
காலுக்குத் தொப்பியும்
தலைக்குச் செருப்பும் அணியுமாறு
இந்த நிமிடம் வரை உத்தரவு
எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.
கண்ணிருக்கும் இடத்தில் கண்ணும்
காதிருக்கும் இடத்தில் காதுமே
இருந்துவிட்டுப் போகட்டுமென்று
மாட்சிமை தங்கிய அரசு
குடிமக்களை இன்றும் அனுமதித்திருக்கிறது,
கருணையுடன்…..
தொடர்ந்தும் வாய் வழியாகவே
உண்பதைமாற்றுவது குறித்து
இன்றைய அமைச்சரவைக்
கூட்டத்திற்குப் பிறகு அறிவிக்கப்படும்.
ஒரு மாறுதலுக்காகவும் காற்றை மிச்சப்படுத்தவும்
மூக்கின் ஒரு துவாரத்தை தூர்த்து மூடும் திட்டம்
நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது.
உலகிலேயே முதன் முறையாக
தண்டவாளத்தில் பேருந்து,
தார் ரோட்டில் ரயில்
துறைமுகத்தில் விமானம்,
விமான நிலையத்தில் கப்பல் என்று
அரசு எடுத்துவரும்
ஆக்கப்பூர்வ மாற்றங்களுக்கு ஆதரவளிக்குமாறு
குடிமக்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்.
பிரசவ ஆஸ்பத்திரியை
சுடுகாட்டுக்கு மாற்றியுள்ள அரசு
நாட்டையே சுடுகாடாக மாற்றும்
திட்டம் படிப்படியாக நிறைவேறும்.
கோன் எவ்வாறோ குடிமக்களும்
அவ்வாறேயானபடியால்
அவர்களும்
எதையும் எப்போதும்
ஒரே இடத்தில்
நீடித்திருக்க விடமாட்டார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
****
நன்றி: ஆதவன் தீட்சண்யா
முதல் பதிவு: ஜூனியர் விகடன் 13/11/2011 இதழ்
0 பின்னூட்டங்கள்:
Post a Comment