> குருத்து: October 2008

October 18, 2008

ஆண்டுக்கு ஏறத்தாழ 22,327 - பாதாள சாக்கடை கொலைகள்!


மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவது சட்டவிரோதம் என 1993ம் ஆண்டு அரசு சட்டம் இயற்றியிருக்கிறது. மீறினால் ஓராண்டு சிறைத்தண்டனையும், ரூ. 2000 அபராதமும் விதிக்கலாம் என சட்டத்தில் இருக்கிறது.

- 15 ஆண்டுகளுக்கு பிறகு, இப்பொழுது உயர்நீதி மன்றம் பொதுநல மனு ஒன்றை விசாரித்து, மேற்கண்ட சட்டத்தை அரசு அதிகாரிகளுக்கு நினைவுப்படுத்தியிருக்கிறது.

கடந்த 15 ஆண்டுகளில், ஒரு வருடத்திற்கு பாதாளச் சாக்கடையில் இறந்தவர்களின் மன்னிக்கவும் கொல்லபட்டவர்களின் எண்ணிக்கை 22327. இதில் 99.99% பேர் தாழ்த்தப்பட்டோர்.

இந்த நாடு வல்லரசு ஆவது பற்றி, இன்றைக்கு கூட செய்திதாள்களில் அப்துல்கலாம் நினைவுப்படுத்தியிருக்கிறார்.

அவலச் சிரிப்பு மனதிற்குள் எழுகிறது.

கீழ்க்கண்ட கட்டுரை,புதிய ஜனநாயகத்தில் கடந்த மார்ச் 2008ல் வெளிவந்த கட்டுரை. இந்த செய்திக்கு பின்னால் இருக்கும் அரசியலை தெளிவாக விளக்குகிறது.

*****

கொலைகள், நாளும் தொடரும் படுகொலைகள். ஒருவரல்ல, இருவரல்ல; ஆண்டுக்கு ஏறத்தாழ 22,327 தாழ்த்தப்பட்டோர் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இது, ஆதிக்க சாதிவெறியர்களால் கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கை அல்ல. நாடெங்கும் பாதாள சாக்கடை அடைப்புகளை அகற்றும்போது நச்சுவாயு தாக்கி, மூச்சுத் திணறி மாண்டு போகும் துப்புரவுத் தொழில் செய்யும் தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கைதான் இது.

காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரில் குவிக்கப்பட்டுள்ள அரசு பயங்கரவாத போலீசு, இராணுவ, துணை இராணுவப் படையினரில், 1990 முதல் 2007 மார்ச் மாதம் வரை மாண்டு போனவர்களின் எண்ணிக்கை 5100 பேர். பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மாண்டு போன அச்சிப்பாய்களின் குடும்பத்தாருக்கு நிவாரணமும் கருணைத் தொகையும் ஓய்வூதியமும் பதக்கங்களும் அரசால் வழங்கப்படுகிறது. ஆனால், ஆண்டுக்கு ஏறத்தாழ 22,000 பேர் துப்புரவுப் பணியாற்றும்போது மாண்டு போகிறார்கள். அவர்களது குடும்பத்தாருக்கு நிவாரணமோ, உதவிகளோ செய்யப்படுவதில்லை.

கடந்த 2006ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், அரியானா மாநிலத்தின் ஹல்தேரி கிராமத்தில் 50 அடி ஆழமுள்ள ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த 6 வயதான குமார் காஷ்யப் என்ற சிறுவனை மீட்க இராணுவப் படை விரைந்தது. மீட்புப் பணியைப் பார்வையிட மாநில முதல்வர் ஹூடா, அமைச்சர்கள், எம்.பி.க்கள் அங்கே குவிந்தனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அச்சிறுவன் மீட்கப்பட்டதை தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்புச் செய்தன. நாளேடுகள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டன. மீட்கப்பட்ட அச்சிறுவனுக்கு ரூ. 7 இலட்சம் பெறுமான பரிசுகள் வழங்கப்பட்டன. ஆனால், பாதாள சாக்கடையில் இறங்கி அடைப்புகளை நீக்கும்போது நச்சுவாயு தாக்கி தத்தளிக்கும் துப்புரவுத் தொழிலாளியை மீட்க எந்த இராணுவமும் வருவதில்லை. இராணுவம் கிடக்கட்டும்; தீயணைப்புப் படையின் மீட்புக் குழுகூட வருவதில்லை. எந்த அமைச்சரும் எட்டிப் பார்ப்பதில்லை. மாண்டுபோன துப்புரவுத் தொழிலாளியின் குடும்பத்துக்கு நிவாரணமும் இல்லை.

மனிதக் கழிவுகள், அடுப்பங்கரைக் கழிவுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், மருத்துவமனைக் கழிவுகள், ஆடுமாடுகளின் கழிவுகள், இறைச்சிக்கூட கழிவுகள் என அனைத்தும் பாதாளச் சாக்கடையில் பாய்கின்றன. பெருநகரங்களில் இப்பாதாள சாக்கடைகளில் ஆங்காங்குள்ள மனிதக் குழி மூடிக ளைத் திறந்து வெற்றுடம்புடன் இறங்கி துப்புரவுத் தொழிலாளர் அடைப்புகளை அகற்றுகின்றனர். டெல்லி மாநகரில் ஏறத்தாழ 5600 கி.மீ. நீளத்துக்கு குறுக்கும் நெடுக்குமாக அமைந்துள்ள பாதாள சாக்கடையில் ஒன்றரை லட்சத்துக்கும் மேலான திறப்புக் குழிகள் உள்ளன. சென்னையில் 2800 கி.மீ. நீளத்துக்கு ஏறத்தாழ 80,000க்கும் மேற்பட்ட திறப்புக் குழிகள் உள்ளன. அடைப்புகளை நீக்க துப்புரவுத் தொழிலாளர்கள் அன்றாடம் இக்குழிகளில் இறங்கி மூழ்கி எழுகின்றனர்.

மூழ்கி எழுந்தால் உடலெங்கும் கழிவுகள் படிந்து துர்நாற்றம் குடலைப் புரட்டும். பாதாள சாக்கடையில் மூச்சை அடக்கி மூழ்கும்போது கழிவுகள் உதட்டில் படியும். மீண்டு வெளியே வந்து உடலைக் கழுவிய பிறகும் நாற்றம் அருவருப்பூட்டும். பச்சைத் தண்ணீரைக் குடித்தால் கூட குமட்டும்.

பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு கழிவுகள் அழுகியும் நொதித்தும் பலவகை நச்சு வாயுக்கள் உருவாகின்றன. ஹைட்ரஜன் சல்பைடு எனும் கொடிய நச்சு வாயு மூளைக்குச் செல்லும் பிராண வாயுவைத் தடுத்து மயக்கத்தையும் மரணத்தையும் விளைவிக்கும். மீதேன் என்பது இன்னுமொரு கொடிய நச்சு வாயு. இதுவும் மரணத்தை விளைவிக்கும். இவை தவிர கரியமலவாயு, கார்பன் மோனாக்சைடு முதலான நச்சு வாயுக்களும் துப்புரவுத் தொழிலாளிகளைத் தாக்குகின்றன. வாடையோ நிறமோ இல்லாத சில கொடிய நச்சுவாயுக்களைக் கண்டறியவும் முடியாது. பாதாள சாக்கடையின் மனிதக் குழி எனும் மரணக் குழியில் இறங்கி திடீர் மரணமடைவது மட்டுமின்றி, பெரும்பாலான துப்புரவுத் தொழிலாளர்கள் சுவாசக் கோளாறுகளுக்கும், தோல் நோய்களுக்கும் பலியாகின்றனர்.

""நச்சு வாயு உள்ளதா என்று சோதித்தறிய எங்களுக்கு எவ்வித சாதனமும் வழங்கப்படுவதில்லை. பாதாள சாக்கடையின் மனிதக்குழி மூடிகளைத் திறந்து பார்ப்போம். கரப்பான்பூச்சிகள் ஓடினால் பிரச்சினை இல்லை. அவை செத்துக் கிடந்தால் அபாயம். இதுதான் நச்சுவாயு உள்ளதா என்பதைக் கண்டறிய நாங்கள் வைக்கும் சோதனை. கரப்பான் பூச்சிகள் செத்துக் கிடந்தால் நச்சுவாயு உள்ளதாகத் தீர்மானித்து, சிறிது நேரம் மூடியைத் திறந்து வைத்துவிட்டு, பின்னர் குழியில் இறங்குவோம்'' என்கிறார் கிருஷ்ணையா என்ற துப்புரவுத் தொழிலாளி.

""நாங்கள் குழியில் இறங்கி, தீக்குச்சியைப் பற்ற வைத்து கீழே பிடித்துப் பார்ப்போம். தீக்குச்சி சுடர்விட்டு எரிந்தால் நச்சுவாயு உள்ளதாக முடிவு செய்து, சிறிது நேரம் மூடியைத் திறந்து வைத்துவிட்டு குழியில் இறங்குவோம்'' என்று இன்னுமொரு சோதனை முறையைக் கூறுகிறார் முனியசாமி என்ற தொழிலாளி.

மூங்கில் குச்சிகள்தான் அடைப்புகளை நீக்க துப்புரவுத் தொழிலாளிகளுக்குத் தரப்படும் சாதனம். சில நேரங்களில் இரும்புக் கம்பிகள் தரப்படும். ""குழியினுள் மூழ்கி மூச்சை அடக்கி மூங்கில் குச்சியால் குத்தி அடைப்புகளை உடைக்கும்போது, திடீரென உடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் வெள்ளமெனப் பாய்ந்து எங்களை இழுத்துச் சென்றுவிடும். எதிர்நீச்சல் போட்டு எழமுடியாமல் மாண்டவர்கள் ஏராளம்'' என்கிறார் டெல்லியைச் சேர்ந்த சதீஷ் என்ற துப்புரவுத் தொழிலாளி.

பாதாள சாக்கடைக்குள் இறங்கும் துப்புரவுத் தொழிலாளிக்கு கயிறு மட்டும்தான் பாதுகாப்புச் சாதனமாகத் தரப்படுகிறது. கயிறை இடுப்பில் கட்டிக் கொண்டு பாதாள சாக்கடைக்குள் மூழ்கும் தொழிலாளி அபாயம் ஏற்படும்போது கயிறை அசைத்தால், மேலே கயிறைப் பிடித்துக் கொண்டிருக்கும் மற்றொரு தொழிலாளி அவரை இழுத்து மேலே தூக்குவார். ""பல நேரங்களில் மாண்டு போன சக தொழிலாளியின் பிணத்தைத் தூக்குவதற்குத்தான் இந்தக் கயிறு பயன்பட்டிருக்கிறது'' என்று விம்முகிறார் இராமையா என்ற தொழிலாளி.

ஆனால், மேலைநாடுகளிலும் தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் துப்புரவுத் தொழிலாளிக்கு சாக்கடைக் கழிவுகள் உடலில் படாதிருக்க கவச உடைகள் தரப்படுகின்றன. மூச்சுக் கவசங்கள், கைகால்களுக்கான தனிச்சிறப்பான உறைகள் தரப்படுகின்றன. பாதாள சாக்கடையில் துப்புரவுத் தொழிலாளி இறங்குமுன் நச்சுவாயு உள்ளதா என்று நவீன கருவிகளைக் கொண்டு சோதிக்கப்படுகிறது. குழியில் இறங்கியதும் எந்திர விசிறி மூலம் காற்றோட்டம் உருவாக்கப்படுகிறது. துப்புரவு தொழிலாளிக்கென தனிப்பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்த பின் ஒவ்வொரு தொழிலாளியும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

ஆனால், இந்தியாவில், கயிறுதான் துப்புரவுத் தொழிலாளிக்குத் தரப்படும் பாதுகாப்புக் கவசம். இத்தொழிலுக்கென எவ்வித சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்படுவதில்லை. தாழ்த்தப்பட்டோர் என்பதாலேயே துப்புரவுத் தொழிலாளிகள் நம் நாட்டில் நரபலி கொடுக்கப்படுகிறார்கள். டெல்லி குடிநீர்வடிகால் வாரியத்தில் மட்டும் கடந்த 2005ஆம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் 200 துப்புரவுத் தொழிலாளிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்த தொழிலாளிகளில் 95% பேர் படுகாயமடைந்துள்ளனர். பாதிக்கும் மேற்பட்டோர் கண்நோய்கள், தோல் நோய்கள், சுவாசக் கோளாறு, மஞ்சள் காமாலை நோய்களுக்கும் ஆளாகியுள்ளனர். ஓய்வு பெறுமுன்னரே பெரும்பா லான தொழிலாளிகள் நோய் தாக்கி மரணமடைகின்றனர். சராசரியாக 45 ஆண்டுகள்தான் ஒரு துப்புரவுத் தொழிலாளியின் வாழ்க்கைக் காலமாக உள்ளது. அபாயகரமான இத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளிக்கு சம்பளத்தோடு பேரிடர் உதவித் தொகையாக ரூ. 50 முதல் ரூ. 200 வரை மட்டுமே வழங்கப்படுகிறது.

இந்தியாவில் துப்புரவுத் தொழிலாளிகள் அற்பக் கூலிக்கு உயிரைப் பணயம் வைத்து பாதாளச் சாக்கடையில் இறங்கும் அதேநேரத்தில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் துப்புரவுத் தொழிலாளர்கள் பாதுகாப்புக் கவசங்களுடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டு மாதத்துக்கு ஏறத்தாழ ரூ. 1 லட்சம் ஊதியம் பெறுகிறார்கள். ஆறு மாதங்களில் இச்சம்பளம் இரு மடங்காக உயர்த்தப்படுகிறது. ஆனால் இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றும் நிரந்தரம் செய்யப்பட்ட துப்புரவுத் தொழிலாளிக்கு மாதம் ரூ. 12,000 கூட ஊதியமாகக் கிடைப்பதில்லை. ""எல்லா பாதுகாப்புக் கவசங்களுடன் ரூ. 50,000 வரை சம்பளம் கொடுத்தாலும் பார்ப்பனர்களும் ஆதிக்கச் சாதியினரும் இத்தொழிலைச் செய்ய முன்வர மாட்டார்கள். தாழ்த்தப்பட்ட சாதியினர் மட்டுமே இத்தொழிலை நிர்ப்பந்தமாகச் செய்யுமளவுக்கு இங்கே தீண்டாமை புரையோடிப் போயுள்ளது'' என்று வேதனையுடன் குறிப்பிடுகிறார், தாழ்த்தப்பட்ட வால்மீகி சங்கப் பிரமுகரான புருசோத்தமன் வகேலா.

""ஏதோவொரு கம்பெனியின் ஆதாயத்துக்காக டெல்லி மாநகராட்சி 50 பாதுகாப்புக் கவசங்களை வாங்கியது. இங்கு நாங்கள் 800 பேருக்கு மேல் இருக்கும்போது, யார் இதை அணிய முடியும்? மேலும் அதன் எடையோ 18 கிலோ. இது தவிர வாயுக்கலன் எடையோ 13 கிலோ. இவற்றைச் சுமந்துக் கொண்டு சாக்கடை குழியில் இறங்கினால், மீண்டு வர முடியாமல் அங்கேயே சமாதி ஆக வேண்டியதுதான்'' என்று பாதுகாப்புக் கவசங்களின் யோக்கியதையும் அரசின் அலட்சியத்தையும் சாடுகிறார் டெல்லியைச் சேர்ந்த துக்காராம் என்ற தொழிலாளி.

ஆனால் அரசோ, நாங்கள் பாதுகாப்புக் கவசம் வழங்கியும் கூட, அவற்றைத் துப்புரவுத் தொழிலாளிகள் பயன்படுத்துவதில்லை என்று பழிபோட்டு தப்பித்துக் கொள்கிறது. இதேபோல அடிக்குழாய் மூலம் சேற்றை உறிஞ்சும் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டு, நம் நாட்டு பாதாள சாக்கடைகளுக்குப் பொருத்தமில்லாததால் துருப்பிடித்து கிடக்கின்றன.

தனியார்மயக் கொள்கை தீவிரமாக்கப்பட்ட பிறகு, பல மாநகராட்சிகளில் துப்புரவுப் பணிகள் தனியாருக்குக் கையளிக்கப்பட்டுள்ளன. இத்தனியார் நிறுவனங்கள் அற்பக் கூலிக்கு ஒப்பந்தத் தொழிலாளிகளை வேலைக்கு அமர்த்தி கொழுத்த ஆதாயமடைகின்றனவே தவிர துப்புரவுத் தொழிலாளிக்கு எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்வதில்லை. ஆபத்தான பாதாள சாக்கடைப் பணிகளில் இறங்கி துப்புரவுத் தொழிலாளி மாண்டு போனால், அற்பத் தொகையை நிவாரணமாகக் கொடுப்பதற்கு மேல் அவை வேறொன்றும் செய்வதில்லை. ஒப்பந்தத் தொழிலாளி என்பதால் வழக்கு விசாரணையும் நடப்பதில்லை. அரசோ இது ஒப்பந்த நிறுவனத்துக்கும் தொழிலாளிக்குமான தாவா என்று கூறி, கை கழுவிக் கொள்கிறது. கடந்த மார்ச் 2006லிருந்து ஆகஸ்ட் 2007 வரை டெல்லியில் 14 துப்புரவுத் தொழிலாளிகள் பாதாள சாக்கடையில் இறங்கி வேலை செய்யும்போது மாண்டு போயுள்ளனர். இவர்களில் 12 பேர் ஒப்பந்தக் கூலிகள். இவர்களது குடும்பத்தாருக்கு எவ்வித நிவாரணமும் இன்றுவரை கிடைக்கவில்லை.

ஒப்பந்ததாரர்கள் மூலம் துப்புரவுத் தொழிலாளிகளை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்று ஏற்கெனவே குஜராத் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும், நாடெங்கும் ஒப்பந்த அடிப்படையிலான துப்புரவுப் பணியே விரிவடைந்து வருகிறது. இத்தகைய ஒப்பந்த முறையானது, துப்புரவுத் தொழிலாளிகளின் உயிரைப் பறிப்பதோடு, நிரந்தரத் தொழிலாளிகளின் வேலையையும் பறிக்கிறது. சென்னை மாநகராட்சி, 2003ஆம் ஆண்டில் பாதாள சாக்கடைத் துப்புரவுப் பணியை ஒரு கோடி ரூபாய் ஏலத்துக்கு கே.கே.குமார் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்ற நிறுவனத்திடம் கையளித்தது. அத்தனியார் நிறுவனமோ பாதாள சாக்கடையில் மூழ்கி மூச்சை அடக்கி நீந்திச் சென்று அடைப்புகளை நீக்கும் தனிச்சிறப்பான நீச்சல் பணியாளர்கள் 250 பேரை வேலையிலிருந்து நீக்கிவிட்டு, அற்ப கூலிக்கு அவர்களை ஒப்பந்தக் கூலிகளாக்கியுள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பைத் துச்சமாக மதிப்பது ஒருபுறமிருக்க, தான் இயற்றிய சட்டத்தையே இந்திய அரசு கிடப்பில் போட்டுவிட்டு, துப்புரவுத் தொழிலாளிகளான தாழ்த்தப்பட்டோரை நாயினும் கீழானவர்களாகவே நடத்தி வருகிறது. மனித மலத்தைத் தலையில் சுமப்பது, உலர் கழிப்பறைகளைச் சுத்தம் செய்வது ஆகியன 1993ஆம் ஆண்டில் இந்திய அரசால் சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ளன. இச்சட்டத்தை மீறினால், ஓராண்டு சிறைத் தண்டனையும் ரூ. 2,000 அபராதமும் விதிக்கப்படும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி வழக்கும் தொடரப்படும். இருப்பினும் மலம் அள்ளும் துப்புரவுப் பணி இந்திய அரசாலேயே சட்டவிரோதமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

நாட்டின் மிகப் பெரிய அரசுத்துறை நிறுவனமான இரயில்வே துறையில் மலம் அள்ளும் தொழில் இன்னமும் வெளிப்படையாகவே நடந்து வருகிறது. இரயில்வே துறையில் ஏறத்தாழ 14,500 ரயில் பெட்டிகளில் பழங்கால முறையிலான கழிவறைகளே நீடிக்கின்றன. ரயில் நின்ற பிறகுதான் பயணிகள் கழிப்பறைக்குச் செல்வதால் ரயில் நிலையங்கள் மலக்காடாகின்றன. மனிதர்கள் மலம் அள்ள சட்டபூர்வமாகத் தடைவிதிக்கப்பட்டுள்ள போதிலும், 6856 ரயில் நிலையங்களில் தாழ்த்தப்பட்டோரான துப்புரவுத் தொழிலாளிகளே மலம் அள்ளும் வேலையைச் செய்கின்றனர். இக்கொடுமைக்கு எதிராக பல்வேறு அமைப்புக ளும் பலமுறை போராடிய போதிலும், வழக்கு தொடுத்த போதிலும் அரசு அசைந்து கொடுக்கவில்லை. ரயில் பெட்டிகளில் நவீன கழிப்பறைகளை அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது என்றும், அதிக செலவு பிடிப்பதால் திட்டம் தாமதமாகிறது என்றும் பசப்பி வருகிறது இரயில்வே துறை.

இரயில்வே துறையிலேயே சட்டவிரோதமாக இக்கொடுமை தொடரும்போது, நகராட்சிகள் பஞ்சாயத்துக்களின் நிலைமை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. துடப்பம், இரும்புவாளி, தகர முறத்தோடு இன்னமும் துப்புரவுத் தொழிலாளிகள் மனித மலத்தை அள்ளும் கொடுமை பல மாநிலங்களில் கேள்விமுறையின்றித் தொடர்கிறது. நாடெங்கும் ஏறத்தாழ 13 லட்சம் தாழ்த்தப்பட்டோர் மனித மலம் அள்ளுவதைச் செய்து வருவதாக துப்புரவுத் தொழிலாளர் சங்கம் (சஃபய் கரம்சாரி அந்தோலன் குஓஅ) கூறுகிறது. இச்சட்டவிரோத சமூகக் கொடுமைக்கு எதிராக இச்சங்கம் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, எல்லா மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தில் நவீன கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், மனித மலம் அள்ளும் துப்புரவுத் தொழிலாளி என்று யாருமே இல்லை என்றும் கூசாமல் புளுகின. மேலும், மலம் அள்ளும் தொழிலில் ஈடுபட்டு வந்த துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வும் மாற்று வேலைவாய்ப்பும் செய்யப்பட்டதாகவும் அவை கணக்குக் காட்டி ஏய்த்தன.

இரயில்வே முதற்கொண்டு நகராட்சிகள் பஞ்சாயத்துகள் வரை மலம் அள்ளுவது உள்ளிட்ட துப்புரவுப் பணிகள் தனியார்மயமாக்கப்பட்டு வருவதால், மைய அரசும் மாநில அரசுகளும் தாங்கள் மலம் அள்ளும் தொழிலாளர்களை நேரடியாக வேலைக்கு அமர்த்தவில்லை என்று கூறி மோசடி செய்கின்றன. மேலும், துப்புரவுப் பணி என்பது மாநில அரசின் பொறுப்பு என்கிறது மைய அரசு. இதன்படி மலம் அள்ளுவதும் துப்புரவுப் பணிதான் என்பதாகச் சுருக்கி, இச்சமூகக் கொடுமையை சாதாரண துப்புரவு சுகாதாரப் பிரச்சினையாகச் சுருக்கி விட்டது மைய அரசு.

மனித மலத்தை அள்ளும் தொழிலுக்குத் தடைவிதித்து 13 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்று வரை இச்சமூகக் கொடுமை தொடர்ந்த போதிலும், இதுவரை ஒரு வழக்கைக் கூட அதிகார வர்க்கமோ, போலீசோ பதிவு செய்யவில்லை. இச்சட்டம் வெறும் காகிதச் சட்டமாகவே உள்ளது. துப்புரவு அதிகாரி, சுகாதார அதிகாரி, மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடமே இச்சட்டத்தின்படி கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உள்ளது. இந்நிலையில், மலம் அள்ளும் துப்புரவுத் தொழிலாளியால் புகார் மட்டும்தான் கொடுக்க முடியும். அரசு எந்திரத்தில் உள்ள சாதிவெறி கொண்ட அதிகார வர்க்கம் இத்தகைய புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவது இன்னுமொரு மூட நம்பிக்கைதான்.

மலம் அள்ளும் இழிதொழிலிலிருந்து மீண்டு வேறு தொழில் செய்து பிழைக்க தாழ்த்தப்பட்டோர் முயுற்சித்தாலும், பார்ப்பன இந்துமத சாதியக் கட்டுமானம் அவர்களை மீண்டும் பழிவாங்குகிறது. அரியானா மாநிலத்தின் ரோடக் மாவட்டத்தைச் சேர்ந்த சுமித்ரா தேவி எனும் இளம் பெண், சில சமூக ஆர்வலர்களின் உதவியுடன் மலம் அள்ளும் இழிதொழிலிலிருந்து மீண்டு, வங்கியில் கடன் பெற்று கிராமத்தில் துணி வியாபாரம் செய்தார். பிணங்களின் மீது இறுதியாகப் போர்த்தப்படும் துணிகளைக் களவாடி அவர் துணி வியாபாரம் செய்வதாக ஆதிக்க சாதியினர் வதந்தியைப் பரப்பி, அவரது வியாபாரத்தையே முடமாக்கினர். நட்டமடைந்த அவர் வியாபாரத்தை விட்டு, வேறு வழியின்றி இப்போது மீண்டும் மலம் அள்ளும் தொழிலையே செய்கிறார்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மொகஞ்சதாரோ ஹாரப்பா நாகரிக காலத்தில் கூட, ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டு, செங்கற்களிலான கால்வாய் மூலம் கழிவுகள் வெளியேற்றப்பட்டுள்ளன என்பதை அகழ்வாராய்ச்சிகள் நிரூபித்துக் காட்டுகின்றன. ஆனால் தொழில்நுட்பப் புரட்சி நடக்கும் இன்றைய நவீன காலத்தில் இன்னமும் நம்நாட்டில் மனித மலத்தை அள்ளும் கொடுமை தொடர்கிறது. நாடெங்கும் நவீன கழிப்பறைகளைக் கட்டியமைத்து இக்கொடுமையைத் தடுத்து நிறுத்த, போதிய நிதி இல்லை என்று அரசு வாதிடுவது மிகப் பெரிய மோசடி. சந்திரனுக்கு விண்கலம் அனுப்ப ""சந்திராயன் ஐஐ'' திட்டத்துக்கு ரூ. 386 கோடியை அரசு வாரியிறைக்கிறது. ஆனால், மலம் அள்ளும் கொடுமையை நிறுத்தவும், பாதாள சாக்கடைகளை நவீனப்படுத்தி துப்புரவுத் தொழிலாளர்கள் நரபலி கொடுக்கப்படுவதைத் தடுக்கவும் மட்டும் நிதியில்லையாம்!

ஜவஹர்லால் நேரு நகர புனரமைப்புத் திட்டத்தின் கீழ் கடந்த ஏழாண்டுகளில் ரூ. 1,20,536 கோடிகளை நகராட்சிகளுக்கும் உள்ளூராட்சிகளுக்கும் மைய அரசு வாரியிறைத்துள்ளது. இதில் ஏறத்தாழ 40% தொகை வடிகால்கள், பாதாள சாக்கடைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீண்டும் பழைய வழியிலான பாதாளச் சாக்கடைக் குழாய்களும் மனிதக் குழிகளும் அமைக்கப்படுகின்றனவே தவிர, துப்புரவுத் தொழிலாளிகளின் பாதுகாப்புக்காக சல்லிக்காசு கூட செலவிடப்படுவதில்லை. ஏனெனில், அருவருப்பான ஆபத்தான தொழில் என்றாலும், பாதாள சாக்கடையைத் துப்புரவு செய்ய மலிவான உழைப்புக்கு தாழ்த்தப்பட்டோர் இருக்கிறார்கள் என்கிற அரசின் சாதியத் திமிர் தான் இதற்குக் காரணம்.

அதிகார வர்க்கம், போலீசுஇராணுவம், நீதித்துறை அடங்கிய இன்றைய அரசு எந்திரம்தான், சட்டத்திற்கும் சமூக நீதிக்கும் எதிராக மலம் அள்ளும் தொழிலில் தாழ்த்தப்பட்டோரை நிர்பந்தமாகத் தள்ளுகிறது. எவ்விதப் பாதுகாப்போ நிவாரணமோ இன்றி, பாதாள சாக்கடைதுப்புரவுத் தொழில் செய்யும் தாழ்த்தப்பட்டோரை தொடர்ந்து நரபலி கொடுத்து வருகிறது. அவர்களை அறிந்தே தீராத கொடிய நோய்களில் தள்ளி வதைக்கிறது. தாழ்த்தப்பட்டோருக்கென்றே இத்தொழிலை ஒதுக்கி பார்ப்பன சாதியக் கட்டுமானத்தைக் கட்டிக் காக்கிறது. தீண்டாமைக்கும், தொடரும் இக்கொடுமைக்குமான முதல் குற்றவாளியே இன்றைய அரசமைப்புதான்.

கிஞ்சித்தும் மனிதாபிமானமின்றி சாதியத் திமிர் கொண்ட இக்கேடுகெட்ட அரசமைப்பை வீழ்த்தாமல் துப்புரவுத் தொழில் செய்யும் தாழ்த்தப்பட்டோர் நரபலியாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்திட முடியாது. உழைக்கும் மக்களின் புரட்சிகர அரசை நிறுவாமல் மனித மலம் அள்ளும் சமூகக் கொடுமைக்கு முடிவு கட்டவும் முடியாது.

· பாலன்

(அனுமதியுடன்)