விலங்குகள் சூழ் உலகம் அது. கிராமத்தில் வாழும் பெண் முயலுக்கு தான் போலீஸ் அதிகாரியாக உருவாகவேண்டும். சமூகத்திற்கு பணியாற்ற வேண்டும் என ஒரு கனவு.
பல்வேறு சோதனைகளுக்கு பிறகு சிங்கம், புலி, கரடி அதிகாரிகளுக்கு மத்தியில் வரலாற்றில் முதல்முறையாக முயலும் அதிகாரி ஆகிறது. ஆனால் முயலுக்கோ அதன் குட்டித்தன்மைக்கேற்ப பார்க்கிங் டிக்கெட் போடும் வேலை தான் ஒதுக்கப்படுகிறது.
நகரில் சில மிருகங்கள் காணாமல் போகின்றன. அதில் ஒருவரை கண்டுபிடிக்கும் வழக்கு முயலின் துடுக்குத்தனத்தால் கிடைக்கிறது. நாற்பத்தியெட்டு மணிநேரத்தில் கண்டுபிடிக்க வேண்டும். இல்லையெனில் வேலையை விட்டு தூக்கி விடுவோம் என கடும் நெருக்கடி தருகிறார்கள்.
இதற்கிடையில், காணாமல் போன மிருகங்கள். அதன் தொடர்ச்சியில், சைவ விலங்குகளுக்கும், அசைவ விலங்குகளுக்கும் ஒரு பெரிய இடைவெளி ஏற்படுகிறது.
ஏகப்பட்ட சாகசங்கள், கலாட்டாக்களுக்கு மத்தியில் முயல் காணாமல் போன மிருகத்தை கண்டுபிடித்ததா? தன்னுடைய பதவியை தக்க வைத்ததா? சமூகத்தில் அமைதியை கொண்டுவந்ததா? என்பதை முழுநீள கதையில் விவரிக்கிறார்கள்.
*****
சமீபத்தில் பார்த்த அனிமேஷன் படங்களில் விறுவிறுப்பான படம். உட்டோப்பிய சமூகம் என்றால், கனவுலகம் என்று அர்த்தம். அதன் அடிப்படையிலேயே விலங்குகள் உலகத்திற்கு Zootopia பெயரிட்டிருக்கிறார்கள்.
சைவ அசைவ விலங்குகளின் ஒருங்கிணைந்த வாழ்வில் அதிகாரத்திற்கு நடக்கும் போட்டி தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் ஆகிறது
அதிகாரம் சரியான நபர்களிடம் இருந்தால் நிறைய நல்ல பலன் தருகிறது. அதிகாரம் மோசமான நபர்களிடம் போய் விட்டால் கேடுகள் புற்றீசல் போல வருகின்றன. மத்திய மாநில அரசுகளின் அதிகாரத்தில் இருப்பவர்களே நமக்கு நல்ல உதாரணம் ஆகிறார்கள்.
முயலின் நண்பனாக வரும் நரி பாத்திரம் அருமை. நக்கலும் கிண்டலும் அவ்வளவு இயல்பாக வருகிறது
வெளிநாட்டில் யோகாசனம், தியானம் என்ற பெயரில் மையங்களில் நடக்கும் கூத்துக்களை நக்கலடித்திருக்கிறார்கள். யோகா செய்யும் யானை அட்டகாசம். காட்பாதர் முத்தமும் அட்டகாசம்.
ஆமை வேகம் அல்ல! அதை விட மெதுவாக வேலை செய்யும் ஆர்டிஓ அலுவலக ஊழியர்களையும் நக்கல் செய்திருக்கிறார்கள்.
பார்க்க வேண்டிய படம். தமிழிலும் கிடைக்கிறது பாருங்கள்
0 பின்னூட்டங்கள்:
Post a Comment