> குருத்து: Law Abiding Citizen (2009)

May 14, 2019

Law Abiding Citizen (2009)


இரண்டு திருடர்கள். திடீரென ஒரு வீட்டில் புகுந்து குடும்பத்தலைவனை கட்டிப்போட்டு கொள்ளையடிக்கிறார்கள். ஒருவன் எல்லைமீறி அவருடைய மனைவியையும் சிறுமியையும் பலாத்காரம் செய்து கொன்று விடுகிறான்.
கொன்றவன் அப்ரூவர் ஆகி உடன் வந்தவர் மீது பழி போடுகிறான். வழக்கறிஞரும் ஒத்துழைக்கிறார். பத்து வருடம் வழக்கு நடக்கிறது. இறுதியில் மரண தண்டனை கொடுக்கிறார்கள்.

எல்லாவற்றையும் பார்த்து, கொதித்து போன குடும்பத்தலைவர், விடுதலையாகி வெளியே வந்த கொலைகாரனை கடத்தி துண்டு துண்டாக வெட்டி கொள்கிறார். உடனே சரணடைகிறார்.

சிறையிலிருந்து கொண்டே வழக்கு தொடர்பான ஆள்கள் ஒவ்வொருவராக கொலை செய்கிறார்.

போலீசு கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது. ஊர் பதட்டமடைகிறது.
எப்படி கொலைகளை தடுத்து நிறுத்தினார்கள் என்பது முழுநீளக்கதை!

*****

'ஒப்பம்' என மோகன்லால் படம். ஒருவனுக்கு வழங்கப்பட்ட அநீதி தீர்ப்பால் அவனுடைய குழந்தைகள் உள்பட மொத்த குடும்பமும் அவமானத்தில் தற்கொலை செய்து கொள்ளும். சிறையிலிருந்து வெளியே வந்தவன் அந்த வழக்கு தொடர்பான (நீதிபதி உள்பட) ஆட்களை ஒவ்வொருவராக தேடித்தேடி கொலை செய்வான்.

இதுவரை அநீதி இழைக்கப்பட்டவன் அரசு அதிகாரிகளை பழிவாங்குவது போல அன்றிலிருந்து இன்று வரை இப்படி நிறைய படங்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

தொடர்ந்து சமூகத்தை கவனித்துக் கொண்டிருக்கிறோம்.
எளியவர்கள், அப்பாவிகள் இந்த சட்டத்தால் அநீதியாக தினமும் தண்டிக்கப்படுகிறார்கள். ஆனால் எந்த அதிகாரியினுடைய குடும்பமும் பழிவாங்கியதாக எந்த வழக்கும் இல்லை. வரலாறும் இல்லை. இது சம்பந்தமாக தமிழ் இந்துவில் ஒரு கட்டுரைகூட வெளிவந்தது.
மற்றபடி வலுவான திரைக்கதையும், எடுத்த விதமும் இறுதிவரை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது.

பார்க்க வேண்டிய படம். பாருங்கள். தமிழில் கிடைக்கிறது.

0 பின்னூட்டங்கள்: