> குருத்து: "என் பெயர் பிரேமா!" - ஒரு உண்மை கதை!

June 30, 2009

"என் பெயர் பிரேமா!" - ஒரு உண்மை கதை!


21 ஆம் நூற்றாண்டில் மனித சமூகம் அடியெடுத்து வைத்திருக்கும் இக்காலத்திலும், நவீன வாழ்க்கையின் அடையாளமாக எத்தனையோ வசதிகள் சகஜமாகிவிட்ட இச்சூழ்நிலையிலும் பெண்கள் தங்கள் தளைகளை அறுக்க முடியாமல் அடிமைகளாக நீடித்திருக்கும் நிலையே தொடர்கின்றது.

முக்கியமாக ஒரு பெண் தன் காதலை, திருமணத்தை, குடும்பத்தை, வேலையை, மொத்தத்தில் வாழ்வை தான் விரும்பியபடி தெரிவு செய்யும் சுதந்திரம் இல்லை. வேலைக்குச் சென்று தனது பொருளாதார சுயேச்சை நிலையை அடைந்திருக்கும் பெண்ணுக்குக் கூட முழுச் சுதந்திரத்தை இந்தச் சமூகம் கொடுத்து விடுவதில்லை.

- புதிய கலாச்சாரம், மே 2009

****

நண்பர் ஒருவருக்கு சாதி மறுப்பு திருமணம் செய்ய பெண் தேடிக்கொண்டிருக்கிறோம். (இந்த சாதி மறுப்பு திருமணம் செய்வதில், செய்து வைப்பதில் பலவித மலைகளை, தடைகளை கடந்தாக வேண்டும். அதை தனி ஒரு பதிவாக பின்னொரு நாளில் பதிவிடுகிறேன்.) இதற்காக திருமண வலைத்தளத்தில் பதிந்து வைத்திருந்தோம். கடந்த வாரம் தென் மாவட்டத்திலிருந்து ஒரு பெண் பேசினார். போனில் அழைத்து... போனில் பணம் இல்லை. அதனால், நீங்கள் அழையுங்கள் சொல்லி... கிட்டத்தட்ட 45 நிமிடம் பேசியிருக்கிறார். பேசியதின் சாரம் இது தான்.

என் பெயர் பிரேமா. பி.எஸ்.சி படிச்சிருக்கேன். வயது 32. கொஞ்சம் பூசுனாப்பல (குண்டா!) இருப்பேன். சிகப்பா, அழகா இருப்பேன். எங்கள் குடும்பம் தொண்டை மண்டல முதலியார் சாதியை சேர்ந்தவர்கள். அப்பா இறந்துவிட்டார். ஒரு அண்ணன், மூன்று அக்காக்கள். அக்காக்கள் மூவருக்கும் திருமணமாகிவிட்டது. அண்ணனுக்கு இன்னும் ஆகவில்லை. மூன்று அக்காக்களுக்கு திருமணம் முடிக்க நிறைய கடன்பட்டோம். சிரமப்படுகிறோம். இப்பொழுது எனக்கு செலவழிக்க ஏதும் இல்லை. "உனக்கெல்லாம் நாங்க திருமணம் செய்ய முடியாது. யாரையாவது காதலிச்சு இழுத்துகிட்டு ஓட வேண்டியது தானே! இருந்து கிட்டு எங்க உசிரை வாங்கிகிட்டு!" என அடிக்கடி திட்டுகிறார்கள். இந்த வயசுல நான் யாரை போய் காதலிப்பேன்?

நீங்க வரதட்சணை தேவையில்லை என குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அதனால் தான் உங்ககிட்டே பேசறேன். நீங்க எப்படி? போட்டோவில் இருப்பது போல(வாவது) இருப்பீர்களா! உங்க படிப்புக்கு அரசு வேலை விரைவில் கிடைத்துவிடும் அல்லவா! உங்க அம்மா, அப்பா எங்க இருக்காங்க? கல்யாணத்துக்கு பிறகு, அம்மா, அப்பா எங்கே இருப்பார்கள்?

அன்பா இருப்பேன். நீங்க அன்பா இருப்பீங்க தானே!

நான் நல்லா சமைப்பேன். எங்க வீட்ல சைவம் தான். ஆனால், உங்களுக்காக அசைவம் சமைப்பேன்.

ஒரு மெயில் ஐ.டி தர்றேன். அதுல என் போட்டோ இருக்கு. பார்த்துட்டு சொல்லுங்க! நீங்க சரின்னு சொன்னா, இன்னைக்கே சென்னைக்கு கிளம்பி வந்துர்றேன்!

***

இப்படி பேசிய விசயத்தை சொல்லி முடித்ததும்... சிறிது நேரத்திற்கு என்னால் எதுவும் பேச
முடியவில்லை. மெளனம் தான் நிலைத்தது.

முகம் பார்த்ததில்லை. முகவரி தெரியாது. ஆனால், மொத்த வாழ்க்கையையும் நம்பி ஒப்படைக்கும் இழிநிலை கொடுமை. அந்த பெண்ணின் பேச்சில், வாழ்க்கையை வாழ வேண்டும் என ஆவல் இருந்தது. இப்படி அந்த பெண்ணை வாழ்வின் அடுத்த நிலைக்கு போகவிடாமல்... திட்டி, திட்டி ஆளுமையை நாள்தோறும் சிதைக்கிறார்கள்.

இந்த பெண்ணை மேற்கொண்டு தொடர்பு கொள்வதிலும்... நிறைய சிக்கல்கள் எழுகின்றன. அந்த பெண் சொல்வது மாதிரி... உடனே பஸ் ஏறி வாம்மா! என நம்மால் சொல்ல முடியவில்லை. வீட்டிற்கு போய் பேசினால்... "வேறு சாதிகாரருக்கு நாங்கள் கொடுக்கிற எண்ணம் இல்லை" என்பார்கள். அப்படியே அந்த பெண்ணின் அம்மா, அண்ணன் இருவரிடமும் பேசி... சம்மதம் வாங்கினால் கூட... மூன்று சகோதரிகளின் மாப்பிள்ளைக் குடும்பங்கள் "சாதி, குடும்ப கெளரவம்" என வழிமறித்து நிற்கும்.

அந்த பெண்ணிடமே.. நாங்கள் வீட்டிற்கு வந்து பேசுகிறோம் என்றோம். காரணம் ஏதும் சொல்லாமல்...வீட்டிற்கு வந்து பேசவேண்டாம் உறுதியாக சொன்னார்.

இனி, மேற்கொண்டு ஏதும் எங்களால் முன்னேற முடியவில்லை. அந்த பெண்ணும் பிறகு பேசவில்லை. இப்பொழுது... யாரிடம் போன் பண்ணி தன் நிலையை சொல்லிக்கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை. அந்த பெண்ணின் நிலை கண்டு வருத்தப்பட தான் முடிகிறது.

பின்குறிப்பு : அந்த பெண்ணுக்கு ஏதும் சிரமம் வந்துவிடக்கூடாது என்பதற்காக.. பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. பிரேமா என்பது இயல்பாக இருக்கிறது. தொண்டை மண்டல முதலியார் என்பது முற்பட்ட பிரிவைச் சேர்ந்தது என்பதால்... உண்மை பெயரிலும் ஒரு "கெத்" இருந்தது.

சாதி கெளரவம் விசயத்தில்... தொண்டை மண்டல முதலியார்கள்... வேளாள மரபை சேர்ந்தவர்கள். நிலங்கள் வைத்திருக்கும் உடைமை வர்க்கம். இவர்கள் சைவ முதலியார்கள். பெளதிக அடிப்படையில் வட மாவட்டங்களில் வாழ்பவர்கள். சாதியில் தன்னை உச்சாணி கொம்பில் இருப்பதாக நினைத்து வாழ்பவர்கள்.

தென்பகுதியில் நெசவு தொழில் செய்யும் கைக்கோலர் என்கிற செங்குந்த முதலியார்கள் ஒரு வகை. தொண்டை மண்டல முதலியார்களுக்கும், இந்த செங்குந்த முதலியார்களுக்கு கொள்வினை, கொடுப்பினை கிடையாது (பெண் கொடுக்கவோ, பெண் எடுக்கவோ மாட்டார்கள்).

6 பின்னூட்டங்கள்:

Anonymous said...

test

Anonymous said...

test

பால்வெளி said...

நல்ல கட்டுரை. உண்மையிலேயே மனம் கனக்கிறது. ஒரு பெண் தனக்கு முன்பின் தெரியாத ஒருவரிடம், நேரில் கூட பார்த்திராத ஒருவரிடம் தன் வாழ்க்கையையே ஒப்படைக்கிற அள்விற்கு தள்ளுகிற சூழ்நிலையை உருவாக்குகிற இதே சமூகத்தில் தான் " பெத்தவங்களுக்கு த்ரியாதா, பிள்ளைக்கு செய்ய வேண்டிய கடமை", பாசத்தை கொட்டி பிள்ளைகளை வளர்க்கிறோம்" அப்படி இப்படி எல்லாம் வியாக்கியானம் செய்கிறார்கள். பெரும்பாலான இது போன்ற பெற்றோரே மகனோ, மகளோ தன்னை மீறி அவருக்கு பிடித்த ஒருவருடன் வாழ்க்கையை அமைத்துகொண்டாரென்றால், உடனே குடும்ப கவுரவம் போச்சே என்று பிதற்றுவதும், இன்னும் சாதிவெறி பிடித்த சிலர் அப்படி போனவரை தேடிப் பிடித்து வெட்டுவதும், எரிப்பதும் கூட நடக்கிறது.. இது போன்ற சமூகத்தில் கல்யாணம் என்கிறது ஆயிரங்காலத்துப் பயிர் , மயிர் என்றெல்லாம் உளறுவது ஆபாசத்தின் உச்சக் கட்டம்...

தோழமையுடன்,

பால்வெளி.

குருத்து said...

பால்வெளி அவர்களுக்கு!

நீங்கள் சொல்லும் கருத்து முற்றிலும் சரி. சாதியும், சம்பிரதாயங்களும், சடங்குகளும் மனித சமூகத்தை பின்னுக்கு இழுத்துக்கொண்டேயிருக்கின்றன.

இந்த பெண்ணின் நிலை, நாம் பேசுகிற, பேச நினைக்கிற பல ஆயிரம் வார்த்தைகளை விடவும் சாதியை, சம்பிரதாயங்களை, சடங்குகளை கட்டு அழும் மனிதர்களை சட்டையை பிடித்து உலுக்கி கேள்வி எழுப்புகிறது! முகத்தில் எச்சில் துப்புகிறது!

வனம் said...

வணக்கம்

ம்ம்ம்ம் மிகச்சரியாக எழுதி இருந்தீர்கள்

\\திட்டி திட்டி அடித்த நிலைக்கு வரவிடாமல் \\

இராஜராஜன்

தோழி said...

congratulations for your tamilmanam award. Manam kanakkum pathivu.