கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, இயக்கப்பணி தொடர்பாக வீடு வீடாக,
ரயில்களில், பேருந்துகளில் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்திருக்கிறேன்.
மக்களில் நேற்று துவங்கிய கட்சிக்கு கூட தொண்டர்களை சந்தித்திருக்கிறேன்.
ஆனா பாருங்க இந்த காங்கிரசு தொண்டரை மட்டும் பார்த்ததேயில்லை. சக
தோழர்களிடமும் அவ்வப்பொழுது கேட்பதுண்டு. அவர்களும் பார்த்ததேயில்லை
என்பார்கள்!
என் வாழ்வில் இரண்டு காங்கிரசுகாரர்கள் கடந்து போயிருக்கிறார்கள். ஒருவர் என் அப்பா. பஞ்சாலை
தொழிலாளியான அவர், தன் வாழ்வில் இறுதி ஆண்டுகளில் குடியில் காலம்
கழித்தார். அதனால், அவ்வப்பொழுது வேலைக்கு போகமாட்டார். அங்கிருந்த
காங்கிரசின் தொழிற்சங்கமான ஐஎன்டியூசி தான் அவ்வப்பொழுது வேலை போகாமல்
காப்பாற்றியது. அதற்கு நன்றி பாராட்டும் விதமாக, வீட்டில் ஒரு இந்திரா
படத்தை மாட்டி வைத்திருந்தார். மற்றபடி, காங்கிரசின் நடவடிக்கைகளை
எப்பொழுதும், எவ்வளவு விமர்சனம் செய்தாலும், எதிர்த்து பேசமாட்டார்.
மெளனமாக இருப்பார்.
இன்னொரு
காங்கிரசுகாரர். 1991ல் அப்பொழுதெல்லாம் ரெம்ப சின்ன பையன் நான். வீட்டு
திண்ணையில் என் அப்பாவுடன் தூங்கிகொண்டிருந்தேன். திடீரென
பெருங்குரலெடுத்து அழும் சத்தம் கேட்டு எழுந்தேன். பக்கத்து வீட்டில்
குடியிருந்த 55 வயது பெரியவர் துக்கம் தாளாமல் விடிய விடிய அழுதார்.
என்னவென்று கேட்ட பொழுது ராஜீவ் கொல்லப்பட்ட விசயத்தை சொன்னார்கள்.
என் வாழ்வில் நான் சந்தித்த இந்த இரண்டு காங்கிரசுகாரர்களும் செத்துப்போய்
10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. நிலைமை இப்படி இருக்கும் பொழுது, E.V.K.S
இளங்கோவன் எந்த தைரியத்தில் ஆட்சியில் பங்கு கேட்கிறார்? சிரிப்பு
சிரிப்பாக தான் வருகிறது! இவரே பங்கு கேட்கும் பொழுது, டாக்டர்
அன்புமணிக்கு முதலமைச்சர் ஆசை வருவது எல்லாம் இயல்புதான் போல!
சாத்தியமில்லை தான். இருந்தாலும் சொல்லி வைக்கிறேன். உங்களில் யாராவது
காங்கிரசு தொண்டரை பார்த்தால், என்னிடம் தெரிவியுங்கள். வாழ்வில்
ஒருமுறையாவது நான் பார்த்துவிடவேண்டும் என ஆவலோடு இருக்கிறேன்.
July 20, 2015
Subscribe to:
Posts (Atom)