நாயகி ஒரு இளம்பெண் குவாலியரில் இருந்து தலைநகர் தில்லி வருகிறாள். அவளுக்கு பொருளாதார நெருக்கடி. ஆகையால், தில்லியை ஒட்டியுள்ள காட்டுப்பகுதிக்குள் ஒதுக்குப்புறமாக இருக்கும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கான அந்த விடுதிக்கு வந்து சேர்கிறாள்.
அந்த விடுதியில், குறிப்பாக மாடியில் உள்ள தளத்தில் பக்கத்து அறைகளில் நான்கு பெண்கள் அறைகளில் இருக்கிறார்கள். அவளின் தோழி ஒருத்தி அறையில் தங்கி இருந்தவள், ஒரு சாலை விபத்தில் இறந்து போகிறாள். ஆகையால், அந்த அறையை யாருக்கும் வாடகைக்கு விடக்கூடாது என வார்டனோடு மல்லுக்கு நிற்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து சில மாதங்களாக விடுதியை விட்டு வெளியே செல்லாமல் அடைந்து கிடைக்கிறார்கள்.
நாயகிக்கு வேலை கிடைக்கிறது. அந்த அறையில் அமானுஷ்யமாக சில விசயங்கள் நடக்கின்றன. நாயகிக்கு கல்லூரியில் நடந்த பாலியல் அத்துமீறல் ஒரு கெட்ட கனவாக துரத்திக்கொண்டே இருக்கின்றன. இந்த அமானுஷ்யங்களும் இணைந்து அவளை வாட்டி வதைக்கின்றன.
ஒரு வயதான மருத்துவன் பெண்களை கடத்தி கொன்று தனது பலத்தை அதிகரிப்பதற்காக முயன்று கொண்டே இருக்கிறார். இதன் தொடர்ச்சியில் நாயகியை குறிவைக்கிறார்.
நடுத்தர வயது பெண் காவலர் தன் காணாமல் போன பையனைத் தேடி விசாரித்துக்கொண்டே இருக்கிறாள்.
மேலே சொன்ன எல்லா நிகழ்வுகளும் ஒரு முனையில் சங்கமிக்கும் பொழுது, களேபரங்கள் நடக்கின்றன.
***
பேய், அமானுஷ்யம் என்ற வகையில் இதன் கதையின் நகர்வு இருந்தாலும் இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தையென்றால், குழந்தையை வயிற்றிலேயே கலைத்துவிட நினைக்கும் கணவன், பெருமைக்காக தன் காதலியுடன் தனியாக இருக்கும் இடத்தை சொல்லும் காதலன், ஏன் தன் கணவனைப் பிரிந்தேன் என சொல்லும் பெண் காவலர் என பெண்களின் பிரச்சனையை எதிர்கொள்ளும் சிக்கல்களை படம் முழுவதும் சொல்லிச் சென்றது சிறப்பு.
சமீபத்தில் சோரி2 என ஒரு ஹாரர் படம் பார்த்தேன். அதிலும் குழந்தை திருமணம் தவறு என சொல்லிச் சென்றாலும், படம் பார்க்கும்படி இல்லை. ஆனால் இந்த சீரிஸ் சரியாக தொட்டு சென்றிருக்கிறது.
கதையில் வரும் சின்ன பாத்திரங்கள் கூட ஏதோ வகையில் மனதில் நிற்பது சிறப்பு. ஒளிப்பதிவு, பின்னணி இசை என எல்லாமும் துணை நின்றிருக்கின்றன. அதனால் சிறப்பா என்றால்… எட்டு அத்தியாயங்களை கொஞ்சம் கத்திரிப் போட்டு ஆறு அத்தியாயங்களாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
பேய் படத்தில் லாஜிக் பார்ப்பது சிக்கல் என்றாலும், நிஜத்திலும் மிக மோசமாக நடந்துகொண்ட ஆண், செத்தப் பின்பும் உக்கிரமான ஆவியாக கொல்வது எல்லாம் ஏற்கமுடியாதது. (சீரிஸ் பாருங்கள். நான் சொல்வது புரியும். விலாவரியாக சொன்னால்… ஸ்பாய்லராகிவிடும்).