February 2, 2012
தோழர் மருதையன் திருமண வாழ்த்துரை!
கடந்த ஆண்டு ஜூலை இறுதியில் தோழர் ஒருவருக்கு 'வாழ்க்கை துணை நல ஏற்பு ' நடைபெற்றது. தாலி மறுத்து, சடங்குகள் மறுத்து எளிமையாகவும், சிறப்பாகவும் நடைபெற்றது. மணமக்களை வாழ்த்தி பேசியவர்களில் ம.க.இ.க.வின் பொதுச்செயலாளர் தோழர் மருதையனும் ஒருவர். 10 நிமிடங்கள் அவர் பேசியதில், நான்கு விசயங்கள் மிகவும் முக்கியமானவை. பகிர்ந்துகொள்ள வேண்டியதின் அவசியம் கருதி, சுருக்கமாய் எழுத்தில் பதிந்தேன்.
இப்பொழுது வாழ்த்துரை எம்.பி.3 வடிவத்தில் இணைக்கப்பட்டுள்ளது! கேட்டுப்பாருங்கள்!
செல்பேசியில் பதிந்ததால், ஒலிப்பதிவு குறைவான தரத்தில் இருக்கிறது. இருப்பினும் கேட்ககூடிய அளவுக்கு இருக்கிறது.
*******
பொதுவாக இந்த மணவிழாவை போல புரட்சிகர திருமணங்கள் தமிழகமெங்கும் ம.க.இ.க அமைப்பாலும், அதன் தோழமை அமைப்புகளாலும் ஏராளமாக நடத்தப்படுகின்றன.
இந்த மணவிழாவை பொறுத்தவரை, மற்றவர்கள் குறிப்பிட்டது போல தோழருக்கு தாமதமான திருமணம். (பெண்) தோழருக்கு இது மறுமணம். இப்படி ஒரு சொல்லால் குறிப்பிடுவது என்பது இங்கு இருக்கிறது. மேலை நாடுகளில் இப்படி இல்லை. அது திருமணமா? மறுமணமா? என்ன வெங்காயமா இருந்தா உனக்கென்ன? இப்படி ஒரு அநாகரிகம் நம் சமூகத்தில் இருக்கிறது. அதனால் முதல் திருமணம், மறுமணம் என சொல்ல வேண்டியிருக்கிறது.
பொதுவில் திருமணம் என்பதை எப்படி பார்க்கிறார்கள், நடத்துகிறார்கள் என்றால், முழு வாழ்க்கையில் அது முக்கியமான சம்பவம். தன்னைப் பற்றிய ஸ்டேட்மெண்ட். தன்னை பிரகடனப்படுத்தி கொள்கிற நிகழ்வு. அதற்காக எல்லா பொருளையும், சிந்தனையையும், உழைப்பையும் செலவழிக்கிறார்கள்.
இந்த தோழர்களை பொறுத்தவரை அப்படி இல்லை. தோழருடைய வாழ்க்கை தான் ஒரு ஸ்டேட்மெண்ட். இந்த திருமணம் இப்படி நடத்த வேண்டிய அவசியம் கூட இல்லை. ஒரு பதிவு திருமணமாகவோ, சில நண்பர்களுக்கு வீட்டளவில் தேநீர் வழங்கியோ கூட முடித்து கொண்டிருக்கலாம். பிறகு ஏன் நடத்துகிறோம்? சுயமரியாதை திருமணம், சாதி மறுப்பு, தாலி மறுப்பு, இவற்றையெல்லாம் பிரபலப்படுத்த வேண்டும் என்பது ஒரு நோக்கம்.
ஒரு குறிப்பிட்ட வயது கடந்துவிட்டால், மாப்பிள்ளையாய் மேடையில் அமருவது கூச்சத்திற்குரிய விசயம் என்ற கருத்து நம்மிடம் இருக்கிறது. குறிப்பிட்ட வயதுக்கு மேலே போனால், மாப்பிள்ளை இல்லையா? அல்லது மறுமணம் என்றால் திருமணம் இல்லையா?! இதை முறிப்பதற்காகவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.
இப்படிப்பட்ட திருமணம் உறவினர்கள், நண்பர்கள் மத்தியிலே கொண்டு செல்லப்பட வேண்டும். (பெண்) தோழர் இருக்க கூடிய கிராமத்திலே, 25 இளம் கைம்பெண்கள் இருப்பதாக கூறினார்கள். அந்த கிராமத்திலே 500 தலைக்கட்டு (குடும்பங்கள்) இருக்குமா? அந்த ஊரிலே மணவயதில் 25 கைம்பெண்கள் இருப்பது கொடுமையில்லையா? அவர்கள் வாழ்நாள் முழுவதும் அப்படியே வாழ்வார்கள் என்பது எவ்வளவு பெரிய சமூக அநீதி.
இந்த மணவிழாவை உறவினர்கள், ஊர்க்காரர்கள் பார்த்து, இன்னும் ஒன்றிரண்டு திருமணங்கள் நடைபெற்றால் கூட மிகப்பெரிய வெற்றி என பார்க்கவேண்டும்.
தோழரின் பெற்றோர், உறவினர்களும் வந்திருக்கிறார்கள். தோழரின் தந்தைக்கு வருத்தம் இருக்கும். எந்த பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை பொது வாழ்க்கைக்கு அனுப்பிவிட்டு, மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்!
தன் குடும்பம், தன் பெண்டு என வாழ்வதை தான் முன்மாதிரியான வாழ்க்கை என பொற்றோர்கள் கருதுகிறார்கள். பிள்ளைகளையும் அப்படியே பயிற்றுவிக்கிறார்கள். பிற்காலத்தில் தன் பிள்ளை தங்களுக்கு சோறுபோட மாட்டேன் என்று சொல்லும் பொழுது கூட இப்படி சுயநலவாதிகளாக பயிற்றுவித்தது தப்பு என புரிவதில்லை. உரைப்பதில்லை. இது துரதிருஷ்டம்!
இந்த மணவிழாவில், மணமக்கள் உறுதிமொழி வாசிப்பார்கள். "பொதுநலனுக்கு உட்படுத்தி, எங்களது குடும்ப வாழ்க்கை வாழ்வோம்! மணமகன் ஆணாதிக்கம் இல்லாமல் நடந்துகொள்வேன் என சொல்வார். இந்த இரண்டு விசயங்களும் அமுல்படுத்துவது மிக சிரமமானது.
ஏனென்றால், ஆணாதிக்கம் என்பது கிட்டத்தட்ட இரத்தத்தில் ஊறி இருக்கிறது. ஆணாதிக்கம் என்றால் என்ன? என ஒரு ஆணைக் கேட்டால் அதிகபட்சமாக சொல்வது "போடி! வாடின்னு பேசக்கூடாது! கை நீட்டி அடிக்க கூடாது. இப்படி மூணு, நாலு சொல்வார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் அவ்வளவு தான் ஆணாதிக்கம். மற்றபடி உட்கார்ந்தபடி கைநீட்டி டீ கேட்பது; காலாட்டி உட்கார்ந்து கொண்டு, மனைவி தான் தண்ணீர் தூக்கனும்; வேலை செய்ய வேண்டும் என நடந்து கொள்வது ஆணாதிக்கத்தின் வடிவம் என ஒரு ஆண் கருதுவதில்லை.
அதுபோல, பெண்ணும் கூட பெண்ணடிமைத்தனத்தை, ஜனநாயக உணர்வு கொண்ட பெண்கள் கூட இயல்பாக பல பெண்ணடிமை கருத்துக்களை, நடவடிக்கைகளை, வாழ்க்கை நடைமுறைகளை அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
இதையெல்லாம் நுட்பமான முறையிலே கவனித்து, இரண்டு பேரும் அதை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆணாக இருக்கட்டும்! பெண்ணாக இருக்கட்டும்! கணவன், மனைவியருக்கிடையே அல்லது நண்பர்களுக்கிடையே எழும் முரண்பாடாகட்டும் அதில், எது அடிப்படையாக அமைகிறது என்றால், நம்மீது மனைவியோ, நண்பர்களோ ஒரு தவறை நம்மீது சுட்டி காட்டும் பொழுது, தவறு என தெரிந்தாலும் ஏற்றுக்கொள்ள மறுப்பது தான்! தவறு என தெரியாமல் இருந்தால் அது வேறு விஷயம். தெரிந்தாலும் ஏற்றுக்கொள்ள மறுப்பது; அதில் வீம்பாக நின்றுகொண்டு, நியாயப்படுத்தி வாதம் செய்வது! இதுதான் உறவுகள் சிதைவதற்கு அடிப்படை!
இதை நாம் எப்பொழுது களைந்து கொள்வோம்? இவையெல்லாம் களைந்து கொள்ள வேண்டிய தவறுகள் என ஒரு ஒப்புக்கொள்ள (Conviction) வேண்டும். இரண்டாவது, முக்கியமாக ஆண்களுக்கு, தன்னைத்தானே விமர்சனம் செய்து கொள்கிற, தான் இரட்டை வேடக்காரனாக இருக்கிறேன் என்று தன்னைத் தானே சிரித்துக்கொள்கிற பக்குவம் வேண்டும். மனைவி சொன்னால், தான் அப்படித்தான் இருக்கிறேன் என உணரவேண்டும். இப்படி இருக்கும் பொழுது தான் சமத்துவம் நிலைநாட்டப்படும்.
இரண்டாவதாக, தன்னுடைய சொந்த வாழ்க்கையை சமூக நலனுக்கு உட்படுத்துவது. அப்படி ஒரு பொதுவாழ்க்கைக்கு சொந்த வாழ்க்கையின் இன்பங்களை விட்டுக்கொடுக்க தயாராய் இருப்பது! இதை செய்வது மிக கடினம். சொந்த வாழ்க்கையில் தனக்கு வசதி, வாய்ப்பு சாத்தியமென்றாலும், அது வேண்டாம் என்று தள்ளுகிற பக்குவம் வரவேண்டும்.
பொதுநலனின் பொருட்டு இந்த வசதிகளை நாம் அனுபவிக்க கூடாது அது ஒரு அறம் கொன்ற செயல் என உணர வேண்டும். மக்கள் மிகவும் சிரமப்பட்டு வாழ்கிற ஒரு நாட்டில், வசதி வாய்ப்பு எல்லாம் இருக்கிறது என்றாலும், அனுபவிப்பது என்பது அநாகரிகம் என்று கருதுகிற பக்குவத்தில், அதை ஏற்றுக்கொள்கிற பக்குவத்தில், ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள துணிந்திருப்பது என்பது முக்கியமானது.
மேலும், குழந்தை இருக்கிறது என்றால், அதை எப்படி வளர்க்க வேண்டும்? அந்த குழந்தைக்கு செய்து கொடுக்க வேண்டிய அத்தியாவசிய தேவைகள் என்ன? எவற்றுக்கு அந்த குழந்தையை பயிற்றுவிக்ககூடாது? எவையெல்லாம் தவறானவை; ஆடம்பரமானவை; உழைக்கும் மக்கள் பண்பாட்டுக்கு விரோதமானவை என்பதை தீர்மானிப்பதிலும்; அமுல்படுத்துவதிலும் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. இது ஒவ்வொன்றும் ஒரு போராட்டத்தின் ஊடாகத்தான் தீர்க்கப்படும்.
இது உறுதிமொழியில் முடிந்துவிடாது. பல தோழர்களுக்கு அது முடிவதில்லை. நுகர்பொருள் மோகத்தை எதிர்க்க வேண்டும் என்று சொன்னாலும், அதன் மீது மோகம் இருக்கிறது; சபலம் இருக்கிறது. அவர்கள் அப்படி இருக்கிறார்கள் என தங்களை ஒப்பிட்டு பார்க்கிறார்கள். ஏன் ஒப்பிட வேண்டும்? அப்படி ஒப்பிடுவதென்றால், திருக்குறளுக்கு போகவேண்டும்.
தம்மினும் மெலியாரை நோக்கித் தமதுடைமை
அம்மா பெரிதென்றகமகிழ்க.
பிளாட்பாரத்தில் வாழ்கிறவர்களோடு நம்மை ஒப்பிடலாமே! ஏன் வசதி, வாய்ப்பு இருக்கிறவர்களோடு ஒப்பிடவேண்டும்? உழைக்கும் மக்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்த்து, தங்களுடைய குடும்ப வாழ்க்கையை அதற்கேற்ப எளிமையாக்கி கொள்வதும், சமூக விடுதலைக்காக போராட்டத்தில் ஈடுபடுத்துவதும், அந்த சிந்தனையை முன்நிறுத்துவதும் அவசியம்.
இவையெல்லாம் கணவன், மனைவி ஒத்த வாழ்க்கை வாழ அவசியம். தன் குடும்பம், தன் சுற்றம் என்று மட்டும் கணவன், மனைவி வாழத் துவங்குவார்களேயானால் குடும்ப முரண்பாடு தவிர்க்கவே முடியாதது! எங்கே ஆணாதிக்கம் இல்லாது, நாகரிகமான, ஆண், பெண் உறவு நிலவும் என்றால், எந்த குடும்பம் சமூக நலனை முன்நிறுத்தி அதற்கு உட்பட்டது தான் தனது குடும்ப நலன் என எந்த கணவனும், மனைவியும் உறுதியோடு ஈடுபாடு கொண்டிருக்கிறார்களோ அந்த குடும்பத்தில் சமத்துவமும், மகிழ்ச்சியும் நிலவும்.
தோழர்களின் வாழ்விலும் அப்படிப்பட்ட சமத்துவமும், மகிழ்ச்சியும் நிலவும் என்ற நம்பிக்கையை தெரிவித்து, வாழ்த்த வாய்ப்பு தந்தமைக்கு, நன்றி கூறி விடைபெறுகிறேன்!
****
http://www.zshare.net/audio/98979787d4529b3a/
Subscribe to:
Post Comments (Atom)
1 பின்னூட்டங்கள்:
பகிர்வுக்கு நன்றி நண்பரே...
Post a Comment