எங்கு பார்த்தாலும் உறைபனி சூழ்ந்திருக்கும் அண்டார்டிகா மலைப் பிரதேசம். அங்கு ஆராய்ச்சிக்கு வருபவர்களுக்கு, ஜெரி உதவுகிற வேலை. அங்கு போய்வர வண்டி எதுவும் பயன்படுத்த முடியாத நிலை. ஆகையால், ஜெரியால் பயிற்சி கொடுக்கப்பட்ட, சுறுசுறுப்பான எட்டு நாட்கள் போய்வர உதவுகின்றன.
மெர்க்குரியிலிருந்து விழுந்த கல்லைத்தேடி, ஆய்வுக்கு வருகிறார் ஒரு விஞ்ஞானி. காலநிலை சரியில்லை என ஜெரி தயங்குகிறான்.. நிர்வாகம் அழுத்தத்தால், வேறு வழியில்லாமல் அரைகுறை மனதோடு அழைத்து செல்கிறான். அந்த பயணத்தின் பொழுதே, புயல் வந்து கொண்டிருப்பதாகவும் உடனே திரும்பும்படியும் உத்தரவிடுகிறார்கள்.. ரிஸ்க் எடுக்காமல் எதுவுமில்லை என ஜெரியிடம் பேசி, அரைநாளில் கல்லைத் தேடி எடுத்துவிடுகிறார். இந்த பயணத்தில் இரண்டுமுறை விஞ்ஞானியின் உயிரை, ஜெரியும், நாய்களும் காப்பாற்றுகிறார்கள். தட்டுத்தடுமாறி வந்து சேருகிறார்கள்.
புயல் நெருங்கிவிட, அங்கிருந்த அத்தனை பேரையும் அழைத்துக்கொண்டு செல்ல விமானம் தயாராய் நிற்கிறது. நாய்களுக்கு விமானத்தில் இப்பொழுது இடமில்லை. பிறகு வந்து கூப்பிட்டுக்கொள்ளலாம் என ஆறுதல் சொல்கிறார்கள். நாய்களோடு தானும் அங்கிருப்பதாக சொல்கிறான். அது உயிருக்கு ஆபத்து என அவனை அழைத்து செல்கிறார்கள்.
இதுவரை வராத புயல் இப்பொழுது தாக்க, காலநிலை மிக மோசமடைகிறது. நாய்களை அழைத்துவர விமானம் கேட்கிறான். போய்வருவதற்கு சாத்தியமேயில்லை என சொல்லிவிடுகிறார்கள். நாய்களை காப்பாற்ற முடியாத குற்ற உணர்ச்சியில் நிம்மதியில்லாமல் அலைகிறான். மீட்டு வர பல்வேறு வகைகளில் முயன்றும். எதுவும் பலனனிக்க வில்லை. நாட்கள் மெல்ல மெல்ல நகருகின்றன. அந்த உறைபனி குளிரில், புயலில் நாய்கள் வாழ்வதற்காக போராடுகின்றன.
அந்த நாய்கள் உயிர் பிழைத்தனவா? ஜெரி நாய்களை காப்பாற்றும் முயற்சியில் வெற்றி பெற்றானா என்பது மீதி முழுநீள கதை!
***
பாதிப்படத்திற்கு மேலாக பனிப்பிரதேசத்தில் தான். நம்மால் அந்த கடுங்குளிரை உணரமுடிகிறது. அந்த குளிரில் நாய்களின் உழைப்பு, போராட்டம் என மொத்த படத்தையும் அந்த எட்டு நாய்கள் தாங்கி நிற்கின்றன. ஜெரிக்கு அந்த நாய்களுடான பிணைப்பையும் அருமையாக நம்மால் உணரமுடிகிறது.
நாய்களை விட்டுவிட்டு போனதும், புயல் அடிக்க துவங்கியதும், அந்த கேம்பில் மேலே பறந்து கொண்டிருந்த கொடி காற்றில் ஆடி கீழேவிழும். உடனே ஒரு நாய் ஓடிப்போய் அந்த கொடியை கோபத்துடன் கிழிக்கும். “எங்களை அம்போன்னு விட்டுட்டு போயிட்டிங்களேடா!” என்று சொல்வது போன்ற காட்சி அது!
சிறு வயதில் பக்கத்துவீட்டில் ராணி என்றொரு
அருமையான நாய் ஒன்று இருந்தது. என் மொத்த வாழ்விலும் அதோடு மட்டும் தான் எனக்கு நெருக்கம் இருந்ததாக உணர்கிறேன். மற்றபடி, நாய்கள் என்றால் எப்பொழுது எனக்கு பயம் உண்டு. காரணம். கடித்தால், வயிற்றைச்சுட்டி 16 ஊசி போடவேண்டும் என சுற்றி உள்ளவர்கள் எப்பொழுதும் பயமுறுத்திக்கொண்டே இருந்திருக்கிறார்கள். நமக்கு ஊசின்னா ரெம்ப பயம்.
:)
எங்கள் வீட்டில் எப்பொழுதும் நாய் வளர்த்ததில்லை. அம்மாவிடம் ஆவலாய் எப்போதாவது சொன்னால், உங்களை வளர்க்கிறதே பெரும்பாடா இருக்கு! இதில் நாய் வேற! என்பார்.
இந்தப்படத்தைப் பற்றி நாய் வளர்ப்பவர்கள் எழுதியிருந்தால் இன்னும் உணர்வுபூர்வமாக எழுதியிருப்பார்கள் என நம்புகிறேன்.
இது உண்மையில் நடந்த கதை என்கிறார்கள். 1983-ல் அண்டார்டிகா என்ற பெயரில் ஜப்பானிய படம் ஒன்று வந்திருக்கிறது. அதுவும் இணையத்தில் கிடைக்கிறது. மற்றபடி அந்த படத்தில் இறுதியில் உயிரோடிருந்த நாய்களின் எண்ணிக்கையும், இந்த படத்தில் உயிரோடிருந்த நாய்களின் எண்ணிக்கையும் வித்தியாசப்படுகிறது.
நான் தமிழில் பார்த்தேன். குழந்தைகளோடு பார்க்ககூடிய படம். பாருங்கள்.