பத்தாண்டுகளுக்கு முன்பு இடதுப்புறம் கடைசியில் இருந்த கடவாய்ப்பல் தொந்தரவு செய்தது. ஒரு பல் மருத்துவரை பார்த்ததில், பூச்சி குடைந்தவரை சுத்தப்படுத்தி மேலே பூச்சு பூசி, பல்லைக் காப்பாற்றிக் கொடுத்தார்.
மீண்டும் கடந்த மாதம் மீண்டும் அதே பல் தொந்தரவு தந்தது. மருத்துவரைப் பார்த்ததில்... கடந்தமுறை குடைந்ததைவிட, பூச்சி இன்னும் ஆழமாய் குடைந்திருந்தது. இந்தமுறை பல்லை காப்பாற்ற முடியவில்லை. மொத்தமாய் காலி செய்து, ஒரு செயற்கைப் பல் பொருத்தவேண்டும் என மருத்துவர் சொன்னதை, சோகத்துடன் ஏற்றுக்கொண்டேன்.
தையற்காரர் அளவெடுப்பது போல, புதிய முறையில் அளவெடுத்தார். ஒரு வாரம் கழித்து சென்றேன். பல் தயாராகி எனக்காக காத்திருந்தது. விளம்பரத்தில் காட்டுவது போல அழகாய் இருந்தது.
மருத்துவர் எனக்கு பல்லைப் பொருத்துவதற்கு முன்பு, மலையாளம், ஆங்கிலம், தமிழ் கலந்து 'கடவுள்' கொடுத்த பல்லை, இழந்துவிட்டீர்கள். இந்தப்பல் செயற்கையானது. இயற்கையான பல்லை போல கிடையாது. ஆகையால், பார்த்து கவனமாய் கடியுங்கள்' என்றார். அவர் சொன்னதும் தான் இழந்த பல்லுக்காக நிறைய வருந்தி, புதுப்பல்லுடன் வீடு வந்து சேர்ந்தேன்.
இன்று திநகர் வழியாக வந்த பொழுது, சரவண ஸ்டோர் கடை வாசலில், வாடிக்கையாளர்களை வரவேற்கும் விதமாக, கடை முதலாளி கைகூப்பி பேனரில் நின்றிருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டோ, மூன்றோ பற்கள் முன்பக்கம் எத்தி நின்று, நம்மூர் அண்ணாச்சியாய் நன்றாக இருந்தார்.
மீம்ஸ்கள் போட்டு கலாய்த்தார்கள் என்பதற்காகவா, பிரபல நடிகைகளோடு விளம்பரத்தில் நடிப்பதற்காகவா என தெரியவில்லை. எத்திக்கொண்டு இருந்த பற்களை தட்டி, சரி செய்து, இப்பொழுது செயற்கை பற்களுடன் வலம் வருகிறார்.
ஒரு 'Legend' அல்லது ஒரு 'Legend' கடையின் சொந்தக்காரர் சொந்த பற்களை இழக்கும் பொழுது, 'சொல்லாமலே' நாயகன் போல எவ்வளவு அழுதிருப்பார். எத்தனை கோடிகள் வைத்திருந்தும், இழந்த சொந்த பற்களை வாங்க முடியுமா?
0 பின்னூட்டங்கள்:
Post a Comment