> குருத்து

April 21, 2026

அவசரம் - இந்த மில்லேனியத்தின் உணர்வு


அரவிந்தனைப் பற்றிய நினைவுப் பதிவுகளில் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்த விஷயம் என்னை யோசிக்க வைத்தது. ( எழுதியது யார் என்று குறித்துக் கொள்ள மறந்து விட்டேன்.)


அரவிந்தன் உடல் நலம் குறித்து மிகுந்த கவனம் உடையவர். பொதுவாக பல இலக்கியவாதிகளுக்கு இருக்கும் எந்த 'உல்லாச 'பழக்கங்களும் இல்லாதவர். அவருக்கு எப்படி இப்படி ஒரு அவசர மரணம் நிகழ்ந்தது என்று அதை எழுதியவர் கேட்டிருந்தார். 


அரவிந்தன் எப்போதுமே ஒரு அவசரத்துடன் காணப்பட்டார் என்றும் அவர் எழுதியிருந்தார். உண்மைதான். அரவிந்தனை எப்போதும் ஒரு அவசரத்துடன்தான் பார்த்திருக்கிறேன். உட்கார்ந்திருக்கும்போது கூட அவரிடம் ஒரு அவசரம் தென்படுவது போலவே இருக்கும். அவர் ஒரு பத்திரிகையாளராக இருந்தவர். எதையும் காலக்கெடுவுக்குள்  முடிக்க வேண்டிய அவசரம் அவருக்குள் தொற்றி இருக்கலாம். அவருடன் வேறு சில நண்பர்களும் சேர்ந்து ஒரு அவசரம் இல்லாத  கூடுகைக்கு சில முறை முயன்றோம். எங்களது தனித்தனி அவசரங்களால் அது கூடவில்லை. அது இனி ஒருபோதும் கூடாது.


 என்னையும் நான் எப்போதுமே ஏதோ ஒரு அவசரத்தில் இருப்பதாக பலர் சொல்லி இருக்கிறார்கள். 'நீ எல்லாவற்றையும் அவசரமாகச் செய்கிறாய் 'என்று சொல்லி இருக்கிறார்கள். அவசரம்  அரவிந்தனின் மொழியில் சொன்னால் இந்த மில்லேனியத்தின் உணர்வு. நாம் மிக வேகமாக வாழ்ந்து மிக வேகமாக செத்துப் போகிறோம்.


 பிரெஞ்சு மொழியில் flaneur என்கிற ஒரு வார்த்தை உண்டு. தமிழில்  சுமாராக இப்படி மொழிபெயர்க்கலாம்' மிக மெதுவாக நடப்பவர் '.


 பொதுவாக பிரெஞ்சு மக்கள் மிக மெதுவாக நடக்கக் கூடியவர்களாகவும் ஆங்கிலேயர்கள் மிக வேகமாக நடக்கக்கூடியவர்களாகவும் சொல்கிறார்கள். இந்தியர்களும் மிக வேகமாக நடக்கக் கூடியவர்கள் தான். இந்தப் பண்பு ஒரு கலாச்சார பண்பும் கூட என்றும் தோன்றுகிறது.


என்னுடைய கனவெல்லாம் இப்போது அவசரம் இல்லாத ஒரு வாழ்க்கை குறித்துதான் இருக்கிறது. எந்த நோக்கமும் இல்லாது காலக்கெடுவும் இல்லாது மிக மெதுவாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே  நடப்பது. அரவிந்தனுக்கும் இப்படிப்பட்ட கனவுகள் இருந்திருக்கலாம்.


 ஆனால் அது அவ்வளவு எளிதாக கிடைக்கக்கூடிய விஷயம் அல்ல என்றும் தெரிகிறது. நான் /நாம் எப்போதும் விரட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறேன். இருக்கிறோம். அரவிந்தனின் மரணம் மட்டுமல்ல  இறுதிச்சடங்குகள் கூட மிக வேகமாக யாரோ விரட்டியது போல் முடிந்து விட்டது.


 மிக மெதுவாக வேடிக்கை பார்த்துக் கொண்டே நடக்கும் பிரெஞ்சு நடை ஒருவேளை நமக்கெல்லாம் மரணத்திற்கு பிறகாவது கிடைக்குமோ என்னவோ?


- போகன் சங்கர்

April 19, 2026

பெங்களூர் : லால் பாக் கார்டன் நகரின் நடுவே ஒரு பெரிய பூங்கா

ஹைதர் அலி காலத்தில் 18ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் துவங்கி, அவரது மகன் திப்பு சுல்தான் அதை இன்னும் விரிவுப்படுத்தியுள்ளார்.


உலகில் இருந்து நிறைய அரிய தாவரங்களை சேகரித்து வளர்த்துள்ளனர். ஆங்கிலேயர்கள் இன்னும் கொஞ்சம் செழுமைப்படுத்தியுள்ளனர்.

240 ஏக்கர் +, 1800 வகை தாவரம் + மரம் என விதவிதமாய் வளர்ந்து நிற்கிறது.

இத்தனை ஆண்டு கால வரலாறு பூங்காவின் மரங்களே பெரிதாய், மிகப்பெரியதாய் வளர்ந்து நிற்பதே சாட்சி. பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சி. எத்தனை வெயில் அடித்தாலும் வாங்கப்பா பார்த்துக்கலாம் என பூங்கா சவால் விடுகிறது.


நடந்து கடப்பது அத்தனை கால் வலியையும், உடன் மகிழ்ச்சியையும் தருகிறது. பூங்காவை சுற்றி வர சின்ன வண்டிகளை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ரூ.100 கட்டணம். அது கேட் எண் 2 ல் இருக்கிறது என்கிறார்கள்.

நாங்கள் இந்த வசதி அறியாமல், எண் நான்கில் நுழைந்து கேட் எண் 2 கண்டுப்பிடிப்பதே சிரமமாகிவிட்டது.

ஒன்று மொழி பிரச்சனை. எந்த பக்கம் என கேட்டாலும் சிலருக்கு தெரியவில்லை. இன்னொன்று ஆங்காங்கே நிர்வாகம் போர்டு வைக்காதது ஒரு குறை.

இன்று ஞாயிறு விடுமுறை குடும்பங்களோடு பலர் வந்திருந்தார்கள்.


நுழைவுக்கட்டணம் ரூ. 50. இது எப்பொழுதாவது பயணிப்பவர்களுக்கு கூட சரி. ஆனால் உள்ளூர் வாசிகளுக்கு இது சிரமம் தான்.

மாத பாஸ் போல ஏதேனும் ஏற்பாடு செய்து கொடுத்தால் சரியானது.

சம்பவம் அத்தியாயம் ஒண்ணு (2026) Time Looping Movie


நாயகனான போலீஸ் அதிகாரி நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் தன் துணைவியாரிடம் சொல்லிவிட்டு, புதிய இடத்திற்கு பணிக்கு வந்து சேர்கிறார்.  அது ஒரு காட்டுப் பகுதி. போகிற பாதையில் ஒரு போலீசு அதிகாரி ஜீப்பில் அடிபடுகிறார். அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள்.

 

அடிப்பட்ட போலீசிடம் ஒரு வாக்கி டாக்கி இருக்கிறது.  அதில், கைதிகளை அழைத்துக் கொண்டு, செல்லும் பொழுது, கைதிகள் தப்பியதாகவும், அவர்களை பிடிக்க  காட்டிற்குள் வந்ததாகவும், தனக்கு காலில் அடிப்பட்டு இருப்பதால், தன்னால் நகர முடியவில்லை. ஆகையால் தன்னைக் காப்பாற்றும்படி அழைக்கிறார்.

 

நாயகனுடன் ஒரு மேலாதிகாரியும், ஒரு போலீசும் உள்ளே செல்கிறார்கள்.  ஆனால் அவரை கண்டுப்பிடிப்பது மிக சிரமமாக இருக்கிறது. அந்த காடு குறித்தான செய்திகள் கொஞ்சம் அச்சமூட்டுபவையாக இருக்கின்றன.  உள்ளே சென்றபவர்கள் யாரும் மீண்டும் திரும்பியதில்லை என்றும் சொல்கிறார்கள்.

 

அதற்கேற்றபடி, அங்கு நடக்கும் சம்பவங்கள், திரும்ப திரும்ப நடக்கின்றன.  வேறு காலத்தை சேர்ந்தவர்கள் காட்டில் அலைந்துகொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு மோதலிலும் மண்ணில் ரத்தம் சிந்தும் பொழுது  அங்கு நடக்கும் காட்சிகள் மாறுகின்றன.

 

இறுதியில் என்ன ஆனது என்பதை சுவாரசியமாக சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

***


 

இதே இயக்குநர் இந்த தளத்தில் ஒரு குறும்படம் ஒன்றை எடுத்து, அதை இப்பொழுது முழு நீளப்படமாக மாற்றியிருக்கிறார்கள். படத்தில்  இரண்டாம் பாகத்திற்கும் அடி போட்டிருக்கிறார்கள்.

 

ஆங்கிலத்தில் இந்த வகையான படங்கள், வலைத் தொடர்கள் நிறைய வந்திருக்கின்றன. தமிழில் சிம்புவின் ”மாநாடு” வந்திருக்கிறது. அந்த வரிசையில் இந்த படமும் சேரும்.  மலையாளத்தில் இப்பொழுது வந்திருப்பதால், மக்களுக்கு புரியுமா என்ற சந்தேகத்தில் ஆங்காங்கே விளக்கம் கொடுக்கிறார்கள். அது உண்மை தான். இந்த மாதிரி படங்களை பார்த்திராதவர்களுக்கு குழப்பங்கள் உருவாவது சகஜம். ஏற்கனவே இந்த மாதிரி படங்களை நிறைய பார்த்திருப்பதால் எனக்கு பெரிய ஆச்சர்யம் தரவில்லை.

 

ஜித்து சதீசன் இயக்குநருக்கு முதல் படம் என்பதால் அதற்கேற்ப இயல்புகளுடன் தான் படம் இருக்கிறது. கேரளத்தில் ஓரளவு ஓடியிருக்கிறது.

 

நாயகனின் அப்பாவை நாயகன் பார்த்ததேயில்லை.  படத்தில் ஒரு இடத்தில் பார்க்கிறார்.  இருவரிடமே கொஞ்சம் கூட ரியாக்சனே இல்லை. சில காட்சிகளுக்கு பிறகு, அவரை வழியனுப்பும் பொழுது, “அப்பா இல்லாம வளர்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?” என சன்னமான குரலில் சொல்கிறார். அவ்வளவு தான்.  காட்டுக்குள்ளேயே பெரும்பாலான படம் என்பதால், பசுமையாக இருக்கிறது.

 

ஹாட் ஸ்டாரில் தமிழிலேயே இருக்கிறது.  இந்த மாதிரி படங்களை ஆர்வமாக பார்ப்பவர்கள் பாருங்கள். மற்றவர்களுக்கு பிடிக்குமா? தெரியவில்லை.