> குருத்து: Hush (2016) Hunting Movie

January 18, 2021

Hush (2016) Hunting Movie


கதை. ஒரு அமைதியான காட்டுப்பகுதியில் தனித்திருக்கும் வீடு. நாயகி ஒர் இளம் எழுத்தாளர். தன்னுடைய அடுத்த புத்தகம் எழுதுவதற்கான முனைப்பில் இருக்கிறார். 13 வயதில் ஏற்பட்ட உடல்நலக்குறைபாடு காரணமாக அவளுக்கு காது கேட்கும் திறனும், பேசுகிற ஆற்றலையும் இழந்தவள்.


அவளிடம் புத்தகம் வாங்கி படித்துவிட்டு, அவளிடம் இயல்பாக பேசிவிட்டு செல்கிறாள் அவளுடைய தோழி. கொஞ்ச நேரத்தில் அவள் தலைதெறிக்க வீட்டை நோக்கி ஓடி வருகிறாள். ஒரு சைக்கோ கொலைகாரன் விரட்டி வந்து அவளை கொல்கிறான். நாயகியையும் கொல்லப் பார்க்கிறான். கையில் செல் இல்லை. வீட்டிற்கு வருகிற மின்சாரத்தையும் வெட்டிவிடுகிறான்.

கொலைகாரனிடமிருந்து தப்பித்தாளா என்பது தான் முழு நீளக்கதை.

****

ஒதுக்குப்புறமான ஒரு காட்டுப்பகுதியில் தனித்திருக்கும் வீடு. அங்கு நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ வசிக்க வரும் ஒரு குடும்பம் அல்லது சில நபர்கள். அவர்கள் எதிர்கொள்ளும் அசாதாரண சம்பவங்கள் தான் படம். இப்படிப்பட்ட படங்களை ‘Cabin in the Woods’ என வகைப்படுத்துவார்கள். அப்படிப்பட்ட படங்களில் விறுவிறுப்பான படம் தான் இந்தப்படம்.

படத்தில் அவன் ஏன் கொல்ல துடிக்கிறான்? என்ற விளக்கத்திற்குள் இயக்குநர் போகவேயில்லை. நேரடியாக கதைக்கு வந்துவிடுகிறார். அதனாலேயே படத்தை ஒன்றரை மணிநேரத்திற்குள் முடித்தும் விடுகிறார்.

நமக்கு என்ன சந்தேகம்னா? அமெரிக்கா வீதிகளில் செல்லும் பொழுது, அதுவும் தனியாக செல்லும் பொழுது கவனமாக இருக்கவேண்டும். 10 டாலருக்காக கூட நீங்கள் கொல்லப்படலாம் என்பது தான் யதார்த்த நிலை என்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது, ஒரு காட்டுப்பகுதியில், ஒரு பெண் மட்டும் தனித்திருக்கமுடியுமா? அப்படி இருக்கவேண்டும் என்ற சூழலில் எவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கவேண்டும்? இந்த கேள்விகளுக்குள் எல்லாம் செல்லாமல், பார்த்தால், விறுவிறுப்பான படம் தான்.

படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்கள் இருவர் தான். இருவரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். நேரம் நிறைய இருந்தால் பாருங்கள். நெட்பிளிக்சில் இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள்.

- 26 நவம் 2020 முகநூலில்...

0 பின்னூட்டங்கள்: