> குருத்து: துபாய் : ஊக வணிகத்தின் உல்லாசபுரி சுடுகாடானது! - பாகம் 2!

January 9, 2010

துபாய் : ஊக வணிகத்தின் உல்லாசபுரி சுடுகாடானது! - பாகம் 2!


பாகம் 1
தனியார்மயத்தின் கீழ் நீடித்த, நிலையான வளர்ச்சி சாத்தியமில்லை என்பதை துபாய் நெருக்கடி மீண்டும் நிரூபித்திருக்கிறது.

முன்குறிப்பு : இந்த நெருக்கடி குறித்து இணையத்தில் தமிழில் தேடிய பொழுது கிடைத்த செய்திகள் மிக குறைவாகவே இருந்தன. ஆங்கிலத்தில் கிடைத்தன. பணிச்சுமையில் என்னால் எழுத முடியவில்லை. இப்பொழுது புதிய ஜனநாயகம் ஜனவரி 2009 இதழில் விரிவான கட்டுரை வெளிவந்துள்ளது. அவர்களுக்கு நன்றி சொல்லி, உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நீளம் கருதி மூன்று அல்லது நான்கு பாகங்களாக பகிர்கிறேன்.
****

ஏழு பெருநகர அமீராட்சியும் தனித்தனி பட்ஜெட்டும் கொண்டுள்ள ஐக்கிய அரபுக் குடியரசில் ரஸ் அல் கைமாஹ், அபுதாபியைப் போல துபாயில் எண்ணெய் வளம் இல்லை. பெட்ரோலியம் உறிஞ்சி எடுக்கப்பட்டு வற்றத் துவங்கிவிட்டதால், வீட்டுமனைத் தொழில் மற்றும் சுற்றுலா துறையில் துபாய் அதிக அழுத்தம் கொடுத்தது.

கொளுத்தும் வெயிலில் பாலைவனத்தின் நடுவேயுள்ள முகாம்களில் வாழும் ஏழை நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், தொழிற்தேர்ச்சி பெற்று அதிக சம்பளம் வாங்கி நகரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடும்பத்தோடு வாழும் நடுத்தர வர்க்கத்தினர், கோடானு கோடிகளை முதலீடு செய்துள்ள உலகின் பணக்கார வர்த்தகர்கள் எனப் பல்வேறு பிரிவு வெளிநாட்டவர்கள் துபாயில் குடியேறியுள்ளனர். துபாயின் மொத்த மக்கள் தொகையில் இவர்கள் ஏறத்தாழ 80 சதவீதம். துபாயில் கட்டப்படும் ஆடம்ப்ர வீடுகளை வாங்குபவர்களுக்கு, அந்நாட்டில் நிரந்தரமாக வாழ்வதற்கான அனுமதிப் பத்திரம் அளிக்கப்படும் என்று அரசு ஆசை காட்டியது. இதனால் நடுத்தர வர்க்கமும் பெரும் வர்த்தகர்களும் உல்லாசிகளும் இத்தகைய புதிய ஆடம்பர வீடுகளை வாங்கப் போட்டி போட்டனர். நடுத்தர வர்க்கத்தினர் வங்கியில் கடன் வாங்கியாவது வீடு வாங்க முண்டியடித்தனர்.

கடல் நடுவே பேரீச்சை மர வடிவில், உலக வரை பட வடிவில் என்றெல்லாம் செயற்கைத் தீவுகளை உருவாக்கி, அவற்றில் ஆடம்பர அடுக்குமாடி வீடுகளைக் கட்டித்தரும் திட்டங்களை பன்னாட்டுக் கட்டுமானக் கம்பெனிகள் அறிவித்தன. கட்டடங்களை எழுப்பும் முன்னரே வீடுகளை விற்கும் திட்டம் தொடங்கியது. முன்கூட்டியே வீடுகளை விற்கும் திட்டம் தொடங்கியது. முன்கூட்டியே பணத்தைத் தவணை முறையில் செலுத்த வேண்டும். ஆனால், குடியேறுவதற்கு ஆண்டுகணக்கில் காத்திருக்க வேண்டும். நம்ம ஊரில் தேக்குப் பண்ணைத் திட்டம் என்ற பெயரில் ஒரு மோசடித் திட்டத்தை அறிவித்து, இதோ உங்கள் தேக்கு கன்று வளர்ந்து வருகிறது என்று ஒரு புகைப்படத்தை அனுப்பி ஏய்த்ததைப் போலத்தான், வெறும் கட்டடப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு கற்பனை வீட்டுக்காகப் பலரும் பணத்தைக் கட்டினர். நடுத்தர வர்க்கத்தினர் வங்கிகளில் கடன் வாங்கிக் கட்டினர்.

"இன்றைய உலகில் வீட்டுமனை-கட்டிடத் தொழிலில் முதலீடு செய்வது தான் பாதுகாப்பானது. வீடுகளின் விலை குறைந்ததாக வரலாறில்லை" என்ற பங்குச் சந்தை சோதிடர்கள் கூறும் அருள்வாக்கை பலரும் நம்பினர். பங்குச் சந்தையில் செயற்கையாக ஊதிப் பெருக்கப்பட்டு வீட்டுமனை விலைகள் தாறுமாறாக உயர்ந்தன. பங்குச் சந்தை சூதாட்டத்தில் முதலீடு செய்த அனைத்துலக ஏகபோக வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கோடிகோடியாகக் கொள்ளையடித்த பிறகு, உண்மை மதிப்பு வீழ்ச்சியடையத் தொடங்கியது. முதலீடு செய்த வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வரப் போகும் வீழ்ச்சியை அறிந்து முன்கூட்டியே தமது முதலீடுகளை திரும்ப எடுத்து சென்றன. இதனால், கடன் சுமை அதிகரித்து துபாய் வேர்ல்டு என்ற அரசு சார்பு நிதி நிறுவனம் திவாலாகியது.

தொடரும்..

1 பின்னூட்டங்கள்:

சிங்கக்குட்டி said...

"தமிழ்மணம் 2009 விருது" போட்டியில் வெற்றி பெற்று விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,

சிங்கக்குட்டி.