> குருத்து: September 2015

September 24, 2015

எவரெஸ்ட்

1996. உலகின் பல பகுதிகளிலிருந்து மூன்று குழுக்கள் உலகின் மிக உயர்ந்த (29029 அடி) பனி படர்ந்த சிகரமான எவரெஸ்டை தொட நேபாளம் வந்து சேருகிறார்கள்.

ஒரு குழுவின் வழிகாட்டியான அமெரிக்கர் ராப்பின் துணைவியார் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாள். குழந்தை பிறப்பதற்குள் வந்து சேருவதாக விடைபெறுகிறார்.  ஏற்கனவே ஆறு சிகரங்களில் ஏறி, ஏழாவது சிகரத்தில் ஏறவந்திருக்கும் ஜப்பானிய பெண்மணி, தனக்கு கருமேகங்கள் அடங்கிய வானம் தொடர்ந்து கனவில் வருவதாகவும், எவரெஸ்டை தொடுவதின் மூலம் தனது ஆழ்மன ஆசை நிறைவேறும் என சொல்லும் அமெரிக்கர், தான் எவரெஸ்டை தொடுவதின் மூலம் தனது பிள்ளைகள் அடுத்தடுத்து சாதிப்பார்கள் என சொல்லும் ஒரு தபால்காரர் என பலரும் அந்த குழுவில் இருக்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட தூரம் ஹெலிகாப்டரில் போய் சேரும் குழுவினர், பிறகு கட்டம் கட்டமாக மெல்ல மெல்ல மேலே மன உறுதியுடன் முன்னேறுகிறார்கள்.  கடுமையான பனி, வயோதிகத்தாலும் பிற உடல் தொந்தரவுகள், ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு என பல்வேறு பிரச்சனையால் சிலர் பின்வாங்குகிறார்கள். உறுதியோடு தொடர்பவர்கள் திட்டமிட்டபடி மே 10 அன்று எவரெஸ்ட் உச்சியை சிலர் மட்டும் தொடர்கிறார்கள்.  நாமே தொட்ட மாதிரி ஒரு உற்சாகம் நம்மை தொற்றிக்கொள்கிறது.

கீழே இறங்கும் பொழுது காலநிலை தலைகீழாக மாற்றமடைகிறது.  கடுமையான புயல் காற்று, மழை என தாக்குகிறது. அதில் சிலர் இறந்து போகிறார்கள். சிலர் போராடி கீழே வந்தடைகிறார்கள்.  நமக்கு ஏற்படுவது மாதிரி நாம் பதட்டமடைகிறோம்.  படம் முடிவடைகிறது.

உண்மை கதை என்பதால், மற்ற மலை ஏறுகிற மற்ற கற்பனை கதைகள் போல விறுவிறுப்பு குறைவாக இருந்தாலும், இமயத்தின் பிரமாண்டம், குவிந்து கிடக்கிற பனி, மனிதர்களின் மனோதிடம் எல்லாம் நம்மையும் கதைக்குள் நம்மையும் ஒரு ஆளாய் உள்ளே இழுத்துகொள்கிறது.

20000 அடிக்கு மேலே சென்றால், மரணப்பாதை என்றே சொல்கிறார்கள்.  உண்மை தான். ஒருமுறை 6000 அடி உயரமுள்ள கொடைக்கானலுக்கு சென்ற பொழுது ஆக்சிஜன் குறைவால் நான் பட்ட கஷ்டம் சொல்லிமாளாது. ஒரு மருத்துவரை சந்தித்து ஒரு ஊசி போட்டபிறகு தான் நிதானத்துக்கு வந்து சேர்ந்தேன். அந்த பயத்தில் சில வருடங்கள் கொடைக்கானல் பக்கம் எட்டி பார்க்காமலிருந்தேன்.  அந்த உணர்விலிருந்து நான் பார்க்கும் பொழுது ஒவ்வொரு 2000 அடி உயரும் பொழுதும் நமக்கு இரத்த அழுத்தம் கூடுகிறது. திரையரங்கிலும் குளிர் அதிகமாய் இருந்ததால், பனியின் தன்மையை அப்படியே உணரமுடிந்தது.


2010 ஆண்டு வரையிலும் எவரெஸ்ட் உச்சியை தொட்டவர்கள் 3142 என தகவல் சொல்கிறார்கள்.    பெண்கள், வயதானவர்கள், ஆக்சிஜன் உதவியில்லாமலே தொட்டுவிட்டு வந்தவர்கள் என பல சாதனைகளும் இருக்கின்றன. எவரெஸ்ட் செல்லும் பல கட்டங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் என்கிறார்கள். நீண்ட பட்டியலைப் பார்த்தால் பகீரென்று இருக்கிறது. 

எவரெஸ்ட் தொட்டவர்களில் நினைவில் நிற்பது உத்திரபிரதேசத்தை சார்ந்த அருணிமா. ரயிலில் சென்ற பொழுது தனது செயினை அறுத்துக்கொண்டு ஓடிய திருடனுடன் போராடிய பொழுது, ரயிலில் இருந்து தள்ளிவிட்டுவிட்டான். அதில் தனது காலை இழந்துவிட்டார். அத்தோடு துவண்டு விடாமல், இரண்டே ஆண்டுகளில் கடுமையாக பயிற்சி செய்து 2013ல் எவரெஸ்டை தொட்டிருக்கிறார். அசாத்தியமான மன வலிமை தான்!


படத்தில் ஒரு இடத்தில் ஒரு அமெரிக்க பயணி எவரெஸ்ட்டை தொட 65000 டாலர் கட்டியுள்ளேன் என்பார். இந்திய பணமதிப்பில் 40 லட்சம்.  இதில் சாமான்யனின் சாத்தியம் என்ன என்பதை யோசிக்க வேண்டியிருக்கிறது.
படம் பார்த்து உற்சாகம் வந்து நிறைய துட்டு இருந்தாலும், உடனே மலை ஏறிவிடமுடியாது.  முறையாக நேபாள அரசு அனுமதி பெறவேண்டும். காத்திருப்போர் பட்டியல் அதிகம். இதில் நிறுவனங்களின் போட்டி, பொறாமை எல்லாம் உண்டு. படத்திலும் ஆங்காங்கே வெளிப்படும்.
பார்க்கவேண்டிய படம் Everest. பாருங்கள்