December 14, 2007
காமம் + களவு = மரணம்
நேற்று நடுநிசி
'அவனும் + நானும்'
யாரோ உளவு சொல்லி...
அப்பாவும், அண்ணனும்
செருப்பால்
விளக்குமாற்றால்
இருவரையும்
வதைத்தார்கள்
"நான் தான் அழைத்தேன்
அவரை விட்டுவிடுங்கள்"
அழுத்தமாய் சொன்னேன்
அழுகை
வரவேயில்லை
சுற்றிலும்
முணுமுணுப்பு கேட்டது
மகன் ஏதுமறியாமல்
தூங்கி கொண்டிருந்தான்
வெறுமையாய்
வெறுப்பாய் இருந்தது
காலை 11 மணி
மார்ச்சுவரியில் - 'நான்'
கிடத்தப்பட்டிருந்தேன்
காமம் - இனி
என்னுள் ஊறாது
காதில் - இனி
எதுவும் விழாது
என்னை நானே
தண்டித்துவிட்டேன்
முன்கதை சுருக்கம்
நோயாளி - துணை
முதலில்
கொஞ்சமாய் ஊறி
தொல்லை செய்தது
தணிக்கப்படவில்லை
ஒருநாள்
அதிகாலையில்
துணை மரித்துப்போனான்
பெருக்கெடுத்தது
செல்கள்,
எண்ணங்கள் - அனைத்தையும்
ஆக்கிரமிக்கத் தொடங்கியது
மானம், அவமானம்
குடும்பம், சமூகம்
கண்களில்
மறையத் தொடங்கியது
என் கண்களில்
'நீலத்தை - 'அவன்'
கண்டுகொண்டான்
பின்குறிப்பு :
பதிவின் சாரம் கற்பனையல்ல. நடந்த சம்பவங்களின் சாரம் தான். (தூரத்து சொந்தமான) அண்ணனின் மனைவி தூக்கிலிட்டு கொண்டார் என நேற்று காலையில் செய்தி வந்தது. அவரை, கடந்த 10 ஆண்டுகளில், விசேஷ வீடுகளில் 4 அல்லது 5 முறை சந்தித்து பேசியிருப்பேன். கடந்த ஓர் ஆண்டுக்கு முன்னால், நோயில் அண்ணன் இறந்து போனார்.
இந்த பதிவின் மூலம், எழுப்பும் கேள்வி இதுதான். இந்த நாட்டில் ஒரு பெண்ணுக்கு திருமணம் நடப்பதே, மிகுந்த சிரமமாயிருக்கிறது.
கணவனை இழந்த பெண்ணுக்கு, அதுவும் பத்து வயது பையன் வைத்திருக்கிற பெண்ணுக்கு மறுதிருமணம். சிரமம்.
ஆனால், இயற்கையாய் உடலில் எழுகிற காமத்தை என்ன செய்வது?
"நான் தான் அழைத்தேன்
அவரை விட்டுவிடுங்கள்"
- இறந்து போன வசந்தாவின் உண்மை உரையாடல் தான்.
எனக்கென்னவோ, பிற்போக்குத்தனமான சமூகம் தான் சத்தமில்லாமல் பல கொலைகளை செய்கிறது. நாம் தாம் அந்த கொலையை, தற்கொலையென தனிநபர் சம்பந்தபட்ட விசயமாய் புரிந்து கொள்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
3 பின்னூட்டங்கள்:
வித்தியாசமான கவிதை.
வேதனை மிகுந்த கருத்து.
அந்த பெண்ணின் நிலை பரிதாபகரமான நிலை தான்.
சமூகம் தான் கொலைகள் செய்கிறது என்பது மிகச்சரி.
உருக்கமான கவிதை - துர்கா
கல்லெறிவதற்கு
எல்லா யோக்கியர்களும்
எப்போதும்
தயாராக இருக்கிறார்கள்.
அசாமில்
நடுத்தெருவில்
பிறப்புறுப்பில் மிதிபடும்
அந்த பழங்குடிப் பெண்தான்
நினைவுக்கு வருகிறாள்.
"நான் தான் அழைத்தேன்
அவரை விட்டுவிடுங்கள்"
இந்தக் குரலுக்கு முன்னால்...
என்ன சொல்வது,
பாய்ந்து
குதறும் பொழுதுதான் தெரிகிறது.
நாம் மிருகங்களுக்கு நடுவில் வாழ்கிறோம்.
அந்தச் சிறுவனுக்கு
என்றேனும் ஒரு நாள் சொல்லுங்கள்,
அவனது தாய் செய்த குற்றம்
பெண்ணாகப் பிறந்தது மட்டும்தானென்று.
Post a Comment