> குருத்து: நவம்பர் 7 - புரட்சிகர நிகழ்ச்சி! - ஓர் அனுபவம்!

November 7, 2011

நவம்பர் 7 - புரட்சிகர நிகழ்ச்சி! - ஓர் அனுபவம்!


காலச்சக்கரத்தை பின்சுழற்றி பார்க்கிறேன்.
ஒரு சிறிய ஹால்.
50,60 தோழர்கள்.
பெரும்பாலும் ஆண் தோழர்கள்.
புரட்சியை நேசிக்கும் தோழர்
முதல் பாட்டாளிவர்க்க அரசின் சாதனைகளை
கண்கள் பிரகாசிக்க சொல்வார்.
முதலாளித்துவ கொடூரங்களின்
உச்சங்களை சொல்வார்.
இறுதியில்,
ஒவ்வொருவரும் உறுதிமிக்க
போல்ஷ்விக்காக
உறுதி ஏற்கவேண்டும்! என்பார்.

*****

இன்றும் பார்க்கிறேன்.
நிறைய இளம் மாணவர்கள்.
சரிக்கு சரியாக இளம்பெண் தோழர்கள்
இளம்தோழர்களின் அம்மாக்கள்,
அப்பாக்கள்,
அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கும்
குழந்தைகள்
எல்லோருடைய வயதையும் கூட்டி
எண்ணிக்கையால் வகுத்துப்பார்த்தால்
வயது இருபதை தாண்டாது!
ஆயிரத்திற்கும் அதிகமான நாற்காலிகள்.
இடம் கிடைக்குமா என்ற பயம் வந்தது.
இன்னும் வந்துகொண்டே இருந்தார்கள்.

****

புரட்சிக்காக உயிரைக் கொடுத்த
தோழர்களுக்கு
உணர்ச்சிமிக்க பாடலால்
வணக்கம் செலுத்தினார்கள்.

****

'நான் உலகம்!
தொழிலாளி - நானே உலகம்'
பாடலுக்கு நடித்து
உழைப்பால் உலகத்தைப் படைத்த
தொழிலாளர்களுக்கு
தன் அசுர பலத்தை உணரவைத்தார்கள்.

****

நாடகத்தில்...
குடித்துவிட்டு உதைத்த
கணவன் மூஞ்சியில்
தாலியை விட்டெறிந்தார்கள்.

****

மாறுவேடத்தில்...
இளம்பிஞ்சு தோழர்கள்
இளம் பெரியாராக
இளம் ஜான்சிராணியாக
இளம் பகத்சிங்காக
புதிய விடுதலை போருக்கு
அறைகூவல் விடுத்தார்கள்.

****

தங்களின் ஒற்றுமையால்; உறுதியால்
புரட்சிகர சங்கத்தை கட்டியமைத்து
முதலாளிகளின் திமிரை குறைத்த
தொழிலாளர்கள் புதிய திமிருடன்
கள அனுபவங்களை பகிர்ந்தார்கள்.

****

அன்று பேசிய பேச்சு விதை!
மக்களுடன்
களத்தில் உறுதியுடன்
போராடியதன் பயன்
நக்சல்பாரி அரசியல்
மக்களை பற்றிக்கொண்டுவிட்டது!
மக்களே நக்சலைட்டுகளாக!
இனி, எதிரிகளால்
பிரித்து பேசமுடியாது!

****

இதோ
போராட்டங்களினால்
கண்டெடுக்கப்பட்ட
இளம் பெரியார்கள்
இளம் அசரத் மகள்கள்
இளம் பகத்சிங்குகள்!


இனி,
மெல்ல, மெல்ல
எங்கும் பரவுவார்கள்.
எட்டப்பர்களுக்கு
காலம் நெருங்கிவிட்டது!


நேற்று
நிம்மதியாய் உறங்கினேன்!
சுதந்திர தேசத்தில்
செங்கொடி காற்றோடு
ஜெயித்த கதை பேசுவதாய்
கனவு வந்தது!
விரைவில்
கனவு நிஜமாகும்!

****

பின்குறிப்பு : நவம். 7 - புரட்சிதினத்தை ஒட்டி, சென்னையில் மக்கள் கலை இலக்கிய கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி அமைப்புகள் கொண்டாடின. அந்த நிகழ்வுக்கு போய் வந்த அனுபவத்தை தான் இங்கு பகிர்ந்துள்ளேன். நன்றி.

2 பின்னூட்டங்கள்:

Anonymous said...

:)

bagat said...

தோழருக்கு வணக்கம்.

நவம்பர் 7 நிகழ்ச்சிகளை கவிதையாக எழுதியிருப்பதை விட விரிவான பதிவாக எழுதியிருக்கலாம்.

கவிதையையும் சற்று நீளமாக (நீண்ட கவிதையாக) முழு நிகழ்ச்சியை பற்றியும் ஒரு சித்திரத்தை கொடுக்கும்படி எழுதியிருக்கலாம். நிகழ்வை பதிவாக எழுத இயலுமா என்று பாருங்கள்.

மேலும் நீங்கள் கூறியிருப்பதை போல ம.க.இ.க திரள் திரளான மக்களை நக்சல்பாரிகளாக மாற்றிக்கொண்டிருக்கிறது.