> குருத்து: A Bittersweet Life (2005) தென்கொரியா

August 13, 2021

A Bittersweet Life (2005) தென்கொரியா

 



'I saw the Devil' இயக்கிய Kim Jee-woon இயக்குநரின் இன்னொரு படம்.

“ஒரு ஸென் குருவிடம் சீடன் கேட்கிறான் – ‘இலைகள் தானாக அசைகின்றனவா, அல்லது அது காற்றினால் நடக்கிறதா?’

குரு சொல்கிறார் – ’அசைவது இலையோ காற்றோ இல்லை. உனது இதயமும் மனதும்தான்’.”

- படத்தின் துவக்க வரிகளிலிருந்து….
****

நாயகன் ஒரு பெரிய தொழில் அதிபரிடம் மிகவும் விசுவாசமான அடியாளாக ஏழு வருடங்களாக வேலை செய்துவருகிறான். மூன்று நாட்கள் வெளிநாடு செல்லும் முதலாளி, அவனின் விசுவாசத்தை நம்பி, ஒரு ’பொறுப்பான’ வேலையை ஒப்படைக்கிறான். தனக்கு ஒரு இளவயது காதலி இருப்பதாகவும், அவள் இப்பொழுது ஒரு இளைஞனை காதலிப்பதற்கான அறிகுறிகள் தெரிவதாக சொல்கிறான். ”ஊருக்கு போய்விட்டு வருவதற்குள், அவளை பின்தொடர்ந்து காதலன் இருப்பதை கண்டுபிடி! அப்படி இருப்பதாக தெரிந்தால், இருவரையும் நீயே கொலை செய்துவிடு” என்கிறான்.

அவளை பின்தொடர்கிறான். அவளின் சின்ன சின்ன செய்கைகள் இவனுக்குள் எதோ செய்கிறது. அவள் ‘செல்லோ’ கருவி வாசிக்கும் பொழுது அந்த இசை அவனை என்னவோ செய்கிறது.

பின்தொடர்ந்து வேவு பார்த்ததில் காதலன் இருப்பதை கண்டுபிடிக்கிறான். அவனை அடித்து துவைக்கிறான். முதலாளியிடம் சொல்லி அவர்களை கொன்றுவிடலாம் என போனை எடுக்கும் பொழுது, மனதில் மெல்லிய தயக்கம் வருகிறது. கடைசி நேரத்தில் ”இனி இருவரும் சந்திக்கவே கூடாது” என எச்சரித்துவிட்டு நகருகிறான்.

ஊரிலிருந்து முதலாளி வருகிறான். அவனுக்கு நடந்த விசயங்கள் தெரியவருகின்றன. தன் உத்தரவை மீறி, நம்பகத்தன்மையை உடைத்துவிட்டான். தன்னை அவமதித்துவிட்டான் என கோபம் கொள்கிறான். அவனை உயிரோடு புதைக்க சொல்கிறான்.

பிறகு என்ன ஆனது என்பதை உணர்வுபூர்வமாகவும், பர பர சண்டைக்காட்சிகளுடன் சொல்லுகிறார்கள்.
***

சண்டைப் படமாக இருந்தாலும், உணர்வுபூர்வமாகவும் எடுப்பதில் கொரியாக்காரர்கள் கில்லாடிகள் என்பதை இந்த படம் மூலமாகவும் நிரூபித்திருக்கிறார்கள். நாயகனுக்குள் நடந்த மாஜிக் என்ன? என்பதை அவன் வாய்விட்டு சொல்லவே மாட்டான். அவளிடம் வெளிப்படுத்தவும் மாட்டான். சின்ன சின்ன காட்சிகள் மூலம் இயக்குநர் நம்மை உணர வைத்திருப்பார். அழகு.

நாம் சந்திக்கிற மனிதர்கள் நம்மை மாற்றும் சக்தி படைத்தவர்கள் என ”வாழ்” படத்தில் சொல்லியிருப்பார்கள். உண்மை தான்.

மற்றபடி, நடிப்பு, இசை, ஒளிப்பதிவு எல்லாம் கதைக்கு அழகு சேர்க்கின்றன. பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.
****

”ஓர் நாள், சிஷ்யன் திடீரென அழுதுகொண்டே தூக்கத்திலிருந்து கண்விழிக்கிறான். ஸென் குரு அவனிடம் பேசுகிறார்.

’கெட்ட கனவு எதாவது கண்டாயா?’

‘இல்லை’

’சோகமான கனவு ஏதேனும் கண்டாயா?’

’இல்லை… நான் கண்டது மிகவும் சந்தோஷமான கனவு’

‘பிறகு ஏன் அழுகிறாய்?’

சிஷ்யன் கண்ணீரை அமைதியாகத் துடைத்துக்கொண்டே சொல்கிறான் – ‘ஏனெனில், நான் கண்ட கனவு ஒருபோதும் நிஜமாகாது என்பதால்தான்’.

- இந்த வரிகளோடு படம் நிறைவுடைகிறது.

படத்தின் வாசகங்களுக்கு என்ன அர்த்தம் என தேடிப்பார்த்தேன். it has some happy aspects and some sad ones.

#நன்றி : இரண்டு ஸென் வாசகங்களையும் மொழிபெயர்த்து தந்த கருந்தேள் ராஜேஷ்க்கு நன்றி.

0 பின்னூட்டங்கள்: