April 8, 2009
ஜகதீஷ் டைட்லர் விடுதலையும்! சிதம்பரத்தின் மீது ஷு வீச்சும்!
1984ம் ஆண்டு, அக்டோபர் 31 ந்தேதி. இந்திராகாந்தியை இரண்டு சீக்கியர்கள் சுட்டுகொன்றனர். ஒருநாள் அமைதி. அந்த நாளில், காங்கிரசு முக்கிய பிரமுகர்கள் ஜகதீஷ் டைட்லர், சஜ்ஜன்குமார், எச்.கே.எல். பகத், தரம்தாஸ் சாஸ்திரி போன்ற காங்கிரசுகாரர்கள் தெளிவாக
திட்டமிட்டு, காங்கிரசு குண்டர்களை வைத்து, நவம்பர் 1,2,3 தேதிகளில் சுமார் 3000 சீக்கியர்களை தேடித்தேடி கழுத்தில் டயரை மாட்டி, கொடுரமான முறையில் இனப்படுகொலைகளை நடத்தினர். உலகமே காறித்துப்பியது.
இந்த படுகொலைகள் நடந்து, இரண்டு வாரத்திற்கு பிறகு, இந்திராகாந்தியின் பிறந்த நாளான நவம்பர் 19, 1984 அன்று அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி சொன்னது
“இந்திராஜியின் கொலைக்குப்பின் நாட்டில் சில கலவரங்கள் நடைபெற்றன. மக்கள் கோபமாக இருந்ததை நாம் அறிவோம். சில நாட்கள் வரை இந்தியாவே குலுங்கியது போலத் தோற்றமளித்தது. ஒரு பெரிய மரம் விழும் பொழுது அதைச் சுற்றியுள்ள பூமி அதிரத்தானே செய்யும்”.
எவ்வளவு திமிரான வார்த்தைகள். இந்த கலவரங்களுக்கான காரணகர்த்தாக்கள் என்று விசாரிக்கும் பொழுது, இந்த வார்த்தைகளுக்காகவே ராஜீவ்காந்தியையும் சேர்த்திருக்கவேண்டும். செத்துப்போவதால், சிலர் தப்பித்துவிடுகிறார்கள்.
இந்த படுகொலைகள் ஒரு அநியாயம் என்றால்... கடந்த 25 ஆண்டுகளில் இக்கொலைகளுக்கு கிடைத்த நீதி ஒரு பெரிய அநீதி. இதுவரை, சுமார் 2500 பேர் நேரடியாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். நானாவதி கமிசன் உட்பட 9 விசாரணை கமிசன் நியமிக்கப்பட்டிருக்கின்றன. கமிசன்கள் பக்கம் பக்கமாக நடந்த கொலைகளை விவரிக்கிறார்கள்.
“போலீஸ் குறித்த எந்த அச்சமும் இல்லாமல், இந்த குற்றங்களுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்கிற உறுதி கிடைத்தவர்களைப்போல (கொலைகாரர்கள்) செயல்பட்டனர்” என்கிறது நானாவதி கமிசன் அறிக்கை.
ஆனால், இந்த படுகொலைகளை நடத்தியதற்காக பரிசாக காங்கிரசு கட்சி அவர்களுக்கு அமைச்சர் பதவிகளும், இன்னபிற பதவிகளும் அள்ளித்தந்திருக்கிறது காங்கிரசு கட்சி.
சமீபத்திய சீக்கியர்களின் போராட்டத்திற்கு காரணம் சி.பி.ஐ. கடந்த வாரம் ஜெகதீஷ் டைட்லரை
போதிய ஆதாரமில்லை என விடுதலை செய்தது காரணம். இதுகுறித்து, உள்துறை அமைச்சர் என்ற அடிப்படையில் பத்திரிக்கையாளர் ஜர்னைல்சிங் சிதம்பரத்திடம் கேள்வி கேட்டு, நழுவுகிற பதில் தந்ததற்கு தான் இந்த ஷூ வீச்சு!
இந்த நிகழ்ச்சி எஸ்.எம்.எஸ்.ல் “சிதம்பரத்தின் மீது செருப்பு வீச்சு” என சுருக்கமாய் வந்த பொழுது, தமிழ்நாட்டில் தான் நடந்துவிட்டதோ என நினைத்தேன். பிறகு, செய்தி அறிந்தேன்.
இப்படியெல்லாம் தமிழ்நாட்டில் நடப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால், ஓட்டுக்கட்சி தலைவர்கள் தமிழர்களை தீயிட்டு தற்கொலை செய்வதற்கு தான் பழக்கப்படுத்தியிருக்கிறார்கள். புதிய போராட்டமுறைகளை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதை ஈழப்பிரச்சனையில் துரோகம் செய்யும் தமிழக ஓட்டுக்கட்சிகளிடம் நாம் செய்துகாட்டவேண்டும்!
Subscribe to:
Post Comments (Atom)
1 பின்னூட்டங்கள்:
ஜர்னைல் சிங்கிடம் நான் இன்று மாலை (8.4.09) தொலைபேசி மூலம் எடுத்த பேட்டியை கீழ்கண்ட தளத்தில் கேட்கவும். அது ஆங்கில உரையாடல்.
http://www.poduniversal.com/2009/04/what-prompted-jarnail-singh-to-throw.html
சீனிவாசன்
Post a Comment