
தனது டெஸ்க்கை விட்டு நகர மறுக்கிற, அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் தரும் செய்திகளை, கொஞ்சம்கூட உறுதிப்படுத்தாமல், அப்படியே வாந்தி எடுக்கிற பத்திரிக்கையாளர்கள் இங்கு அதிகம்.
மக்களூடைய ஜீவாதாரமான பிரச்சனைகளை, அதன் காரண, காரியங்களை அலச, ஆராய விரும்பாத, ஆனால் பிரேமனந்தா, கன்னடபிரசாத், பத்மா - போன்ற 'செக்ஸ்' சம்பந்தமான விசயங்களை அலசி ஆராய்ந்து, தன் கற்பனை எல்லாம் கலந்து, சுவையாக, கிளுகிளுப்பாக தருகிற பத்திரிக்கையாளர்களும் இங்கு அதிகம்.
இந்தியாவில், நாலாவது தூண் பல பத்திரிக்கையாளர்களால் நிறைய அசிங்கப்பட்டு போயிருக்கிறது.
இந்த சூழ்நிலையில், 'சாய்நாத்' என்றொரு பத்திரிக்கையாளர் 'தி இந்து' (THE HINDU) நாளிதழில் 'கிராமப்புற செய்தி' (Rural affiars) சேகரிப்பாளராக, எடிட்டராக இருக்கிறார்.
புள்ளிவிவரங்களை சொல்லியே, இந்தியா முன்னேறுகிறது என்று பல அமைச்சர்கள் நம்மை குழப்பி, நம்ப வைக்க முயல்கிறார்கள்.'இந்தியா ஒளிர்கிறது', வருங்காலத்தில் வல்லரசாகப் போகிறது என்பவர்களின் முகத்தில் காறித்துப்புகிறது இவரது கட்டுரைகள் வெளிப்படுத்தும் உண்மைகள்.
பத்திரிக்கையாளர் சாய்நாத் அவர்கள் இந்தியாவின் பின்தங்கிய பல மாவட்டங்களுக்கு நேரிடையாக சென்று, விவசாயிகளின் வாழ்க்கையை, அவர்களின் பரிதாபமான தற்கொலைகளை, அதற்கான காரணங்களை ஆய்ந்து, சேகரித்து உலகுக்கு வெளிப்படுத்துகிறார்.
சமீபத்தில், அவருடைய மகத்தான சேவையை பாராட்டி, அவருக்கு 'மகசேசே' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே பி.டி. கோயங்கா விருது, பிரேம் பாட்டியா இதழியல் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
அவருக்கு உழைக்கும் மக்களின் சார்பாக, நாமும் நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வோம்.
பின்குறிப்பு : சமூகத்தை, அதன் உண்மை நிலையை அறிய சாய்நாத் அவர்களின் கட்டுரையைத் தேடி படியுங்கள்.