாற்றம் என ஒவ்வொன்றாக பிரச்சனையாக எழுகிறது. எல்லோரும் ஒன்றாக இணைந்து எதிர்கொள்வோம் என எதிர்கொள்கிறார்கள். அதில் பல சவால்களை எதிர்கொள்கிறார்கள்.

காட்டில் ஒரு இடத்தில் ஒரு முட்டை கிடைக்கிறது. அந்த முட்டை தான் அந்த டூமின் இதயம் போன்றது என புரிந்துகொள்கிறார்கள். அந்த முட்டையை ஆய்வு செய்கிறார்கள். அந்த சூழலை தமக்கு சாதகமாக சிலர் மாற்றிக்கொள்ளப் பார்க்கிறார்கள். அந்த டூமில் நிறைய சோதனைகள் வருகின்றன. அந்த டூம் உடைந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறினார்களா? அல்லது உள்ளேயே செத்துப் போனார்களா? என்பதை விரிவாக சொல்லியிருக்கிறார்கள்.
****

அமெரிக்க சீரிஸில் நான் பார்த்த மூன்றாவது சீரிஸ் இது. தொலைக்காட்சி தொடர்களாக வெளிவந்திருக்கின்றன. ”ஸ்டீபன் கிங்” எழுத்தாளர் எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள். நிறைய கற்பனை, கொஞ்சம் அறிவியல் என எழுதி இருக்கிறார். நம்மூர் எழுத்தாளர் சுஜாதா போல!

முதல் சீசன் மிக சுறுசுறுப்பாக செல்கிறது. இரண்டாவது சீசன் சுறுசுறுப்பாக செல்கிறது. மூன்றாவது சீசன் எங்கெங்கோ இழுத்து சென்று முடிவு தெரியவேண்டுமே என்பதற்காக பார்க்க வேண்டியிருக்கிறது. எதற்கும் இருக்கட்டும் என நாலாவது சீசனுக்கான ஒரு வாய்ப்பை தந்து முடித்திருக்கிறார்கள். ஆனால் இன்னும் அதற்கான அறிவிப்பு வரவில்லை. மூன்றாவது சீசனே சுமாராக இருப்பதால் நாலாவது சீசனுக்கு வாய்ப்பில்லாமல் போயிருக்கும் என கருதுகிறேன்.

முன்னாள் இராணுவ வீரன், ஒரு பெண் பத்திரிக்கையாளர், ஒரு இளம் ஜோடிகள், ஒரு அரசியல்வாதி, உள்ளூர் போலீஸ் என கலவையான மனிதர்கள். காதல், அதிகாரம், நட்பு, துரோகம் என கலவையான உணர்வுகளோடு செல்கிறது. எல்லா பாத்திரங்களும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

நல்ல தமிழில் டப் செய்திருக்கிறார்கள். MX Playerல் இருக்கிறது. பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: