> குருத்து: April 2008

April 21, 2008

இன்று லெனின் பிறந்த நாள்



வாக்காளர்களாகிய பொதுமக்கள், தங்கள் பிரதிநிதிகள் அவர்களுடைய வேலைகளை செய்து முடிக்கும் திறமையுடையவர்களாக இருக்க வேண்டும் என கோரவெண்டும். அவர்கள்

லெனினைப் போல

அரசியல் ஊழியர்களாகப் பணியாற்ற வேண்டும்
தெளிவுடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும்

போராட்டத்தில் பயமின்றியும்,
மக்களின் பகைவர்களிடம் ஈவிரக்கமின்றியும் இருக்க வேண்டும்.

லெனினைப் போல

நிலைமை சிக்கலாகும் பொழுது, கிஞ்சித்தும் பீதியின்றியும்,
பீதியின் சாயலின்றியும் இருக்க வேண்டும்.

பரிபூரணமான விவரமான கண்ணோட்டமும், சாதகமானவற்றையும்
பாதகமானவற்றையும் விரிவான முறையில் சீர்தூக்கி பார்க்கும் திறமையும்,
தேவையாயிருக்கும் அளவுக்கு சிக்கலான பிரச்சனைகளைப் பற்றி முடிவு
செய்வதில் நுண்ணறிவும் தீர்க்கமாக ஆலோசனை செய்யும் சக்தியும்
பெற்றிருக்க வேண்டும்

லெனினைப் போல

ஒழுக்கமும், நேர்மையும் பெற்றிருக்க வேண்டும்
மக்களை நேசிக்க வேண்டும்

- ஸ்டாலின் - உரையிலிருந்து

April 19, 2008

விவசாய கடன் தள்ளுபடியும் தொடரும் விவசாயிகளின் தற்கொலைகளும்!



60 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி என மத்திய அரசு அறிவித்ததும், நிம்மதியடைகின்ற விவசாயிகளின் முகங்கள் நினைவில் வந்து போயின.

தள்ளுபடி அறிவிப்புக்கு பிறகு, "அறுவடை பண்டிகையான ஹோலியன்று மகாராஷ்டிரா அகோட் தாலுகாவில் மூன்று விவசாயிகள் விஷம் குடித்தும், தூக்கு மாட்டியும் தற்கொலை செய்து கொண்டனர்' என செய்திகளில் படித்ததும் அதிர்ச்சியாய் இருந்தது.

உண்மை நிலை என்ன என்று தேடினால்...

"5 ஏக்கர் வைத்திருப்பவர்களுக்கு தான் கடன் தள்ளுபடி. அதற்கு மேல் வைத்திருப்பவர்கள் 75% கடனை உடனடியாக திருப்பி செலுத்துபவர்களுக்கு மட்டும் தான் 25% கடன் தள்ளுபடியாம்."

இந்த நிபந்தனை படி, மகாராஷ்டிராவில் உள்ள 18 லடசம் பருத்தி விவசாயிகளுக்கு இந்த தள்ளுபடி கிடைக்காது. காரணம் அவர்களில் பெரும்பான்மையோர் 5 ஏக்கருக்கு மேல் வைத்திருக்கிறார்கள். எல்லாம் வானம் பார்த்த பூமி.

கடந்த டிசம்பர் 2007 வரை 18 லட்சம் பருத்தி விவசாயிகளில்.. 1 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். 16 மணி நேரத்திற்கு ஒரு தற்கொலை. நம் பாரத பிரதமர் ஆறுதல் சொல்லி வந்த பிறகு, 8 மணி நேரத்திற்கு ஒரு தற்கொலை.

75% கடனை கட்ட வக்கு இருந்திருந்தால், விவசாயிகள் தங்கள் உயிரை ஏன் மாய்த்துக் கொள்ள வேண்டும்? வங்கி கடன் தவிர பல கந்து வட்டிகாரர்களிடம் விவசாயிகள் மாட்டி தவிக்கிறார்கள். அதனால் தான் இன்றைக்கும் தற்கொலைகள் தொடர்கின்றன.

கடந்த வாரம் உத்திர பிரதேச அரசு தலைக்கு தடவும் ஒரு குறிப்பிட்ட 'ஹேர் டை' யை தடை செய்திருக்கிறது. இந்த ஹேர் டை-யை குடித்து தான் விவசாயிகள் செத்துப் போகிறார்களாம்.

கல்யாண மாப்பிள்ளை சீவும் சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்று போகும் என்பார்கள். அது இது தான்.

1991 லிருந்து புதிய தாரளமய தொழில் கொள்கைகள் இந்தியாவில் அமுலானதற்கு பிறகு தான், விவசாயம் புறக்கணிக்கப்பட்டு, விவசாயிகள் தற்கொலைகள் ஆரம்பித்தன என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். தினமும் வருகிற செய்திகள் அதை உறுதிப்படுத்துகின்றன.



நேற்று பன்னாட்டு முதலாளிகளுக்கு முன்பு, நம் பாரத பிரதமர்

"1991-ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் புதிய தாரளமய கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றைக்கும், அதற்கு பிறகு ஆட்சியில் இருந்த எல்லா மத்திய, மாநில அரசுகளும் இங்கு தொடங்கப்பட்ட எல்லா பன்னாட்டு நிறுவனங்களுக்கு எல்லாவித சலுகைகளும் தருகின்றன. எந்தவித குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்கின்றன. ஆகையால், மேலும் பல பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க வேண்டும்" என்கிறார்.

நம் விவசாயி ஏன் சாகின்றான்?

பன்னாட்டு நிறுவங்கள் ஏன் செழிக்கின்றன? - இப்பொழுது பளிச்சென புரிகிறது அல்லவா?

April 2, 2008

தமிழகத்தின் கோயபல்ஸ் ஜெயலலிதா



'கிருஷ்ணகிரி தண்டவாளத்தில் டெட்டனேட்டர் வெடிப்பு' என மார்ச் 31ல் செய்தி வெளியானதுமே, ஜெயலலிதா "நக்சலைட்டுகள், விடுதலைப்புலிகள் பெருகி விட்டார்கள்" என்ற தனது வழக்கமான கோயபல்சு பாணி பிரச்சாரத்தை எடுத்துவிட்டார்.

நடந்தது என்ன என்பதை, கீழே தொடர்ந்து படித்தால் புரியும்.

இதே மாதிரி தான், சில நாட்களுக்கு முன்பு, தர்மபுரி அதியமான் கோட்டையில், காவல் நிலையத்தில் (!) துப்பாக்கிகள் களவு போயின. உடனே, ஜெயலலிதா "நக்சலைட்டுகள் அட்டூழியம்" என்றார்.

தேடிப்பார்த்ததில், பக்கத்து தோட்டத்தில், பத்திரமாய் புதைத்து வைக்கப்பட்டிருந்தன.

(இதை ஒட்டி, நான் ஏற்கனவே ஒரு பதிவு போட்டிருக்கிறேன். படித்து பாருங்கள்.)

களவுக்கு பிறகு, அங்கு வேலை செய்த காவலர்களை ஊர் ஊராக கூட்டிக்கொண்டு போய், மூளை சோதனை செய்த கேலிக்கூத்து ஊர் அறியும்.

இப்படி தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்வது எதற்காக? எல்லாம் இழந்த ஆட்சியைப் பிடிப்பதற்காக!

ஏற்கனவே, இந்த அம்மா (இனிமேல் செல்லமாய் 'மம்மி' என அழைப்போம்) ராஜீவ் காந்தியின் ரத்தம் பட்டு உயிர்த்தெழுந்தது. 5 ஆண்டுகள் ஊரைக் கொள்ளையடித்து, ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியது.(1991-1996)

பிறகு, அதற்கான சக்தி இழந்து, 5 ஆண்டுகள் இதே மாதிரி பொய்களை, புளுகுகளை சொல்லி, புலம்பிக்கொண்டே இருந்தது.(1996-2001)



மக்கள் மம்மியின் ஆட்டத்தை மறந்து, தனது, வாக்கு சீட்டு என்னும் மந்திர புத்தகத்தால், 'மம்மியை' மீண்டும் உயிர்த்தெழ வைத்தார்கள்.

உயிர்த்தெழ வைத்த விவசாயிகளை, நெசவாளிகளை, மாணவர்களை, அரசு ஊழியர்களை அடித்து துவைத்தது. பல பேருடைய ரத்தம் குடித்தது.

மீண்டும், மக்கள் புதைக்குழிக்குள் தள்ளினார்கள்.

இப்பொழுது, மீண்டும் உயிர்தெழ, ஆட்சியை கைப்பற்ற, அடித்து வெளுக்க, பழைய பாணியை கடைப்பிடித்து, இது மாதிரி பொய்களையும், புளுகுகளையும் வாரி இறைத்துக்கொண்டு இருக்கிறது.


மக்களே ஜாக்கிரதையாய் இருங்கள். இனி ஒருமுறை, 'மம்மியை' உயிர்த்தெழ வைத்து விட்டீர்களெனில், பிறகு, புதைக்குழிக்குள் 'மம்மியை' தள்ள உங்களை உயிரோடு விட்டு வைக்காது.


கிருஷ்ணகிரி அருகே தண்டவாளத்தில் டெட்டனேட்டர் வெடிப்பு!
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 30, 2008


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே ரயில் தண்டவாளத்தில் டெட்டனேட்டர்கள் வெடித்தன. ரயிலைக் கவிழ்க்க நடந்த முயற்சியா இது என்று சந்தேகம் எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி ரயில் நிலையம் அருகே கிரிகேபள்ளி என்ற இடத்தில் ஒரு ரயில்வே கேட் உள்ளது. நேற்று இந்த வழியாக பாட்னா - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் வந்தது. ரயில், கிரிகேபள்ளி ரயில்வே கேட்டை தாண்டிச் சென்றதும், தண்டவாளத்தில் திடீரென பயங்கர சத்தம் கேட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கேட் கீப்பர் அங்கு சென்று பார்த்தார். அப்போது தண்டவாளத்தில் நீண்ட வயர்களுடன் 10 டெட்டனேட்டர்கள் ஒரு கம்பியால் கட்டப்பட்டு வெடித்த நிலையில் கிடந்ததைப் பார்த்து திடுக்கிட்டார்.

பத்து டெட்டனேட்டர்களில் 3 மட்டுமே வெடித்திருந்தது. தகவல் அறிந்ததும் மாவட்ட எஸ்.பி. தேன்மொழி உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இந்த டெட்டனேட்டர்கள் எப்படி இங்கு வந்தன. யார் இதைப் போட்டது என்று தெரியவில்லை. இது பாட்னா ரயிலைக் கவிழ்க்க நடந்த சதியாக இருக்கலாமோ என்ற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது.

டெட்டனேட்டர்களைக் கைப்பற்றி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

- இப்படி தமிழக செய்தி தாள்களில், செய்தி வந்தது.


அதற்கு, ஜெயலலிதா அளித்துள்ள பேட்டி

"விடுதலைப்புலிகள், தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகளின் நடமாட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதை மேலும், ஊர்ஜிதப்படுத்தும்விதமாக தற்போது கிருஷ்ணகிரி அருகே ரெயில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு நடந்திருக்கிறது.

இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதற்கு காரணமாக இருக்கும் தி.மு.க. அரசையும், தமிழக முதல் அமைச்சர் கருணாநிதிக்கும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

- தினத் தந்தி, மார்ச் 31, 2007

மறுநாள், எல்லா செய்தி தாள்களிலும் வந்த செய்தி

சென்னை, ஏப். 1: கிருஷ்ணகிரி அருகே ரெயில் தண்டவாளத்தில் டெட்டனேட்டர் வெடித்தது தொடர்பாக கல்குவாரி மேஸ்திரி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 3 ஜெல்லட்டின் குச்சிகள் டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
.
கிருஷ்ணகிரி மாவட்டம் படவனூர் ரெயில்வே கேட் அருகே கடந்த 29ந் தேதி காலை பாட்டான எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்ற போது ரெயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு போன்ற ஒன்று வெடித்தது. இது தொடர்பாக சேலம் உதவி ஸ்டேஷன் மாஸ்டர் ஜெயராமன் கொடுத்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசாரும், கியூ பிரிவு போலீசாரும் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் ரெயில் தண்டவாளத்தில் வெடித்தது டெட்டனேட்டர்கள் என்பது தெரியவந்தது.

இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சாமல்பட்டி கிராம நிர்வாக அதிகாரி ஏ. வெங்கட்ராமனிடம் அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் சரண் அடைந்தார். அவர் ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

போலீசாரிடம் பழனிசாமி அளித்த வாக்குமூலத்தில் அவர் கல்குவாரி ஒன்றில் மேஸ்திரியாக வேலை செய்வதாகவும், கல்குவாரியில் பயன்படுத்தப்படும் டெட்டனேட்டர்கள் சம்பவத்தன்று காலை ரெயில் தண்டவாளத்தை கடக்கும் போது தவறவிட்டுவிட்டதாகவும் அதுதான் ரெயில் சென்ற போது வெடித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து பழனிச்சாமியை ரெயில்வே போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து வெடிக்காத 3 ஜெல்லட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

- 1, ஏப்ரல் 2008 - மாலைசுடர்