> குருத்து: துபாய் நெருக்கடி : ஊக வணிகத்தின் உல்லாசபுரி சுடுகாடானது! பாகம் 3

January 20, 2010

துபாய் நெருக்கடி : ஊக வணிகத்தின் உல்லாசபுரி சுடுகாடானது! பாகம் 3


பாகம் - 1
பாகம் - 2

தனியார்மயத்தின் கீழ் நீடித்த, நிலையான வளர்ச்சி சாத்தியமில்லை என்பதை துபாய் நெருக்கடி மீண்டும் நிரூபித்திருக்கிறது.

முன்குறிப்பு : 'முதல் நாள் வரை சொர்க்கம். அடுத்த நாள் நரகம்" என மாறி நிற்கிறது துபாய். வளைகுடா நாடுகளில் இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை 50% தொடும் என்கிறார்கள். துபாயின் நெருக்கடியில் வேலை இழந்தவர்களின் கதி என்ன? 'சொர்க்கத்தை' எண்ணி வங்கிகளில் கடன் வாங்கியவர்களின் கதி என்ன? என்பதையும், "வாயை திறந்து உண்மையை பேசவே கூடாது" என ஊடகங்களுக்காக ஒரு சட்டமே போடப்பட்டிருப்பதையும் இந்த பகுதி விவரிக்கிறது.

****

எல்லாம் இன்று குப்புற விழுந்துவிட்டது. பல நூறு அடுக்குமாடிக் குடியிருப்புகள் அரைகுறையாக எலும்புக்கூடுகளாக நிற்கின்றன. ஆடம்பர வீடுகளுக்காக உருவாக்கப்பட்ட செயற்கைத் தீவுகள் பலவும் கடலுக்குள் கொட்டப்பட்ட குப்பை மேடுகளாகக் காட்சியளிக்கின்றன. இவையெல்லாம் கட்டி முடிக்கப்படுமா, அல்லது கைவிடப்படுமா என்று யாருக்கும் தெரியாது. ஆனால், கடன் கொடுத்த வங்கிகள் சும்மாயிருக்குமா? கடனை கட்டாமல் தப்பிக்க முடியாது என்று எச்சரித்து வசூல் வேட்டையைத் தீவிரப்படுத்துகின்றன.

மறுபுறம், குப்புற விழுந்துவிட்ட பொருளாதாரத்தால் துபாயில் வேலை இழப்பு தீவிரமாகியுள்ளது. இலட்சகணக்காணோர் வேலை இழந்துள்ளனர் என்று அதிகாரபூர்வமற்ற செய்திகள் வருகின்றன. துபாய் சட்டப்படி, வேலையிழந்தவர்களின் தொழில் விசா ரத்து
செய்யப்படும். ஒருமாத இடைவெளியில் அவர்கள் வேறு வேலை தேடிக்கொண்டால் அந்நாட்டில் இருக்க முடியும். இல்லையேல், வெளியேற்றப்படுவர். இதனால் இந்தியா, பாகிஸ்தான், வங்கத்தேசத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து நாடு திரும்பிக்கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் அரைச் சம்பளத்துக்கு வேலை செய்கின்றனர். பணி நிரந்தரம் என்ற நம்பிக்கையில் கட்டட வடிவமைப்பாளர், பொறியாளர் முதலானோர் வீடு வாங்கும் ஆசையில் வங்கியில் கடன் வாங்கிவிட்டு, திருப்பிச் செலுத்த வழி தெரியாமல் தவிக்கின்றனர்.

துபாயில் கடனை அடைக்க முடியாதவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். வாழ்நாள் முடுவதும் அடிமையாக வெலை செய்துதான் கடனை அடைக்கவேண்டும். இதனால் கடனை அடைக்க வழிதெரியாத பலர் நாட்டை விட்டுத் தப்பியோடுகின்றனர். எஞ்சியிருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு, எவரிடமும் விற்கமுடியாத தமது விலையுயர்ந்த கார்களையும் உடைமைகளையும் அங்கேயே போட்டுவிட்டு ஓடுகின்றனர். துபாய் விமான நிலையத்தில் வாகன நிறுத்துமிடத்தில் கைவிடப்பட்டு யாரும் உரிமை கோராத கார்கள் மலை போல குவிந்து கிடக்கின்றன். வீடுகள் காலியாகி, வீட்டுமனை விலை சரிந்து ஆளரவமற்ற தெருக்கள் பெருகி வருகின்றன.

"இருப்பினும் இது தற்காலிக நெருக்கடி தான். நிலைமை படிப்படியாக மாறி வருகிறது. அபுதாபி அமீரகம் கடன் கொடுத்து மீட்டுவிட்டது. துபாயின் கனவுலகம் மீண்டும் ஒளிரும்" என்று ஊடகங்கள் ஆரூடம் கூறி வருகின்றன. துபாய் அரசாங்கம் புதிய ஊடக சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருப்பதே இதற்குக் காரணமாகும். இச்சட்டத்தின்படி, துபாயில் பொருளாதார நெருக்கடி நிலவுவதாக எந்த ஊடகமும் செய்தியை வெளியிடக்கூடாது. மீறினால், இலட்சகணக்கில் அபராதமும் தண்டனையும் விதிக்கப்படும். எனவே, எல்லா ஊடகங்களும் வதந்திகளையே பரப்பி வருகின்றன.

தொடரும்..

நன்றி : புதிய ஜனநாயகம் - ஜனவரி 2010

0 பின்னூட்டங்கள்: