September 11, 2009
காமென்வெல்த் விளையாட்டு போட்டியும்! இந்திய பிச்சைகாரர்களும்!
பராசக்தி படத்தில் ரங்கூனிலிருந்து வந்து, டாக்ஸியில் இருந்து கிளம்பும் பொழுது, பணக்கார இளைஞன் சிவாஜி சொல்வாரே! "தமிழ்நாட்டின் முதல்குரலே பிச்சைக்குரலா?
இதே போல காமென்வெல்த் போட்டி தலைநகர் தில்லியில் 2010-ல் துவங்க இருக்கும் இவ்வேளையில் சிவாஜியை போல வெளிநாட்டினர் யாரும் வல்லரசு இந்தியாவை நாக்கு மேல பல்லை போட்டு, கேவலமாக சொல்லிவிடக்கூடாது என்பதற்காக, தில்லியை சுத்தப்படுத்தும் வேலையில், முதல் வேலையாக பிச்சைகாரர்களை ஒழிக்க தில்லி அரசு ஒரு "அருமையான" திட்டம் ஒன்றை தீட்டியிருக்கிறார்கள்.
அந்த திட்டம் பிச்சைகாரர்களை ஒழிப்பது. இதற்காக பிச்சைகாரர்கள் எத்தனை பேர் என்பதை
ஆள்விட்டு எண்ணியதில்... 60,000 பேர் இருக்கிறார்களாம்.
ஒழிப்பது என்றால்? அநியாயமாக பிச்சைகாரர்களை போட்டுத் தள்ளுவதா? அல்லது ஆக்கப்பூர்வமாக தொழில் வாய்ப்புகளை அல்லது கைத்தொழில் கற்றுத்தருவதா? அல்லது ஆந்திர அரசு செய்வது போல பாதுகாப்பு இல்லங்களை உருவாக்கி பராமரிப்பதா? இதில் எதுவும் இல்லை.
நாய் பிடிக்கும் வண்டிகள், சில உதவியாளர்கள், சில போலீசு, நீதிபதி - என குழு தயார் செய்து.... பிச்சைகாரர்களை லபக்கென்று பிடித்ததும், உள்ளே இருக்கும் நீதிபதி (விளையாட்டு போட்டிகள் முடியும் வரை) சில மாதங்கள் சிறைக்குள் தள்ள தீர்ப்பு எழுதுவார். பிறகு போலீசுகாரர் உள்ளே தள்ளுவார்.
இந்த பிச்சைகாரர்கள் எல்லாம் எங்கிருந்து வந்தார்கள்? வானத்திலிருந்து குதித்தார்களா? அல்லது முந்தைய காலத்தில் நாடு கடத்தப்படுவார்களே! அதுமாதிரி நாடு கடத்தப்பட்டு இங்கு
வந்தவர்களா? இந்த பிச்சைகாரர்கள் எல்லாம் இந்திய குடிமகன்கள் தானே? சமூக ஏற்ற தாழ்வுகள், அரசின் மோசமான பொருளாதார கொள்கைகள் மூலம் உருவானவர்கள் தானே இவர்கள்! இவர்களும் மரியாதையுடனும், மானத்துடன் வாழ வழி வகை செய்வது இந்திய அரசின் கடமையல்லவா? சிறைக்குள் தள்ளினால் பிரச்சனை தீர்ந்துவிடுமா என்ன?
இன்றைக்கு யாரும் கண்டு கொள்ளப்படாத பிச்சைகாரர்கள்! நாளை பிளாட்பார வாசிகள்! அடுத்த நாள் சேரிவாசிகள்! - என சிறைக்குள் தள்ளுவதை தொடர மாட்டார்களா?
போராட்டங்கள் எழாத வரை இவர்கள் யாரை வேண்டுமென்றாலும், உள்ளே தள்ளுவார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்:
Post a Comment