> குருத்து: கரையெல்லாம் செண்கப்பூ - சுஜாதா

December 4, 2018

கரையெல்லாம் செண்கப்பூ - சுஜாதா

நாட்டுப்புற பாடல்களை சேகரிக்க பட்டணத்திலிருந்து நாயகன் கிராமத்திற்கு வருகிறார். ஒரு காலத்தில் ஜமீனாக இருந்த அந்த பழைய வீட்டில் இப்பொழுது தனியாளாக தங்குகிறார். வீட்டில் இரவில் சில மர்மங்கள் நடக்கின்றன. பாடல்களை ஆய்வு செய்ய வந்தவர், வீட்டையும் அவ்வப்பொழுது ஆய்வு செய்கிறார்.

இதற்கிடையில் ஜமீந்தாரின் பேத்தியும் நகரத்திலிருந்து வந்து சேர்கிறாள். அந்த வீட்டிலேயே அவளும் தங்குகிறாள். கொஞ்ச நாளில் அவள் மர்மமான முறையில் கொல்லப்படுகிறாள். பேய் அடித்துவிட்டது என ஊர்க்காரர்கள் சிலரும், ஊர்க்கார பெண் ஒருத்தி கொன்றுவிட்டாள் என சிலரும் பேசிக்கொள்கிறார்கள்.

கொலை செய்தது யார்? வீட்டில் நடக்கும் மர்மங்களுக்கு காரணம் யார்? என்பதை மீதி கதையில் சொல்கிறார்கள்.

*****


ஆனந்தவிகடனில் 21 வாரம் வெளிவந்து வாசகர்களிடம் பரவலாக பேசப்பட்ட தொடர் இது. சுஜாதா சொல்கிறார் “நாவல் வெளியானதும் ஒரு கிரிக்கெட் டீம் அளவிற்கு தயாரிப்பாளர்கள் வீட்டிற்கு படை எடுத்தார்கள். அதில் பாலுமகேந்திரா, பஞ்சு அருணாச்சலம் என பல பிரபலங்களும் அடக்கம்”

பிறகு மெல்ல மெல்ல சுதி குறைந்து, பிரதாப் போத்தன், ஸ்ரீபிரியா, மனோரமா என பலர் நடித்து, சி.என். இரங்கராஜன் இயக்கியிருக்கிறார். இந்த கதைக்காக ஒரு தயாரிப்பாளர் முன்பணமான ரூ. 5000 தந்துள்ளார். அவர் படம் பண்ணவில்லை என்று ஆனதும் முன்பணத்தை சின்சியராக திரும்ப வாங்கி கொண்டாராம். அதில் வங்கி செலவு ரூ. 10 ஆகியுள்ளது. எடுத்த கதைக்கு ஒத்த ரூபாய் கூட கொடுக்கவில்லை என சுஜாதாவே தனது பேட்டியில் கொஞ்சம் சூசகமாக சொல்லியிருக்கிறார். இப்படிப்பட்ட சினிமாக்காரர்கள் தான் இலவசங்களைப் பற்றி வியாக்கியனம் செய்கிறார்கள்.

சுஜாதா மட்டும் இந்த கதையை எழுதாமல், வேறு யார் எழுதியிருந்தாலும், பிரதாப்பை இறுதியில் ஆய்வாளர் இல்லை. ரகசிய போலீசு என சொல்லியிருப்பார்கள்.



படம் ஊத்திகிச்சு. ஒரு வாரம் கூட ஓடவில்லை. சில டல்லான சானல்களில் இந்த படத்தை அவ்வப்பொழுது போடுவார்கள். “ஊரெல்லாம் பிச்சிப்பூவு, கரையெல்லாம் செண்பகப்பூ”, ”ஏரியில எலந்த மரம்” இளையராஜாவின் பிரபல இரண்டு பாடல்களை நாம் கேட்டிருப்போம்.

0 பின்னூட்டங்கள்: