March 15, 2012
தொடரும் உடன்கட்டை ஏறுதலும், கேள்விக்குள்ளாக்கப்படும் பெண்கள் உரிமையும்!
//”இந்தப் பாரம்பரியம் எங்கள் உயிரினும் மேலானது. உடன்கட்டையேறி உயிர் துறக்கும் விதவையானவள், உடலில் எத்தனை மயிர்க்கால்கள் உள்ளனவோ அத்தனை ஆண்டுகள், 3 கோடி ஆண்டுகள் சொர்க்கத்தில் வாழ்வாள்.” உடன் கட்டையேற்றும் பழக்கத்துக்கு எதிராக பிரிட்டிஷ் பிரபு பெண்டிங் கொண்டு வந்த சீர்திருத்தச் சட்டத்தை விலக்கிக் கொள்ளக் கோரி மன்னர்களும், 120 பார்ப்பனப் பண்டிதர்களும் கை ஒப்பமிட்டு அளித்த மனுவில் கண்டுள்ள வாசகம் இது.// - புதிய கலாச்சாரம்
******
மத்திய பிரதேசத்திலிருந்து, ஒரு குடும்பம் இராமேஸ்வரத்திற்கு இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஆன்மீக சுற்றுலா வருகிறது., வந்த இடத்தில், இராமநாதபுரத்தில் அரசு பேருந்தில், இவர்கள் வந்த கார் மோத சிலர் பலியாகின்றனர். அதில் பீபல்சிங் என்பவரும் ஒருவர்.
பீபல்சிங்-ன் மனைவி தனது மூன்று குழந்தைகளுடன் இராமநாதபுரத்தில் உள்ள காவல்துறையிடம் தஞ்சமடைகிறார். காரணம் அதிர்ச்சியானது. என் கணவர் இறந்ததால், அவர்களுடைய குல வழக்கப்படி வீட்டில் பின்புறம் அவரைப் புதைப்பதோடு, என்னையையும் உயிரோடு புதைத்துவிடுவார்கள். அதற்காக, என் கணவர் வீட்டினர் தங்களுடன் வர வலுக்கட்டாயமாக அழைக்கின்றனர். நான் என்னுடைய மூன்று குழந்தைகளுக்காக உயிரோடு வாழ விரும்புகிறேன். அவர்களை வளர்க்கவேண்டும். என் அப்பா இங்கே வந்துகொண்டிருக்கிறார். அவருடன் தான் செல்வேன் என மன்றாடியிருக்கிறார்.
அதற்குப்பிறகு, காவல்துறை பெண்ணின் மாமானார் குடும்பத்தை எச்சரித்து, அனுப்பிவிட்டதாம். வழக்கு எல்லாம் கிடையாது. இத்தோடு இந்த செய்தி முடிந்துவிட்டது.
இந்த செய்தி பல தொடர்கேள்விகளை எழுப்புகிறது. பதைபதைப்பை உண்டாக்குகிறது. உடன்கட்டை ஏறுவதெல்லாம் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே ஒழிக்கப்பட்டுவிட்டது என்கிற செய்தியை பொய்யாக்குகிறது. இன்றும் சமூகத்தில் மத வழக்கப்படி கமுக்கமாக நடந்துகொண்டு தான் இருக்கிறது என்பதை நீருபிக்கிறது.
தமிழகத்தில் தான் தாலி செண்டிமென்ட் பற்றி நிறைய விவாதித்துகொண்டிருக்கிறோம். உண்மையில், திருமணம் முடிந்த நாள் முதலாய், கணவன் எவ்வளவு காலம் வாழ்வானோ அவ்வளவு காலம் தான் தானும் வாழமுடியும் என்பது தான் 'விதி' என இருந்தால், "தாலி"யின் மகத்துவம் எகிறிவிடும் அல்லவா! ஒவ்வொரு நாளும் கணவன் வெளியே போய், வீடு திரும்பும் வரை பதைபதைப்புடன் வாழவேண்டிய நிர்ப்பந்தம். என்ன கொடுமை இது!
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில், ஆணும், பெண்ணும் சமம் என்கிறது. ஆனால் திருமண சட்டங்களை, மற்ற சட்டங்களைப் பொறுத்தவரையில், மத ரீதியான நம்பிக்கைகளையும், சடங்குகளையும் பலவற்றை ஏற்றுக்கொள்கிறது. இதன் மூலம் சமம் என்ற வார்த்தையை படுகுழியில் தள்ளிவிடுகிறது.
மதம் எப்பொழுதும் பிற்போக்கானது. பெண் என்பவள் ஆணுக்கு கீழானவள். தீட்டுப்பட்டவள் என பெண்களை எவ்வளவு இழிவுப்படுத்தமுடியுமோ, அவ்வளவு இழிவுப்படுத்துகிறது. ஆகையால், மதங்களின் செல்வாக்கை வீழ்த்தாமல், பெண்ணுரிமை காப்பது, போராட்டம் தான்.
இந்த செய்தியை தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணையம் மத்தியபிரதேசத்தில், எத்தனை பேர் கணவன் இறந்ததும், உடனடியாக காணாமல் போயிருக்கிறார்கள் என விசாரிக்கவேண்டும். அப்படி விசாரித்து, தோண்டப்படுகிற மனைவிமார்களின் எலும்புக்கூடுகள் 'பெண் உரிமைப்' பற்றி நம்மை பார்த்து ஏளனமாய் சிரிக்கும்.
தொடர்ச்சியான போராட்டங்களின் விளைவாக தான், பெண்களுக்கு பல்வேறு உரிமைகளை பெற்றிருக்கிறோம். இன்னும் கடக்கவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்பதை இந்த செய்தி நமக்கு உணர்த்துகிறது.
செய்தி ஆதாரம் : மார்ச் 13, தினத்தந்தி, சென்னை பதிப்பு.
பெண்ணின் விவரம் : வீராபதி 27. மகள் பூனம் 7, மகன் அனில் 3, 5 மாத குழந்தை பாதல்.
ஊர் : நகோடு தாலுகா, சத்தான மாவட்டம், மத்தியபிரதேசம்.
தொடர்புடைய பதிவுகள்
சில்க்ஸ்மிதா - ரூப் கன்வர் - ஒரு தற்கொலை; ஒரு கொலை - புதிய கலாச்சாரம்
Subscribe to:
Posts (Atom)