அன்பர்களே,
இம்முறை, திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் நடைமுறைப்படுத்திய படு கேவலமான சட்ட,திட்டங்களில் ஒன்று தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு வரிச் சலுகை அளிப்பது.இதைப் பற்றி ஏற்கனவே பல முறை பல கட்டுரைகளில் படித்திருப்பீர்கள்.
சில மாதங்களுக்கு முன், மதனோ, சுஜாதாவோ எழுதியதாக நினைவு..
"கேள்வி: சமீபத்தில் நீங்கள் ஆச்சரியப்பட்ட விசயம்?பதில்: நம் கலைஞர் அவர்கள் கத்தியின்றி, ரத்தமின்றி ஒரே ஒரு சட்டம் போட்டு ஒரே நாளில் அனைத்து தமிழ் படங்களையும் தமிழில் பெயர் வைக்கும் படி மாற்றியது..இது ஒரு அளப்பரிய சாதனை.."
அன்பர்களே, யோசித்துப் பாருங்கள்..
தமிழ் நாட்டில், தமிழர்கள் பார்க்கும தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் தமிழக அரசிடமிருந்து வரிச் சலுகை உண்டு... யோசிக்கவே கேவலமாக இல்லை?..அநேகமாக, இது போன்ற ஒரு கேவலமான நிலைமை எந்த நாட்டிலும் இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது...
உண்மையில், தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் வைப்பது என்பதை நாம் ஆதரிக்கிறோம்.அது அவசியமும் கூட.. அதே நேரத்தில், அதை எப்படி நடைமுறைப் படுத்துவது என்பதில் தான் சிக்கல் இருக்கிறது. ஏற்கனவே நம் ஊரில் திரைத் துறையினருக்கு ஏகப்பட்ட சலுகைகள்..( போன முறை இதே திமுக ஆட்சியில் நடிகர் சங்க கடனில் ஒரு பகுதியை தள்ளுபடி செய்தது.. ஜெ ஜெ ஆட்சியில் படம் வெளி வந்த முதல் 15 நாட்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கட்டணம் வைத்துக்கொள்ளலாம் என அறிவித்தது..இன்னும் இது போல் பல...)
ஒரு பழ மொழி உண்டு.. "கடைத்தேங்காய எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடை"ன்னு..ஒவ்வொரு கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கு வரும் வேளையில் பொதுவான ஒரு அறிக்கை போர் நடக்கும்..தாங்கள் தான் திரைத்துறையினருக்கு அதிக சலுகை கொடுத்தோம் என்று மாற்றி மாற்றி பட்டியல் இடுவது நடக்கும்..நாமும் பார்த்துகொண்டு ஏதோ நமக்கு சம்பந்தமில்லாத விசயம் போல சும்மா இருப்போம்..இப்போது தமிழ் பெயருள்ள படங்களுக்கு வரிச் சலுகை என அறிவித்த முதல் 4,5 மாதங்களில் 40 கோடி ரூபாய் அளவில் தமிழக அரசுக்கு வரி இழப்பு என்று படித்தேன்.உண்மையில் இது யாருடைய வரிப் பணம்?
மேலும் ஒரு நண்பர் சொன்ன தகவல் இது..சில வருடங்களுக்கு முன்பெல்லாம் வரிச் சலுகை என்றால் நேரடியாக மக்களை போய் சேரும். அதாவது வரி சலுகை தேவையான படங்களுக்கு கேளிக்கை வரி இல்லையென்றால் திரையரங்கு கட்டணம் பாதி விலையில் இருக்கும். நாம் பார்த்திருக்கிறோம்.. இப்போதுள்ள வரி சலுகை எல்லாம் வெறுமனே திரைத் தயாரிப்பாளருக்கு மட்டுமே செல்கிறது..
அதிலும் திமுக ஆட்சியின் மற்றுமொரு சமீபத்திய அயோக்கியத்தனம் சிவாஜி படத்துக்கு வரி விலக்கு என்றது.."சிவாஜி என்பது தமிழ் பெயரா? ஏன் வரி விலக்கு?" என்றால், "இல்லை.. அது பெயர்ச் சொல்.. அதனால் வரி விலக்கு"என்று விளக்கம் சொல்கிறது கலைஞர் அரசு. அப்படியென்றால் சீனாவில் சின்-சாய்-ஸூய் அப்படின்னு ஒரு அறிஞர் இருந்தாராம்..அவர் பேருல நாளைக்கு யாராவது இங்கே படம் எடுத்தா வரி சலுகை கொடுப்பாரா கலைஞர்? ங்கொய்யா.. அதுவும் பெயர்ச் சொல் தானய்யா அப்படின்னு கேட்க மாட்டான்?ரஜினிக்காக சிறப்பு சலுகை..அதுவும் சிவாஜி படத்தை கலைஞர் டிவிக்கு உரிமம் கொடுப்பது என்ற கொடுக்கல் வாங்கலில் தமிழக அரசுக்கு வரி இழப்பு..
முன்பு படங்களுக்கு தமிழ் பெயர் தான் வைக்க வேண்டும் என்று சிலர் போராட்டம் நடத்திய போது "அய்யோ தீவிரவாதம்...அராஜகம்...கருத்து சுதந்திரம் போச்சு"என்றெல்லாம் அத்தனை பேரும் கூப்பாடு போட்டார்கள்..சில பேர் "நாங்கள்லாம் கதைக்கு ஏற்ற மாதிரி தான் பெயர் வைப்போம்.. இதையெல்லாம் அரசு கட்டாயப்படுத்துவதா" என்று ஒப்பாரி வேறு.
ஆனால் இப்போதெல்லாம் எல்லா படங்களுமே தமிழ் பெயரோடு தான் வருகின்றன.. எப்படி?... ஒரு உதாரணம் சொல்கிறேன்.. ஆர்யா நடிக்கிற ஒரு படத்துக்கு பூஜை போடும்போது வைத்த பெயர் "ஆட்டோ"வாம்.. ஆனா இப்போது அதே படத்துக்கு பெயர் "ஓரம் போ"வாம்.. இப்படி பல கூத்து..எல்லாம் வரிச் சலுகை செய்கிற வேலை..ஆக இந்த மாதிரியெல்லாம் பெயர் மாற்றினவுடனே தமிழ் வானளாவ வளர்ந்து விடுமோ?.."பெயர் மட்டும் தமிழில் வை.. உள்ளே நீ எவ்வளவு மோசமாக படம் எடுத்தாலும் பரவாயில்லை"என்பது எவ்வளவு அயோக்கியத்தனம்..
இறுதியாக, படைப்..ப்ப்..பாளிகளின் கருத்து சுதந்திரமும் பறிக்கக் கூடாது.. தமிழில் பெயர் வைப்பதையும் அமலாக்க வேண்டும் என்பதை அரசு எப்படி நடைமுறைப்படுத்துவது?..ஒரு எளிமையான வழி உண்டு..எப்போதும் போல எந்த படத்துக்கும் சலுகை வேண்டாம்..அதே நேரத்தில் தமிழ் தவிர்த்து வேறு எந்த பெயர் இருந்தாலும் அதற்கென்று ஒரு சிறப்பு வரி அல்லது ஒரு முறைக் கட்டணம் (2 லட்சம், 3 லட்சம் என்ற அளவில் ஒரு குறைந்த பட்ச கட்டணமாக இருக்கலாம்)படத்தின் அனுமதிக்கு..
இப்படி உண்மையிலேயே எங்கள் படத்துக்கு இந்த பெயர் தான் பொருத்தம் என்கிறவர்கள் அப்படியே வைத்துக் கொள்ளலாம்..இந்த வகையில் தமிழில் பெயர் வைப்பதை ஊக்கப்படுத்திய மாதிரியும் ஆச்சு.. கருத்து சுதந்திரத்தை காப்பாற்றிய மாதிரியும் ஆச்சு.. அரசுக்கு எந்த வரியிழப்பும் இல்லை..
நன்றி - பால்வெளி
from http://paalveli.blogspot.com
July 7, 2007
Subscribe to:
Posts (Atom)