> குருத்து: January 2025

January 31, 2025

அம்மா உணவகமும் மக்களும்!


எங்களுடைய பகுதி சென்னையில் புறநகர் பகுதி. அங்கு ஒரு அம்மா உணவகம் இருக்கிறது. அங்கு வேலை செய்யும் நடுத்தர வயது பெண்மணியிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

 

காலையில் இட்லி - சாம்பார், மதியம் கலவை சோறு  - தொடர்ந்து சாப்பிடுகிறவர்கள் என்னக்கா! போரடிக்கிறது! சோறு மாத்துக்கா! என கோரிக்கை வைத்தால், ஒரு நாள் சாம்பார் சோறு, ஒருநாள் தக்காளி சோறு, ஒருநாள் கருவேப்பிலை சோறு என மாற்றி சமைப்பதற்கு எங்களுக்கு அனுமதி உண்டு.

 

இரவு சப்பாத்தி, சாம்பார்.  முன்னாடி கொஞ்சம் கசப்பு இருந்ததே! எனக் கேட்டால், ”கோதுமையில் ஈரப்பதம் இருப்பதால் அந்த பிரச்சனை. இப்பொழுது வருகிற கோதுமை நன்றாக இருக்கிறது. ஆகையால் சப்பாத்தியும் நலம்” என்கிறார்.

 

யார் சாப்பிட வருகிறார்கள் என கேட்டால்… “வட மாநில தொழிலாளர்கள், செக்யூரிட்டி வேலை செய்பவர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், வயதானவர்கள்” என வருகிறார்கள்.

 

எவ்வளவு வசூல் என பார்த்தால், காலையில் ஒரு ரூபாய் ஒரு இட்லி. ரூ. 1000 வரை விற்போம். (அப்ப 1000 இட்லி. ஒரு ஆளுக்கு ஐந்து இட்லி என சராசரி பார்த்தால் 200 பேர் என கணக்கிடலாம்.) ஒரு கலவை சோறு ரூ. 5.  மதியம் ரூ. 300 வரைக்கும் போகும். அப்ப 60 பேர் என கணக்கிடலாம். இரவும் ரூ. 300 வரைக்கும் விற்கும்.

 

ஒரு நாளைக்கு இரண்டு குழு. ஒரு குழுவில் 3 பெண்கள். மாத்தி மாத்தி சமைப்போம்.  சமைக்கிற ஆளுக்கு தகுந்த மாதிரி அதன் ருசியும் மாறும். ஒரு பெண் கூடுதலாக டோக்கன் கொடுத்து, பணம் வாங்குகிறவர். ஆக மொத்தம் 7 பெண்கள்.

 

எவ்வளவு சம்பளம் என கேட்டால்? முன்பு ஒரு நாளைக்கு ரூ. 300. இப்பொழுது ரூ. 25 அதிகப்படுத்தி, ரூ. 325 தருவதாக சொல்கிறார்.

 

ஆக கணக்குப் போட்டால், ஒரு நபருக்கு ரூ. 10000 என்றால் ஏழு பேருக்கு ரூ. 70000.  வசூலை கணக்கிட்டால் (அவர்கள் சொன்னதையே சரி என எடுத்துக்கொண்டால்… ரூ. 1000+300+300 = 1600 * 30 நாட்கள் )  ரூ. 48000.  மற்றபடி மின்சாரம், அரிசி, பருப்பு, கேஸ் என எல்லா செலவுகள் தனி.  ஆக ஒரு வருடத்திற்கு ஒருமுறை ஒரு கணிசமான தொகை ஒதுக்கி தான் இந்த செலவுகளை அரசு மேற்கொள்கிறது எனலாம்.

 

மற்றபடி நட்டம் என்பதாக நாம் சொல்லமுடியாது. இந்த சமூகம் கடந்த முப்பது ஆண்டுகளில் சமூக ஏற்றத்தாழ்வு அதிகரித்து கொண்டே செல்கிறது. உலகத்தில் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இந்திய முதலாளிகளும் வரிசையில் நின்றிருக்கிறார்கள்.   இந்த அரசை நடத்துவதே கார்ப்பரேட்டுகளும், இந்திய பெரும் முதலாளிகளும் தான் என்பது நடைமுறையில் பளிச்சென தெரிகிறது.. அதனால் தான் மறைமுகமாக நிறைய சலுகைகளும், மானியங்களும் அவர்களுக்கு அள்ளித் தரப்படுகிறது. 

 

வறிய நிலையில் உள்ள மக்கள் அரசை எதிர்த்து போராட துவங்கிவிடுவார்கள் என்று தான் அம்மா உணவகங்களும், கிராமப்புறங்களில் நூறுநாள் வேலை திட்டங்களும் அமுல்படுத்தப்படுகின்றன.  முதலாளிகளுக்கு அள்ளித்தந்தால், வறியவர்களுக்கு கிள்ளித் தருகிறார்கள் எனலாம்.  ஆனால் இதெல்லாம் நீண்ட நாட்களுக்கு தாங்காது என்பது முக்கியமானது.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

January 28, 2025

எப்பொழுது வாழப்போகிறோம்?


பிரதி மாதம் துவங்கி…

வாடிக்கையாளர்களிடம் பேசிப் பேசி களைத்து

ஒரு வழியாய் பில்களைப் பெற்று,

மக்கர் செய்யும் ஜி.எஸ்.டி தளத்தோடு மல்லுக்கட்டி,,

இறுதி நாட்களில்
இரவும் பகலுமாய் உழைத்து

GSTR1 ஐ ஒருவழியாய் முடிக்கும் பொழுது

மாராத்தான் ஓடியது போல

வெகுவாய் களைத்துப் போகிறோம்.

 

பிறகு மீண்டும்

அதே திசையில்

இன்னும் வேகமாய் ஓடி..

பணத்தை செலுத்த

பலமுறை நினைவூட்டி

GSTR3Bயை முடிப்பதற்குள்

தலையில் ஒரு நரை ஒன்று

புதிதாய் பூத்துவிடுகிறது.

 

இடைப்பட்ட நாட்களில்…

நோட்டிஸ் வந்திருக்கிறதா என

தளத்தை உத்துப் பார்த்துக்கொண்டு,

நோட்டீஸ்,  அப்பீல்,  வழக்கு,

ஜி.எஸ்.டி அலுவலகத்திற்கு

நடையாய் நடைந்து...

அதிகாரிகளுக்காக காத்திருந்து…

நாட்கள் நம்மை பரபரப்பாய்

நகர்த்துகின்றன.


புதிய புதிய அறிவிப்புகள்

புதிய புதிய வழக்குகள்

ஒரு மாணவனைப் போல

கவனமாய் கற்கிறோம்.

பெரும் அம்பு மழையாய் நோட்டீஸ்கள்

நம்மை தாக்குகின்றன.

 

முந்தைய காலத்தை விட

அதிகமாய் உழைக்கிறோம்.

விலைவாசியும் , செலவுகளும்

அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

பொறுப்புகள்

பெருகிகொண்டே செல்கின்றன.

இருபது தேதிக்கு மேல்

பற்றாக்குறை

புதுப்புது கடன்களை

பெற்றெடுத்துக்கொண்டே செல்கிறது.

ஆனால் இந்த வருமானம் மட்டும்

தத்தி தத்தி நகர்கிறது.

 

எல்லாவற்றையும் எதிர்கொண்டு

கட்டணத்தைக் கேட்டால்..

”சேல்சே இல்லை சார்

கலெக்சனே கம்மி சார்”என

நம்மிடமே கதை சொல்கிறார்கள்.

குடும்ப சோககதை,

நெருக்கடி கதைகளை

நம்மிடம் கதைக்கிறார்கள்.

நம் சிரமங்களை

நாம் யாரிடம் சொல்ல முடியாமல்

தவித்து திரிகிறோம்.

 

வசூல், மேலும் வசூல்

வரலாறு காணாத வசூல் என

ஓவ்வொரு மாதமும்

மகிழ்ச்சியாய்

அரசு அறிவித்துக்கொண்டே இருக்கிறது.

செய்யும்  சேவைக்கு

வாங்கும் வித்தை கற்காமல்

ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

உழைத்துக்கொண்டே இருக்கிறோம்.

 

உழைத்து,

கடுமையாய் உழைத்து

பென்சன் இல்லாத

இந்த வாழ்வில்

நாளின் இறுதி வரை                                                                                                                  

மாதத்தின் இறுதிவரை

ஆண்டின் இறுதிவரை

பராசக்தியின் கல்யாணியைப் போல

வாழ்க்கையின் இறுதிவரை

ஓடிக்கொண்டே இருக்கிறோம்.


நடிகர் அஜித்

சமீபத்தில் சொன்னது போல

 

“நாம் எப்பொழுது வாழப்போகிறோம்?”

 

நன்றி.

 

வணக்கங்களுடன்…

-         இரா. முனியசாமி


குறிப்பு : குடியரசு தின விழாவை ஒட்டி, நமது GST Professionals Society ல் இணைய வழியில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தார்கள். அதில் கலந்துகொண்டு வாசித்தது! எப்படி இருக்கிறது என நீங்கள் தான் சொல்லவேண்டும்.

மேலே உள்ள படம் AI தந்தது. Deepseek யிடம் கேட்கலாம் என நினைத்தால், நான் ரெம்ப பிசி என்கிறது.

எல்.ஐ.சி குடும்பத்திற்கு பாதுகாப்பு தருவதோடு, சேமிப்பிற்கும் வழிவகுக்கிறது.


பிரிய நண்பர்களுக்கு,

வணக்கம். வாழ்வின் இயல்பான போக்கில், வேலை செய்கிறோம். வருமானம் ஈட்டுகிறோம். தேவையான செலவுகளை செய்கிறோம். சில விருப்பமான செலவுகளையும் செய்கிறோம்.

ஒருவர் தன் மாத வருமானத்தில் குறைந்தப்பட்சம் 15% சேமிக்கவேண்டும். சம்பளத்தின் முதல் செலவாக சேமிப்பை ஒதுக்கவேண்டும் என வலியுறுத்துகிறார்கள். ஆனால் வரும் வருமானத்தில் வரும் செய்த செலவுகள் போக ஏதாவது மிஞ்சினால் சேமிக்கலாம் என நினைக்கிறோம். ஆனால் எதுவும் மிஞ்சாமலேயே போகிறது. கூடுதலாக மாத இறுதியில் சின்ன சின்ன மைமாத்து போன்ற சின்ன சின்ன கடன்களையும் பெற துவங்கிவிடுகிறோம்.

இப்பொழுது நிலைமை இப்படி இருக்கும் பொழுது, குழந்தைகளின் உயர் கல்விக்கு, எதிர்பாராமல் வரும் மருத்துவ செலவுகளுக்கு, ஓய்வு பெற்ற பிறகு மாதந்திர தேவைகளுக்கு நாம் என்ன செய்ய போகிறோம்? என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. நினைத்தால் கொஞ்சம் பயமூட்டுகிற விசயம் தான். அதனால் தான் அதனை எல்லாம் நினைத்து பார்க்காமலேயே வாழ்க்கையை நகர்த்துகிறோம்.

இந்த இடத்தில் அரசின் நிறுவனமான, மக்களின் நம்பிக்கை பாத்திரமான எல்.ஐ.சி. நமக்கு உதவுகிறது. 1956ல் சிறிய முதலீட்டில் துவங்கப்பட்ட நிறுவனம் கிட்டத்தட்ட 55 லட்சம் கோடிகளில் பெரிதாக வளர்ந்து நிற்கிறது. கோடிக்கணக்கான மக்கள், தங்களது தேவைக்கு ஏற்ப பாலிசிகளை எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

நாம் செலுத்துகிற பணத்திற்கு வங்கிகள் குறைந்தப்பட்ச வட்டி தருவதோடு நின்றுவிடுகிறது. அதன் வரம்பு அவ்வளவு தான். எல்.ஐ.சி குடும்பத்திற்கு பாதுகாப்பு தருவதோடு, சேமிப்பிற்கும் வழிவகுக்கிறது.

ஆகையால், இனியாவது நம் வருமானத்தின் ஒரு பகுதியை எல்.ஐ.சி பாலிசி எடுப்பதின் மூலம் குடும்பத்திற்கான பாதுகாப்பை உருவாக்குவோம்.
ஒவ்வொரு தனிநபரின் வருமானத்திற்கு ஏற்ப உரிய திட்டங்கள் எல்.ஐ.சியில் இருப்பது சிறப்பு. அதை நாம் பயன்படுத்திக்கொள்வோம்.

நான் ஏற்கனவே ஜி.எஸ்.டி, பி.எப்., இ.எஸ்.ஐ, வருமான வரி ஆலோசகராக இயங்குவது உங்களுக்கு தெரியும். அதோடு எல்.ஐ.சி முகவராகவும் கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வருகிறேன்.

ஆகையால், எல்.ஐ.சி பாலிசி குடும்பத்திற்கு எடுப்பதற்கும் தயங்காமல் அழையுங்கள்.

நன்றி.

வணக்கங்களுடன்,
இரா. முனியசாமி

குறிப்பு : இன்று (26/01/2025) எல்.ஐ.சி பாராட்டி, மெடல் தந்து உற்சாகப்படுத்திய பொழுது!

பாட்டல் ராதா (அ) பாட்டில் ராதா


தமிழ்நாட்டில் குடிகாரர்களும், குடி நோயாளிகளும் அதிகம். ஆனால் இதனால் கல்லாக் கட்டுகிற அரசுகளும், அதிகாரத்தில் உள்ள ஆட்களும் அதற்குரிய மருத்துவ "பரிகாரங்களை" செய்வதில்லை. போதிய மறுவாழ்வு மையங்களையும் உருவாக்குவதில்லை.


இதனால் கண்ணுக்கு தெரிந்தும், தெரியாமலும் பல நூறு குடும்பங்கள் அழிகின்றன.

அந்த கதைகளில் ஒன்றை எடுத்து படமாக்கியிருக்கிறார்கள்.

இயக்குநர் அமீர் பேசும் பொழுது மலையாளத்தில் மோகன்லால் நடித்த ஸ்பிரிட், ஜெயசூர்யா நடித்த வெல்லம். இரண்டும் குடி சம்பந்தமான நல்ல படங்கள் என்றார். பார்க்கவேண்டும்.

படத்தின் நாயகனான குரு சோமசுந்தரம் பிடித்த நடிகர். இயக்குநர் தினகரன் சிவலிங்கம். தயாரிப்பு நீலம் புரடக்சன்ஸ்.

கல்யாண கலாட்டாக்கள்


நேற்று ஒரு திருமண வரவேற்பு போயிருந்தோம். மாலை ஆறு மணி என வழக்கம் போல குறிப்பிட்டிருந்தார்கள். நேற்று மழை வேறு தூவிக்கொண்டிருந்தது. பெரிய மழையாய் வருவதற்குள் போய்வந்துவிடலாம் என நானும் என் பெண்ணும் கிளம்பினோம்.

7.30க்கு நுழையும் பொழுது, சொற்பமான ஆட்கள் மட்டும் அந்த ஹாலில் இருந்தார்கள். உள்ளே ஒரு DJ பாடல்களை போட்டு அதிரவைத்து கொண்டிருந்தார். பாடல்களை கேட்கலாம் என நினைத்தால், அதிரும் இசையால் நெஞ்சு தடதடக்க ஆரம்பித்துவிட்டது. இனிமேல் இங்கு இருந்தால், நமக்கு சரிப்பட்டு வராது என வெளியே வந்துவிட்டோம்.

திருமண வீட்டினர் கொஞ்ச தூரம் ஒரு கோவிலில் ஏதோ சடங்கு செய்வதற்காக போயிருந்தனர்.

8 மணி வரை வெளியே இருந்துவிட்டு உள்ளே போனால், மணமக்களை காணவில்லை. பந்தி ஆரம்பித்துவிட்டது. போய் சாப்பிட்டு விட்டு வந்தாலும் இன்னும் வந்த பாடில்லை. காத்திருந்தோம்.

மணமக்கள் வருகிறார்கள் என ஒரு பெரிய பாதையை சேரை எல்லாம் எடுத்துப்போட்டு உருவாக்கினார்கள். மணமக்கள் உள்ளே நுழைய, திரையில் கனவு பாட்டுகளில் வருவது போல, ஒரு இளைஞர் வெள்ளைப் புகையை உருவாக்கினார். நான்கு இளம்பெண்கள் மணமக்களுக்கு முன்பு மலர்ந்து புன்னகைத்தப் படி ஒத்திசைவாக ஆடினார்கள். இரண்டு கேமராக்கள் கவனமாய் படம் பிடித்தார்கள். மேடையில் ஏறியதும், பரிசையும் வாழ்த்துகளையும் தெரிவித்துவிடலாம் என சிலர் மேடையில் வந்துவிட்டார்கள். எப்பா கிளம்பணும்பா! என ஒரு குடும்பஸ்தர் சத்தமாகவே சொன்னார்.

அந்த ஆட்டம் பாட்டம் இன்னும் முடியவில்லை என சொல்ல, அவர்களை எல்லாம் காத்திருக்க சொல்லி, இன்னும் பாடல்களைப் போட்டு ஆட துவங்கினார்கள்.

எங்களுடைய பகுதிக்காரர் ஒருவர் பரிசைத் தர முன்னாடி கொண்டிருந்தார். அவரிடம் எங்களுடைய புத்தகங்களையும் மணமக்களுக்கு கொடுத்துவிட சொல்லிவிட்டு, கிளம்பிவந்துவிட்டோம்.

பொதுவாக மணவீட்டார் வழக்கமான மரபு ரீதியான சில சடங்குகளை செய்கிறார்கள். நவீன டிரெண்ட் படி, மணமக்கள் தங்கள் பிரியத்திற்கு இப்படி ஆட்டம், பாட்டம் என ஏற்பாடு செய்கிறார்கள். செய்யட்டும். ஆனால் சடங்குகிற்கும், கொண்டாட்டத்திற்கும் எவ்வளவு நேரம் செலவாகும் என்பதை சரியாக கணக்கிடுவதில் தவறிழைக்கிறார்கள் என கருதுகிறேன். இறுதியில் கலந்துகொள்பவர்கள் தான் சிக்கலுக்குள்ளாகிறார்கள்.

அரங்கு நிறைந்த கூட்டம். ஆனால் மணமக்கள் மேடைக்கு வருவதற்கே 8.30க்கு தான் வந்தார்கள். மழை வேறு இருட்டிக்கொண்டு வந்துகொண்டிருந்தது. இவங்க எப்ப முடிப்பாங்க? நாம எப்ப பரிசு கொடுத்து கிளம்புவது என கவலையோடு இருந்த மாதிரி தான் எனக்குப்பட்டது.

சமீபத்தில் ஹிருதயம் ஒரு மலையாள படம் பார்த்த பொழுது, மிகவும் நெருங்கிய சுற்றத்தாரை மட்டும் வரவழைத்து, வண்ண மயமாக ஒரு திரைப்பட காட்சி போல எடுத்து தருவதாக சொல்வார்கள். அதற்கு பெயர் intimate wedding. இனி வரும் காலங்களில் அப்படித்தான் நிலைமை ஆகிடும் போல!

இவ்வளவு நிறைய செலவுகளுடன் தடபுடலாக எடுக்கப்படக்கூடிய திருமண காணொளிகளை அதற்கு பிறகு எத்தனை முறை பார்ப்பார்கள்? சமீபத்தில் கூட இது குறித்து சமூக வலைத்தளங்களில் பெரிதாக பேசப்பட்டது.

இதில் பெரும்பாலோர் சொன்னது இது தான். எங்களுடைய திருமண வீடியோவை வாங்கிய உடனே (சரியாக எடுத்தார்களா என சரிப்பார்ப்பதற்கு) ஒருமுறைப் பார்த்தோம். அதற்கு பிறகு ஒருமுறை கூட பார்க்கவில்லை!

படம் : இணையத்தில் எடுத்தது!
Facebook

கிருஷ்ணன் அவர்களுக்கு அஞ்சலி!


70 வயதானவர். கணக்காளர். நேற்று மாலையில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையிலேயே இறந்து போனார். அவருக்கு அஞ்சலி. அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல்கள்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிறுவனத்தில் கணக்காளராக இருந்த பொழுது அறிமுகமானார். பிறகு இன்னொரு நிறுவனத்தில் இணைந்த பொழுது, அந்த நிறுவனத்தில் பி.எப். இ.எஸ்.ஐ ஆலோசகராக என்னை அறிமுகப்படுத்தினார்.

எட்டு ஆண்டுகளாக அந்த அலுவலகம் சென்று வந்த பொழுது, மிகவும் நெருக்கமாகிவிட்டார். திருநெல்வேலிகாரர். துவக்க காலத்தில் ஊரில் மக்களுக்கு மாத, வார இதழ்களை வாடகைக்கு கொடுத்து வாங்கியிருக்கிறார். ஒரு பார்சல் நிறுவனத்தில் கணக்காளர். ஒரு சமயத்தில் ஆட்டோ கூட ஓட்டியிருக்கிறார்.

நான்கு பையன்கள். சென்னை தாம்பரம் அருகே குடியிருந்த பொழுது, பகுதியில் ஒரு வீட்டில் ஒரு திருட்டு நடக்கும் பொழுது, எதைச்சையாக பார்த்துவிட்ட மூத்தப் பையனை, ஒருநாள் காத்திருந்து வீடு புகுந்து வெட்டி கொன்றுவிட்டார்கள். இது நடந்து பல ஆண்டுகளுக்கு பிறகும், இதைச் சொன்ன பொழுது நேற்று நடந்தது போல சொல்லி அழுதார். புத்திர சோகம் மிகவும் வாட்டக்கூடியது. அந்த கொலைக்கு நீதி கிடைத்திருந்தாலாவது அவருக்கு ஒரு ஆறுதல் கிடைத்திருக்கும். கடைசி வரை கிடைக்கவில்லை.

வறுமை. பல காலம் அவரது குடும்பத்தை வாட்டியிருக்கிறது. தொடர்ந்து போராடியிருக்கிறார். ஒரு கட்டத்தில் கொஞ்ச காலம் வாடகைக்கு எடுத்து ஆட்டோ ஓட்டியிருக்கிறார். பிறகு பிள்ளைகள் வளர்ந்த பிறகு பொருளாதார நிலையில் ஓரளவு தேறி வந்துவிட்டார்கள்.

ஒரு உறவினர் போல குடும்ப விசயங்களை பகிர்ந்துகொள்வார். கொரானா காலம் வரைக்கும், 66 வயது வரைக்கும் வேலைப் பார்த்தார். கை நடுக்கம் வந்துவிட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக தான் ஓய்வில் இருந்தார். மகன்கள் வீடு வாங்கியதை, பேரன் பிறந்த விசயத்தை எல்லாம் சந்தோசமாக பகிர்ந்துகொண்டார். போய் பார்த்து வந்தேன்.

திமுக அனுதாபி. குறிப்பாக கலைஞர் கருணாநிதியின் மீது அத்தனை பிரியம். அந்த பிரியம் உதயநிதி வரைக்கும் இருந்தது ஆச்சர்யம். திமுககாரர்கள் நடத்தும் யூடியூப் சானல் செய்திகளை தினமும் எனக்கு அனுப்பி வந்தார். திமுக செய்யும் பிழைகளை சொல்லும் பொழுது மற்றவர்களிடம் வாதம் செய்யும் பொழுது முரட்டு ஆளாகவே நடந்துகொள்வார். நான் சொல்லும் பொழுது கொஞ்சம் கேட்டுக்கொள்வார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு இதயம் கொஞ்சம் இயங்க மக்கர் செய்ததை, வாயுத் தொல்லை என புரிந்துகொண்டார். பெரும் மருத்துவ செலவுகள் அப்படி நம்மை நினைக்க வைப்பது தான் பெரிய வாதை.

நேற்றைய முதல் நாள் மருத்துவமனையில் சேர்ந்து, மருத்துவர்களின் பராமரிப்பில் இருந்த பொழுதே, நேற்று அடைப்பின் ஆழத்தை பார்க்க ஆஞ்சியோ செய்யும் பொழுது பெரியளவில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கிறார்.

நேற்றிரவே வீட்டுக்கு போய் பார்த்தேன். கண்ணாடி பெட்டிக்குள் தூங்குவதாக தான் தெரிந்தது. இன்று காலையில் சீனியர் வில்லியப்பன் அவர்களோடு போய் மாலை போட்டு அஞ்சலி செய்து வந்தோம் ஆறுதல் சொல்லிவந்தோம்.

கிருஷ்ணன் அவர்களுக்கு அஞ்சலி.

January 16, 2025

PF : அடிக்கடி கேட்கிற சில கேள்விகளும் பதில்களும்!


வருங்கால வைப்பு நிதி திட்டம்: நிறுவனமும் தொழிலாளர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் - அத்தியாயம் 12

 


ஒவ்வொரு இதழும் வெளிவந்த பிறகு, தமிழ்நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் என்னை போனில் அழைக்கிறார்கள். தங்கள் கேள்விகளை, சந்தேகங்களை அழைக்கிறார்கள்.  நானும் பதிலளித்து வருகிறேன்.   கடந்த மாதம் புதுச்சேரியில் இருந்து  ஒரு மாணவர் வாட்சப் மூலம் தொடர்பு கொண்டார்.  பி.எப். தொடர்பான கட்டுரைகள் தனக்கும் தன்னோடு படிக்கிற சக மாணவர்களுக்கும் நிறைய பயன்படுகிறது என தெரிவித்தார்.

 

இந்த தொடரே வருங்கால வைப்பு நிதி குறித்து பலருக்கும் விழிப்புணர்வு உருவாக்குவதற்காக தான் ஆசிரியர் கட்டுரைகளை  தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.   உங்களுடைய கேள்விகளை எனக்கு வாட்சப்பில் தெரிவியுங்கள் அல்லது போனில் தெரிவியுங்கள்.  உங்கள் கேள்விகளுக்கு அடுத்தடுத்த இதழ்களில் பதில் அளிக்க முயல்கிறேன்.

***

 

சமீபத்தில்  (22/11/2024) பி.எப் அலுவலகம்  ஒரு சுற்றறிக்கையை  பி.எப் கணக்கு வைத்திருக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரு அறிவிப்பு கொடுத்திருக்கிறது.    

 

அதன் சாரம்சம் என்னவென்றால்….  தொழிலாளர்கள் EDLI திட்டத்தில்  பலனடைய வேண்டுமென்றால்,  தொழிலாளர்கள் ஒரு நிறுவனத்தில் சேரும் பொழுது, தொழிலாளியினுடைய ஆதாரை அடிப்படையாக வைத்து தான் ஒரு பிரத்யேக எண்ணை உருவாக்குகிறார்கள்.   அதற்கு UAN (Universal Account Number) என பெயர். இந்த எண்ணை உருவாக்கிய பிறகு சம்பந்தப்பட்ட நிறுவனம் சம்பந்தப்பட்ட தொழிலாளிக்கு தெரியப்படுத்தும்.  அப்படி தெரியப்படுத்தவில்லையென்றால்,  அந்த தொழிலாளி கேட்டுப்பெறவேண்டும்.

 

அந்த எண்ணைப் பெற்றுக்கொண்ட பிறகு தொழிலாளிகள் அமைதியாகிவிடுவார்கள். இப்பொழுது பி.எப். கேட்டுக்கொள்வதென்றால், அந்த எண்ணைக் கொண்டு பி.எப் தொழிலாளர்களுக்கென இருக்கும் தளத்திற்கு செல்லவேண்டும்.  அந்த தளத்தின் முகவரி இது தான்.

 

https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/

 

பி.எப் உறுப்பினர் தளத்திற்கு சென்று Activate UAN என இருக்கும் சுட்டியை கிளிக் செய்யவேண்டும்.  அதில் தொழிலாளியினுடைய UAN எண்,  ஆதார் எண்,  ஆதாரில் இருக்கும் பெயர், பிறந்த தேதி,  பி.எப் இணைக்கும் பொழுது எந்த மொபைல்  எண் கொடுக்கப்பட்டதோ அந்த எண் போன்ற அடிப்படை விவரங்களை கொடுத்ததும், Get Authorization Pin என்பதை கிளிக் செய்தால்,  நீங்கள் கொடுத்துள்ள அனைத்து விவரங்களும் சரியென உறுதி செய்த பிறகு, தொழிலாளியின் மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபியை அனுப்பிவைக்கும்.  அதை கொடுக்கும் பொழுது, ஒரு கடவுச்சொல் ஒன்றை சம்பந்தப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பிவைக்கும்.

 

கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, பி.எப். உறுப்பினருக்கான தளத்தில் உள்ளே  சென்றுவிடலாம்.  முதலில் செய்யவேண்டிய விசயம்.  தளத்தில் தொடர்பு (contact) என இருக்கும் இடத்தை கிளிக் செய்தால், நம்முடைய மொபைல் எண்ணும், மின்னஞ்சல் முகவரியும் இருக்கும்.  அதை சரிப்பார்க்க நம்மை வலியுறுத்தும்.  அங்கு ஆதாரோடு இணைக்கப்பட்ட மொபைல் எண் இருந்தால் சரியானது. ஒருவேளை வேறு ஏதாவது எண் இருந்தால், மாற்றிவிடுங்கள்.  மாற்றுவதற்கு அனுமதிக்கும்.  அதே போல மின்னஞ்சல் முகவரியும் தன்னுடையதாக இருக்கிறதா என சரிப்பார்த்துக்கொள்ளவேண்டும்.  பழையதாக இருந்தால், இப்பொழுது பயன்படுத்தி வரும் மின்னஞ்சலை கொடுக்கவேண்டும்.

 

அடுத்து நாம் செய்ய வேண்டியது,  தொழிலாளி தனது குடும்ப வாரிசுதாரரை நியமிக்கவேண்டும். 

 

வாரிசுதாரர் நியமனம் (E Nomination)

 


பி.எப். (EPF) கணக்கு வைத்திருக்கும் பணியாளரின் பலன்களை, கணக்கு வைத்திருப்பவர் திடீரென மரணம் அடைந்தால், அவர்களைச் சார்ந்தவர்களுக்கு மாற்றுவதற்கு இந்த வாரிசுதாரர் நியமனம் உதவுகிறது.  ஆகையால்,  தொழிலாளியின் துணைவியார்/கணவர்/பிற உறவுகள் குறித்த பெயர், வயது, முகவரி என அடிப்படை விவரங்களையும், புகைப்படத்தையும் பதிவேற்றவேண்டும்.  தளம் கேட்கிற விவரங்களை கொடுத்த பிறகு,  ஆதார் ஓடிபி மூலமாக  E sign யையும் பூர்த்தி செய்யவேண்டும்.

 

இதை எல்லாம் ஏன் செய்ய சொல்லி, பி.எப். வலியுறுத்துகிறது என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அதற்கு நாம் EDLI திட்டம் குறித்து அறிந்துகொள்ளவேண்டும்.

 

தொழிலாளர்களுக்கான EDLI (Employees Deposit Linked Insurance Scheme)  திட்டம் என்றால் என்ன? இதில் தொழிலாளிக்கு கிடைக்கும் பலன்கள் என்னென்ன?

 


இந்தத் திட்டம் வருங்கால வைப்பு நிதிச்  சட்டத்தின் (1952) படி 1976ல் அறிமுகப்படுத்தப்பட்ட அருமையான திட்டமாகும்.  பி.எப் திட்டத்தில் இணைந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும்.  கட்டவேண்டிய தொகை என்பது, ஒரு தொழிலாளியின் மாதாந்திர அடிப்படைச் சம்பளம், பஞ்சப்படியை கூட்டினால், அதில் 0.50% கணக்கிடவேண்டும்.  இந்தத் தொகையை தொழிலாளர் செலுத்த தேவையில்லை.  தொழிலாளி வேலை செய்யும் நிறுவனமே, பி.எப் மாத நிதியை செலுத்தும் பொழுது இதற்கான நிதியையும் செலுத்தவேண்டும். 

 

இந்தத் திட்டத்தின் படி, பி.எப் எப்படி கணக்கிறது என்றால்….  தொழிலாளியின் சம்பளத்தைக் கொண்டு கணக்கிடுகிறார்கள். ஆகையால் அதற்கு தகுந்தப்படி தான் கணக்கிட்டு தருவார்கள்.

 

இறப்பதற்கு முன்பு தொழிலாளி வேலை செய்த ஓர் ஆண்டு சம்பளத்தைக் (Basic + DA) கணக்கிட்டு, அதை 35ஆல் பெருக்குகிறார்கள்.  கூடுதல் போனசாக ரூ. 1.75 லட்சத்தையும் சேர்த்து தருகிறார்கள்.

 

உதாரணமாக :

 

ஒரு தொழிலாளியின் அடிப்படை சம்பளம் ரூ. 12500 என்றால் 35ல் பெருக்கினால் வரக்கூடிய தொகை  ரூ. 4,37,500. கூடுதல் போனசாக ரூ. 1,75,000 யும் இணைத்தால் வரும் மொத்த தொகை ரூ. 612500.

 

இந்தப் பணத்தை தொழிலாளியின் வாரிசுதாரரான துணைவியார், இன்னும் திருமணம் செய்யாத பெண் பிள்ளைகள், 25 வயது முடிவடையாத ஆண் பிள்ளைகளும் பெறுவார்கள்.  குடும்ப உறுப்பினர்கள் இல்லாத நிலையில், தொழிலாளி வாரிசுதாரராக யாரை நியமித்தாரோ, அவர்கள் இந்தத் தொகையை பெறமுடியும்.

 

இந்தப் பணத்தை பெற 5 IF விண்ணப்பத்தை உரிய விவரங்களுடனும், உரிய ஆவணங்களுடனும் நிறுவனத்தின் ஒப்புதலுடன்  பூர்த்தி செய்து பி.எப். அலுவலகத்தில் ஒப்படைத்தால், வங்கி கணக்கிற்கு வந்து சேரும்.

 

பி.எப் கணக்கு வைத்திருக்கும் ஒரு தொழிலாளி விபத்திலோ, நோய்வாய்ப்பட்டோ, இயற்கையாகவே இறக்கும் பொழுது,  அந்த தொழிலாளியின் வாரிசு தாரருக்கு சரியாக கொடுப்பதற்கு பி.எப். கொடுப்பதற்காக தான் இந்த வேலையை உடனடியாக  செய்ய சொல்லி கோருகிறது. இது அவசியம் என்பதால், தொழிலாளர்கள் இதை உடனடியாக செய்யவேண்டும்.

 

இது தொழிலாளர் சம்பந்தப்பட்டது என்பதால்,  நிறுவனத்தில் செய்து கொடுப்பார்கள், அதில் அவர்கள் கவனம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கமுடியாது. ஆகையால் தொழிலாளி வெளியே இ சேவை மையம், பி.எப் வேலைகளை செய்து தருகிறவர்களிடம் தெரிவித்து, இதை செய்துகொள்ளுங்கள்.

 

தொழிலாளர்களிடமிருந்து பெறப்படும் நிதிக்கு எவ்வளவு சதவிகித வட்டித் தரப்படுகிறது?

 

EPF அமைப்பை நிர்வாகம் செய்யும் மத்திய அறங்காவலர் குழு தான் பி.எப் வட்டி விகிதத்தை ஒவ்வொரு ஆண்டும் மாதாந்திர இறுதி இருப்பு அடிப்படையிலும், வருடாந்திர அடிப்படையிலும் பரிசீலித்து முடிவு செய்கிறார்கள்.  2024 -2025ம் நடப்பு ஆண்டிற்கான வட்டி விகிதம் 8.25% என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

 

ஒரு பணியாளர் வேலை செய்யாத காலத்தில், பி.எப் இல்லாத நிறுவனத்தில் வேலை செய்யும் பொழுது, தொழிலாளியின் கணக்கில் பணம் செலுத்தப்படவில்லை என்றாலும், தொடர்ந்து வட்டித்தருவார்களா?

 

இந்த சந்தேகம் பணியாளர்களால்  அடிக்கடி கேட்கப்படும் சந்தேகமாக இருக்கிறது.  ஒரு தொழிலாளி வேலை செய்யாத காலத்தில், பி.எப் இல்லாத நிறுவனத்தில் வேலை செய்தாலோ,  மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் தான் வட்டியைக் கணக்கிட்டு தருகிறார்கள். அதற்கு பிறகு நிறுத்திவிடுகிறார்கள். இது சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த நடைமுறை.

 

இதில் பி.எப் நிதிக்கு மட்டும் தான் வட்டி தருகிறார்கள்.   பி.எப். ஓய்வூதிய கணகிற்கு வட்டி ஏதும் தருவதில்லை.  ஆகையால், தொழிலாளர்களுக்கு  ஓய்வூதியம் அவசியம் தேவைப்படுவதால் அந்த நிதிக்கு திட்டச் சான்றிதழுக்கு (Scheme Certificate) விண்ணப்பித்து வாங்கி வைத்துக்கொள்ளலாம்.  பி.எப் நிதியை வேண்டுமென்றால், வாங்கிக்கொள்ளலாம்.

 

ஒரு தொழிலாளி தான் வேலை செய்யும் நிறுவனத்தில் 20/50 தொழிலாளர்களுக்கு மேல் வேலை செய்கிறார்கள்.  தங்களுக்கு பி.எப், இ.எஸ்.ஐ. இல்லாமல் இருக்கிறது.  அதை பெறுவதற்கு என்ன செய்வது என கடந்த மாதம் சந்தேகம் கேட்டார்.

 


பி.எப் விதி என்ன கூறுகிறது என்றால், ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை துவங்கிய நாளிலிருந்து என்றைக்கு 20 பேர் வேலை செய்கிறார்களோ, அன்றைய நாளில் இருந்து இந்த திட்டத்தில் நிறுவனம் இணைவது கட்டாயமாகும்.  இதை அரசோ, பி.எப் நிறுவனமோ கண்டுபிடித்து நிறுவனத்துக்கு சொல்வதில்லை. நிறுவனமே பி.எப் விதிகளை தெரிந்து கொண்டு இணைதல் வேண்டும்.  இதை நிறுவனம் தெரிந்தும், தெரியாமலும் பதிவு பெறாமல் கடந்து செல்லும் பொழுது,  அடுத்து வரும் சில மாதங்களிலோ, வருடங்களிலோ நிறுவனம் பி.எப்பில் பதிவு செய்யும் பொழுது, கடந்த வந்த காலங்களுக்கும் நிறுவனம் பி.எப் நிதியை தன்னிடம் வேலை செய்த அத்தனை தொழிலாளர்களுக்கும் பி.எப் நிதியை செலுத்தவேண்டிய நெருக்கடிக்குள்ளாகும். பல தொழிலாளர்கள் வேலையை விட்டு போயிருப்பார்கள்.  அந்த தொழிலாளர்களிடம் அப்பொழுது மொத்தமாக பிடித்தம் செய்வது நடைமுறையிலும் முடியாது. அப்படி பெறுவது சட்டத்துக்கு புறம்பானது. ஆகையால், தொழிலாளர்கள் செலுத்தவேண்டிய பணத்தையும் நிறுவனமே செலுத்தவேண்டிய நெருக்கடிக்குள்ளாகும்.  ஆகையால், உரிய காலத்தில் பி.எப் திட்டத்தில் இணைவது நிறுவனத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது.  ஆகையால் தொழிலாளர்கள் நிறுவனத்தின் உரிமையாளர்களிடம் கேட்கவேண்டும். 

 

ஒரு நிறுவனத்தில் 20 தொழிலாளர்களுக்கு குறைவாக தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.  அவர்களும் பி.எப் திட்டத்தில் இணைய முடியுமா என்றால்… பி.எப். திட்டத்தில் இணையலாம் என பி.எப். விதி அனுமதிக்கிறது.  அதற்கு பெயர் தன்னார்வத்துடன் விரும்பி இணையும் திட்டமாகும். பி.எப் சட்ட பிரிவு 1 (4) இன் கீழ் பதிவு செய்யலாம்.  நிறுவனத்தின் முதலாளியும், நிறுவனத்தில் வேலை செய்கிற பெரும்பாலான தொழிலாளர்களும் கையெழுத்திட்டு ஓப்புதல் தரும் பட்சத்தில் இணையலாம்.

 

ஆக 20 தொழிலாளர்கள் இருந்தால் சட்டப்படி இணையவேண்டும்.  அதற்கு குறைவாக இருந்தாலும், இணையலாம் என சட்டம் வழிகாட்டுகிறது.  தொழிலாளர்கள்  தொடர்ச்சியாக கேட்டும் சம்பந்தப்பட்ட நிறுவனம் பி.எப், இ.எஸ்.ஐ பதிவு செய்யவில்லை என்றால், சம்பந்தப்பட்ட தொழிலாளர்களே பி.எப். நிறுவனத்துக்கு “நாங்கள் இத்தனை தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் இவ்வளவு காலமாக வேலை செய்கிறோம்.  எங்களுக்கு பி.எப். தருவதில்லை எனவிளக்கமாக ஒரு கடிதம் தனிநபராகவோ, கூட்டாகவோ தெரியப்படுத்தினால்,   பி.எப் நிறுவனம் சம்பந்தப்பட்ட பகுதிக்கு பொறுப்பான ஒரு அதிகாரியை அனுப்புவார்கள். அந்த அதிகாரி  தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த நிறுவனத்தை பி.எப்பில்  பதிவு செய்யச்சொல்லி வலியுறுத்துவார். இல்லையெனில் அவரே சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு சென்று உரிய ஆவணங்களைப் பெற்று, பி.எப் பதிவு எண்ணைப் பெற்று தந்துவிடுவார். இதே தான் இ.எஸ்.ஐ. பதிவுக்கும் பொருந்தும்.

இன்னும் வளரும்.


வணக்கங்களுடன்,

 

இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, பி.எப், இ.எஸ்.ஐ ஆலோசகர்,

GSTPS உறுப்பினர்

9551291721

மன(ண)க் கலக்கம்


பாகுபலி நாயகன் பிரபாசுக்கு 45 வயது கடந்தும் இன்னும் மணமாகவில்லை.  அவருடைய நண்பர் ஒருவருடைய மண வாழ்க்கை தோல்வியடைந்ததால், அதன் மன பாதிப்பால் தான் திருமணம் செய்துகொள்ளவில்லை என அவருடைய அம்மா மனம் வருந்தி சொல்லியிருக்கிறார்.

 

ஒரு வாரத்திற்கு முன்பு வழக்கமாக செல்லும் ஒரு அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் 30 கடந்தும் இன்னும் மணம் செய்துகொள்ளவில்லை.  அந்த நிறுவனத்தின் நிர்வாகி, ”தனக்கு தெரிந்த நல்ல பசங்க இருவர் இருக்கிறார்கள். பேசிப் பார். இருவரில் யாரையாவது மணம் செய்துகொள்” என அக்கறையோடு சொல்ல, மூன்று நாட்கள் வேலைக்கே வராமல் இருந்துவிட்டார்.

 


அன்றைக்கு போன பொழுது, அந்த பெண்ணிடம் பேசினால், திருமணங்கள் குறித்த ஒவ்வாமையை தெரிவித்தார்.   அப்பா குடித்து விட்டு பல வருடங்களாக மனைவியையும், குழந்தைகளையும் டார்ச்சர் செய்திருக்கிறார்.  அப்பாவுக்கு தெரியாமல் வீடு பார்த்து அம்மாவும், பெண்ணும் வாழ்ந்து வருவதாக முன்பு தெரிவித்திருக்கிறார்.

 

தன்னுடன் படித்த நெருங்கிய தோழிகளில்  ஐவருக்கு மூவருக்கு மணமுறிவு ஏற்பட்டிருக்கிறது.  எல்லாமும் சேர்ந்து இப்பொழுது கலக்கத்தில் இருக்கிறார். 

 

இப்பொழுது முன்பு இருந்த நிலைமை இல்லை.  பெண்களின் நிலைமை நன்றாகவே மாறியிருக்கிறது. ஆகையால் மணம் செய்துகொள்ளுங்கள் என நானும் சொல்லிவந்தேன்.

 

குடும்பங்கள் சமூக சூழ்நிலையாலும், அதன் இறுக்கத்தாலும் சிதறுண்டு வருவதை பார்க்கமுடிகிறது. சமீபத்தில் பார்த்த ஒரு மலையாளப்படம் Falimy. Family எல்லாம் கலைத்து போடப்பட்டு, Falimy யாக தான் இருக்கிறது என சொன்ன படம் அது.

 

 

நாயகன் ஜேம்ஸ்பாண்ட் ஊருக்கு ஊர் காதலி வைத்திருக்க கூடியவர்.  அவர் கடைசியாய் இறந்தது தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக தான். 

 

சமீபத்தில் Originals என்ற புகழ்பெற்ற வாம்பயர் சீரிஸ் பார்த்தேன்.  என்ன அட்டூழியம், அட்டகாசம் செய்தாலும், குடும்பம் முக்கியம் அது தான் நம்மைக் காப்பாத்தும் என தொடர் முழுக்க சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

 

வருங்கால மனித சமுதாயத்தை உருவாக்குவதற்கு குடும்பம் என்ற அமைப்பு தேவைப்படுகிறது.   குடும்பத்திற்காக தன்னையே உருக்கி கொண்டிருந்தவர்கள் பழைய ஆட்கள் என்றால், குடும்பம் தருகிற அழுத்தத்தில் இருந்து பல இளைஞர்கள்/இளைஞிகள் தப்பிக்கப் பார்க்கிறார்கள். அதனால் தான் புதுப்புது வடிவங்கள் எடுத்துவருகின்றன.

 

குழந்தையை பாதுகாக்க இந்த அரசும், அமைப்பும் என்ன செய்தது? வேலை பார்ப்பதற்கு பக்கத்தில் ஒரு குழந்தைகள் காப்பகம்  வைத்துக்கொடுத்ததா? குழந்தைகளைப் பார்ப்பதற்கு ஒரு சப்போர்ட் சிஸ்டம் இருக்கிறதா? ஒன்றையும் ஒழுங்காக செய்து கொடுக்க வழியில்லை.   நாங்கள் ஏன் குழந்தைகள் பெற்றுக்கொள்ளவேண்டும் (DINK – Dual Income No kids) என டிங் குழுக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

 

”குடும்பத்தை” காப்பாற்றவேண்டுமென்றால் கூட இங்கு நல்ல முறையில் ஒரு சமூகம் மாற வேண்டிய தேவைப்படுகிறது என்பது மட்டும் உறுதி.