> குருத்து: June 2016

June 14, 2016

வீடு திரும்பல்!

பள்ளி முடிந்ததும்
கார், வேன், பைக் என
வசதிக்குதக்கவாறு பிள்ளைகளை
கவர்ந்து சென்றன!
அபூர்வமாய் சில குழந்தைகள் மட்டும்
கைகோர்த்து ஜாலியாய் நடந்து சென்றனர்.

பள்ளி முடிந்ததும்

வீடு திரும்புகிற ஒரு நாளில்
எட்டாம் வயதில்
ஒரு தேநீர் கடையில் தான்
கன்னித்தீவு சிந்துபாத்தும்,
’அழகி’ லைலாவும்,
மந்திரவாதி மூசாவும் அறிமுகமானார்கள்.

இன்னொரு நாளில்
பதினொன்னாம் வயதில்
ஒரு பெட்டிக்கடையில்
அம்புலிமாமாவும், பாலமித்ராவும்,
காமிக்ஸ் கதாநாயகர்களும்
நண்பர்களானார்கள்.
மற்றுமொரு நாளில்
பகுதி நூலகத்தில் உறுப்பினரானேன்!

பல ஆண்டுகள் உருண்டோடி,
இதோ இந்த இரவில்
'வீரம் விளைந்தது' நாவலை
மீண்டும் ஒருமுறை வாசித்துக்கொண்டிருக்கிறேன்!