> குருத்து

October 28, 2024

I see you (2019) English


Crime Thriller film

ஊரில் அடுத்தடுத்து இரண்டு சிறுவர்கள் காணாமல் போகிறார்கள். அந்த போலீசு அதிகாரி விசாரணையை துவக்குகிறார். மக்களும் போலீசோடு அருகில் உள்ள காடுகளில் தேடத்துவங்குகிறார்கள். (இப்படி அமெரிக்க படங்களில் தொடர்ந்து பார்க்கிறேன். நல்ல அம்சம்)

அந்த போலீசு அதிகாரியின் மனைவி தன்னோடு படித்தவருடன் காதலில் விழுந்ததால், போலீஸ் செம கடுப்பாக இருக்கிறார். இந்த விசயத்தில் மகனுக்கும் அம்மா மீது கோபம். இவர்களுக்குள்ள கசப்பில் வீட்டில் சில மர்மமான சம்பவங்கள் நடக்கின்றன. அதை கவனிக்க தவறுகிறார்கள். ஒரு கொலையும் நடக்கிறது.

முதல் பாதியில் நடந்த மர்மங்களுக்கான விளக்கத்தை இரண்டாம் பாதியில் சொல்கிறார்கள். பிறகு என்ன நடந்தது என்பதை திரில்லராக சொல்லியிருக்கிறார்கள்.
***
Spoiler Alert

படம் பார்க்கவேண்டும் என நினைப்பவர்கள் இந்த இடத்தோடு விலகிவிடுங்கள்.


வீடு இல்லாத மக்களில் சிலர் அடுத்தவர் வீட்டுக்குள் அவர்களுக்கு தெரியாமல், அவர்கள் ஊருக்கு செல்லும் நாட்களில் உள்ளே நுழைந்து சில நாட்கள் வாழ்வது என்பது ஒரு வகையாக அதற்கு ஒரு பெயரிட்டு சொல்கிறார்கள்.

தெலுங்கில் ஷர்மி நடித்த ஒரு படம் ஒன்று இதே வகை மாதிரி படம் தான். அதில் எழும் சிக்கல்களை தான் படம் பேசும். இந்தப் படமும் அந்த வகையில் ஒரு படம் தான்.

சமீபத்தில் ஒரு துணுக்கு ஒன்றைப் படித்தேன். ஒரு குரங்கு தன் அப்போதைய தேவைக்கு மட்டும் பழங்களை பயன்படுத்தாமல், அடுத்த வேளைக்கு என எடுத்து வைத்தால், அதற்கு ஏதோ பிரச்சனை என ஆய்வு செய்வார்களாம். ஆனால் மனிதர்களில் சிலர் கணக்கிடலங்கா சொத்து சேர்த்தால், போர்ப்ஸ் பத்திரிக்கை தன்னுடைய இதழில் பெருமையாக வெளியிடும் என நகைச்சுவையாக கிண்டல் செய்திருந்தார்கள்.

ஒரு பக்கம் சிலருக்கு கணக்கில் அடங்கா பல தலைமுறைக்கு சொத்து. மனிதர்களில் சிலருக்கு இன்னும் வீடில்லாமல் இருப்பது என்பது மனித குல நாகரிகத்திற்கு கேடு தான். பணம் இருப்பவன் தரமாட்டான். பசித்தவன் விடமாட்டான் என்பது தான் நினைவுக்கு வருகிறது.

மற்றபடி படத்தை இரண்டாக பிரித்துக்கொண்டது நன்றாக வேலை செய்தது. அநியாயமாக அந்த பெண்ணை கொன்றது தான் வருத்தம்.

திரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம். பிரைமில் தமிழிலேயே கிடைக்கிறது.

Caddo Lake (2024) English

 


Time travel Thriller

நாயகன் தன் அம்மாவுடன் காரில் பயணம் செய்யும் பொழுது ஏற்பட்ட ஒரு விபத்தில் அம்மா இறந்துவிடுகிறார். அம்மாவின் சாவுக்கு தான் காரணமாகிவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சியில் வாழ்ந்துகொண்டிருக்கிறான். அவன் வாழும் பகுதியில் ஒரு அணை இருக்கிறது. அந்த அணையில் ஏற்படும் சிக்கல்களை சரி செய்யும் ஒரு வேலையில் இருக்கிறான். அவனுடைய காதலி அவனுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கிறாள்.

அந்த விபத்து ஏற்படும் பொழுது, அணையில் ஏதோ வித்தியாசம் இருப்பதை உணர்கிறான். தன் வேலையின் ஊடாக அந்த வித்தியாசம் என்ன என்பதை ஆராய முயல்கிறான்.

ஒரு இளம்பெண் தன் தாயுடன் அடிக்கடி சண்டையிட்டுக்கொண்டிருக்கிறாள். அந்த இளம்பெண்ணின் தந்தை சின்ன வயதிலேயே இறந்து போனதால், தாய் வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்கிறார். அந்த குடும்பத்தோடு இணைந்து வாழ்வதில் அவளுக்கு ஒரு ஒவ்வாமை இருக்கிறது. ஆனால், தனது தந்தைக்கு (Step Father) பிறந்த எட்டு வயது பெண் அவளுடன் நெருக்கமாக இருக்கிறாள். ஒரு நாள் சண்டையில் கிளம்பி வீட்டை விட்டு போகும் பொழுது, அவளின் தங்கையும் பின்னால் அவளைத் தேடி கிளம்புகிறாள். ஆனால் காணாமல் போகிறாள்.

இளம்பெண் தன் தங்கை காணாமல் போன விசயம் தெரிந்து வீட்டிற்கு வந்தவள், தங்கையை அணைப் பக்கம் உள்ள பகுதியில் அவள் தேடும் பொழுது, நாயகனைப் போலவே அவளும் ஏதோ வித்தியாசம் உணர்கிறாள்.

அணைப் பகுதியில் நீர் மட்டம் குறையும் பொழுது, காலத்தை முன்னும் பின்னும் கடக்க முடிகிறது. நாயகனும், அந்த இளம் பெண்ணும் அந்தப் பகுதியில் இருவரும் தங்களின் தேடலின் பொழுது இருவருமே அதை உணர்கிறார்கள். கடக்கிறார்கள்.

இந்த காலப் பயணம் செய்யும் பொழுது என்னென்ன மாற்றங்கள் நடந்தது என்பதை விறுவிறுப்பாகவும், உணர்வுப்பூர்வமாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
****

முன்பு கால பயணம் குறித்து வந்த அறிவியல் ரீதியாக வந்த படங்கள் இப்பொழுது உணர்வுப்பூர்வமான படங்களாக வரத்துவங்கியிருக்கின்றன. இந்த மாதிரி படங்கள் இனி தமிழுக்கும் வரத்துவங்கும். இப்பொழுதே அதற்கான அறிகுறிகளாக சில படங்கள் வரத்துவங்கியுள்ளன.

படத்தின் இருவருடைய தேடலும் கடைசி அரை மணி நேரத்தில் என்ன மாற்றங்கள் நடந்தது என்பதை விறுவிறுப்பாகவும் குழப்பம் இல்லாமலும் சொல்லியிருக்கிறார்கள். அந்த இளம்பெண் தன்னை குழப்பிய கேள்விகளுக்கு பதில் கிடைத்து தெளிவடைவாள்.

முன்பு Dark என பிரபல சீரிஸ் ஒன்று உண்டு. முன்னும், பின்னும் பயணப்பட்டு கொண்டே இருப்பார்கள். அதனடிப்படையில் அதில் ஒரு விசயத்தை எடுத்துக்கொண்டு இந்த கதையை வடிவமைத்திருக்கிறார்கள் என ஒரு பதிவர் குறிப்பிட்டிருந்தார். ஆமாம்ல என எனக்கும் நினைவுக்கு வந்தது.

பிரதான பாத்திரங்களான நாயகனும், அந்த இளம்பெண்ணும் தங்கள் பாத்திரங்களை சிறப்பாக செய்திருந்தார்கள். மற்றவர்களும் துணை நின்றிருக்கிறார்கள். இருவர் சேர்ந்து எழுதியும், இயக்கியிருக்கிறார்கள். நைட் சியாமளன் தயாரித்திருக்கிறார்.

இப்பொழுதெல்லாம் ட்ரோன் காட்சிகள் படத்தில் நிறைய இடம் பெறுகின்றன. படத்தின் பெயரில் உள்ள Caddo ஏரியை பறவை பார்வையில் பார்க்கும் பொழுது, நன்றாக இருக்கிறது. கூகுளில் தேடினால் பிரான்சில் இருப்பதாக சொல்கிறது. அமெரிக்காவில் இருப்பதாக இன்னொருவர் தெரிவிக்கிறார்.

இந்த மாதிரி படத்தை விரும்புபவர்கள் பாருங்கள். இப்போதைக்கு Apple TV யில் இருப்பதாக இணையம் சொல்கிறது. Jio cinema யில் இருப்பதாகவும் ஒரு நண்பர் தெரிவித்தார். ஆங்கிலத்தில் சப் டைட்டிலுடன் கிடைக்கிறது.

Bougainvillea (2024) – ஒரு காட்சி

 


psychological crime thriller film


மாலை 6.45 காட்சி. 6.42க்கு உள்ளே நுழையும் பொழுது அவ்வளவு பெரிய திரையரங்கில் நான் மட்டுமே இருந்தேன்.

ஒத்த ஆளுக்காக படமா! சென்னை ரோகிணி திரையரங்கு சூப்பர்டா! என ஆச்சர்யப்பட்டேன். இருந்தாலும், ஒத்த ஆளா இருப்பது கொஞ்சம் சம்சயமாக இருந்தது. கருப்பு பேண்ட், கருப்பு டீசர்ட்டுடன் இன்னொரு இளைஞரும் 6.45க்கு வந்தார்.

படம் துவங்கியது. அந்த இருட்டான நீளமான நெடுஞ்சாலையில், இந்தி பாடல் காரில் ஒலிக்க அந்த கார் போய்க்கொண்டிருந்தது. யாருடா என அந்த இரண்டு உருவம் என உற்றுப்பார்க்கும் பொழுது… அந்த விபத்து. கார் அப்படியே தலைகீழாக தூக்கி எறியப்பட்டது.

எல்லா விளக்குகளும் எரிந்தன. படம் தூக்கி எறிந்ததோடு படம் நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் எனக்கு டிக்கெட் கிழித்து கொடுத்த அந்த இளைஞர் உள்ளே வந்தார். இரண்டு டிக்கெட்டுகள் தான் விற்றிருக்கின்றன. மூன்று டிக்கெட்டுகள் விற்றால் கூட படத்தை ஓட்டிவிடுவோம். கம்பெனிக்கு இரண்டு கட்டுப்படியாகாது. ஆகையால் காட்சியை ரத்து செய்கிறோம் என வருத்தம் தெரிவித்தார்கள். ஏஜி.எஸ். போன்ற திரையரங்குகள் பத்து அல்லது அதற்கு மேலே தீர்மானித்திருக்கிறார்கள். இந்த விசயத்தில் ரோகிணி பரவாயில்லை.

படம் சராசரியான படம் தான். ஓடிடியில் பார்த்துக்கொள்ளவேண்டியது தான். 🙂