> குருத்து: January 2011

January 16, 2011

வாழ்த்துக்கள்!

பொங்கல் நாளில் அறிவித்தபடி, தமிழ்மணம் இறுதி சுற்று முடிவுகள் வந்துவிட்டன.

தோழர்கள் போராட்டம், கலகம், செங்கொடி, சூறாவளி, பதிவர் சந்தனமுல்லை முதல் பரிசு, இரண்டாம் பரிசு என சில பிரிவுகளில் ஜெயித்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.

இந்த போட்டியில் குருத்து தளத்திற்கு வாக்களித்த அனைவருக்கும் என் நன்றிகள்.

ஆரோக்கியமான எழுத்தை ஊக்குவிக்கும், இந்த போட்டியை சிறப்பாகவும் நடத்தி முடித்த தமிழ்மணம் குழுவினருக்கும் நன்றிகள்.

தோழமையுடன்,

குருத்து.

January 12, 2011

கோவில்-நிலம்-சாதி - புத்தக அறிமுகம்!


முன்குறிப்பு : ஞாயிறு ஒரு மணி நேரம் சுற்றியதில், சில புத்தகங்கள் வாங்கினேன். அதில் ஒன்று இரண்டை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்த பதிவு. நீங்களும் வாங்கியதை இப்படி அறிமுகப்படுத்துங்கள். இந்த புத்தகத்தைப் பற்றி படித்துவிட்டு பிறகு எழுதலாம் என உத்தேசம்.

*****


பின் அட்டையிலிருந்து....

கோவில்களைப் பக்தியின் இருப்பிடமாகப் பார்ப்பது தான் இயல்பாகதாக நம் பொதுமனதில் பதிந்து உள்ளது. கோவில்கள் கட்டப்பட்டதைப் புனித அறச்செயல்களாகவும், அரசர்களின் வணிகர்களின் சாதனைகளாகவும் மட்டுமே வரலாற்று நூல்கள் காட்டுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் வளமான நிலங்கள், இலட்கணக்கான ஏக்கர்கள் கோவில்களுக்கு உடமையாக இருந்தன என்பதையும், தமிழ்நாட்டுக் கிராமங்களின் நிர்வாகத்தைக் கோவில் சபைகளே நடத்தி வந்தன என்பதையும் பல கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

இவற்றின் அடிப்படையில் ஆராயும்போது கோவில் நிர்வாகத்தில் பங்குபெற்ற உயர்சாதியினர் தான் மொத்தத் தமிழ்ச் சாதிகளையும் கோவிலின் பெயரால் ஆண்டுவந்தனர் என்பதும் தெளிவாகின்றது. ஆகவே கோவிலுக்கும் நில உடைமைக்கும் அவற்றை நிர்வகித்த சாதிகளுக்கும் இடையே உள்ள உறவுகளை ஆராய்வதன் மூலம்தான் தமிழக வரலாற்றை விளக்க முடியும். அந்தப் பணியை இந்நூலின் மூலம் பொ. வேல்சாமி தொடங்கி வைத்துள்ளார்.

ஆசிரியர் : பொ. வேல்சாமி, (1951)

விலை : ரூ. 90 பக்கங்கள் : 135

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629 001.

January 11, 2011

கம்யூனிசமும் குடும்பமும் - புத்தக அறிமுகம்


ஆசிரியர் : தோழர் அலெக்சான்ட்ரா கொலந்தாய்

ஆசிரியர் குறிப்பு : 1872ல் பிறந்தார். 1899-ல் ரசிய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சியில் உறுப்பினரானார். பின்பு, 1903-ல் லெனினது போல்ஷிவிக் கட்சியில் இணைந்தார்.1917 புரட்சிக்கு பிறகு சமூக நலத்துறையில் மக்கள் கமிசாராக இருந்தார். சோவியத் ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகளில் பல ஐரோப்பிய நாடுகளில் சோவியத்தின் அரசியல் தூதராக பணிபுரிந்தார். பணிக்காலத்தில் கம்யூனிச உணர்வுக்கு அங்கீகாரமாக அன்று வழங்கப்பட்டு வந்த லெனின் விருது (1933), உழைப்பின் செங்கொடி விருது (1945) போன்ற விருதுகளால் கெளரவிக்கப்பட்டார்.

புத்தகத்திலிருந்து... சில பகுதிகள்.

//தன் தேவைகளைப் பெறவும், நிறைவேற்றிக் கொள்ளவும், ஒரு பெண் சமூகத்தைச் சார்ந்திருக்க வேண்டுமேயன்றி ஒரு தனி மனிதனை அல்ல என்பதை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை// பக். 6.

//அவர் தன் கணவருக்கு மனைவியாக, குழந்தைக்குத் தாயாக, முதலாளிக்குத் தொழிலாளியாக என்று தன் ஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும் வியர்வையாய் சிந்துகிறார். ஆலைத் தொழிலாளியாகட்டும், அச்சகம் அல்லது ஏதேனும் ஒரு நிறுவனம் ஆகட்டும், அங்கே வேலை செய்யும் தன் கணவருக்கு சமமாக வெளியே உழைத்துவிட்டு, பின் தன் குடும்பத்தையும் பராமரிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு முதலாளித்துவமானது பெண்களால் தாங்க முடியாத பாரத்தை அவர்கள் மேல் சுமத்தியிருக்கிறது// பக். 10

//உழைக்கும் பெண்கள் தமக்குக் கிடைக்கும் சிறு ஓய்வு நேரங்களிலும் சமையல் வேலைகளால் அவதிப்படுவதை விடுவித்து, பொது உணவு விடுதிகளையும் சமூகச் சமையற்கூடங்களையும் கம்யூனிச சமுதாயம் ஏற்படுத்திக் கொடுக்கும்// பக். 15.

//அப்படிப்பட்ட பழைய குடும்ப முறையே பாட்டாளி வர்க்க விடுதலைக்கான உணர்வை இறுக்கித் திணறடிக்க வல்லது என்றும் உழைக்கும் ஆண், பெண்களிடையே எழுந்து வளரும் புரட்சி உணர்வை பலமிழக்க வைக்கும் என்றும் முதலாளிகள் நன்கு அறிவார்கள். குடும்பப் பராமரிப்பிற்காகவே உழைப்பாளர்கள் முதலாளிகளுடன் சமரசம் செய்துகொள்கின்றனர். குழந்தைகள் பசியால் வாடும் பொழுது முதலாளியின் எத்தகைய கொடுமையான நிபந்தனைகளுக்கும் உட்பட்டு பெற்றோர் அடிபணிந்து விடுகின்றனர்// பக். 19.

//வீட்டு வேலைகளிலிருந்து விடுபட்டாலும் கூட குழந்தைப் பராமரிப்பு என்ற ஒன்று இருக்கிறதே என்று நீங்கள் வாதிடலாம். இங்கும் சோவியத் அரசே இந்தப் பொறுப்பை ஏற்கும்// பக். 16

//முதலாளித்துவ உலகில் திருமணம் என்பது உண்மையிலேயே துன்பச் சங்கிலியாக இருக்கிறது// பக். 20

//முன்னர் ஆண்-பெண் இருவருக்கிடையில் நீடித்த பழைய உறவுமுறை புதிய வகைப்பட்டதாக உருவாகி மாறிவருகின்றது. அந்த உறவானது அன்பான தோழமையான இரு உள்ளங்களுக்கிடையிலானதாக கம்யூனிச சமூகத்தின் இரு சம் உரிமையுள்ள ஆண் பெண்ணுக்கிடையிலானதாக சுயமாக, சுதந்திரமாக ஒருவரையொருவர் சார்ந்து வாழாத இருவருக்கு இடைப்பட்ட உறவுமுறையாக இருக்கின்றது// பக். 21.

//கம்யூனிச சமூகத்தில் பெண் இனி தன்னைத்தானே நம்பி வாழ்வாளேயன்றி கணவனை நம்பி அல்ல// பக்.22

//மேலும் ஆணும் பெண்ணும் அடிப்படையில் நேர்மையான, சுதந்திரமான, விருப்பத்துடன் கூடி வாழும் திருமணங்கள் வளரும். இதனால் விபச்சாரம் முடிவுக்கு வரும்// பக். 22

//உழைக்கும் தாயானவள் தன் குழந்தைகளையும் மற்றவர்களது குழந்தைகளையும் வேறுபடுத்திப் பார்ப்பதை நிறுத்திவிடக் கற்றுக்கொள்ள வேண்டும். இங்கே இருக்கும் குழந்தைகள் எல்லாம் நம் குழந்தைகள், சோவியத் ரசிய உழைப்பாளர்களின் குழந்தைகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்// பக். 23

//பல நூற்றாண்டுகளாக மனித சமூகத்தால் கனவு காணப்பட்ட விண்ணுலகம் இம்மண்ணுலகிலேயே எழுந்து மலருவதை இதோ செங்கொடி அறிவித்துக்கொண்டிருக்கிறது!// பக்.24

1920ம் ஆண்டில் வெளிவந்த Communism and the Family - என்ற ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்.

விலை ரூ. 20/- பக்கங்கள் : 24

வெளியீடு : பெண்கள் விடுதலை முன்னணி,
41, பிள்ளையார் கோயில் தெரு,
மதுரவாயல், சென்னை - 600 095. தொலைபேசி : 98416 58457

கிடைக்கும் இடம் : கீழைக்காற்று, சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சியில் 39, 40 கடைகளில் கிடைக்கும்.

January 9, 2011

108 ஆம்புலன்ஸ் - குடும்ப சானல்களுக்கு கோடிகளில் விளம்பரம்!

முன்குறிப்பு : திட்டத்திற்கு திட்டம் ஆச்சு! மூஞ்சியை பெரிசா போட்டு, விளம்பரமும் ஆச்சு! தங்களுடைய சானல்களில் விளம்பரப்படுத்தி, கோடிகளில் கல்லாவும் கட்டியாச்சு! ஒரு கல்லுல எத்தனை மாங்கா? களவாணிபயல்கள்.

****


சென்னை, ஜன.9: தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் "108' இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடர்பான விளம்பரங்கள் மூலம் முதல்வரின் குடும்பத்துக்குச் சொந்தமான சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளுக்கு ரூ. 1 கோடி வருவாய் கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது.

பொதுமக்களால் இலவச சேவை என அறியப்பட்டாலும், இந்த இரு டிவிக்களில் ஒளிபரப்பான விளம்பரங்களுக்கு தமிழக அரசு ரூ. 1 கோடி கட்டணம் செலுத்தியிருக்கிறது.

மற்ற தனியார் சேனல்களுக்குத் தராமல் போனாலும் அரசு நிறுவனமான பொதிகை சேனலுக்கு விளம்பரம் தராதது ஆச்சர்யமாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் அவசரகால உதவிக்காக "108' இலவச ஆம்புலன்ஸ் சேவை, 2008-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசும், ஜி.வி.கே. அவசரகால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி மையமும் (இ.எம்.ஆர்.ஐ.) கையெழுத்திட்டன. மருத்துவம், காவல்துறை, தீயணைப்புத்துறையுடன் இந்த சேவை இணைக்கப்பட்டுள்ளது.

இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவை, சென்னை மட்டுமில்லாமல் மாவட்டங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. மாரடைப்பு, பெண்களுக்கு பிரசவ வலி, சாலை விபத்துகளில் அடிபடுவோர் என எந்த இடத்தில் இருந்தாலும் "108'க்கு அழைத்தால், இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படுகிறது.

ஒருபக்கம் பொதுமக்களுக்கு இலவசமாக சேவை வழங்கிய போதிலும், "108' இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்குவது தொடர்பான விளம்பரங்கள் குறிப்பாக சன் மற்றும் கலைஞர் டிவிக்களில் கட்டணம் செலுத்தித்தான் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தமிழக அரசு 2008 முதல் 2010 வரை காலக்கட்டங்களில் சுமார் ரூ. 1 கோடி செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் வி.சந்தானம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் டிசம்பர் 30-ம் தேதி இ.எம்.ஆர்.ஐ. தலைமைச் செயல் இயக்குநரிடம் இருந்து பெற்ற கேள்வி- பதில்களின் விவரம்:

கேள்வி: 108 ஆம்புலன்ஸ் சேவை சம்பந்தமான விளம்பரங்கள் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன. இது இலவச விளம்பரமா? அல்லது கட்டண விளம்பரமா? கட்டணமென்றால் ஒரு முறை விளம்பரத்துக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?

பதில்: 108 ஆம்புலன்ஸ் சம்பந்தமான விளம்பரம் இலவச விளம்பரம் அல்ல. கட்டண விளம்பரம்தான். ஒரு முறை பத்து விநாடிகள் விளம்பரத்துக்கு சன் டிவியில் ரூ. 23,474-ம், கலைஞர் டிவியில் ரூ. 9,700-ம் செலுத்த வேண்டும் என்று இ.எம்.ஆர்.ஐ. பதில் அளித்துள்ளது.

கேள்வி: இலவச ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் விளம்பரத்திற்காக சன் மற்றும் கலைஞர் டிவி நிறுவனங்களுக்கு இன்று வரை செலுத்தப்பட்ட தொகை எவ்வளவு?

பதில்: இன்று வரை சன் மற்றும் கலைஞர் டிவி விளம்பரத்திற்காக செலுத்தப்பட்ட தொகை ரூ. 1,01,53,320 என்று பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

""ஆகாரத்திற்காக அழுக்கை உண்டு, தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன், அதுபோலத் தான் நானும். என்னுடைய சுயநலத்தில், பொது நலமும் கலந்திருக்கிறது'' என்ற "பராசக்தி' பட வசனத்தைப் போல, தமிழக அரசின் இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவை பொது நலமாகப் பார்க்கப்பட்டாலும், இந்த 108 ஆம்புலன்ஸ் சேவை விளம்பரத்தின் மூலம் சன் மற்றும் கலைஞர் டிவிகளுக்கு ரூ. 1 கோடி வருவாய் கிடைப்பது என்பது குடும்ப சுயநலம்தான்'' என்கிறார் வி.சந்தானம்.

சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது!

- நன்றி : தினமணி, 10/11/2011