> குருத்து: 2016

July 21, 2016

வயநாடு வரை போயிருந்தோம்!

சென்னையில் அடிக்கிற அக்னி நட்சத்திர வெயிலிருந்து மூன்று நாட்கள் தப்பிக்கலாம் என மலையும் மலைசார்ந்த இடமான கேரளாவின் வடபகுதியான வயநாடு வரை போய்வந்தோம்! கோழிக்கோடு வரை ரயில் பயணம். அங்கிருந்து பேருந்தில் மலைப்பயணம். வயநாட்டின் ஒருபகுதியான சுல்தான் பத்தேரியில் உள்ள ஹோட்டலில் தங்கினோம்.
குருவா டிவீப்

காலை 9 மணியளவில் முதல் ஆளாய் போய்சேர்ந்தோம்.   இயற்கை சூழலோடு இந்த ஆற்றுப்படுகை தீவுத்திட்டு கபினி ஆற்றில் அமைந்துள்ளது. 13 யானைகள் அந்த பகுதியில் சுற்றிக்கொண்டிருந்ததால், யாரையும் அனுமதிக்கவில்லை. காத்திருந்த ஒருமணிநேர வேளையில் கல்லால் அடித்து தித்திக்கும் நாவல் பழங்களை சாப்பிட்டோம். மிதகுகள் மூலம் கபினியை கடக்க உதவுகிறார்கள். ஒரு கிலோமீட்டர்வரை காட்டுக்குள் அனுமதி. போன யானைகள் மீண்டும் வந்துவிடுமோ என்ற பயமிருந்ததுஉள்ளே குளுகுளு என ஓடும் கபினியாற்றில் நிறைய நேரம் குளித்தோம். மக்கள் கூட்டம் கூட்டமாக வந்துகொண்டேயிருந்தார்கள்.
பாணசுரசாகர் அணை

கபினியின் துணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய கரைத்தடுப்புஅணை. திரைப்படங்களில் யாரையாவது கடத்திக்கொண்டு போவார்களே, அப்படி ஒரு வேகமாக செல்லக்கூடிய இன்ஜின் போட்டில் சுற்றிலும் பசுமையான மலைகளுக்கு மத்தியில்அதோ அந்த பறவை போல வாழவேண்டும்! இதோ இந்தஅலைகள் போல ஆடவேண்டும்என்ற பாட்டை கோரசாகப் பாடி, சாகச பயணம் செய்தோம்.   என்ன கொஞ்சம் காசுதான் அதிகம்! 6 பேருக்கு ரூ. 750 வசூலிக்கிறார்கள்.

அடுத்து, அணையின் அருகேயே இருந்த கர்லேட் ஏரியின் மேலே கம்பிகளின் வழியே  இடுப்பில் பெல்ட் போட்டு அந்தரத்தில் பயணித்த பொழுது கொஞ்சம் பதட்டமாகவும், சந்தோசமாகவும்தான் இருந்தது!
முத்தங்கா வனவிலங்கு சரணாலயம்

சுல்தான் பத்தேரியிலிருந்து 14 கி.மீ தூரத்தில் இருக்கிறது. கேரளாவில் முத்தங்கா, கர்நாடகத்தில் பந்திப்பூர், தமிழகத்தில் முதுமலை சரணாலயம் என மூன்று மாநிலத்திலும் மூன்று பெயர்களில் கோடைகாலத்திலும் பசுமையாக பரந்து நிற்கிறது ஒரேகாடு. காலை 7மணி முதல் 10மணிவரை. மாலை 3லிருந்து 5 மணிவரை காட்டுக்குள் அழைத்துசெல்கிறார்கள். 40ஜீப்கள் தான் காலையில் அனுமதி. மாலையிலும் கோட்டா தான். ஆகையால், காலை 7மணிக்கே போனால், 20பேர் நமக்கு முன்னால் வரிசையில் நிற்கிறார்கள். 16 கிமீ காட்டிற்குள் ஜீப்பில் பயணித்தபொழுதுமூன்று வெவ்வேறு இடங்களில் மான்கள் கூட்டம், 200 மீட்டர் தள்ளி எதையோ தின்றுகொண்டிருந்த  ஒத்த யானை, தயங்கி, தயங்கி காட்டுப்பாதையை கடந்து சென்ற காட்டெருமையை பார்த்தோம். 23புலிகள், 810 யானைகள் என பெரும்பட்டியலை ஓட்டுநர் சொல்லிக்கொண்டே போகும்பொழுது, பகீரென்று இருந்தது.  
அருவிகள்

மேற்குமலை தொடர்ச்சியில் மீன் முட்டி விழும் மீனுமுட்டி அருவி, சூச்சிப்பாறை அருவி என இன்னும் சில அருவிகள் இருந்தாலும், ஜூன் ஒன்றாம் தேதியிலிருந்து மழை விழத்துவங்கும் பொழுதுதான் அருவிகள் உயிர்பெறுகின்றனமே மாதத்தில் போனதால் நாங்கள் அருவிகளை இழந்தோம்.
செம்பரா சிகரம்

வயநாடு மாவட்டத்திலேயே உயரமான சிகரமாக கருதப்படும் இந்த சிகரம் கடல் மட்டத்திலிருந்து 2100 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறதுஇதன் உச்சியை தொட்டுவர ஒருநாள் டிரெக்கிங் போவது அவசியம். மூன்றுநாள் திட்டத்தில் ஒரு முழுநாளை ஒதுக்கமுடியாததால் போகவில்லை.
உணவு

எங்கு போனாலும் அங்கு வாழும் மக்களிடம் கேட்டாலே நல்ல ஹோட்டல் எதுவென சரியாக கைகாட்டிவிடுகிறார்கள். சென்னையை விட குறைவான விலையில் சுவையான டிபன் கிடைத்தது. மூன்று நாளும் மதிய வேளையில் கேரளத்தின் சுவையான பிரியாணியை வெவ்வேறு இடங்களில் சாப்பிட்டோம்.
நான் ரெம்ப சாப்ட். ரெம்ப அன்பானவாஎன அறிமுகப்படுத்திக்கொண்டு நீச்சல்குளத்தில் உற்சாகமாய் முங்கு நீச்சலடித்து, தெருவில் பழக்கப்படுத்திய யானை போனாலும், “நாங்க யானைப் பார்த்திட்டோம்என ஊரே கேட்கும்படி கத்தி, ‘என்லக்கில் தான் எல்லோரும் மான்கள், யானைகள் எல்லாம் பார்த்தீங்கஎன பயணம் முழுவதும் கலகலக்க வைத்த ஆறுவயது பூவரசி தான் எங்கள் பயணத்தை உற்சாகமாய் வழிநடத்திய குட்டித்தேவதை.
ஊர்வந்து சேர்ந்த அடுத்தநாள் காய்கறி வாங்க சென்றபொழுது, , தென்காசிகாரரான பாய், ’குற்றாலத்தில் சீசன் இப்பவே தொடங்கிருச்சு. அருவிகளில் தண்ணீர் விழுகிறதுஎன்று சொன்னதும் குற்றாலசாரல் மனதில் அடிக்க ஆரம்பித்தது.  யாரெல்லாம் குற்றாலம் வருகிறீர்கள்? :)

June 14, 2016

வீடு திரும்பல்!

பள்ளி முடிந்ததும்
கார், வேன், பைக் என
வசதிக்குதக்கவாறு பிள்ளைகளை
கவர்ந்து சென்றன!
அபூர்வமாய் சில குழந்தைகள் மட்டும்
கைகோர்த்து ஜாலியாய் நடந்து சென்றனர்.

பள்ளி முடிந்ததும்

வீடு திரும்புகிற ஒரு நாளில்
எட்டாம் வயதில்
ஒரு தேநீர் கடையில் தான்
கன்னித்தீவு சிந்துபாத்தும்,
’அழகி’ லைலாவும்,
மந்திரவாதி மூசாவும் அறிமுகமானார்கள்.

இன்னொரு நாளில்
பதினொன்னாம் வயதில்
ஒரு பெட்டிக்கடையில்
அம்புலிமாமாவும், பாலமித்ராவும்,
காமிக்ஸ் கதாநாயகர்களும்
நண்பர்களானார்கள்.
மற்றுமொரு நாளில்
பகுதி நூலகத்தில் உறுப்பினரானேன்!

பல ஆண்டுகள் உருண்டோடி,
இதோ இந்த இரவில்
'வீரம் விளைந்தது' நாவலை
மீண்டும் ஒருமுறை வாசித்துக்கொண்டிருக்கிறேன்!

January 29, 2016

ஒரு விபத்து : அனுபவமும் படிப்பினையும்!



டந்த வாரம் வேலை முடிந்து அம்பத்தூர் தொழிற்பேட்டையை கடந்த பொழுது, பரபரப்பான அந்த சாலையில் விளக்கு எரியாமல் இருட்டாக இருந்தது. அங்கு சிறு கூட்டம் கூடியிருந்தது. 24 வயதுடைய இளைஞனை சாலையோரமாய் கிடத்தியிருந்தார்கள். உடம்பில் எங்கும் அடியில்லை. பின்னந்தலையில் அடிபட்டு, ரத்தம் வந்திருந்தது. காதில் ரத்தம் வெளிவந்து உறைந்து போயிருந்தது.


சாலை விபத்து
(படம் – இணையத்திலிருந்து, விளக்கத்துக்காக மட்டும்)

பலரும் 108 ஆம்புலன்ஸை அழைத்தார்கள். எல்லா ஆம்புலன்ஸும் பிஸியாக இருந்ததாக சொன்னார்கள். நேரம் போய்க்கொண்டேயிருந்தது. ஒருவர் அங்கு கடந்த ஷேர் ஆட்டோவை நிறுத்தி விசயத்தை சொல்ல, பயணிகளை இறக்கிவிட்டு அந்த பையனை நான்குபேர் தூக்கி போட்டுக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு நகர்ந்தார்கள்.

இந்த களேபரத்தில் அந்தப் பையனிடமிருந்து எடுத்த செல்போனை யாரோ சுட்டுவிட்டார்கள். அந்த ஹோண்டா வண்டியில் சைடில் இருந்த பெட்டியில் ஆர்.சி. ஜெராக்ஸ் தாளில் இருந்த ஒரு எண்ணை கண்டுபிடித்து பேசிய பொழுது அடிப்பட்டவருடைய தம்பி பேசினார். உடனே மருத்துவமனைக்கு வரச்சொன்னோம்.

ஆம்புலன்சுக்கு போன் செய்யும் பொழுதே, அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள காவல்நிலையத்திற்கும் ஒருவர் போன் செய்து தெரிவித்தார். அந்தப் பையனை அவ்வளவு போராட்டத்திற்கு பிறகு மருத்துவமனைக்கு எடுத்து சென்ற பிறகு, காவல் நிலையத்திலிருந்து ஒரு போலீசும், போக்குவரத்து காவலர் ஒருவரும் அசமந்தமாய் வந்து சேர்ந்தனர். வண்டியை செந்நீர் குப்பம் எடுத்து செல்வதாய் தெரிவித்தார். அடிபட்டவருடைய செல்லை திருடிவிட்டார்களே என பொதுமக்களில் இருவர் மிகவும் ஆதங்கப்பட்டனர்.

இந்த விபத்தில் கவனிக்கத்தக்கவை :
  • தலையில் அடிப்பட்டு காதில் ரத்தம் வந்து கொண்டிருந்த அந்தப் பையனுக்கு ஒவ்வொரு நொடியும்  முக்கியமானது. ஆனால் 108 ஆம்புலன்ஸ் வெகுநேரமாகியும் வந்து சேரவில்லை.
  • 1970-களில் எம்.ஜி.ஆர் படங்களில் படத்தில் இறுதிக்காட்சியில் வருவது போலவே இப்பொழுதும் சாகவாசமாய் போலீசு வந்து சேர்கிறது. வந்தும் கூட எந்தவித பதைபதைப்பும் இல்லை.
  • அம்பத்தூர் தொழிற்பேட்டை என்பது சென்னையில் முக்கியமான தொழிற்பேட்டை. அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து வாவின் வரும் வழியில் உள்ள பிரதான சாலையில் தான் விளக்கெரியாமல் கும்மிருட்டாக இருந்தது. இந்த விபத்துக்கு அடிப்படை காரணம் இருட்டுதான். இந்த தொழிற்பேட்டையை பராமரிக்கும் பொறுப்பு AIEMA (AMBATTUR INDUSTRIAL ESTATE MANUFACTURER’S ASSOCIATION) -க்கு தான்! அந்த நாள் மட்டுமில்லை. அதற்கடுத்து வந்த நாட்களும் அங்கு கும்மிருட்டாக தான் இருந்து வருகிறது. இந்தப் பகுதியில் சாலை பராமரிப்பு, பார்க்கிங் பிரச்சனை, கால்வாய் பராமரிப்பு என பல பிரச்சனைகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து நிலவுகின்றன. அய்மாவின் தொடர்ச்சியான அலட்சியம் இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்கப் போகிறதோ!
  • இதே சாலையில் தான் தினமணியும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்கள் இயங்கிவருகினறன. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள பல அடிப்படை பிரச்சனைகளை தொடர்ந்து அம்பலப்படுத்தினாலே ஓரளவு நிலைமை சீராகும். செய்வதில்லை.
கவலைதரும் அம்சங்கள் :
  • அந்தப் பையனின் வண்டியில் முன்னாடி உள்ள பம்பர் நன்றாக வளைந்து வண்டியோடு ஒட்டிப் போயிருந்தது. பையனின் வண்டியை இடித்த நபருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பேயில்லை. இடித்துவிட்டு வண்டியை நிறுத்தாமல் போயிருக்கிறான்.
  • ஒரு உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் பொழுது, காப்பாற்ற வேண்டிய வேண்டிய நேரத்தில் செல்லை சுட்டு நகர்ந்த நபர். நுகர்வு கலாச்சாரம் மனிதர்களை இந்த அளவுக்கு சீக்குப்பிடித்த நபராக மாற்றுகிறது.
நம்பிக்கை தரும் அம்சங்கள் :
  • அந்த பையனை எப்படியாவது காப்பாற்றிவிடவேண்டும் பதறி, மருத்துவமனைக்கு தூக்கி சென்ற மனிதர்கள்.
  • தனது ஷேர் ஆட்டோவில் முழுவதுமாய் இருந்த பயணிகளை இறக்கிவிட்டு, பையனை தூக்கிச் சென்ற அந்த ஆட்டோகாரர்.
இரண்டு மூன்று நாட்கள் சாலையில் கிடத்தப்பட்டிருந்த அந்த பையனின் உருவம் நினைவில் ஓடிக்கொண்டேயிருந்தது. நடந்த நிகழ்வுகளை அசைபோடும் பொழுது, எனக்கென்னவோ சமூகம் கூட அந்தப் பையனின் நிலையில்தான் இருப்பதாகப் படுகிறது.


நன்றி : வினவு தளத்தில் 29/01/2016 கட்டுரை வெளிவந்தது.

அடிபட்டவர் நலமுடன் இருக்கிறார்!

இன்றைக்கு ஆவடி வரைக்கும் ஒரு வேலை இருந்தது.  அப்படியே அடிப்பட்டவரை நலம் விசாரிக்கலாம் என தோன்றியது. அடிப்பட்டவரின் ஓட்டுநர் உரிமத்தை அன்றைக்கு பார்த்தப்பொழுது வீடு திருமுல்லைவாயிலிருந்து, செங்குன்றம் போகிற வழியில் ஒரு கிராமம் தான் வீடு.  ஊரில் அந்த பையனின் தெருவிலிருந்து நாலு தெரு தள்ளி ஒரு கடையில் கேட்ட பொழுது கூட அந்த பையனைப் பற்றி சொன்னார்கள்.  இதெல்லாம் கிராமத்தில் மட்டும் தான் சாத்தியம்.

வீட்டிற்கு போன பொழுது, அடிபட்டவர் படுத்துக்கொண்டு டிவி பார்த்துக்கொண்டிருந்தார்.  ராம்கி, நிலம் விற்கும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார். அன்றைக்கு அலுவலக வேலை சம்பந்தமாக மதுராந்தகம் வரை போய்விட்டு திரும்பும் பொழுது தான் அடிப்பட்டிருக்கிறது. எப்படி விபத்து நடந்தது என்பது அவருக்கு சுத்தமாக நினைவில்லை. என்னை இடிச்ச ஆள், நிற்கவேயில்லை என சொன்னார்கள் என்றார்.  ஹெட்மெட் போடாமல் பெட்ரோல் டாங்கில் வைத்துக்கொண்டு சென்றிருக்கிறார்.  தலையில் அடிப்பட்டதினால் நாலு நாள் சொந்த அம்மாவையே அடையாளம் காணமுடியவில்லையாம்.  பிறகு நினைவுகள் திரும்ப வந்திருக்கின்றன.   வலது முட்டியில் தான் பலத்த அடி.  அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். ரூ. 50000 வரைக்கும் செலவானதாம்.

செல் காணாமல் போச்சுன்னு சொல்லிட்டுருந்தாங்க! உங்ககிட்ட அதுக்கப்புறம் யாரும் கொடுத்தார்களா? என்றதற்கு, ”இல்லண்ணா” என்றார்.  ”பர்சும் கூட காணாம போச்சுண்ணா! நிறைய பணம் இருந்ததுண்ணா” என்றார்.  அந்த களேபரத்தில் அவர் பர்சில் ஏதாவது போன் நம்பர் இருக்கிறதா என பார்ப்பதற்காக, வேகமாக பர்சை எடுத்து பார்த்த நபரை அன்றைக்கு கவனித்தேன். இப்பொழுது அந்த முகத்தை நினைத்துப் பார்க்கிறேன்.  சுத்தமாக நினைவில்லை!