> குருத்து: துபாய் நெருக்கடி : ஊக வணிகத்தின் உல்லாசபுரி சுடுகாடானது!

January 5, 2010

துபாய் நெருக்கடி : ஊக வணிகத்தின் உல்லாசபுரி சுடுகாடானது!

தனியார்மயத்தின் கீழ் நீடித்த, நிலையான வளர்ச்சி சாத்தியமில்லை என்பதை துபாய் நெருக்கடி மீண்டும் நிரூபித்திருக்கிறது.

முன்குறிப்பு :
துபாயில் பொருளாதார நெருக்கடி என ஊடகங்களில் செய்திகள் வர ஆரம்பித்தன. வழக்கம் போல இந்த நெருக்கடியால் இந்தியாவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என அடுத்தடுத்து அறிக்கைகள் வெளியிட்டனர்.

துபாயில் வேலை செய்யும் ஆசிய தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகம். குறிப்பாக இந்தியர்களின் எண்ணிக்கையும் அதிகம். பக்ரீத் மற்றும் விடுமுறைக்கு சொந்த ஊர் வந்தவர்களுக்கெல்லாம்... "வீட்டிலேயே இருங்கள். வந்துவிடாதீர்கள்" என சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மெயில் அனுப்பின; தொலைபேசியில் செய்தி சொல்லின.

இந்த நெருக்கடி குறித்து இணையத்தில் தமிழில் தேடிய பொழுது கிடைத்த செய்திகள் மிக குறைவாகவே இருந்தன. ஆங்கிலத்தில் கிடைத்தன. பணிச்சுமையில் என்னால் எழுத முடியவில்லை. இப்பொழுது புதிய ஜனநாயகம் ஜனவரி 2009 இதழில் விரிவான கட்டுரை வெளிவந்துள்ளது. அவர்களுக்கு நன்றி சொல்லி, உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நீளம் கருதி மூன்று அல்லது நான்கு பாகங்களாக பகிர்கிறேன்.
****

புர்ஜ் துபாய் என்ற உலகின் மிக உயர்ந்த கட்டடம், துபாய் மால் என்ற உலகின் மிகப் பெரிய பேரங்காடி, புர்ஜ் அல் அரப் என்ற உலகின் முதல்தர ஏழு நட்சத்திர தகுதி கொண்ட உல்லாச விடுதி, உலகின் எட்டாவது அதிசயம் எனப்படும் "ஜுமெரா பாம்" எனப்படும் ஈச்சமர வடிவத் தீவு, ஜபேல் அலை ஏற்றுமதி மையம் - எனக் கனவுலகை கண்முன்னே காட்டிய துபாய் இன்று கடனாளியாக நிற்கிறது. ஆரவாரம் அடங்கிவிட்டது. எங்கும் மயான அமைதி. எல்லோருடைய முகத்திலும் பீதி. அடுத்த என்ன நடக்குமோ என்று புரியாத குழப்பத்தில் உறைந்து கிடக்கிறது அந்நாடு.

ஐக்கிய அரபுக் குடியரசு எனப்படும் அமீரக சமஷ்டி கூட்டமைப்பிற்குள் ஒரு அங்கம் தான் துபாய். கடலில் மணலைக் கொட்டி, விரிந்த ஈச்சமர வடிவில் ஒரு தீவை உருவாக்கி, அதில் அடுக்கு மாடி குடியிருப்புகள்; இந்த உல்லாசத் தீவில் வீடு வாங்குவது ஒரு தனிச் சிறப்பான அந்தஸ்து என்ற மாயையில் உலக மகா கோடீஸ்வரர்கள் அதில் முதலீடு செய்யப் போட்டியிட்டனர்.

ஈச்சமர வடிவத் தீவுத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, "துபாய் வேர்ல்ட்" என்ற புதிய வீட்டுமனைத் திட்டத்தை துபாய் அரசு கொண்டு வந்தது. உலகப் பட வடிவில் உருவாக்கப்படும் இப்புதிய தீவில் அடுக்குமாடி ஆடம்பரக் குடியிருப்புகள் கட்ட, கட்டுமானக் கழகங்களும் நிதி நிறுவனங்களும் போட்டி போட்டன. நகீல் என்ற அரசின் துணை நிறுவனம் இத்திட்டத்திற்கான கடன் பத்திரங்களை "சுகுக் பாண்டுகள்" என்ற பெயரில் 2004-ல் வெளியிட்டது. அது 2009-ல் முதிர்வடைவதால் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பித் தரவேண்டும் ஆனால், நகீல் நிறுவனத்தால் கடனைத் திருப்பித் தர முடியவில்லை.

துபாய் அரசுக்குச் சொந்தமான துபாய் வேர்ல்டு கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் 80 பில்லியன் டாலர் (ஏறத்தாழ 4 லட்சம் கோடி ரூபாய்) கடன் சுமையால் தத்தளிக்கிறது. பணக்கார நாடாகச் சித்தரிக்கப்படும் துபாய், இந்தக் கடனையும் அதற்கான வட்டியையும் கட்ட முடியாமல் அனைத்துலக நாடுகளிடம் ஆறு மாத கால அவகாசம் கேட்டுள்ளது.

இந்தச் செய்தி பரவி, பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்கத் தொடங்கியதும் தட தட வென ஆரம்பித்து விட்டது சரிவு. ஏகாதிபத்திய நிதி நிறுவனங்கள் தமது முதலீடுகளை அவசரமாக திரும்ப எடுத்துச் செல்ல தொடங்கின. முதலீடுகளை மறுமதிப்பீடு செய்யும் பொழுது மீண்டும் சரிவு ஏற்பட்டது.

தொடரும்..

2 பின்னூட்டங்கள்:

Anonymous said...

சோதனை

குப்பன்.யாஹூ said...

u r right, artificial things can not last long, it is proved again.