இன்று மதியம் கே தொலைக்காட்சியில் பார்த்தேன். எப்பொழுதும் எந்த காட்சி பார்த்தாலும், படத்தின் இறுதிவரை நம்மை உள்ளிழுத்துக்கொள்ளும் வசீகரம் கொண்டது! பாக்யராஜின் முதன்மையான படங்களில் இது முக்கியமான படம்.
2563 இருக்கைககள் கொண்ட ஆசியாவின் பிரமாண்டமான முதல் திரையரங்கான மதுரை தங்கம் திரையரங்கில் உலகம் சுற்றும் வாலிபனுக்கு பிறகு அரங்கு நிறைந்த காட்சிகளாக நூறு நாட்கள் ஓடிய படம்!
படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, தெலுங்கிலும், இந்தியிலும் கூட எடுத்தார்கள். அந்தந்த மொழி, கலாச்சாரத்திற்கு ஏற்ப சின்ன சின்ன மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். என்னென்ன என்று கவனித்தால் சுவாரசியமாக இருக்கிறது. தெலுங்கில் விஜயசாந்தி நடித்திருக்கிறார். இந்தியில் அனில் கபூர் நடித்திருக்கிறார். தமிழில் நாயகியின் அப்பா சாகிறார் அல்லவா! தெலுங்கில் நாயகியை அரளி விதையை சாப்பிட வைத்து, பிழைக்க வைத்திருக்கிறார்கள். இந்தியில் நம்பியார் பாத்திரத்தில் 'சோலே' அம்ஜத்கான், கத்திக் குத்தை வாங்கிகொள்கிறார்.
இந்த படத்தின் பாதிப்பில் இன்றைக்கு வரைக்கும் படம் எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அப்பாஸ் – சிம்ரன் நடித்த “பூச்சூடவா” படத்தை உற்றுப் பாருங்கள். தூ. நி. போச்சு படம் தான் என பளிச்சென தெரியும். செந்தாமரை கதாபாத்திரத்தை கிரிஷ் கார்னட் செய்திருப்பார். இப்பொழுது சசிக்குமார் மீண்டும் எடுக்கப்போவதாக சொல்கிறார்கள்.
செந்தாமரையும், நம்பியாரும் அருமையாக செய்திருப்பார்கள். செந்திலுக்கு இந்தப்படம் தான் திருப்புமுனை என்கிறார்கள்.
ஏற்பாடு திருமணத்தில் வரதட்சணை பேசுவது ஒரு வியாபாரம் பேசுவது போல மிக கறாராக பேசுவார்கள். இந்த படத்தில் அதை சரியாக காட்டியிருப்பார்கள். படத்தில் இறுதியில் ஆணாதிக்கத்தை நன்றாகவே சாடியிருப்பார்கள். அதையெல்லாம் கேட்டு திருந்துவார்களா என்பது தான் எனக்கு ஆச்சர்யம்.
ஆறெல்லாம் வறண்டு, ஆற்று மணலை எல்லாம் அரசே முன்நின்று சூறையாடிய வேளையில், ஆற்றுக்கு தண்ணீர் எடுக்க போவது போல இப்பொழுது காட்சி வைக்க முடியுமா?
படத்தின் பலத்தில் இளையராஜாவும் ஒருவர். எல்லா பாடல்களும் இனிமையானவை. பின்ணனி இசையும் அசத்தியிருப்பார்.
படத்தலைப்புகளை ரெம்பவும் பாந்தமாக, மங்களகரமாக பெயரிடுவார்கள். ”தூறல் நின்னுப் போச்சு” என நெகட்டிவாக தைரியமாகவே வைத்திருக்கிறார் பாக்யராஜ்!
0 பின்னூட்டங்கள்:
Post a Comment