கதை. நாயகன் ஒரு டாக்சி ஓட்டுனர். சைனா, வடகொரியா, ரஷ்யா ஆகியவை சந்திக்கும் இடம் யான்பியான். சைனாவின் பகுதியில் இருக்கிற பகுதி. பெரும்பாலும் கொரியர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் பாதிபேருக்கும் மேலாக கடத்தலில் ஈடுபடுபவர்கள். பலர் சட்டத்திற்கு புறம்பாக தென்கொரியாவிற்கு போய் வேலை செய்பவர்கள்.
நாயகன் தன் துணைவியாரை கடனை வாங்கி தென்கொரியாவிற்கு வேலைக்கு அனுப்பி வைக்கிறான். இவர்களுக்கு இருக்கும் ஒரு குட்டிப்பெண்ணை நாயகனின் அம்மா பொறுப்பில் விட்டிருக்கிறான்.. ஊருக்கு போன துணைவியாரிடமிருந்து எந்த தகவலும் இல்லை. அங்கு போய் வேறு யாருடனோ செட்டிலாகியிருப்பாள் என அவன் காதுபட பேசிக்கொள்கிறார்கள். வெறுப்பில் சம்பாதித்த பணத்தை சூதாடுவதும், குடிப்பதுமாக வாழ்க்கையை ஓட்டுவதுமாக இருக்கிறான்.
கடனை வாங்குகிறவர்கள் மிரட்டுகிறார்கள். ஒரு மாபியா ஆள் ”தென்கொரியா போய் ஒரு ஆளை போட்டுத்தள்ளிவிட்டு, அந்த ஆளுடைய கட்டைவிரலை எடுத்துவிட்டு வா! பெரிய தொகை தருகிறேன்!” என்கிறான். முதலில் யோசிக்கும் நாயகன், போனால், பொண்டாட்டியை தேடலாம். கடனையும் அடைத்துவிடலாம் என ஏற்றுக்கொள்கிறான். சட்டத்திற்கு புறம்பான வழியில் போய் சேர்கிறான். பத்தே நாள். ஒரு கொலை செய்யவேண்டும். பொண்டாட்டியை தேடவேண்டும். பொண்டாட்டியை இருக்கும் இடம் தேடி போய்விடுகிறான். அந்த ஆளை கொல்வதற்கு எல்லா திட்டமும் போட்டுவிடுகிறான்.
அதற்கு பிறகு நடப்பது எல்லாம், திருப்புமுனைகள். ரத்தக்களறி தான்!
****
நிலவுகிற முதலாளித்துவ சமூகத்தில் குடும்பங்கள் ஒன்றாக வாழ்வது என்பதே மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இந்த ஊரடங்கில் ஒன்றை கவனித்தால், இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் வாழ்வாதாரத்திற்காக உலகம் முழுவதிலும் வேலைக்காக பரந்து கிடக்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது. எல்லா தரப்பு மக்களுக்குமே இது பொருந்தும்.
வட, வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் தங்கள் குடும்பங்களை விட்டுவிட்டுத்தான் பல லட்சம் மக்கள் இங்கு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தங்கள் சொந்த ஊர்களை விட்டு வரும் பொழுது அவர்கள் அனுபவிக்கிற பிரச்சனைகள் நிறைய. சமூக ஏற்றத்தாழ்வை சரி செய்யாமல், தனிநபர்கள், குடும்பங்களின் சிக்கலை சரி செய்யமுடியாது.
அப்படி ஒரு சாதாரண மனிதனின் கதையைத் தான் படம் பேசுகிறது. அதில் அவன் என்னென்ன சிக்கல்களை எதிர்கொள்கிறான். இறுதியில் என்ன ஆயிற்று? என்பது அதிரடியாகவும், உணர்வுபூர்வமாகவும் பேசுகிறார்கள்.
இடைவேளை வரை இயல்பாக போகிற படம். பிறகு இயல்புக்கு மீறி போகிறது. கொரியாக்காரர்களுக்கு துப்பாக்கியை விட, கோடாலி பிடித்தமானதாக இருக்கிறது. ஆகையால் ரத்தம் படம் பார்க்கும் நம்மீதும் தெறிக்கிறது. குடும்பத்தோடு பார்க்க வாய்ப்பில்லை.
நல்லபடம். பாருங்கள்.
- 20, டிசம் 2020 முகநூலில்...
0 பின்னூட்டங்கள்:
Post a Comment