இது மனதிற்கான டீடாக்ஸ்
****
ஃபேஸ்புக்
நம் வாசிப்புப்பழக்கத்தை அடியோடு நிறுத்திவிட்டதா? அது நேரத்தை
விழுங்குகிறதா? நாம் ஏன் முன்புபோல நிறைய வாசிப்பதில்லை? என்கிற டைப்
கேள்விகளை இப்போதெல்லாம் அதிகமாக எதிர்கொள்கிறேன். சமீபத்தில் சில
நண்பர்களோடு இதுகுறித்து விவாதித்துக்கொண்டிருந்தேன். நண்பர்கள்
வெவ்வேறுவிதமான கருத்துகளை முன்வைத்தனர்.
1 - ஃபேஸ்புக் நம் நேரத்தை அதிகமாக விழுங்கிவிடுகிறது. அதில் நேரம் போவதே தெரியாமல் மூழ்கிவிடுகிறோம்.
2 - ஃபேஸ்புக்கில் ஒவ்வொருநாளும் நூற்றுக்கணக்கான பக்கங்களை நாம் அறியாமலேயே வாசிப்பது மனச்சோர்வை உண்டாக்குவது
3 - ஃபேஸ்புக் வாசிப்பிலேயே திருப்தி அடைந்துவிடுவது
4 - இப்போதெல்லாம் நூல்கள் வாசிக்க அத்தனை மகிழ்ச்சியாக இருப்பதில்லை. சுஜாதா போல எழுத யாருமே இல்லை.
இப்படி
ஆளாளுக்கு ஒவ்வொரு விதமான காரணங்களை முன்வைத்தனர். எல்லாமே ஏற்றுக்கொள்ளக்
கூடிய காரணமாகத்தான் இருந்தன. ஆனால் இதையெல்லாம் தாண்டி வேறொரு முக்கியமான
பிரச்சனை ஒன்று இருக்கிறது. அது கவனச்சிதறடிப்பு.
சமூக
வலைதளங்களுக்கு நாம் எப்படி அடிமையாக இருக்கிறோம்... என்பதைப்பற்றி சென்ற
ஆண்டு ஆனந்தவிகடனில் ஒரு கவர்ஸ்டோரி எழுதியிருந்தேன். அதற்காக நிறைய
ஆய்வுக்கட்டுரைகளை பத்து பதினைந்து நாட்கள் உட்கார்ந்து
வாசிக்கவேண்டியதாயிருந்தது. உலகம் முழுக்க வெவ்வேறு ஆய்வுகளில் இந்த
கவனசிதறடிப்பு என்கிற விஷயம் நம்மிடையே பரவிவருவதை பிரதானமான ஒன்றாக
குறிப்பிடுகிறார்கள்.
ஃபேஸ்புக்கில்
நீங்கள் ஒரே ஒரு ஸ்டேடஸை (சற்றே நீளமான) பொறுமையாக நிறுத்தி நிதானமாக
படிப்பதில்லை என்பது பலருடைய ஆய்விலும் தெரிந்திருக்கிற தகவல். ஒரு
வீடியோவைக்கூட நம்மால் முழுமையான கவனத்தோடு ஒன்றரை நிமிடங்களுக்கு மேல்
பார்க்க முடிவதில்லை என்கிறார்கள். அடுத்தடுத்து டைம்லைனில் நாம் காண்கிற
வெவ்வேறு செய்திகளும் தொடர்ச்சியாக நம் கவனத்தை சிதறடிக்கின்றன. எதையுமே
தவறவிடக்கூடாது என்கிற ஆவலும் சேர்ந்து கொள்ள நாம் எந்த ஒன்றிலுமே
முழுமையான கவனத்தோடு இருக்கமுடியாமல் போய்விடுகிறது. வாசிக்கும்போது
தலைக்கு மேல் ஒளிரும் சிகப்பு நிற நோட்டிபிகேஷன் உங்களை மேலும் மேலும்
பலவீனப்படுத்துகிறது.
இது
ஃபேஸ்புக்கில் மட்டும் அல்ல. நம் அன்றாட வாழ்விலும் கூட நிகழ
ஆரம்பித்திருக்கிறது. டிவி பார்ப்பது, மால்களில் ஷாப்பிங் செல்வது,
ஹோட்டல்களில் சாப்பிடுவது, நண்பர்களோடு உரையாடுவது என எல்லா இடங்களிலும்
இந்த கவனசிதறடிப்பு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. எங்கெல்லாம் அதிகமாக
சாய்ஸ்கள் இல்லாமல் இருக்கிறதோ அங்கெல்லாம் நம்முடைய கவனம் அதிகரிக்கும்.
ஆனால் நாம் எல்லாம் மோசமான நுகவர்வோர்களாக மாற்றப்பட்டு வருகிறோம். எதையுமே
பொறுமையாக யோசித்து ஆராய்ந்து தீர்மானிப்பதற்கு முன்னால் உங்களிடம் ஒரு
பொருளை விற்றுவிடவேண்டும் என்கிற வியாபார யுக்தி தொடர்ச்சியாக
செயல்படுத்துப்படுகிறது. அதன் ஒருபகுதியே இந்த கவனசிதறடிப்பு.
இத்தகைய
கவனசிதறடிப்பால்தான் நம்மால் நூல்களை முன்புபோல வாசிக்கமுடிவதில்லை.
முன்பெல்லாம் ஒரு சிறுகதையை ஒரே அமர்வில் படித்துவிடுகிற நாம், இப்போது ஒரு
சிறுகதைக்கு ஒன்பது இன்டர்வெல் விடுகிறோம்.
மொபைல்
பார்க்க, டிவி பார்க்க, பராக்கு பார்க்க என்று ஒன்றரை பக்கங்களுக்கு மேல்
நம்மால் தொடர்ச்சியாக கவனத்தை குவித்து எப்படிப்பட்ட ஜனரஞ்சக படைப்பையும்
வாசிக்க முடிவதில்லை. அதற்கு மாறாக ஒவ்வொரு நாளும் ஃபேஸ்புக்கில் எந்த
படைப்பையும் ஆழ்ந்து வாசிக்காமல் ஸ்கிப் செய்து வாசிக்கவும், வாசிக்காமல்
நகர்வதையும், ஒரு படைப்பின் முதல் இருவரிகள் பிடிக்கவில்லை என்றால் அடுத்த
படைப்பிற்கு தாவுவதையும் நாம் அறியாமலே பயில்கிறோம். நூல்களை எடுத்து
வாசிக்க அமரும்போது அந்த ஃபேஸ்புக் பயிற்சி நம் கவனத்தை மேலும் மேலும்
சிதறடிக்கிறது. முதல் இரண்டு பக்கங்களே சோர்வைத்தருகின்றன.
நம்முடைய
வாசிப்பு கணிசமாக குறைந்து போனதற்கு முழு முதற்காரணம் கவனசிதறல்தான்.
அதனால்தான் நம்மால் ஃபேஸ்புக்கில் யாராவது 300சொற்களுக்கு மேல் எழுதுவதை
வாசிக்க முடிவதில்லை. ஃபேஸ்புக்கில் அதிகமாக நேரம் செலவிட்டாலும் தொடர்ந்து
திரைப்படங்கள் பார்க்க நம்மால் முடிகிறது. ஊர்சுற்ற முடிகிறது.
நண்பர்களோடு உரையாட முடிகிறது.ஆனால் ஏன் புத்தகங்கள் வாசிக்கமுடிவதில்லை?
திரைப்படம் பார்ப்பது போலவோ, உணவு உண்பதைப்போலவோ எளிதான செயல் அல்ல புத்தக
வாசிப்பு. அதன் ஆதாரமாக இயங்குவது கவனம்.
*******
இதை
சரிசெய்வது எப்படி என வெவ்வேறு விதமான விஷயங்களின் வழி முயற்சி
செய்திருக்கிறேன். ஒட்டுமொத்தமாக இங்கிருந்து விலகுவது என்பது நல்ல தீர்வாக
இருக்காது. பயணம் போவது கூட பலன் தரவில்லை. காரணம் வாசிப்புப் பழக்கத்தை
மீட்டெடுப்பதோடு கவனச்சிதறலையும் சரிசெய்ய வேண்டும். கவனச்சிதறல் என்பது
நேரடியாக நம் வாழ்வை பாதிக்கக்கூடியதாக இருக்கிறது. அலுவலகத்தில் வீட்டில்
எதையுமே கவனத்தோடு செய்ய முடியாமல் போவது அதன் இன்னொரு கோணம். இந்த
கவனசிதறல் சிக்கலில் இருந்து மீளவும், மீண்டும் பழையபடி உற்சாகமாக வாசிக்க
விரும்புகிற நண்பர்கள் சிலருக்காக ஒரு சின்ன சவால் ஒன்றை உருவாக்கினேன்.
''50 Books Challenge"
இந்த
சவால் மிக எளிமையானது. இன்றுதான் சவாலைத் தொடங்குகிறீர்கள் என
வைத்துக்கொள்வோம். இன்றிலிருந்து ஃபேஸ்புக், ட்விட்டர் முதலான
சமூகவலைதளங்களை பர்சனல் விஷயங்களுக்காக பயன்படுத்தாதீர்கள். லாக் ஆஃப்
செய்துவிடவும். அடுத்து வரும் நாட்களில் உங்களுக்கு பிடித்தமான 50 நூல்களை
வாசிக்க ஆரம்பியுங்கள்.
50
நூல்களையும் முழுமையாக வாசித்து முடிக்கும் வரை ஃபேஸ்புக்கிற்கு
திரும்பாதீர்கள். 50நூல்களையும் ஒரே நாளில் வாசித்தாலும் சரி ஒருவருடத்தில்
வாசித்தாலும் சரி... ஆனால் முழுமையாக 50நூல்களையும் வாசித்து முடித்த
பிறகுதான் மீண்டும் ஃபேஸ்புக்கிற்கு திரும்பவேண்டும். திரும்பியதும் அந்த
50நூல்களின் பட்டியலையும் வெளியிடுங்கள். அவ்வளவுதான் 50புக்ஸ் சேலஞ்ச்.
இது
கொஞ்சம் கடினமான சவால்தான் என்றாலும். நிச்சயம் நல்ல பலன் தரும்.
கவனசிதறடிப்பு பிரச்சனையிலிருந்து மீண்டுவர உதவும். நண்பர்கள் சிலர் அதை
இப்போதும் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒல்லி ஒல்லியான நூல்களை கூட
தேர்ந்தெடுத்து படித்து முடித்துவிட்டு இங்கே ஓடிவந்துவிடலாம். ஆனால் 50
மஸ்ட்டு. இதன்மூலம் பழையபடி வாசிப்புப்பழக்கம் அதிகரிக்கும், ஒரு சவாலை
செய்து முடித்தோம் என்கிற திருப்தி, ஃபேஸ்புக் பிடியிலிருந்து சிறிய
விடுதலை என நிறைய பலன்கள் கிடைக்கும்.
இது
ஒருவகையான மனதிற்கான Detoxதான். எல்லோருக்குமே இதுத் தேவைப்படாது.
தேவைப்படுபவர்கள் செய்துபார்க்கலாம். இந்த சவாலில் நீங்களேதான் உங்களுக்கு
அம்பயர். நீங்களேதான் உங்களை கண்காணித்து வழிநடத்த வேண்டும்.
எனவே
ஒரு சுயபரிசோதனை முயற்சியாக நான் இன்றிலிருந்து 50Books Challange ஐ
தொடங்குகிறேன். 50நூல்களை வாசித்துமுடித்துவிட்டு இங்கே திரும்புகிறேன்.
என்னோடு நண்பர்கள் விரும்பினால் இணையலாம்.
அதுவரை டாட்டா பைபை....
- அதிஷா,
பத்திரிகையாளர்