> குருத்து: September 2014

September 2, 2014

கண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர்



நிறைய புள்ளி விவரங்களுடனும், 35 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை ஒருமணி நேரத்தில் படித்து முடித்துவிட்டேன். குழந்தைகளிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்காக, அவர்களும் படிப்பதற்காக உருவாக்கிய புத்தகம் என்பதை பிறகு அறிந்துகொண்டேன்.

அடுத்த உலகப்போர் நீருக்காகத்தான் என கணித்திருக்கிறார்கள் சில அறிஞர்கள் என துவங்குகிறது புத்தகம். அந்த நீர் அரசியலைப் பற்றி விரிவாக விவாதிக்கிறது இந்த சின்னப் புத்தகம்.

புத்தகத்திலிருந்து சில பகுதிகள்…

சவுதி அரேபியா கோதுமை உற்பத்தியில் தன்னிறைவு பெற்று ஏற்றுமதியும் செய்துகொண்டிருந்தது.  ஆனால், தற்பொழுது கோதுமையை இறக்குமதி செய்கிறது. ஏன்?

சீனர்களுக்கு பிடித்த உணவு பன்றிக் கறி. ஆனால், இப்பொழுது பன்றிக்கறி உற்பத்தியை கட்டுப்படுத்தி வருகிறது. ஏன்?

சிக்கன நீர்ப்பாசனத்துக்கு பெயர் பெற்ற இஸ்ரேல் ஆரஞ்சு பழங்களை மட்டும் ஏற்றுமதி செய்வதில்லை. காரணம்?

எல்லாவற்றிக்கும் மறைநீர் தான் காரணம்.

மறை நீர் என்றால்?

கோதுமை விளைவிக்க நீர் தேவை. விளைந்தவுடன் அந்த நீர் காணப்படுவதில்லை.  காணாமல் போன நீர் அந்த கோதுமை மணிகளுக்குள் உட்பொதிந்துள்ளது அல்லது மறைந்துள்ளது என்பது உண்மை தானே! அதுதான் மறைநீர்.

தண்ணீர் அதிகமாக தேவைப்படும் வேளாண் பொருட்கள் மற்ற பொருட்களையும் வளர்ந்த நாடுகள் எல்லாம் மூன்றாம் உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்துகொள்கின்றன என்கிறார்.

திருப்பூர் பின்னலாடை உற்பத்தியும், தமிழகத்தில் திண்டுக்கல், வாணியம்பாடி பகுதிகளில் செய்யப்படும் தோல் பதனிடும் தொழிலும், கார் உற்பத்தியும் நமக்கு கிடைத்தது மறைநீர் தான் காரணம்!

1.1டன் எடையுள்ள கார் தயாராக 4 லட்சம் லிட்டர் நீர் தேவை!
ஒரு பின்னலாடை தயாரிக்க 2700 லிட்டர் தேவை!
*****

இந்த உலகத்தின்  97% கடல் நீர்.
மீதமுள்ள 3% நீரில் 68.7% பனிக்கட்டியாக!
30.1% நிலத்தடியில் கடின நீராக பயன்படுத்தமுடியாத படி!
0.3% நீர் தான் மேற்பரப்பு நீராக இருக்கிறது!

அந்த 0.3% நீரில் 87% ஏரியில்!
11% குளங்களில்!
2% தான் ஆற்று நீர்.
இந்த 2% தான் உலகத்தில் உள்ள எல்லா உயிரினங்களும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
****

தமிழ்நாட்டின் நீர் வளம் ரெம்ப மோசம்.  இந்தியாவில் பாலைவனம் உள்ள மாநிலமான இராஜஸ்தானுக்கு அடுத்து மழை குறைவாக பெய்யும் மாநிலம் தமிழ்நாடு.  தமிழ்நாட்டில் உள்ள குடிநீரில் 72% குடிக்க லாயக்கற்றது என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
****
  
“ஆசிய மக்களின் மறைநீர் நாளென்றுக்கு 1400 லிட்டர்.
அமெரிக்க, ஐரோப்பிய மக்களின் மறைநீர் 4000 லிட்டர்”
-Daniel Zimmer, 2003
“மறைநீர் வணிகம் மற்றும் புவிஅரசியல்” என்ற தலைப்பின்கீழ் உலக நீர் மன்றத்தின் இயக்குநர் தான் டேனியல் சிம்மர்.

இப்படி பல அதிர்ச்சியான செய்திகளோடு நகரும் புத்தகம், தீர்வாக பசுமை பொருளாதாரத்தை முன்வைக்கிறார்.

பசுமை பொருளாதாரத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால் கூட சமூக மாற்றம் இல்லாமல் சாத்தியமில்லை என்பது யதார்த்தம்.

வெளியீடு : ஒசூர் அன்புக்கரங்கள் அறக்கட்டளை
எனக்கு ஒரு தோழர் படிக்க தந்தார். புத்தகத்தின் விலையை புத்தகத்த்தில் எங்கும் குறிப்பிடவில்லை. இணையத்தில் தேடும் பொழுது, உடுமலை.காம் ரூ.15 என விலை நிர்ணயம் செய்துள்ளது!